Monday, October 27, 2014

அழைப்பின் ஆப்பு

முஸ்லிம் கட்சிகளை தங்களுடன் இணைந்து செயற்படுமாறும், அதிகார பகிர்வு தொடர்பில் திறந்த மனதுடன் பேசுவதற்கு காத்திருப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கிறார். 90ஆம் ஆண்டில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்களின் ஒருபிடி நிலத்தைக்கூட ஆக்கிரமிக்க விடமாட்டோம் எனவும் சொல்லியிருக்கிறார். இச்செய்தி இன்றைய ஊடகங்கள் பலவற்றிலும் முதன்மைச் செய்தியாக வெளிவந்திருக்கிறது.

இவ்விடத்தில் என் மனதில் பட்ட சிலதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஒருமுறை அமைச்சர் பசீர் சேகுதாவுத்துடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு விடயத்தைக் கூறினார். தமிழர் தரப்பு ஒவ்வொருமுறையும் முஸ்லிம் கட்சிகளை தங்களுடன் இணைய வருமாறு மட்டுமே அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், ஒருமுறையேனும் முஸ்லிம் கட்சிகளுடன் நாங்கள் இணைந்து செயற்படவிரும்புகிறோம் என தெரிவித்ததில்லை. சிறுபான்மை கட்சிகள் என்ற அடிப்படையில் முஸ்லிம் கட்சிகள் பேரம்பேசும் பலத்துடன் செயற்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ்க் கட்சிகளுக்கு குறிப்பாக தமிழ்த் தேசியக் கட்சிக்கு பேரம்பேசும் சக்தி இருந்ததில்லை. ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாகக் கூட இருந்ததில்லை. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக செயற்பட்டிருக்கிறது. ஆகையினால், முஸ்லிம் கட்சிகளுடன் தமிழ்க் கட்சிகள் இணைந்து செயற்பட முன்வரலாம் தானே? என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் அமைச்சர் பசீர்.

இக்கருத்துக்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் விட்டுக்கொடுப்பு என்பதுதான் சாமர்த்தியமானது எனத் தோன்றுகிறது. இறுதி யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தில் முஸ்லிம்கள் இணைந்துகொண்டமையை கண்டித்த தமிழர் தரப்பு, 90களில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது அமைதியாகத்தான் இருந்தது (ஒரு சிலரைத் தவிர). ஆகையினால், அரசியல் சாணக்கியம் என்பது இங்கு மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டியதொன்றாகிறது.

மாவையில் அழைப்பை முஸ்லிம் கட்சிகள் நிராகரித்தால் - அதுதான் அவர்களின் அரசியல் பேசுபொருளாக மாறிவிடும். ஏற்றுக்கொண்டால் சாணக்கியம் சறுக்கிவிடும். ஒருவரை அழைத்து ஆப்பு வைப்பது என்பது இதுதானோ என சிந்திக்கத் தோன்றுகிறது.

(குறிப்பு: பத்திரிகைத்துறை சாராத தனிப்பட்ட பதிவிது)

Thursday, February 06, 2014

ஆறறிவு


நேற்றிரவு முக்கியமான, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு கம்பனியின் நிர்வாக உறுப்பினர் ஒருவரை இரவுநேர விருந்தொன்றில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எனது குடும்ப நண்பர்களின் அழைப்பின் பேரில் இந்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்டேன். இங்கு “முக்கியமான” தருணத்தில் அந்த தொழிலதிபர் கேள்வி ஒன்றினைக் கேட்டார். சாதாரணமான கேள்வியாக இருந்தாலும் அது சிந்திக்க வைத்தது.

“ஆறறிவு உள்ளவர்கள் யார்?” என்று கேட்டபோது, மனிதனுக்கு ஆறறிவு இல்லை என விஞ்ஞானிகளால் அண்மையில் அறிவிக்கப்பட்டபோதிலும் மனிதன்தான் ஆறறிவு படைத்தவன் என நாங்கள் கூறினோம்.

“ஐந்தறிவு உள்ளவர்கள் யார்?” என்று மறுபடியும் அவர் கேட்டார். அதற்கு வழமையான பதிலாக “மிருகங்கள்” என்று கூறினோம்.

“சரி... அப்படியென்றால், ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு, நாலறிவுள்ளவை எவை?” என்ற கேள்வியை கேட்டுவிட்டு, இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை என்றால் உங்களுக்கு இன்று தூக்கமே வராது. பதில் சொல்லிவிட்டால் எனக்கு சுவாரஸ்யமாக இருக்காது என்று சிரித்துக்கொண்டே கூறினார் அவர்.

இப்பொழுது, அந்த விருந்தில் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு பதிலாக சொல்லத் தொடங்கினார்கள். ஆனால், எந்தப் பதிலிலும் அவர் திருப்தியடையவில்லை. நீண்ட நேரத்தின் பின்னர், அதாவது விருந்துபசாரம் நிறைவடையும் தருணத்தில் அதற்கான பதிலை அந்த தொழிலதிபர் தந்தார். தன்னுடைய அனுபவத்தில் முக்கிய நபரொருவர் தனக்கு இதனை தெளிவுபடுத்தியதாகக் கூறியே அந்தப் பதிலினை பகிர்ந்தார்.

அதாவது, உயிர் வாழ்வுக்கு ஐம்பூதங்களின் முக்கியத்துவம் அவசியம். அதனடிப்படையில்தான் இந்த அறிவுகள் பிரிக்கப்படுகின்றன என்றும் கூறினார்.

அவர் கூறிய ஆறறிவு விபரம் இதுதான்...

முதலாம் அறிவு
மண்ணில் விதைக்கப்பட்டு வளர்கின்ற மரம், செடி, கொடி போன்ற அனைத்துமே ஓரறிவு உடையவை. ஏனெனில் இவை அனைத்தும் சுயமாக ஐம்பூதங்களை ஆட்கொள்பவை அல்ல. உதாரணமாக, ஒரு செடி - காற்றடித்தால் மட்டுமே அசையும். சுயமாக அவை அசைவதில்லை. ஆகையினால் அவை ஓரறிவு உடையவை என்று கருதப்படுகிறது.

இரண்டாம் அறிவு
புழு, பூச்சிகள் என்பன ஈரறி உடையவை. ஏனெனில் இவை சுயமாக அசையும் திறனுடையவை.

மூன்றாம் அறிவு
நீர்வாழ் உயிரினங்கள் மூவறிவு உடையவை. ஏனெனில் இவை தமக்குள் ஒரு வட்டத்தை வகுத்து வாழும் திறனுடையவை என்பதால் மூவறிவுடையனவாக இருக்கின்றன.

நான்காம் அறிவு
பறவைகள் நான்காவது அறிவுடையன. உதாரணமாக, புறா போன்ற பறவைகளை நாம் வளர்த்து, எங்காவது தொலைவில் சென்று விட்டாலும் அவை நம்மை தேடி வருகின்ற திறமை கொண்டவை. இந்த அறிவு அனைத்து பறவைகளுக்கும் இருக்கின்றது. ஆகையினால்தான் அவை நான்கறிவுடையனவாக இருக்கின்றன.

ஐந்தாம் அறிவு
விலங்குகள் அனைத்தும் ஐந்தறிவுடையன. ஏனெனில் அவைகளுக்கு பசி எடுத்தால் உணவு உட்கொள்ள தெரிவும், காமம் கொண்டால் புணர்ச்சியில் ஈடுபடுகின்றன. எதிரியை இனங்காணுகின்ற பண்பிருக்கிறது. இதுபோன்ற பல குணங்களைக் கொண்டவையாக விலங்குகள் இருப்பதால் அவை ஐந்தறிவு உடையனவாக இருக்கின்றன.

ஆறாம் அறிவு
மனிதன் ஆறறிவுடையவனாக இருக்கின்றான் (இப்பொழுது விஞ்ஞானிகள் மனிதனுக்கும் ஐந்தறிவு என்று கூறினாலும்கூட). மிருகங்களுக்கு இருக்கின்ற அனைத்து குணாதிசயங்களும் மனிதனுக்கும் இருக்கின்றன. ஆனாலும் சில சிறப்புத்தன்மை அவனிடம் இருக்கிறது. மனிதனுக்கு பசியெடுத்தால் கண்டதையும் சாப்பிடமாட்டான். எவ்வளவுதான் பசியெடுத்தாலும் விஷத்தினை மனிதன் உண்பதில்லை. அதேபோல், காமவுணர்வு ஏற்பட்டால் மிருகங்கள்போல் நடந்துகொள்வதில்லை. எவையெவை எப்படி செய்யவேண்டும் என்ற பகுத்துணர்வோடு வாழ்வதால் மனிதன் ஆறறிவுடையவனாக இருக்கின்றான்.

“ஆறறிவு” என்பதற்கு அந்த தொழிலதிபர் கொடுத்த மிகப்பெரிய வரைவிலக்கணம் இதுதான். இதில் சில நியாயங்கள் இருப்பதை உணரமுடிந்தது. இதில் எவ்வளவுதூரம் உண்மையான நிலை இருக்கிறது என்பதுபற்றி நான் ஆராயவில்லை. இருப்பினும், அந்த தொழிலதிபர் கூறிய காரணங்கள் சற்று சிந்திக்க வைத்தன. ஆகையினால் இதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

Monday, January 06, 2014

உரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 1)


நாம் அனைவருமே ஏதோ ஒன்றை உலகுக்கோ அல்லது நம்மைச் சார்ந்தவர்களுக்கோ சொல்வதற்கு தயாராக இருப்பவர்கள். இதில் எவரும் விதிவிலக்காகிவிட முடியாது. சில சமயங்களில் நாம் சொல்வதை அனைவரும் கேட்பதுண்டு. பல வேளைகளில் உரக்கக் கத்த நினைக்கின்ற ஊமைபோலவே இருந்துவிடுவதுமுண்டு.

அந்தவகையில், என் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை வைத்து, எனக்குள் எழுகின்ற கேள்விகளுக்கு பதில் தேடும் நோக்கில் 'உரக்கக் கத்தும் ஊமைகள்' என்னும் பதிவினை எழுதத் தொடங்கியிருக்கிறேன்.

அந்தவகையில், முதலாவது பதிவாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனின் இலங்கை விஜயம் தொடர்பாக எனக்கு தெரிந்தவற்றை ஆராயலாம் என நினைக்கிறேன்.

1981ஆம் ஆண்டு டிசெம்பர் 23ஆம் திகதி யாழ்ப்பாணத்திலே பிறந்த ராதிகா, தனது 5ஆவது வயதில் கனடாவில் குடும்பத்தாரோடு குடியேறிவிட்டார். அங்கேயே படித்து பட்டம் பெற்ற அவர், பிற்காலத்தில் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.

2004ஆம் ஆண்டு முதல், புதிய ஜனநாயக கட்சியின் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார். இதன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக்கொண்ட அவர், 2011ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி, ஸ்காபரோ ரூச் ரிவர் தொகுதியில் 18,935 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றுக்கு தெரிவானார்.

முதலாவது தமிழ் பிரதிநிதி என்பதோடு இளவயதில் தெரிவாகிய நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் போற்றப்பட்டார். இவரது தெரிவினை தமிழ் சமூகம் பெருமையாகக் கொண்டாடியது. இதற்கு, அன்றைய சூழலும் ஒரு காரணமாக அமைந்ததென்னமோ உண்மைதான்.

இந்நிலையில், கடந்த டிசெம்பர் 28ஆம் திகதி தனிப்பட்ட விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்தார் ராதிகா. இவரது வரவோடு பல சர்ச்சைகளும் சேர்ந்தே வந்தது. தனது சிறப்புரிமையை பயன்படுத்தாமல், சாதாரண குடிமகளாகவே ராதிகா, இலங்கைக்குள் வந்தார். ஆகையால் ஊடகங்களிடம் சிக்காமல் இருப்பதற்கே அவர் பெரிதும் முயற்சித்தார்.

இருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுடன் வடக்கில் பல இடங்களுக்கும் சென்று, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க தொடங்கியதும் இவரது வருகை பற்றி புகையத் தொடங்கிவிட்டது. சாதாரண சுற்றுலா விசாவில் வருகை தந்த அவர், எவ்வாறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பதே அரச தரப்பின் கேள்வியாக இருந்தது.

தனது சொந்தமண்ணின் சொந்தங்களை சந்திப்பதொன்றும் பெரிய குற்றமில்லை. ஆனால், அரசியல் சுயலாபங்களுக்காக நம் சொந்தங்களை பகடைக்காயாக பயன்படுத்துவதுதான் இங்கு கேள்விக்குரியது.
விசா நடைமுறை என்பது அனைத்து நாட்டிலும் கடுமையாக கடைப்பிடிக்கப்படுகின்ற ஒரு விடயம். இதற்கு எவரும் விதிவிலக்காக முடியாது. அண்டை நாடான இந்தியாவை எடுத்துக்கொண்டால் அங்கு இருக்கும் கெடுபிடிபோல் எங்கும் காணமாட்டீர்கள். சுற்றுலா விசாவில் செல்வதென்றால் அந்த வேலையை மட்டும்தான் செய்ய முடியும். அதனை மீறி எங்காவது தொழில் புரிவது அல்லது செய்தி சேகரித்தால் அது தண்டனைக்குரிய குற்றம். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் நீங்கள் சுற்றுலா விசாவில் இந்தியாவிற்குள் நுழைய முடியும். அதுமாத்திரமல்ல, ஊடகத் துறையில் பணிபுரிகின்ற நாங்கள், சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பித்தால் தரமாட்டார்கள். எங்களுக்கு 'ஜே' எனப்படுகின்ற ஊடகவியலாளர் விசாதான் கொடுப்பார்கள். அதற்கும் பல கேள்விகள், விசாரணைகள் உண்டு. இதுதான் நடைமுறை. இதேபோல்தான் கனடா, அமெரிக்கா, லண்டன், சுவிஸ் என பல நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படுகின்ற கடுமையான குடிவரவு சட்டம்.

ஆனால், இப்படியான கெடுபிடி குடிவரவு சட்டங்களுடன் வாழ்ந்துவந்தவர்கள் எமது நாட்டில் மட்டும் குடிவரவு நிபந்தனைகளை தளர்ந்தவேண்டும் என எதிர்பார்ப்பது எந்தவகையில் நியாயமானது எனத் தெரியவில்லை.

இவர்களின் நோக்கம், தம் மக்களின் துயரினை தாங்கள் துடைக்கின்றோம் என்பதோடு, அரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைப்பதொன்றைத் தவிர வேறெதுவும் இல்லை. இது அவரவர் சுயலாபம் அல்லது சுய அரசியல் என்பது மட்டும் தெளிவு. துயர் துடைக்க நினைப்பவர்கள் நிச்சயமாக தமது பிரபல்யத்திற்கு வித்திடமாட்டார்கள். அரசை நிர்ப்பந்தத்திற்குள் தள்ளி, தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வைப்பதன்மூலம் தம்மை உலகரங்கில் பிரபல்யமடைய செய்வதும் இதில் உள்ளடங்கும். இதனால், பாதிக்கப்பட்ட நமது மக்களுக்கு என்ன லாபம் கிடைக்கப்போகிறது..? ஒருவேளை உணவிற்கு வழியின்றி இருக்கும் மக்களை மீண்டும் தர்மசங்கட அடிமைகளாக்கும் முயற்சியாகவே இதனை பார்க்க வேண்டும்.

உண்மையில் இவர்கள் சொல்கின்ற நியாயம் வரவேற்கத்தக்கது என்று வைத்துக்கொள்வோம். இவர்களின் வருகைமூலம் இங்கிருக்கும் பிரச்சினைகளை வெளிநாட்டுக்கு படம்போட்டு காட்டலாம் என்று நம்புகிறார்கள். அதில் சிலர் வெற்றியும் அடைகிறார்கள். ஆனால், நடைமுறையில் பல சிக்கல்களை தோற்றுவிக்கிறார்கள். சாதாரணமாக திரிகின்ற மக்களையும், கண்காணிக்கும் படுபாதக விளைவுக்குள் நம் மக்களைத் தள்ளிவிட்டுவிடுகிறார்கள் என்ற உண்மையையும் அவர்கள் மறந்துவிடக்கூடாது.

ராதிகா இங்கு வரும்போது உரியமுறையில் வந்திருந்தாலும் எமது மக்களை நேரடியாகச் சென்று சந்தித்திருக்கலாம். அப்படி சந்திக்க முடியவில்லை, பாதுகாப்பு வலயங்கள் இருக்கின்றன என்றால் அதனை பெரிதுபடுத்துவது இலகுவாக இருந்திருக்கும். ஆனால், நீங்கள் வந்ததே நடைமுறைக்கு மாறாகா, இந்நிலையில் மற்றவர்களை அதாவது அரசாங்கத்தை எப்படிக் குறைகூறப்போகிறீர்கள்? இதில் ஏதோ சுயநலம் இருக்கிறது என்பதுமட்டும் உண்மை.

நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அடிக்கடி பல சிக்கல்களில் மாட்டிக்கொள்பவர். தனது மக்களுக்கு எதையாவது நல்லது செய்துவிடவேண்டும் என்பதற்காக எதனையும் செய்யத் துணிகின்ற ஒருவர். ஆனாலும், நேர்வழியில் அதனை செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். மோசடிக்கு துணைபோகின்றார் என்ற குற்றச்சாட்டுத்தான் இப்பொழுது அவர்மீது இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டினை வைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைக்க முடியுமா? சிறந்த ராஜதந்திர நகர்வுக்கு இது சிறந்த உதாரணமல்ல.

டிசெம்பர் 28ஆம் திகதி இலங்கைக்குள் வந்த ராதிகா எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதிதான் கனடா செல்வதாக இருந்தது. ஆனாலும், தனது பயணத்தினை இடைநிறுத்தி, கடந்த 4ஆம் திகதி அதிகாலை இந்தியாவுக்கு பயணமாகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த நிர்ப்பந்தம் எதனால் ஏற்பட்டது. விசா நடைமுறையை பின்பற்றவில்லை என்ற ஒரே காரணத்தினால்தானே... சரியான நடைமுறையை பின்பற்றி, உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தாலும் இலங்கை பாதுகாப்பு படைகளில் உளவுப்பிரிவு நிச்சயம் கண்காணித்துத்தான் இருக்கும். ஆனால் நேரிடையாக தலையிடுவது குறைந்திருக்கும். ஆனால், ஒரு வெளிநாட்டு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எச்சரிக்கும் அளவுக்கு எந்த நிகழ்வும் இடம்பெற்றிருக்காது என்பது மட்டும் உண்மை.

ஆக, எதற்காக இந்த நடைமுறையை பின்பற்றினார் ராதிகா? அதற்கு முன்பதாக உளவுப் பிரிவின் செயற்பாடு பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்.

2004ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 50ஆவது பிறந்ததினம் மற்றும் மாவீரர் தின நிகழ்வுகளை பற்றி செய்தி சேகரிப்பதற்காக நானும் புகைப்பட ஊடகவியலாளர் சுரேந்திரனும் முல்லைத்தீவுக்கு சென்றிருந்தோம். அப்பொழுது நான் வீரகேசரி வார வெளியீட்டில் பணிபுரிந்தேன்.

முல்லைத்தீவு கடற்கரையில் நிகழ்வுகள் நடைபெறவிருந்ததால், தமிழீழ விடுதலைப் புலிகளின் அன்றைய ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரின் அலுவலகத்தில் அனுமதி பெற்று முல்லைத்தீவுக்கு சென்றோம். நாம் செல்வதை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் இருவர் வந்தனர். முல்லைத்தீவு கடற்கரையில் கடற்புலிகளின் தளபதி சூசை மற்றும் பலர் குழுமியிருந்தனர். இவர்களுடன் இயக்குநர் பாராதிராஜா மற்றும் திருமாவளவன் போன்றவர்களும் உடனிருந்தனர்.

எமது புகைப்பட ஊடவியலாளர் சுரேந்திரன், அவர்களை புகைப்படமெடுக்க முற்பட்டபோது தடுக்கப்பட்டார். இங்கு வைத்து இவர்களை படமெடுக்காதீர்கள். அவர்கள் வந்திருப்பது வெளியில் யாருக்கும் தெரியாது என்றார்கள். சரியென நாமும் அதனை படமெடுக்காமல் விட்டுவிட்டு மீண்டும் கிளிநொச்சி நோக்கி வந்துகொண்டிருந்தோம். வரும் வழியில் ஒரு ஒதுக்குப்புற கடையில் நிறுத்தி தேனீர் குடித்துகொண்டிருந்தபோது, சடுதியாக அவ்விடத்திற்கு வந்த பிக்கப் வாகனமொன்றின் உள்ளிருந்தவர்கள் எம்மை உரத்த தொனியில் விசாரித்தார்கள். உள்ளிருப்பவர்களை வெளியில் தெரியாத விதத்தில் அந்த வாகனம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனுள்ளிருந்தவர்கள் எம்மை அங்கு அதிகநேரம் நிற்க விடவில்லை. இது அவர்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயம். இப்படியான அனுபவம் பலருக்கும் இருந்திருக்கும்.

அதேபோல்தான் எல்லா ஆளுந்தரப்பிற்குமென ஒவ்வொரு நடைமுறை இருக்கும். இதில் யாரையும் குறைகூற முடியாது.

ஆக, ராதிகாவின் இலங்கை விஜயம் எதனை அடிப்படையாகக் கொண்டிருந்தது? நான் அறிந்தமட்டில் அவரும் தனது அரசியல் இருப்பினை தக்க வைக்கும் நோக்கிலேயே இங்கு வந்து தன்னை ஸ்திரப்படுத்தியுள்ளார்.

அதாவது, கனடாவில் வெகு விரைவில் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. அதிலும், ராதிகா வெற்றிபெற்ற தொகு இப்பொழுது இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறதாம். அதில் ஒரு பகுதியில்தான் ராதிகா போட்டியிட வேண்டும். மற்றைய பகுதியில் வேறொருவர் போட்டியிடப்போகிறார். அந்தத் தொகுதி மிகவும் வலிமையானதாம். அந்தத் தொகுதியில் ஆனந்த சங்கரியின் மகன் தேர்தலில் குதிக்கப் போவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆகையால் ஆனந்த சங்கரியின் மகன் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பிருக்கிறதாம். ராதிகா போட்டிபோடவுள்ள தொகுதியில் அவருக்கு செல்வாக்கு மங்கிவருகிறதாம். அதனை சரிசெய்வதற்காகத்தான் இலங்கை வந்து தன்னை தமிழ்மக்களின் துயர் துடைப்பாளராக அடையாளம் காட்ட முற்பட்டிருக்கிறாராம்.

இதிலிருந்து பல விடயங்களுக்கான விடை தெரியவருகிறதல்லவா? இதனை சரியாகப் புரிந்துகொள்ளாமல் தலைமேல் தூக்கிவைத்து பிரச்சினைகளுக்கு தூபம் போட்டால் எதிர்காலத்தில் நம்மை எல்லோரும் ஏறி மிதிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆகையால், நன்மை செய்கிறோம் என்கிற நோக்கில், நம்மக்களின் துயரத்தை மீண்டும் அதிகரிக்கச் செய்யாமல் இருப்பதே இப்போதைய ராஜதந்திர நகர்வாகும்.