Monday, November 24, 2008

உட்கார்ந்து யோசிப்பாங்களோ...?

அப்பப்ப ஏதாவது ஒரு மெயில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். சிலதினை வாசிக்காமலே அழித்துவிடுவதுமுண்டு. அப்படி ஒரு தர்மசங்கடத்தினை ஏற்படுத்திய மெயில் பற்றித்தான் நான் இப்ப சொல்லப்போகிறேன். ஒரு சின்னக்கதை. வாசிப்பவர்களுக்கு நிச்சயம் தங்களைப் பற்றி சொல்வதுபோல் தோன்றும் (பொதுவாக காதலிப்பவர்களுக்கு...). சரி இப்ப இந்த கதையை வாசிங்களேன்... (சுருக்கமாக எழுதியிருக்கிறேன்...).

காதல்ஜோடி ஒன்று இருக்கிறது. இந்த இருவரது காதலும் வீட்டாருக்கும் தெரியும். இவர்களது காதலுக்கு துணையாக இருப்பது இவர்கள் பாவிக்கின்ற செல்போன். காதலி முதலில் வேறொரு சிம் கார்ட்டினை பயன்படுத்துகின்றாள். அதன் பின்னர் சிக்கனப்படுத்துவதற்காக காதலன் பாவிக்கின்ற சிம்கார்ட் வகையினையே தானும் தெரிவுசெய்கின்றாள். அதன் பின்னர் மணித்தியாலக் கணக்கில் போனிலேயே இவர்களது காலம் கழிகின்றது. நாளின் அரைப்பகுதியை செல்போனுடனேயே செலவு செய்கின்றாள். இப்படி இருக்கும்போது தன் நண்பர்களிடம் அடிக்கடி சொல்கின்ற விடயம் என்னவென்றால்... தான் இறந்த பின்னர் தன்னுடன் சேர்த்து தன் செல்போனையும் சிம்கார்ட்டையும் எரித்துவிடுங்கள் என்பதேயாகும்.

நாட்கள் சில கடந்ததும் ஒரு விபத்தில் காதலி இறந்துவிடுகின்றாள். காதலனுக்கு தெரிந்தால் கவலைப்படுவான் என்பதனால் காதலி இறந்த செய்தியை மறைத்துவிடுகின்றார்கள். அதன் பின்னர் இறந்த காதலியின் உடலினை தூக்க முயற்சிக்கையில் எவராலும் தூக்க முடியவில்லை. பலர் முயன்றும் அது சாத்தியமாகவில்லை. இதனால் குழப்பமடைந்த குடும்பத்தினர் மந்திரவாதி ஒருவரின் உதவியை நாடுகின்றனர். அவர் வந்து மந்திரக் கோலினால் தடவிப் பார்த்துவிட்டு... "இந்தப் பெண் விரும்புகின்ற ஒன்றை விட்டுச் செல்ல மனம் இல்லாமல் தவிக்கின்றாள்...' என்று கூறுகின்றார். உடனே நண்பர்கள் இவள் முன்னர் சொல்கின்ற விடயத்தை குடும்பத்தாரிடம் சொல்கின்றனர். அதன்படி அவள் பாவித்த செல்போனினையும் சிம் கார்ட்டினையும் அவளது பெட்டியில் போடுகின்றனர். இப்பொழுது அவர்களால் பெட்டியை தூக்க முடிகின்றது.

இறுதிக்கிரியைகள் முடிந்து இரண்டு வாரங்கள் கழிந்துவிட்டன. காதலன், காதலியின் வீட்டிற்கு கோல் பண்ணி "அன்டி நான் இன்றைக்கு வீட்டிற்கு விருந்துக்கு வருகின்றேன். நீங்கள் அவளிடம் ஒன்றும் தெரியப்படுத்தவேண்டாம்...' என்று சொல்கின்றான். உடனே காதலியின் தாயாரும்... "நீங்கள் வீட்டிற்கு வாருங்கள், நானும் உங்களிடம் ஒருவிடயம் தெரிவிக்க வேண்டும்...' என்று குறிப்பிடுகின்றார். வீட்டிற்கு வந்தபின்னர் காதலியின் தாயார் நடந்த அனைத்து விடயங்களையும் தெரியப்படுத்துகின்றார்... அவன் அதனை நம்ப மறுக்கின்றான். டெட் சேர்ட்டிபிகேட் எல்லாத்தையும் கண்டவன் கலங்குகின்றான். "நீங்கள் என்னிடம் போலியாக ஏதேதோ சொல்கிறீர்கள். நான் நேற்றும் என் காதலியுடன் கதைத்தேன்...' என்று அழுது புலம்புகின்றான்.

இப்படி அழுதுகொண்டு இருக்கும்போது காதலியிடமிருந்து அவனுக்கு கோல் வருகிறது. அவன் அதனைக் காண்பித்து ஸ்பீக்கர் போனில் போட்டு பேசுகின்றான். வீட்டாருக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. மறுபடியும் அந்த மந்திரவாதியின் உதவியை நாடுகின்றனர். அவர் மீண்டும் பரீட்சித்துப் பார்த்துவிட்டு ஒரு முடிவினைக் கூறுகின்றார். இந்த முடிவுதான் வியக்க வைத்தது.
சோகமாகவும் ஆச்சரியமாகவும் வாசித்துக் கொண்டிருந்த உங்களுக்கு மேலும் ஓர் அதிர்ச்சிதான் அந்த முடிவு. அதாவது அவர் கண்டுபித்த முடிவு என்னவென்றால்... "இந்த காதல் ஜோடி பாவிக்கின்ற சிம்கார்ட் நெட்வோர்க் எல்லைகளைக் கடந்து செயற்படவல்லது... எங்கு சென்றாலும் அதனுடைய கவரேஜ் இருக்கும்...' என்று தெரிவிக்கின்றார்.
இது ஒரு தொலைதொடர்பு நிறுவனத்தின் விளம்பரம் என்பதை சுட்டிக்காட்டியாக வேண்டும். இதைத்தான் "உட்கார்ந்து யோசிப்பாங்களோ...?' என்பார்கள் போலும்...

No comments: