Wednesday, December 31, 2008

கஜினி...

இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் கஜினி. தமிழ் மொழியில் ஏற்கனவே வெளிவந்த கஜினி திரைப்படம் ஹிந்தியில் உருவாகியிருக்கிறது. ஹிந்தியில் உருவாகிய கஜினி திரைப்படத்தினை இவ்வருடத்தில் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். எதிர்பார்த்ததைப்போல் வெளியாகி பல சாதனைகளை முறியடித்திருக்கின்றது ஹிந்தி கஜினி.தமிழில் வெளியாகிய கஜினி திரைப்படத்தின் ரீமேக்காகவே ஹிந்தியில் கஜினி உருவாகியிருக்கிறது. தமிழில் இயக்கிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஹிந்தி கஜினியையும் இயக்கியிருக்கின்றார். இந்த இருபடத்திற்கும் மூலமான படம் ஹொலிவூட்டில் வெளியாகிய Memento என்ற ஆங்கிலப்படமாகும். Memento படத்தினை Christopher Nolan என்பவர் இயக்கியிருந்தார். இதனுடைய தமிழாக்கமாகத்தான் கஜினி திரைப்படத்தினை முருகதாஸ் உருவாக்கியிருந்தார்.

Geetha Artsஇன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஹிந்தி கஜினியில் அமீர்கான் ஹீரோவாக நடித்திருக்கின்றார். இவருடைய காதலியாக அசினும் (Asin), மருத்துவக்கல்லூரி மாணவியாக ஜியா கானும் (Jiah Khan) நடித்திருக்கிறார்கள். வில்லனாக பிரதீப் ரவாட் (Pradeep Rawat), பொலிஸ் அதிகாரியாக றியாஸ் கான் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் ஏற்கனவே நான்கு படங்களை இயக்கியிருக்கின்றார். அஜித்குமார் நடித்த தீனா, விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி (தமிழ்), சிரஞ்சீவி நடித்த ஸ்டாலின் (தெலுங்கு) ஆகிய படங்களே முருகதாஸினால் இயக்கப்பட்டன. இப்பொழுது அமீர்கான் நடிப்பில் வெளிவந்திருக்கும் கஜினி, முருகதாஸின் 5ஆவது படமாகும். வெற்றிப்பட இயக்குநர் என பெயரெடுத்திருக்கும் இவரின் உழைப்பு இந்தப் படத்திலே அதிகமாகத் தெரிகின்றது. ஜதார்த்தமான படங்கள் என்பதற்கு அப்பாற்பட்டு, வணிகரீதியான மசாலா படமாக கஜினியை உருவாக்கியிருக்கிறார் முருகதாஸ். அதனால்தான் வணிகரீதியாக படம் சாதனை படைத்திருக்கிறது. சுமார் 45 கோடி ரூபாய் (இந்திய ரூபாய்) செலவில் உருவாகிய இத்திரைப்படம் வெளியாகி ஒருவாரத்திலேயே போட்ட முதலை மீளப்பெற்றிருக்கிறதாம்.

இந்தப்படத்திற்கு மற்றுமொரு பிளஸ் பொயின்ட், கமெரா தொழில்நுட்பம் என்றால் அது மிகையாகாது. ரவி கே.சந்திரன் அவர்களே இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார். ரவி கே.சந்திரனைப் பற்றிச் சொல்லியேயாகவேண்டும். தேசிய விருதுபெற்ற ஓர் ஒளிப்பதிவாளர். இயக்குநர் மணிரத்தினத்தின் அன்புக்குரிய ஒளிப்பதிவாளர். இதுவரை பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக கடமையாற்றியிருக்கிறார். அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில படங்களாவன மின்சார கனவு, சிட்டிசன், கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, போய்ஸ். இந்தப்படங்களில் காட்சிகள் இப்போதும் மனக்கண்ணில் தோன்றும். அவ்வளவு அழகாக கமெராவினைப் பயன்படுத்தியிருப்பார் ரவி கே.சந்திரன். இவரது உழைப்பு கஜினியில் (ஹிந்தி) அதிகமாகவே இருக்கின்றது. குறிப்பாக பாடல் காட்சிகளைக் குறிப்பிடலாம்.

கஜினியின் அடுத்த பிளஸ் பொயின்ட் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ் கஜினியில் ஹரிஸ் ஜெயராஜ் புகுந்து விளையாடியிருந்தார். ஹிந்தி கஜினியில் ஏ.ஆர்.ரஹ்மான் புகுந்து விளையாடியிருக்கிறார். இருப்பினும் ஏதோ ஒன்று குறைவதுபோல் தோன்றுகிறது பாடல்களில். ஒருவேளை ஹிந்தி ரசிகர்களுக்கு இது பிடிக்கக்கூடியதாகவும் இருக்கலாம். ஹிந்தி கஜினியின் பின்னணி இசை பிரம்மாதமாக இருக்கிறது.

இவர்களது ஒட்டுமொத்த முயற்சிகளையும் ஒருங்கிணைத்து சுவைபட தொகுத்திருக்கின்றார் அன்டனி. எடிட்டிங்கில் தனக்கென தனிமுத்திரை பதித்திருக்கும் அன்டனி, இந்தப் படத்திலும் அதிகமாகவே உழைத்திருக்கின்றார். ஒவ்வொரு காட்சியின் தொகுப்பும் மனதைத் தொடுவனவாக இருக்கின்றன.

அமீர்கான் தனது உடலை வருத்தி நடித்திருக்கிறார். "6 பக்' உடம்பினை உருவாக்கி மிரளவைத்திருக்கிறார். தமிழில் சூரியாவா? ஹிந்தியில் அமீர்கானா? என்று பார்த்தால், சூரியா உயரத்தில் இருக்கிறார். சூரியாவின் யதார்த்தமான நடிப்பினை அமீர்கானிடம் காணமுடியவில்லை. அசினைப் பொறுத்தமட்டில் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார். அசினின் குறும்பு ரசிக்க வைக்கிறது. ஜியா கானும் நன்றாக நடித்திருக்கிறார். நயன்தாராவோடு ஒப்பிடும்போது ஜியா கானிடம் துடுக்குத்தனம் அதிகமாகவே இருக்கிறது எனலாம். வில்லனாக நடித்திருக்கும் பிரதீப் ரவாட், பொலிஸ் அதிகாரியாக நடித்திருக்கும் றியாஸ் கான் ஆகியோரும் தங்களுடைய பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

தமிழ் கஜினியா? ஹிந்தி கஜினியா? சிறந்தது என பார்த்தால் தமிழ் கஜினி சிறப்பாக இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும் பிரம்மாண்டத்தில் ஹிந்தி கஜினி விஞ்சி நிற்கின்றது. தமிழில் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் சினிமாத்தனமாக இருக்கும். அதனை உணர்ந்த இயக்குநர் முருகதாஸ், ஹிந்தியிலே யதார்த்தபூர்வமாக மாற்றியிருக்கிறார். இது ரசிக்கக்கூடியதாக இருக்கின்றது.

மொத்தத்தில் சினிமாத்தனமாக வெளிவந்திருக்கும் மசாலா திரைப்படம் கஜினி, மக்கள் மனதினை வெல்லும் என்றுதான் சொல்லத்தோணுகிறது.

No comments: