Tuesday, December 23, 2008

'Blue Hole'




உலகத்திலே எத்தனையோ அதிசயங்கள் இருக்கின்றன. அவற்றினை கண்டறிவதில் போட்டி நிலவுவதை யாவரும் அறிவீர்கள். இயற்கையின் அதிசயங்கள் எக்கச்சக்கம். அப்படியான அதிசயங்களில் ஒன்றுதான் 'Blue Hole' என்று அழைக்கப்படுகின்ற பெரிய செங்குத்தான நீர்கீழ் சுரங்கங்கள். இதனை நீர்மூழ்கிக் குகை, ஆழ்ந்த துவாரம், செங்குத்தான குகை போன்ற சொற்பதங்களாலும் அழைப்பர்.
கடலுக்கு அடியில் பல மீற்றர்கள் ஆழமான இந்தகுகைகள் சில சமயங்களில் ஆபத்தானவையும்கூட. இருப்பினும் இந்த ஆபத்துக்களில் விளையாடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் தமது உயிரினைப் பணயம் வைத்து பல சாகசங்களையும் நிகழ்த்துகின்றனர். குகை போன்ற ஆழமான பகுதி வெளியிலிருந்து பார்க்கும்போது கடும் நீல நிறத்தில் காட்சிதரும். இதனைச் சுற்றியுள்ள பகுதிகள் இளநீலத்தில் இருக்கும். இதனைவைத்தே இந்த 'Blue Hole'களை இனம் காண்கிறார்கள்.
இந்த 'Blue Hole'கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த உறை பாறைகளால் உருவானதாக கூறுகிறார்கள். அதாவது உறைநிலையிலிருக்கும் பனிப்பாறைகள் நீர் மட்டம் உயரும்போது உருகுவதால் இந்த துவாரங்கள் தோன்றுகின்றனவாம். உலகிலேயே மிகவும் பெரிய 'Blue Hole'ஆக Dean's Blue Hole விளங்குவதாகக் குறிப்பிடுகிறார்கள். இது 663 அடிகள் ஆழம் கொண்டனவாம். இதில் பல சாதனைகளும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இவ்வருடம் நடைபெற்ற டைவிங் போட்டியிலே 5 உலக சாதனைகளும் 25 தேசிய சாதனைகளும் நிலைநாட்டப்பட்டனவாம். நியூஸிலாந்தினைச் சேர்ந்த William Trubridge என்பவர் தனது சாதனைகளையே பலமுறை உடைத்திருக்கின்றார். அதில் மிகவும் முக்கியமானது, நீச்சல் வீரர்கள் காலில் அணிகின்ற துடுப்பு இல்லாமல் 84மீற்றர் ஆழம்வரை சென்று திரும்பியதாகும். இப்படி பல சாதனைகளுக்கு இவர் சொந்தக்காரர்.
Dean's Blue Hole இற்கு அடுத்தபடியாக திகழ்வது Belize's Creat Blue Hole. இது 305 மீற்றர் (1000அடி) விட்டமும் 123 மீற்றர் (400அடி) ஆழமும் கொண்ட பிரம்மாண்டமான துவாரமாகும். இதுபோன்ற பல Blue Holeகள் உலகளாவிய ரீதியில் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு தந்திருக்கின்றேன் பாருங்கள். வித்தியாசத்தை விரும்புபவர்கள் தங்கள் உயிரினைப் பணயம் வைத்து இங்கு சென்று வரலாம்.

No comments: