Saturday, December 27, 2008

புதிதாய் ஒரு பூமி...

பல்லில்லா பாலகனும்
ஷெல் சத்தம் கேட்டிங்கு
கொல்லையிலே நடுங்குகிறான்...
கொடுங்கோல் ஆட்சியென
கொக்கரிக்கும் ஐநாவும்
கைகட்டி வேடிக்கை பார்க்கையிலே
பகடைக்காய் நாங்களல்லோ...

யுத்தங்கள் வேண்டாமென
சத்தங்கள் பல எழுந்தும்
பொத்திய காதுகளை
திறக்காத அரசிதனை
யார்தான் கேட்பாரோ...?
கூக்குரலில் குதூகலிக்கும்
கலிகாலம் ஆகிப்போச்சு...
வெடிகுண்டு வாசனையில்
பூஜை அறை சாமிகளும்
ஒய்யார தூக்கமிங்கே...!

பதிவில்லா இறப்புகளின்
இறுக்கமான நினைவுகளை
நித்தமும்தான் சொல்கின்றோம்...
இரக்கமற்ற சர்வதேசம்
வெளிவேஷம் போடுதிங்கே...
புழுதியிலே பிணங்களிங்கே
கருவாடாய் காயுதய்யா...!

விதிவரைந்த பாதையென
விசராக கதைத்திங்கே
பதைபதைக்கும் உள்ளங்கள்
பாரிதனைத் தூற்றுகின்றனர்...
நித்தமும் வேதனையில்
சொத்துக்கள் சொந்தங்களை
பார்த்திருக்க பறிகொடுத்து
பரிதவிக்கும் உள்ளங்களின்
சோகங்களைத் துடைத்திடவே
புதிதாய் ஒரு பூமி
தோன்றாதோ நாளைதனில்...!

No comments: