Friday, January 30, 2009

ரோஜா மலரே...

புன்னகைப்பாய்
பூவைப் பார்த்து...
உன்விரலால்
வீணை மீட்டுவாய்
நாதம் வாசனையாய்
பரவிவரும்..!

உன் முத்தம் பெற்றிடவே
வாடியதாய் நடிக்கிறது
ரோஜா பூக்கூட...!
நானும்தான் நடிக்கின்றேன்
எட்டிநின்று கேட்கிறாய்
'ஏன் வாடியிருக்கிறாய்?'

தன் இதழ் விரிக்கும்போது
ஆனந்தக் கண்ணீரால்
பன்னீர் தெளிக்கிறாய்...
புன்னகைக்கும் ரோஜா,
உன் அணைப்பை எண்ணி!

ரோஜாவின் அங்கமெலாம்
உன்விரல் வீணை மீட்டும்...
என்னைமட்டும் எதற்காக
தொடுவதற்கே தயங்குகிறாய்..?

உதிர்கின்ற இதழ்களையே
பதிவேட்டில் பதிக்கின்றாய்...
உன்னைத் தொட்டால்
முறைக்கின்றாய்...
ரோஜாவைத் தொட்டால்
பதைக்கின்றாயேடி...

உன் முத்தம் வாங்கிடவே
பருவத்தை மீறி பூக்கிறது
உன் வீட்டு ரோஜா செடி...
தன் இதழ்களின் மென்மைதனை
சோதிக்கிறதாம் உன் இதழ்கள்...
மலர்கூட வெட்கித்து புலம்பிடும்
'மென்மை என்பதன்
பெயரை மாற்றுங்கள்...'

பூ - நெஞ்சில் தவிப்பு(பூ)!

கொஞ்சநாளாகவே என்னுடைய அலுவலகத்தில் சரியான வேலை. தலைக்குமேல வேலைன்னு சொல்லுவாங்களே, அதுமாதிரித்தாங்க இது. நேற்றையோட அந்த வேலைங்க எல்லாத்தையும் முடிச்சிட்டு நிம்மதியா இருந்தன். அப்போதான் நான் மிஸ் பண்ணின படம் ஞாபகம் வந்திச்சு. அத பாத்திடனுங்கிற ஆசையும் தோணிச்சு. அழகான கவிதையாக வெளிவந்த படம்னு கேள்விப்பட்டன். ஊர் உறங்கிற நேரத்தில, நான் விழிச்சிருந்து படம் பார்க்கிறதுதான் எனக்குப் பிடிக்கும். அப்படிப் பார்த்த படம்தான் "பூ'. இந்தப்படம் வெளியாகி ரொம்ப நாளாச்சு. ஆனாலும் நான் நேற்றுத்தான் பார்த்தேன். பிடிச்சிருந்திச்சு, எழுதனுனு தோணிச்சு எழுதிறன்.

ச.தமிழ்செல்வனின் 'வெயிலோடு போய்' என்ற சிறுகதையை மையமாக வைத்து, சசி என்கிற இயக்குநர் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் (கதையோடு வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்...). திரைப்படத்திலே பல புதுமுகங்கள், சில பரிட்சய முகங்கள். அத்தனையும் முத்துக்கள். ஸ்ரீகாந்த் நீண்ட நாட்களுக்குப்பின் கதாநாயகனாக வாழ்ந்திருக்கிறார். பார்வதி என்கிற நாயகி அறிமுகமாகியிருக்கிறார். பருத்திவீரன் பிரியாமணியை அடிக்கடி ஞாபகப்படுத்துகிறார். இவர்களோடு இனிகோ, இன்பநிலா, பறவைமுனியம்மா என நீண்ட பட்டியல் தொடர்கிறது.

படத்தின் ஆரம்பத்திலேயே கிராமத்து வாசனை வீசுகிறது. வழமையாக கிராமம் என்றால் பசுமைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இங்கு கிராமத்தின் வரட்சியை, குளிர்மையை கலந்து காட்டியிருக்கிறார்கள். பசுமையைவிட வரட்சிதான் அதிகமாக தெரிகிறது... (புண்பட்ட நெஞ்சத்தின் வரட்சி, காட்சிகளிலும் தெரிகிறது).

படத்தின் ஆரம்பத்திலேயே படுக்கையறை காட்சி. அழகான சிரித்த முகத்துடன் கதாநாயகி அறிமுகம். எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்கும் பெண் அவள். காலில் அடிபட்டாலும் சிரிப்பாள், கணவன் திட்டினாலும் சிரிப்பாள். வெகுளியான பாசக்காறி. அந்தப் பெண்ணுக்குள் இருக்கின்ற வலிதான் கதையின் கரு (ஏற்கனவே இந்தப் படத்தின் விமர்சனங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்பதால் சுருக்கமாகச் சொல்கிறேன்...).

கிராமத்தில், சிறுவயதில் ஏற்படுகின்ற உறவுக்காதல். இனம்புரியாத வயதிலேயே தொற்றிக்கொள்ளும் காதல். ஆழமாக ஆழ்மனதில் வேர்விட்டு விருட்சமாகிவிட்ட காதலின் பிரிவினை அழகாக திரைக்கதையாக சொல்லியிருக்கிறார் சசி. தன்னுடைய மாமன் மகனின் நிழலைக்கூட உயிராக நினைத்து வாழும் பெண்ணின் தவிப்பு(பூ) இந்தப்படத்திலே தெரிகிறது. ஆண்களின் ஓட்டோகிராபினை சேரன் சொல்லித்தந்தார். அதேபோல் பெண்களின் ஓட்டோகிராபினை சசி சொல்லியிருக்கிறார்.

வழமையான காதலாக இருந்தாலும், பிரிவென்று வரும்போது தன்னவன் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக தன் வாழ்வையே அர்ப்பணிக்கின்ற காதலின் சிகரம் கதாநாயகி. பிரிவில்கூட சிரிக்கின்ற கதாநாயகி, தன்னுடைய காதலனின் வாழ்விற்காக தன் காதலை மூடி மறைக்கின்றாள். ஆனால், தன் அன்புக்குரியவனின் வாழ்வு நிம்மதியற்று இருக்கிறது என்பதை அறிந்தபோது அடக்கிவைத்த ஆசைகளை கண்ணீராய் சிந்துகிறாள். அந்த கதறலோடே படமும் நிறைவு பெறுகிறது. எங்கள் மனதும் கனக்கிறது.

சுருக்கமான கதை இதுதான். இதன் காட்சிகளை அழகாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா. கிராமத்தின் காட்சிகளை கமெரா கண்களால் துல்லியமாக எடுத்துக் காட்டியிருக்கிறார் முத்தையா. அந்தக் காட்சிகளை அழகாக தொகுத்திருக்கிறார் மதன் குணதேவா. படத்தின் கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது இசை. எஸ்.எஸ்.குமரனின் இசை அற்புதமாக இருக்கிறது. அனைத்துப் பாடல்களும் நெஞ்சைத் தொடுகின்றன. நா.முத்துக்குமார் பாடல்களை எழுதியிருக்கிறார். 'சூ...சூ...மாரி...' பாடல் ரொம்பப் பிரபல்யம். அதேபோல் ஒரு பாடலில் அறிமுகமாகியிருக்கிறார் ச.ஞானகரவேல். 'சிவகாசி ரதியே...' என்ற பாடலில் பழைய காதலின் நினைவுகளை அழகாக வடித்திருக்கிறார் அறிமுக பாடலாசிரியர். அதேபோல் நடன அமைப்புகளும் அருமை. கலை இயக்குநரான கே.வீரசமர் அருமையாக உழைத்திருக்கிறார்.

பூ- படத்தினைப் பொறுத்தவரையில் நட்பு(பூ), வெறுப்பு(பூ), தவிப்பு(பூ), கற்பு(பூ), சகிப்பு(பூ), மதிப்பு(பூ) என அனைத்துப் பூக்களுமே இருக்கின்றன. உறவில் திருமணம் முடித்தால் பிறக்கின்ற பிள்ளை ஊனமாக பிறக்கும் என்ற படிப்பினையும் சொல்கிறது கதை. அதேபோல் நட்புக்கும் காதலுக்கும் இடையில் நடக்கின்ற போராட்டம் என அழகாக நீள்கிறது கதை. நீண்ட நாட்களின் பின்னர் என் நெஞ்சில் ஒரு தவிப்பு(பூ). அழகான கவிதையினைப் படித்த உணர்வு இன்னமும் என் மனதில் நிழலாடுகிறது.

Thursday, January 29, 2009

நிம்மதியான தூக்கம்...

நம் வாழ்க்கையிலே உறக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒரு விடயம். உறக்கம் இல்லை என்றால் என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள். பட்டினியாக சில நாட்கள் உயிர் வாழலாம். ஆனால், தூக்கம் இல்லாமல் எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும்? உழைத்து சலிப்பாக இருக்கும் வேளையிலே நித்திரை என்பது எமக்கு சொர்க்கப்படுக்கை போல் இருக்கும். இங்கும் இவர்கள் நிம்மதியாகத் தூக்குகிறார்கள். இவர்கள் மனிதர்களல்ல, பூனைகள்! தம் எதிரிகளின் தொல்லைகளை மறந்து எப்படி நிம்மதியாக உறங்குகிறார்கள் பார்த்தீர்களா? (ம்... எத்தனையோ நம் சொந்தங்கள் தூக்கமின்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு எப்பதான் விடிவு பிறக்குமோ....?).
என் சிறு கவிகள்...7

Tuesday, January 27, 2009

சீண்டல்...

உன் ஒருதுளி கண்ணீரில்
என் ஓராயிரம் ஆத்திரங்கள்
அர்த்தமிழக்கின்றன...

அடங்காத ஆசைகூட
அடங்கித்தான் போகிறது
உன் கடைக்கண்
பார்வையிலே செல்லமே...

செல்லமாக இருந்தென்னை
வலியின்றி கொல்கிறாய்...
நான் பாவமில்லையடி
நீதான் வலிதாங்கமாட்டாய்...

கோவமாக இருப்பதாக
இறுக்கமாக நீ சொல்வாய்...
பாவமாக உனைப்பார்ப்பேன்
அணைக்கப்போவது நானல்லவோ?

மூர்க்கமான வார்த்தைகளை
முணுமுணுக்கும் வேளையிலே
தர்க்கத்தில் நீ குதிப்பாய்...
விக்கித்திப் போய் நிற்பேன்
உன் விம்பம் பார்த்துத்தான்...

சுகமான சண்டைகளை
வேண்டாமென்றாலும்
நீ தொடுப்பாய்...
கடுப்பாகி திட்டிவிட்டால்
கண்ணீரால் கதை சொல்வாய்...

என்னை சீண்டிப்பார்ப்பதில்
நீ தடைதாண்டியவள்...
என் கோவத்தை நீ ரசிப்பாய்,
சீண்டும் உன்னை
சிகரத்தில் நான் பதிப்பேன்...

Monday, January 26, 2009

என் சிறு கவிகள்...6


கட்டிப்புடி கட்டிப்புடிடா...

உணர்வு என்பது மனிதனுக்கு அதிகமாகவே இருக்கின்றது. ஒவ்வொரு உணர்வும் வெவ்வேறு விதமாக அமைந்துவிடுவதுதான் மனிதனின் சிறப்பே. சிலருக்கு சிரிப்பு என்பது பெரிய உணர்வைக் கொடுக்கும். அதேசமயம் சிலருக்கு அழுகைகூட வேறு விதமான உணர்வைக் கொடுக்கும். இப்படி இருக்கையில் கட்டிப்பிடித்தல் பற்றி சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

'கட்டிப்புடி... கட்டிப்புடிடா...' என்று ஒரு பாடல்கூட இருக்கிறதல்லவா... இதுதவிர 'வசூல்ராஜா' படத்தில் 'கட்டிப்புடி வைத்தியம்' என்ற ஒரு புதுவிடயத்தை கமல் புகுத்தியிருந்தார். உண்மையில் இந்தக் கட்டிப்பிடித்தலுக்கு இந்த சக்தியெல்லாம் இருக்கின்றதா என்ற சந்தேகம் பலருக்கு எழுவது நியாயமே.

சாதாரணமாக இந்தவிடயத்தை வீட்டில் நீங்கள் அவதானித்திருப்பீர்கள். பிறந்த குழந்தை அடம்பிடித்து அழும்போது தன் தாய் அரவணைத்துத் தூக்கியதும் அழுகையை நிறுத்திவிடும். இதுகூட ஒருவகை தொடுகைச் சிகிச்சைதான். பாசத்தை வெளிப்படுத்துவதற்கு பல வழிகள் இருக்கின்றன. அதில் கட்டிப்பிடித்தலும் ஒரு சிறந்த வழியாகும். சிறந்தது என்று சாதாரணமாகச் சொல்வதைவிட அதிசிறந்த வழிமுறை என்று கூடச் சொல்லலாம்.

இரண்டு நண்பர்களை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள். இருவரும் இணைபிரியாத நண்பர்கள் என்பதை வெளிப்படுத்துவதற்கு அவர்கள் அரவணைத்துக் கொள்வார்கள். இவ்விடத்தில் அவர்களின் நட்பின் பலம் அதிகரிக்கின்றது. அதேபோல் தெரியாத இரு பிரமுகர்கள் சந்திக்கும்போது கூட கைலாகு கொடுப்பார்கள். அதன்பின்னர் தோளில் தட்டி, கட்டிக்கொள்வதை நாம் அவதானித்திருப்போம். இவ்விடத்தில் அவர்களின் ஆளுமையின் பலம் அதிகரிக்கிறது. காதலர்கள் தங்களை தழுவும்போது இனம்புரியாத உலகத்துக்கு அழைத்துச் செல்கின்றது அவர்களின் உணர்வு. இவ்விடயத்தில் அவர்களது காதலின் பலம் அதிகரிக்கின்றது.

ஆக... கட்டிப்பிடித்தலுக்கு எவ்வளவு 'சக்தி' இருக்கின்றது என்பதை சிந்தித்துப் பாருங்கள். எமது நாட்டை பொறுத்தமட்டில் ஆண், பெண் நண்பர்கள் கண்டவுடன் கட்டிக்கொள்வது மிகக் குறைவு என்றுதான் கூறவேண்டும். ஆனால் மேலைத்தேய நாடுகளில் கண்டவுடன் கட்டிக்கொள்வது அவர்களின் கலாசாரமாக இருக்கின்றது. அந்தக் கலாசாரத்தின் சாராம்சம் 'அன்பின் வெளிப்பாடு' என்பதேயாகும்.

கட்டிப்பிடிக்கும்போது எமக்குள் என்ன நடக்கின்றது எனச் சிந்தித்திருக்கிறீர்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள் (இல்லையேல் அனுபவித்துப் பாருங்கள்). தொடுகைச் சிகிச்சைமுறை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மனித உடலிலுள்ள நரம்புச் சக்கரங்களைக் கண்டறிந்து அவ்விடத்தில் தொடுதல் சிகிச்சை செய்வதன் மூலம் பல நோய்களைக் குணப்படுத்துவதே தொடுகைச் சிகிச்சை. நாம் கட்டிப்பிடிக்கும் போதும் இதுவேதான் நிகழ்கின்றது. அதாவது, எமது அணைப்பு உடலின் தூண்டுதலை ஏற்படுத்துகிறது. இதனால் இரத்தோட்டம் அதிகரிக்கின்றது. எமது மூளையின் வேகமும் அதிகரிக்கின்றது. இதன் பயனாக நாம் புத்துணர்ச்சியடைகின்றோம்.

பார்த்தீர்களா... சாதாரண ஒரு கட்டிப்பிடித்தலினால் எமது உணர்வுகள் புதுப்பொலிவு பெறுகின்றதல்லவா? இப்படியான செலவில்லாத மருத்துவத்தை நாமாகத்தான் பெற்றுக்கொள்ள முடியும். சிலருக்கு இப்படியான விடயங்கள் வெறுப்பைத் தரலாம். ஆனாலும் உண்மை அதுதானே. ஆகையினால் எம்மால் முடிந்தளவு நம் நண்பர்களுக்குள்ளாவது கட்டிப்பிடி வைத்தியம் செய்யலாம்தானே. எமது நட்பும் அதிகரிக்கும், உணர்வுகளும் புத்துயிர் பெறும்.

எது எப்படியிருப்பினும் காதலர்களின் அணைப்பின் சுகத்தை எவராலும் மறக்க முடியாது. அந்தச் சுகத்தினை வார்த்தைகளால் வர்ணிக்கவும் முடியாது. அனுபவித்த காதலர்களிடம் கேட்டுப்பாருங்கள்... கட்டிப்பிடித்தலின் சுகத்தினை வெட்கத்திலேயே சொல்லி முடித்துவிடுவார்கள்.

தொடுகை...

செத்துவிட தோனுதடி
உந்தன் மடிதனிலே...
மானுடனாய் வாழவைத்த
தங்கரதம் நீயல்லவோ...

காலங்கள் கரையுதென
எத்தனைமுறை கலங்கியும்
தெளிவில்லா வாழ்வதனை
உன்மடியில் தொலைத்திடவே
உள்மனது ஓடிவரும்,
தெளிவில்லா குழப்பத்தை
குழந்தைச் சிரிப்பில்
புதைத்துவைக்கும் என்னவளே,
உன் மாயம்தான் என்னதடி...?

உன் புருவ இடுக்கில்
எனை இதமாய் இருத்தி
உரத்தே சொல்லிடுவாய்
உன்னவன் நானென்று...
என்னைநான் நொந்திடுவேன்
உண்மையாய் வாழ்ந்திடவே...

தொடுகையற்ற காதல்தான்
வடுவற்றதென்கிறாய்...
என் உள்ளத்தை தொட்டதனால்
நீதான் என்னவளானாய்...!
இப்பொழுது சொல்லிவிடு,
தொடுகை இதமானதா இறுக்கமானதா?

Friday, January 23, 2009

முயற்சியே மூலதனம்...

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். பெண் இருப்பாளோ இல்லையோ நிச்சயம் நம்பிக்கையும் விடாமுயற்சியும் இருத்தல் வேண்டும். இன்றைய ஆண்கள் பெரும்பாலும் க.பொ.த. சாதாரண தர, உயர்தரப் பரீட்சை முடிந்ததும் தொழில்நுட்பக் கல்வியை தொடர்கின்றனர். அவ்வாறே சில காலங்களை கடத்துகின்றனர். அதன்பின் தொழில் தேடுகின்றனர். இதில் அவர்களில் காலத்தின் பெரும்பகுதி வீணாகிவிடுகிறது. வேலை கிடைக்கும்வரை பெற்றோரின் உழைப்பிலேயே வாழ்கின்றனர். இது தவறு. பாடசாலைக் கல்வி முடிந்ததும் சிறு தொழிலையாவது தேடிக்கொள்ள வேண்டும். அவ்வருமானத்தில் தொழில் கல்வியை தொடரவேண்டும். ஏனெனில் காலம் மிகவும் பொன்னானது. காலத்தை வீணடிக்கக்கூடாது. உயர்தரப் பரீட்சை முடிந்தபின் கல்விக்கென்று மட்டுமே வாழ்நாட்களில் காலங்களை ஒதுக்குவது தவறு. அவ்வேளை ஏதாவது தொழிலை செய்துகொண்டே கற்கவேண்டும். ஏதாவது தொழிலில் இருக்கும்போது தொழில் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும். அதைவிட நான் என் சொந்தக்காலில் நின்று முன்னேறுவேன் என்ற நம்பிக்கையுடன் செயற்படவும் முடியும். ஏனெனில் தாம் உழைக்கும்போதுதான் பணத்தின் மதிப்பு தெரியும். மேலும் உழைக்க வேண்டும் என்ற வெறி, சிறு வயதிலேயே தோன்றும்.

இன்று பல வெற்றிகளைப் பெற்று போற்றுதற்குரிய நிலையிலுள்ள ஆண்களின் கடந்த காலங்களை நோக்கினால் அதில் எண்ணற்ற அவமானங்கள், சரிவுகள், பாதிப்புகள் என்று கரடு முரடானதாகவே இருக்கும். அத்தனை தடைகளையும் தாண்டியே அவர்கள் இந்நிலைக்கு வந்துள்ளனர் எனலாம். நிச்சயமாக அவர்களுக்கு சிறுவயதிலிருந்தே உழைக்கவேண்டும் என்ற அவா இருந்திருக்கும்.

ஆனால், பல ஆண்கள் தங்கள் திறமைக்கு ஏற்ற தொழில் கிடைத்ததும் அதுவே போதும் என்று தொழில் செய்வதிலும் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதிலுமே காலத்தை செலவிடுகின்றனர். இதில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது. நிச்சயம் தாம் இருக்கும் நிலையிலிருந்து உயர் நிலைக்குச் செல்ல வேண்டும் என்றே ஒவ்வொரு நிமிடமும் சிந்திக்கவேண்டும். வீணாக காலத்தை நண்பர்களுடன் அரட்டை அடிப்பதில் செலவிடாது தமது தொழிலில் முன்னேறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிக்கலாம். மேலதிக பட்டப்படிப்பைப் தொடரலாம். இன்றைய இளைஞர்கள் பலபேர் படித்து முடிந்ததும் தொழில் தேடுவது... அதுவரை தமது பயணம் முடிந்து விட்டதாக கருதுகின்றனர். அதன் பின் திருமணம், குழந்தைகள் என்று பெண்களைப் போலவே ஒரு வட்டத்திற்குள் இருக்க நினைக்கின்றனர். இதைவிடுத்து எதையாவது சாதிக்கவேண்டும். எத்துறையிலாவது பிரகாசிக்கவேண்டும் என்று செயற்பட்டால் என்ன? ஒரு சிறு வெற்றி கிடைத்தாலும் அது பெரிய விடயம்தானே...?

எல்லாவற்றையும் விட நல்லவராக இருக்க முயற்சி செய்யுங்கள். முதலில் வீட்டில் நல்லவராக இருங்கள். பெற்றோருக்கு அன்பான பிள்ளையாக, மனைவிக்கு ஆசைக் கணவனாக, குழந்தைக்கு பொறுப்புள்ள தந்தையாக இருங்கள். பின் உங்கள் பெருமை தானாக வெளியில் பரவும். நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் நேர்மையாக இருங்கள். எப்போதும் உண்மையைப் பேசுங்கள். மற்றவர்கள் மதிப்பை சம்பாதித்துக் கொள்ளவேண்டும். உங்கள் நடவடிக்கையைப் பார்த்தே பிறர் உங்களை மதிப்பர். எனவே நல்ல முறையில் நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அனைவரையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். யாராவது சின்ன அறிவுரை சொன்னாலும் கூட கேட்கத் தவறாதீர்கள்.

எடுக்கும் சம்பளப் பணத்தை வீணாக செலவழிக்காது ஒரு திட்டம் தீட்டி செலவிடப்பாருங்கள். நாம் எதையாவது ஒன்றைப் பெறவேண்டுமானால் ஏதாவது ஒன்றை இழந்துதான் ஆக வேண்டும். எனவே, சிக்கனப்படுத்தி உங்கள் முன்னேற்றத்திற்கு ஏற்ற செலவுகளை மட்டும் செய்யுங்கள். இன்றைய ஆண்களுக்குரிய மிகப் பெரிய மைனஸ் பொயின்ட் அவர்களது கோபம். அதனால் எண்ணற்ற பல வாய்ப்புகளை தவறவிடுகின்றனர். எப்போதும் பொறுமையை கடைபிடிக்க முயற்சிசெய்யுங்கள். உங்கள் வழியில் தெளிவு ஏற்படுமளவிற்குச் செயற்படுங்கள்.

எச்சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையை இழக்கவேண்டாம். எத்தனை சரிவுகள் வந்தாலும் எடுத்த கருமத்திலிருந்து பின்வாங்க வேண்டாம். நீங்கள் இருக்கும் துறையிலேயே நீங்கள் முன்னுக்கு வரலாம். தொடர்ந்து முயற்சி செய்து, காலத்தை வீணடிக்காது, உங்கள் குறிக்கோளையே சிந்தித்து, வேறு எண்ணங்கள் இல்லாது செயற்பட்டால் வெற்றி நிச்சயம்.

Thursday, January 22, 2009

குளிர்காற்று...

பலகால நினைவுகள்
பவளமாய் என்மனதில்
துயில்கின்ற இரவில்
மயிலிறகாய் தடவிடுமே
விடிகாலை குளிரது...

உள்ளத்தின் உணர்வுகள்
சில்லிடும் சிலிர்ப்பில்
மிதிர்வான சீண்டுதலாய்
குளிர்காற்று தழுவிடுமே...
நினைவோடு நிஜங்களும்
நிம்மதியாய் சிலிர்த்திடும்
ஜில்லென்ற குளிர்காற்றில்...!

மனதோர மயக்கத்தை
இயக்கமின்றி தடுத்திடவே
தயக்கமின்றி உள்நுழையும்
மாயக்காரன் நீயா...?
தூய சிந்தனையை
பாய்விரித்து உறங்கவைக்க
இரக்கமின்றி துரத்திறாயே...

என்னவளின் நினைவென்ற
நிம்மதிப் போர்வையில்
புதைந்துதான் பார்க்கின்றேன்,
வதைக்கின்ற குளிர்காற்றே
பகைக்காதே போய்விடு..!
இதமான நினைவுகளை
இறுக்கமாக்கும் குளிர்காற்றே,
வதைக்காதே போய்விடு...

விடிகாலை நினைவோடு
மேனிதழுவும் குளிர்காற்றில்
ஆற்றோரம் நடைபயில
தேக்கமாய் நினைவுகள்
புதைந்துதான் கிடக்கின்றன...
குளிர்தண்ணி கையேந்தி
மேல்தனில் தெளிக்கையில்
ஜில்லிடும் உடல்
உள்ளமும் ஊமையாகும்..!

கரம்பற்றும் வாழ்வதனை
கனவுலகில் வாழ்கின்றேன்...
நிஜமாகும் நேரமதை
நினைத்துத்தான் பார்க்கையில்
குளிரின்றி மயிர்சிலிர்க்கும்,
உள்ளத்தில் ஒளி பிறக்கும்...!

உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் முத்தம்

மனித உடம்பில் ஏற்படுகின்ற அனைத்து உணர்வுகளையும் ஒன்றுதிரட்டுகின்ற சக்தி எதற்கிருக்கின்றது என்று நினைக்கிறீர்கள்? ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக் குறிப்பிவார்கள். ஆனால் முத்தத்திற்கு அந்தச் சக்தி இருக்கின்றது என்றால் நம்புவீர்களா? ஆனால் உண்மை அதுதான்.

சத்தம் போட்டு சாதிக்க முடியாததை ஒரே ஒரு முத்தத்தினால் சாதித்துவிடமுடியும். இதை நீங்கள் வீடுகளிலும் உணர்ந்திருப்பீர்கள். சில சமயங்களில் பிள்ளைகள் அடம்பிடித்துக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு சத்தம் போட்டுத் திட்டினாலும் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் செய்ததையே திரும்பத்திரும்பச் செய்வார்கள். இப்படியான சந்தர்ப்பத்தில் அன்பாக அவர்களை அரவணைத்து, கன்னத்தில் அல்லது நெற்றியில் முத்தமிட்டு 'செல்லம் இப்படிச்செய்யக்கூடாது...' என்று சொல்லிப்பாருங்கள். அந்தப்பிள்ளை குழப்படியினை நிறுத்திவிடும். அந்த முத்தத்திற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.

முத்தம் என்ற சொல்லுக்கே தனியொரு அழுத்தம் இருக்கிறது. அந்த வார்த்தையை உச்சரித்துப்பாருங்கள். முத்தம் என்ற அந்த வார்த்தையின் அழுத்தத்தினை நீங்கள் உணர்வீர்கள். உச்சரிப்பிலும் அழுத்தம் மிக்க அந்த வார்த்தை உள்ளத்தையும் அழுத்தம் மிக்கதாக மாற்றும் ஆற்றல் மிக்கது. எம் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கும் சக்தி அந்த முத்தத்திற்கு இருக்கிறது.

இப்படி பல சக்திகளை உள்ளடக்கிய அந்த முத்தம் பல வகைப்படும். அதாவது முத்தத்தினைப் பரிமாறும் விதத்தில் அது வேறுபடுகிறது. ஒரு தாய், தன் பிள்ளைக்குக் கொடுக்கின்ற முத்தத்தில் ஒருபாசம் இருக்கிறது. அதே தாய், தன் கணவனுக்கு முத்தம் கொடுக்கும்போது அந்த இடத்தில் காதல் இருக்கிறது. அதே தாய், தன் சகோதரனுக்கு அல்லது சகோதரிக்கு முத்தம் கொடுக்கும்போது அங்கு சகோதரத்துவம் இருக்கிறது. இப்படி யார் யாருக்கு முத்தம் கொடுக்கின்றோமோ அதைப்பொறுத்து முத்தத்தின் பெறுமதி வேறுபடுகிறது. விலை மதிக்கமுடியாத பரிசுகளில் ஒன்று முத்தம் தான்.

காதலின் ஆரம்பம் கண்களில் தொடங்குவதாகச் சொல்வார்கள். ஆரம்பம் கண்களாக இருந்தாலும் காதலில் வளர்ச்சி முத்தத்தில்தான் தங்கியிருக்கிறது. இதை காதலர்கள் ஒத்துக்கொள்வார்கள் (ஒரு சிலரைத் தவிர). காதலிப்பதே ஒரு சுகம்தான். அந்த சுகத்திற்கு இன்னும் சுகம் சேர்ப்பதுதான் இந்த முத்தம். அப்படி என்னதான் இருக்கிறது இந்த முத்தத்தில்...? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் முறையாக யாரும் பதில் சொல்லமாட்டார்கள். முத்தம் கொடுக்கின்றபோது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை உள்ள அனைத்து உறுப்புக்களும் உணர்வு பெறுகிறது. இரத்தம் மிக வேகமாக ஓடுவதால் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. இத்தனை பாரிய சக்தி அந்த முத்தத்திற்கு இருக்கிறது.

ஆனால் ஒரு சிலரது கருத்து என்னவெனில் முத்தம் கொடுப்பது தப்பென்பதாகும். அதாவது முத்தம் கொடுக்கும்போது எச்சிலினூடாக கிருமிகள் பரவி நோய் தொற்றுக்கள் ஏற்பட்டுவிடுமென்று கூறுவார்கள். இதில் ஓரளவு உண்மையிருக்கிறதுதான்.அதாவது நோயுள்ள ஒருவர் இன்னொருவருக்கு முத்தமிடும்போது கிருமிகளின் தொற்று மிக வேகமாக இடம்பெறுவதாக கூறுகின்றார்கள். ஆகையினால் நோயுள்ளவர்கள் முத்தமிடுவதை தவிர்த்துக்கொள்வது சிறந்ததாகும். குறிப்பாக உதட்டில் முத்தமிடுவதைத் தவிர்த்துக்கொள்ளலாம்.

எங்களுடைய சுவாசம் எப்போழுதும் தூய்மையாக இருக்க வேண்டும். சுவாசம் தூய்மையாக இல்லாதவிடத்து எமது வாய்நாற்றம் அதிகமாக இருக்கும். இப்படியான சந்தர்ப்பத்தில் முத்தத்தின் சக்தி இல்லாமல் போய்விடும். எனவே முத்தமிட நினைப்பவர்கள் உங்களுடைய வாய் நாற்றத்தையும் கவனத்திற்கொள்ளவேண்டும். சுவாசம் தூய்மையாக இருக்கவேண்டுமானால் அதிகமாக தண்ணீர் அருந்தவேண்டும். அதேபோல் நிறைய பழவகைகள் சாப்பிடவேண்டும். குளிர்மையான ஆகாரங்கள் எடுக்கவேண்டும். இப்படிச் செய்துவந்தால் உங்களுடைய சுவாசம் எப்பொழுதும் தூய்மையாக இருக்கும். முத்தமிடுவதற்கு முன் உங்களுடைய மூச்சுக்காற்று முகத்தில்படும்போது உணர்வுகள் தூண்டப்படுகின்றன. அந்த மூச்சுக்காற்று தூய்மையாக இருக்கும்போதுதான் உணர்வுகள் தூண்டப்படும். இல்லையேல் முத்தத்தில் வெறுப்புத்தான் ஏற்படுமாம். ஆகையினால் முத்தப்பிரியர்கள் கட்டாயமாக தங்கள் சுவாசத்தினைத் தூய்மையாக வைத்திருக்கப் பழகிக்கொள்ளவேண்டும்.

முத்தத்தினை வெறுக்கின்ற உள்ளங்கள் இருக்கமாட்டார்கள். மேலைத்தேய நாடுகளில் முத்தம் என்பது அத்தியாவசியமான ஒரு ஸ்பரிஸமாக இருக்கிறது. ஒருவரையொருவர் காணும்போது முத்தத்தினைப் பரிமாறிக்கொள்கிறார்கள். ஆனால் எமது கலாசாரம் அதற்கு இடம்கொடுப்பதில்லை. ஆகையினால் முத்தம் என்றாலே அது ஆபாசம் என்று நினைக்கிறார்கள். உண்மையில் முத்தம் என்பது ஆபாசமானதொன்றல்ல. ஆரோக்கியமான ஒன்றென்றே கூறவேண்டும். ஆகையினால் முத்தத்தினைப் பரிமாறிக்கொள்வதில் தயக்கம் காட்டத்தேவையில்லை. ஆனால் யாருக்கு முத்தம் கொடுக்கிறோம் என்பதைப்பொறுத்து முத்தத்தின் தன்மையை மாற்றிக்கொள்ளுங்கள். அண்ணன், தங்கைக்கு உதட்டில் முத்தமிட முடியுமா? அதேபோல் நாம் யாருக்கு முத்தமிட நினைக்கிறோமோ அதற்கமைய முத்தம் கொடுக்கும் இடத்தினை மாற்றிக்கொள்ளுங்கள்.

பொதுவாக யாராக இருந்தாலும் நெற்றியில் முத்தமிடுங்கள். இது ஓர் உறவினை வலுப்படுத்துவதாக அமையும். சிறியோர் முதல் பெரியோர் வரை எவருக்கு வேண்டுமானாலும் நெற்றியில் முத்தமிடலாம். இந்த முத்தம் பாசத்தின் வெளிப்பாடாகவே கருதப்படும். இப்படியான முத்தங்களைப் பரிமாறும்போது எமது அனைத்து உறுப்புக்களுக்கும் புதுத் தெம்பு கிடைக்கிறது. இப்படி தெம்பாக இருக்கும்போது எந்தவிடயத்தையும் தெளிவாகப் புரிந்து கொள்ளக்கூடிய தன்மை ஏற்படுகிறது. உறைந்திருக்கும் எமது இரத்த ஓட்டத்தின் வேகத்தினை அதிகரிக்கச் செய்யும்போது புது உற்சாகம் ஏற்படுகிறது. இச்சந்தர்ப்பத்தில் எமது மூளை மிக நிதானமாகச் செயற்படுகிறது. அவ்வேளையில் நாமெடுக்கின்ற முடிவுகள் மிக நிதானமானவையாக இருக்கின்றன.

பார்த்தீர்களா... ஒரு சாதாரண முத்தத்தில் எத்தனை நன்மைகள் பொதிந்திருக்கின்றன என்று... இப்படிப்பட்ட முத்தத்தினை வெறுப்பது சரியா...? எனவே உங்கள் பாசத்தின் வெளிப்பாடாக முத்தத்தினை அதிகளவில் கொடுங்கள்... புத்துணர்ச்சியைப் பெறுவீர்கள்...! (தவறாக யாருக்கும் முத்தம் கொடுத்து அடி வாங்கினால் நான் பொறுப்பல்ல... ஹி... ஹி... ஹி...).

Monday, January 19, 2009

நீ வேண்டும்...

அரவமற்ற காரிருளில்
கவிக்குயிலாய் என்னருகில்
கவிபாட நீ வேண்டும்...
கவியோடு என் கவலை
காற்றோடு கலைந்து
பறந்தோடி போகவேண்டும்...

தூற்றும் உள்ளங்கள்
போற்றும் காலம்
எமைநாடி வரவேண்டும்...
வாழ்வின் வாசனையை
தோல்வியின்றி சுவாசித்திட
அகிலத்தில் நீ வேண்டும்...

மகிழ்வென்ற மகுடத்தை
மரணம்வரை சுமந்திட
கணம் தப்பாமல் எப்போதும்
என்கூட நீ வேண்டும்...
புண்பட்ட நெஞ்சத்தில்
ஒத்தடமாய் உன்விரல்கள்
தாளங்கள் போடவேண்டும்...

தப்பொன்றும் செய்யாத
வழிகாட்டி நீயாக
எப்போதும் என்னோடு
நிஜமாக நீ வேண்டும்...
உன் தோள்சாயும் வேளையில்
தலைகோதும் விரலாக
பலருள்ளம் போற்றிடவே
உளமருகில் நீ வேண்டும்...

பந்தாக நீயும்
பந்தாவில்லாமல் நானும்
எந்நாளும் ஒன்றாக
காற்றோடு கதைபேச வேண்டும்...
சேற்றுநில தாமரையாய்
போற்றும்வாழ்வு வாழ்ந்திடவே
காலமெல்லாம் காதலியாய்
என்னோடு நீ வேண்டும்...

Saturday, January 17, 2009

Wrist Phone

தொலைபேசி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது நம் வாழ்வில். அதிலும் கைத்தொலைபேசி என்பது மனிதனின் உறுப்புகளில் ஒன்றுபோல் ஆகிவிட்டது என்றால் மிகையாகாது. அந்தளவிற்கு அதன் தேவை இருக்கின்றது. சிலசமயங்களில் ஆபத்தில் இருக்கும்போது இந்த கைத்தொலைபேசிகளின் தேவை அளப்பரியது. அதனால்தான் இந்த புதியவடிவிலான மணிக்கட்டு தொலைபேசி (Wrist Phone) ஒன்றினை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இது தீயினாலோ அல்லது நீரினாலோ அழிந்துவிடாது. ஆகையினால் ஆபத்தான வேளையில் உங்கள் கையில் மணிக்கூடுபோல் ஒட்டியிருக்கும் இந்த தொலைபேசியூடாக அழைப்பினை ஏற்படுத்தி, ஆபத்திலிருந்து மீள முடியுமென கண்டுபிடிப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இதன் விலையும் மிகக் குறைவாம். சரி, அந்த Wrist Phoneஇன் அழகினை படங்களில் காணுங்கள்.


Friday, January 16, 2009

பாசிப்படி...

பாசிபடிந்த படிகளிலே
ஏறித்திரிந்த காலங்களை
ஏங்கியின்று தவிர்த்திருக்கேன்...
எட்டாத உயரத்தை
தொட்டிடத்தான் பாசிப்படி
உதவிடுவதாய் மாயைகொண்டு
மண்மீதில் சறுக்கிவிட்டேன்...

திகட்டாத அன்பதுவை
உன்மீது வைத்ததனால்
பகட்டில்லா வாழ்விதனை
நுகர்கின்றேன் வசந்தமாய்...
அன்போடு நீ அழைக்கும்
என் நாமத்தின் குரலினை
செவிவழி வாங்கிடமுன்
இதயத்துள் நுழையுதடி...

அன்போடு ஒரு வார்த்தை
நீ அழைக்கும்போது
நூறாண்டு உன்னோடு
வாழ்ந்திடவே மனம்துடிக்கும்...
துணையாக நீ வந்தால்
துயரேது என் வாழ்வில்...?

கரையில்லா வாழ்விதனை
கறையின்றி வாழ்ந்திடவே
கரம்சேர்ப்போம் ஓடிவா...
இதயத்தின் ஓரத்தில்
இருக்கின்ற இறுமாப்பை
உருக்கியே உடைத்துவிட்டு
உதிரத்தில் கலந்துவிட
உண்மை அன்பை நீ தா...!

இனிப்பான வாழ்வை
தனிமையில் வாழ்ந்திடவா
தவிப்பினில் இருக்கிறேன்...?
உன்னோடு வாழ்ந்திடவே
உண்மையாய் நேசிக்கிறேன்
உரிமையோடு அழைப்பேன்
என்னவளாய் நீ வா..!

அன்பு...

சிரிக்கவேண்டும் போலிருக்கு
சிந்தைகெட்ட மானுடமெண்ணி...
நெஞ்சிலுள்ள சோகங்களால்
சிரிப்புக்கூட சினமாகுது...!
வஞ்சம்தனை நெஞ்சில் சுமந்து
கொஞ்சிப்பேசும் உறவுகளை
வேரறுக்க மனம்துடிக்கும்,
வீண்பழி உனைச்சேருமென
அடக்கிக்கொள்வேன் மனமதுவை...

பொறுமைகொள்ளும் உரிமைகூட
அடக்குமுறை ஆகிறதே...
அன்பிற்கு அடிபணியும்
பண்பெனதென்பதால்
அடக்கிடத்தான் நினைக்காதீர்...
உண்மை அன்பு எங்களது,
ஆகையினால் உங்கள் கோள்கள்
கேவலமாய் போயிடுமே...!

சிரிக்கின்ற முகத்தின் பின்னால்
சீற்றமும் ஒழிந்திருக்கும்...
பொறுமையோடு அடக்கிவைக்க,
வெறுமையானவன் என்றெண்ணி
கொச்சைப்படுத்தாதீர் அன்பிதனை...
வருங்காலம் நமதாகும்,
அதுவரை நம் அன்பிருக்கும்..!

Thursday, January 15, 2009

ஐஸ் வளையம்...

உலகத்தில் அவ்வப்போது அதிசயங்கள் பல இடம்பெறுவது வழமை. எத்தனையோ அதிசயங்கள் கண்ணுக்கு தெரியாமலே மறைந்து விடுவதுமுண்டு. சில செக்கன்களில் மறைந்துவிடுகின்ற அதிசயங்களும் நிகழ்வதுண்டு. அப்படி சில நிமிடங்கள் நிகழ்ந்த அதிசயம் பற்றிய தகவலே இது. இங்கிலாந்தின் தெற்குப்பகுதியில் இருக்கின்ற டெவொன் (Devon) என்ற நாட்டின் ஆற்றில் இடம்பெற்றிருக்கிறது இந்த அதிசயம்.

ஐரோப்பாவில் இப்பொழுது கடும் குளிர் காலம் என்பதை யாவரும் அறிவீர்கள். காலநிலை மோசமான நிலைமையினால் பலர் தவிக்கின்றார்கள். Roy Jefferies என்பவர் வழமையாக காலையிலே தனது செல்லப்பிராணியான நாயுடன் ஆற்றங்கரையில் நடைபயில்வது வழமை. அன்றும் அப்படித்தான் அவர் ஆற்றங்கரையில் செல்லப்பிராணியுடன் சென்றுகொண்டிருந்தார். தற்செயலாக ஆற்றினைப் பார்த்தவருக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. ஆற்றின் நடுப்பகுதியிலே ஏதோ ஒரு தட்டு சுழன்று கொண்டிருப்பதை அவதானித்தார். இவரினால் அதனை என்னவென்று அனுமானிக்க முடியவில்லை. உடனே அருகில் வசிக்கும் தனது நண்பர் Blissetஐ அழைத்தார். தான் கண்ட அந்த அதிசயத்தை தனது நண்பருக்குக் காட்டினார். அவரினாலும் இதனை நம்ப முடியவில்லை.

நம்பமுடியாத நிகழ்வுகள், அதிசய நிகழ்வுகள் பற்றி தெரிந்து வைத்திருப்பவர் Blisset. ஆகையினால் அந்த அதிசயத்தை இலகுவில் இனங்காண முடிந்தது அவரால். மிகவும் அபூர்வமாக தோன்றுகின்ற "ஐஸ் வளையம்'தான் அது எனத் தெரிந்துகொண்டார். தன்னுடைய கமெராவினால் படமும் எடுத்துக்கொண்டார். சுமார் 10அடி விட்டம் கொண்ட அந்த "ஐஸ் வளையம்' நீரின் நடுவில் அழகாக சுழன்றுகொண்டிருப்பதை தனது கமெராவினால் பதிவுசெய்தார். அவர் பதிவுசெய்ய படங்களைத்தான் நீங்கள் இங்கு காண்கிறீர்கள். மெதுவான நீர் ஓட்டத்தினைக் கொண்ட ஆற்றில், குளிர்காலங்களில் இப்படியான ஐஸ் வளையங்கள் தோன்றுமாம். மிகவும் அபூர்வமாக தோன்றும் இந்த அதிசய ஐஸ் வளையம் குறுகிய நேரத்தில் இல்லாமலும் போய்விடுமாம் அல்லது உறைந்துவிடுமாம்.

வலம்புரி...

வலம்புரியாய் நீயிருக்க
இடர்தனில் நான் தவிக்க
மரணத்து சங்கோசை
சந்தோஷமாய் கேட்குதடி
வசைபாடும் உள்ளங்களின்
கன்றாவி காதுகளில்...

கோள்காவும் கோமாளிகளின்
கேலிப் பேச்சுகளில்
குளிர்காயும் பலருக்கு
உண்மை அன்பு உவர்ப்புத்தான்...
உவர்ப்பினிலே வாழ்கின்ற
வலம்புரி சங்காக
நீயென்னை சுற்றி இருக்குமட்டும்
உளம்குளிரும் எந்நாளும்...

அன்புக்கு இலக்கணம்தெரியா
ஈரமில்லா நெஞ்சங்களுக்கு
பாரமாகத்தானிருக்கும் நம்மன்பு...
உண்மையான உலகத்தினை
அன்பினிலே அறிந்திடலாம்...
பண்பில்லா பரதேசிகளின்
பார்வைகள் நம்மீது பட்டாலே
கோவம்தான் நமைச்சூழும்...

பாவம் அவர்கள்...
பிழைத்துப்போகட்டும்!
தளைத்துக்கொள்ளும் நம்மன்பு
கவலையில்லை எங்களுக்கு...
உள்ளத்தில் நீயிருக்க
ஊருக்கு ஏன் கவலை...?
காலங்கள் கனிந்துவிட்டால்
வையமே நம்பக்கம்
வைத்தகண் வாங்காது..!

Tuesday, January 13, 2009

தை பிறந்தால்...

தை பிறந்தால்
வழி பிறக்குமாம்...
பழி கேட்கும்
சுமைதாங்கிக்கு
வலியில்லாத
சாவு கிடைக்குமா...?

ஊரெல்லாம் பறந்துவரும்
ஊர்க்குருவி நானாக
பறந்திடத்தான்
ஆசைப்பட்டேன்...
வேரறுந்து வீழ்ந்தமரம்
ஆனதுபோல் வாழ்விதனை
பறைசாற்றி கவிழ்த்துவிட்டேன்...

வரிகளுக்கு சொந்தங்கூறும்
ஒரு சொந்தம்...
நொந்துபோன மனதுக்கு
வலிகொடுத்து பார்ப்பதுதான்
வேடிக்கையடா..!

விறகெரித்து குளிர்காயும்
மானுடம்போல்
எனை எரித்து கருக்கிடவா
காத்திருந்தாய்...?
குத்திவிட்ட கொடுமைக்காரர்
சிரிக்கின்ற சிரிப்பொலிதான்
மரணச்சங்கானது
எம் உறவதனில்...

சோகத்தில் சொல்லிவைக்கும்
வார்த்தைகளில் கோரங்கள்
ஆழமாக என்மனதில்
ஈட்டியாக குத்திநிற்கும்...
குத்துகின்ற வார்த்தைகளால்
சொட்டுச் சொட்டாய்
பிரிகின்ற பாசத்தினை
வேஷம்போட்டு ஒட்டிவைக்க
துளிகூட விரும்பவில்லை...

வாழ்வென்றால் விருப்பு வேணும்
சந்தேக வாழ்வதனில்
சதிகள்தான் சாதிக்கும்...
மோதிவாழ வாழ்வொன்றும்
குத்துச்சண்டை போட்டியல்ல...
தீராத தலைவலியாய்
தொடருகின்ற மோதல்கள்
காதலுக்கு அழகல்ல...
போலியாக வாழ்வதைவிட
பிரிந்துன்னை தவிப்பதுவே
பெரிதென எண்ணுகிறேன்...!

Monday, January 12, 2009

66th Annual Golden Globe Awards

புகழ் என்பது பலருக்கு சில சமயங்களில் மட்டும்தான் கிடைக்கும். ஆனால் இவருக்கோ புகழ் என்பது கேட்காமலே இவரை வந்து சேர்கிறது என்றால் மிகையாகாது. விருதுகள் வாங்கி வாங்கியே புகழின் உச்சியில் இருக்கின்றார். அவர் வேறுயாருமல்ல, அவர்தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ஏராளமான தேசிய விருதுகளுக்கும், சர்வதேச விருதுகளுக்கும் சொந்தக்காரர். அண்மையில் உலகத்தையே தன்பக்கம் திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றார். 'Slumdog Millionaire' என்ற படத்திற்கான இசையில் Best Original Score என்னும் பிரிவில் Golden Globe விருதினை வென்றிருக்கிறார். இந்த விருதினைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையும் இவரைச் சேருகின்றது.

'Slumdog Millionaire' என்ற படத்தினை Danny Boyle என்பர் இயக்கியிருக்கிறார். மும்பையின் சேரிப்புறத்தில் இருக்கின்ற சிறுவன் ஒருவன் பணக்காரனாவது பற்றிய கதைதான் இது (ஒருவரிக்கதை இதுதான்). Simon Beaufoy என்பவர் இதன் திரைக்கதையினை எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவாளராக Anthony Dod Mantle என்பவர் கடமையாற்றியிருக்கிறார். எடிட்டிங்கில் புகுந்து விளையாடியிருக்கிறார் Chris Dickens என்பவர் (ஒரு பாடல் பார்த்தேன் சூப்பரா இருக்கு எடிட்டிங்). உலகத்தின் மூன்றாவது மிகப்பெரிய விருது வழங்கும் விழாவாகக் கருதப்படுவது Golden Globe Awards ஆகும். 1944ஆம் ஆண்டுமுதல் இந்த விருதுவழங்கும் விழா நடைபெற்று வருகின்றமை சிறப்பானதாகும். இம்முறை நடைபெற்றது 66ஆவது விருது வழங்கும் விழா. Hollywood Foreign Press Association (HFPA) என்னும் அமைப்பே இந்த விழாவினை ஒவ்வொரு வருடமும் நடத்திவருகின்றது.

'Slumdog Millionaire' என்ற இந்தப் படம் Vikas Swarup என்பவரின் Q and A என்ற நாவலை மையமாகவைத்தே எடுக்கப்பட்டிருக்கிறது. Vikas Swarup புகழ்பெற்ற எழுத்தாளரும் ராஜதந்திரியுமாவார். இவரது இந்த நாவலும் பல விருதுகளைப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நாவலினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'Slumdog Millionaire' பல விருதுகளை தனதாக்கியிருக்கிறது. அதில் அண்மையில் நடைபெற்ற 66ஆவது Golden Globe விருது வழங்கும் விழாவில் Best Motion Picture - Drama, Best Director - Motion Picture (Danny Boyle), Best Screenplay (Simon Beaufoy), Best Original Score (A.R.Rahman) ஆகிய விருதுகளை தனதாக்கியிருக்கின்றமை சிறப்பம்சமாகும்.

இந்த விருதுவழங்கும் விழா இரண்டு இந்தியர்களுக்கு பெருமை சேர்த்துத் தந்திருக்கிறது. விருதுபெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பெறுகிறார். அதேபோல் விழாவில் அறிவிப்புச் செய்த மற்றுமொரு இந்தியர் என்ற பெருமையை பொலிவூட் நடிகர் ஷாருக்கான் பெறுகின்றார்.

கலியுகம்...!

பொத்திவைத்த இதயத்தினை
காற்றோடு பறக்கவிட்டு
கைகொட்டி சிரிக்கின்றேன்
நேற்றோடு முறிந்த சொந்தம்
மீண்டுவந்த சந்தோஷத்தில்...

தேற்றங்கள் பலபடித்து
கணக்குப்போட்டு பழகியதால்
வாழ்க்கைக் கணக்கை சரியாக
கணிப்பிடத்தான் மறந்திட்டேன்...
ஊற்றெடுக்கும் அன்பதனை
பார்போற்ற சொல்லியதால்
மார்பெல்லாம் குளிருதடி...

யார்யாரோ வந்துபோன வாழ்வதனை
வேரறுத்து வீசிவிட்டேன்...
உண்மை அன்பை
உள்ளங்கையின் உணர்ந்திடவே
பெண்மை உன்னை
தொலைத்ததனை நினைக்கின்றேன்...
நீர்க்குமிழி வாழ்விதனில்
குழிபறித்த பாவி நானல்லவோ...?

வாழ்வென்றால் வசந்தமென்பர்
உணரத்தான் முடிவதில்லை...
துடிக்கின்ற உணர்வுகளை
அடக்கித்தான் நானிருக்கேன்,
தூற்றிய உள்ளங்கள்
எமைப்போற்றும் காலமதை
கலியுகத்தில் தேடுகிறேன்...

ஆற்றல்கள் பல கண்டாய்
தேற்றுதல் வார்த்தை வடிப்பாய்,
துடிக்கின்ற இதயத்தை
வெடிக்காமல் பார்த்திடுவாய்...
படிக்கின்ற காலத்தில்
பருவத்தை உருக்கியதால்
வெறுக்கின்ற வாழ்வதனை
தொலைத்துவிட்டேன் சீக்கிரமே...
நிம்மதியை மீட்டுத்தர
முழுமதியாய் நீயுதித்தாய்...
அவள் நினைவோடு நிஜமாக
காலமெல்லாம் சேர்ந்துவர
வரம்தாராய் கலியுகமே...

Sunday, January 11, 2009

ஐயோ பாவம்...!

இயந்திரமயமான நம் வாழ்க்கை பாதையிலே, நாம் எங்கோ பயணித்துக் கொண்டிருக்கிறோம். எவருக்கு என்ன நடந்தாலும் நம்முடைய வேலைகளை பார்த்துக்கொண்டு போய்ட்டே இருக்கின்றோம். இதுதான் இயந்திர வாழ்க்கை என்கிறார்கள். மனிதம் என்ற ஒன்று இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. மனிதம் செத்துப்போய், மனிதன் என்ற பெயருடன் வாழ்வதில் என்ன பயன்...? அப்படி வாழ்பவர்கள்தான் இன்று உலகத்திலே அதிகமாக இருக்கின்றார்கள்.

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்கிறார்கள். இதில் பல மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் குரங்கிற்கும் மனிதனுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அதனால்தான் முதல் பரிசோதனைகளுக்காக குரங்கினைப் பயன்படுத்துகிறார்கள் விஞ்ஞானிகள். இங்கு நான் சொல்ல வந்தது நெஞ்சை உருக்கும் ஒரு சம்பவம்.

பாதையிலே எவர் காயப்பட்டுக் கிடந்தாலும் அவர்களுக்கு உதவுவதற்கு முன்வருபவர்கள் அரிதே. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இயந்திரமயமான வாழ்க்கையில் நின்று அடுத்தவன் பிரச்சினையைப் பற்றி யோசிப்பதற்கு நேரமின்மை. மற்றையது, தேவையில்லாத பிரச்சினைகளில் தலைபோட்டால் நாங்கள் மாட்டிக் கொள்வோமா என்ற பயம். இப்படி பல காரணங்கள் இருக்கின்றன.

ஆனால், இந்தக் குரங்கினைப் பாருங்கள். தன்னுடைய குட்டி, வாகனத்தில் அடிபட்டுவிட்டது. அடிபட்ட குட்டியினைத் தாக்குவதற்கு நாய் முயற்சிக்கிறது. துணிந்து போராடி, நாயினை விரட்டியடிக்கிறது தாய்க்குரங்கு. இதுதான் தாய்மை என்பது. தன் உயிரைப் பணயம் வைத்தாவது தன் குழந்தையைக் காப்பவள் தாய். அந்தத் தாயின் அன்பிற்கு நிகர் வேறு எதுவுமே கிடையாது. இந்த உலகத்தில் மட்டுமல்ல எந்த உலகத்திலும் அந்த அன்பு கிடைக்காது.

மனிதம் செத்துக்கொண்டிருக்கும் இயந்திர உலகில், இந்தக் குரங்கில் செயல் சற்று திருப்தியளிக்கிறதல்லவா?

குழந்தை...

ஏக்கங்கள் உங்களுக்கு
தேக்கங்களாய் இருக்கலாம்,
எங்களுக்கோ அத்தனையும்
போதனைகள்தானாம்...!

அடிக்கின்ற அம்மாவை
அருவருப்பாய் பார்ப்பதுண்டு...
பொங்கியெழும் அப்பாவை
எதிரியாக முறைப்பதுண்டு...
அடிக்கடி சண்டையிடும்
அண்ணாவை எண்ணும்போது
ஆத்திரமாய் இருக்குமப்பா...
அக்காவைக் கண்டாலே
துண்டாகப் பிடிக்காது...
சொந்தங்கள் கொஞ்சினாலே
உளமெல்லாம் கொதிப்பேறும்...

குழந்தையாக இருப்பதாலே
தொந்தரவு தாறார்கள்...
பெரியவளாய் வந்துவிட்டால்
பிரச்சினைகள் பறந்துவிடும்...
அக்காமட்டும் இல்லையென்பாள்
எனக்கு அது விளங்கவில்லை...

சிறிதாவே இருந்துவிட்டால்
சிரிச்சிட்டே வாழ்ந்திடலாம்
என்றுதான் நினைச்சிருந்தா
தொல்லைகள் கூடுதடா...
குழந்தையை தெய்வமென்பர்
சாமிகளை கட்டிப்பிடிச்சா
கொஞ்சி கும்பிடுவிங்கள்...?
எங்களுக்கும் மனசிருக்கு
படிப்பினைகள் எண்டுசொல்லி
தண்டிப்பது நியாயமா...?