Wednesday, September 26, 2012

இலங்கையின் பழங்குடியினர்...


வரலாற்று புகழ்மிக்க இலங்கை தீவின் பழங்குடியினர் பற்றிய தேடல்கள் இன்னமும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. நாட்டின் பாரம்பரியங்களை எடுத்தியம்புகின்ற விடயங்களில் அந்நாட்டின் பழங்குடியினரின் பங்கு பாரியளவானது. அந்தவகையில் எமது நாட்டின் பழங்குடியினர் பற்றிய தேடலும் முக்கியமானது.

பழங்குடியினர் என்றவுடனே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவதென்னமோ வேடுவர் என்ற பதம்தான். ஏனெனில் நமது பழங்குடியினரின் பிரதான தொழில் வேட்டை. கற்காலத்தில் வாழ்ந்த பழங்குடியினர் தற்காலத்திலும் வாழ்கின்றார்கள். எமது இலங்கைத் திருநாட்டைப் பொறுத்தவரையில் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும் வடமத்தி, ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

2002ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம் சுமார் 2500 பழங்குடியினர் எமது நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வெண்ணிக்கை இப்பொழுது குறைந்திருக்கலாம் அல்லது கூடியிருக்கலாம். எது எப்படியிருப்பினும் சிறியளவான பழங்குடியினரே இங்கு வாழ்கின்றார்கள். எங்கிருந்து வந்தும் குடியேறாமல் எமது நாட்டின் ஆதிக்குடியாக இருப்பதால்தான் இவர்களை பழங்குடியினர் என்று அழைக்கின்றோம்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எமது பழங்குடியினரின் சரித்திரம் தொடர்கிறது. வரலாற்று ஆய்வாளர்களின் தகவல்படி இலங்கைக்கு ஆரியரின் வருகைக்கு முன்னரே பழங்குடியினர் வரலாறு ஆரம்பிக்கிறது. எமது இலங்கையில் வாழ்கின்ற பழங்குடியினரின் மரபும் தென்னிந்தியாவில் வாழ்கின்ற பழங்குடியினரின் மரபும் ஒத்துப் போவதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் ஆதாரங்களினூடாக நிரூபித்திருக்கிறார்கள்.

இலங்கையின் பழம்பெரும் தொகுப்பு நூலான மஹாவம்சத்தில் இலங்கையின் முதல் மன்னனான விஜயன் இலங்கையை வந்தடைந்தபோது அவனை வரவேற்று பின்னர் விஜயனுடன் இணைந்து வாழ்ந்த குவேனி எனும் இயக்கர் குலப்பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தது பற்றி சொல்லப்படுகிறது. விஜயன் அரசமைத்து தனது பட்டத்து இளவரசியாக தென்னிந்தியாவில் பாண்டிய குலத்து பெண்ணை திருமணம் முடித்து பட்டத்து அரசியாக்கினான் என்றும், அதன் பின்னர் குவேனி இயக்கர் இனத்தவர்களாலேயே கொல்லப்பட்டாள் என்றும், விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த ஓர் ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் தப்பியோடி காடுகளில் வாழத்தலைப்பட்டனர் என்றும் குறிப்பிடப்படுகிறது. அப்படி தப்பிச் சென்று காடுகளில் வாழ்ந்த வாரிசுகளின் பரம்பரையினரே இன்றைய இலங்கை காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இப்படி காடுகளை தமது இருப்பிடமாக கொண்டு வாழ்ந்ததால் அவர்களின் பிரதான தொழில் வேட்டையாடுதலாக மாறியிருந்தது. இதனாலேயே அவர்களை வேடுவர்கள் என்று அழைக்கின்றார்கள். இருப்பினும், எமது பழங்குடியினர் தங்களை 'வன்னியலா எத்தோ' என்றே அழைக்கின்றனர். இதன் பொருளும் கிட்டத்தட்ட 'காடுகளில் வாழ்பவர்கள்' என்றே கொள்ளப்படுகிறது.

இலங்கை காடுகளில் வாழ்பவர்களின் மொழி வித்தியாசமாக இருக்கிறது. இதனை வேடுவ பாஷை என்று சொல்கிறார்கள். தமிழ் பிரதேசங்களில், குறிப்பாக கிழக்கில் வாழ்கின்ற பழங்குடியினரின் மொழியில் தமிழ் கலந்திருக்கிறது. அதேபோல் சிங்கள பிரதேசங்களில் வாழ்கின்ற பழங்குடியினரின் மொழியில் சிங்களம் கலந்திருக்கிறது. உண்மையிலே இந்த பழங்குடியினர் பேசுகின்ற மொழி ஆரிய மொழிகளல்லாத மொழியென ஆய்வாளர் வில்ஹெய்ம் செயகர் குறிப்பிட்டிருக்கிறார். நமது பழங்குடியினருக்கென தனித்துவமான மொழியொன்று இருந்திருக்கிறது. அந்த மொழியினை இப்பொழுதும் அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் சில ஆரிய மொழிகளின் கலப்புடன் பழங்குடியினரின் மொழி மாறியிருக்கிறது.

ஆரம்பத்தில் காடுகளையே பிரதான வாழ்விடமாக கொண்டிருந்த பழங்குடியினர் காலத்தின் நிர்ப்பந்தத்தினால் இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இயக்கர், நாகர் இனங்களில் வழித்தோன்றலில் எமது நாட்டில் வாழ்கின்ற பழங்குடியினர் இயக்கர் இனத்தின் மரபினர் என்றே கணிப்பிடப்பட்டிருக்கிறார்கள். இப்படி காடுகளை தஞ்சமடைந்திருந்த பழங்குடியினரின் வாழ்க்கை முறை, 5ஆம் நூற்றாண்டில் இடம்பெறத் தொடங்கிய ஆரிய குடியேற்றங்களால் மாற்றமடையத் தொடங்கியது. பழங்குடியினரின் இருப்பிடங்களான அடர்ந்த காடுகள் - மக்கள் குடியேற்றத்திற்காகவும் நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் அழிக்கப்படத் தொடங்கின. இதனால் அடர்ந்த காடுகளை நோக்கி பழங்குடியினர் இடம்பெயரத் தொடங்கினர்.

இடம்பெயரத் தொடங்கிய பழங்குடியினர் சாதாரண மக்களுடன் கலந்து வாழவேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டனர். இதனால் பழங்குடியினரின் வாழ்க்கைமுறை படிப்படியாக மாறத் தொடங்கியது. கிழக்கு மாகாணத்தை நோக்கி இடம்பெயர்ந்த பழங்குடியினர் தமிழ் பிரதேசங்களுடன் தொடர்புபட்டு வாழவேண்டிய நிலைக்கும், மய்யங்கனை நோக்கி இடம்பெயர்ந்த பழங்குடியினர் சிங்கள கிராமங்களை அண்டி வாழவேண்டிய சூழலுக்கும் தள்ளப்பட்டனர். இதனால் நமது பழங்குடியினரின் தனித்துவ மொழியுடன் தமிழ், சிங்கள மொழிகளும் கலக்கத் தொடங்கின. அதுமட்டுமல்லாமல் பழங்குடியினரின் வழிபாட்டு முறைகளிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

ஆரிய குடியேற்றங்களினால் குறுகிப்போன பழங்குடியினரின் வாழ்வு அண்மைக்காலத்தில் அதாவது 1978ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மஹாவலி அபிவிருத்தித் திட்டத்தினாலும் பாதிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக பல காடுகள் அழிக்கப்பட்டமையால் மீண்டும் எமது பழங்குடியினர் பாதிப்பிற்குள்ளாகினர். இறுதியாக 'மாதுறு ஓயா தேசிய பூங்கா' அமைப்பதற்காக எஞ்சிய பழங்குடி பிரதேசங்களும் பாதிக்கப்பட்டன. இப்படி படிப்படியாக ஓரங்கட்டப்பட்ட பழங்குடியினர் தற்சமயம் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும் மய்யங்கனை பிரதேசத்தின் 'தம்பன' கிராமத்திலும் வாழ்ந்து வருகிறார்கள்.

'தம்பன' கிராமம் தற்சமயம் பழங்குடியினரின் உத்தியோக கிராமமாக இருக்கிறது. இங்கு சுமார் 350 பழங்குடி குடும்பங்கள் வாழ்கிறார்கள். இவர்களின் தற்போதைய பிரதான தொழில் விவசாயமாக மாறியிருக்கிறது. இன்னும் சிலர் படித்து, வேலை பார்த்தும் வருகிறார்கள். சமுதாயத்தினால் ஒதுக்கப்பட்டு, அந்தஸ்திழந்து காணப்பட்ட நமது பழங்குடியினருக்கு அந்தஸ்தளித்தவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ. இவரது காலத்தில்தான் பழங்குடியினரும் நமது நாட்டின் குடிமக்கள்தான் என்ற உரிமை வழங்கப்பட்டது.

குடியுரிமையை பெற்றுக்கொண்ட தற்கால பழங்குடியினரின் சந்ததியினர் உயர் கல்விகளையும் தொடங்கியிருக்கிறார்கள். தமக்கென கல்வியை பெற்றுக்கொண்டு, அதன்மூலம் உயர் வாழ்வை வாழ – நமது பழங்குடியினரின் சந்ததியினர் முன்வந்திருக்கிறார்கள். இந்த முன்னேற்றம் ஆரோக்கியமானதாகக் காணப்படுகிறது. இருப்பினும் சாதாரண சமூகத்தோடு இணைந்து வாழ்வதில் இன்னமும் பழங்குடி சந்ததியினர் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். கல்வி கற்கச் செல்கின்ற இடங்களில்கூட பழங்குடியின மாணவர்களை ஏனைய மாணவர்கள் ஒதுக்கி வைக்கின்ற நிலை காணப்படுகிறது. பழங்குடியினரை சமுதாய நீரோட்டத்தில் கலக்க வைப்பதில் இப்படியான சிக்கல்கள் பாரிய முட்டுக் கட்டையாக இருக்கின்றமை வருத்தத்திற்குரியதே.

என்னதான் நமது பழங்குடியினர் பிள்ளைகள் படித்து ஒரு நல்ல நிலையை அடைகின்றபோதிலும், அவர்கள் 'பழங்குடியினர்' என்ற முத்திரை குத்தப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். இந்நிலை மாறுவதற்கு பல காலங்கள் எடுக்கலாம். மாற்றம் ஒன்றே இவ்வுலகில் மாற்றமில்லாதது. ஏனைய அனைத்துமே மாற்றமடையக்கூடியனவே. ஆகையினால் அந்த மாற்றங்கள் - நமது பழங்குடியினரின் ஆரோக்கிய வாழ்விற்கும் வழிசமைக்கும் என் நம்பிக்கை இருக்கிறது. எமது நாட்டின் ஆதிக்குடிகளா இவர்கள் பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷங்கள் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது,