Friday, November 28, 2008

Microsoft Office Bus

தொழில்நுட்பம் என்பது அசுரவேகத்தில் வளர்ந்துவருகிறது. அதன் அவசரத்திற்கு ஏற்ப மக்களும் அவசரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே, அவசரமான மனிதனின் அவசர தேவைகளை பூர்த்தி செய்வதற்கு விஞ்ஞானமும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றது. இதில் தோல்விகளும் வெற்றிகளும் மாறிமாறி நடைபெறுகின்றன. அந்தவகையில் வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்ட Microsoft Office Busஇன் தோற்றத்தினையே படங்களில் காண்கிறீர்கள். இது Chinaவில் அறிமுகப்படுத்தப்பட்டது (இந்த ஆண்டல்ல கடந்த ஆண்டு). இப்பொழுது இதைவிட அதிநவீன யுத்திகளையும் பயன்படுத்துகின்றார்கள். அவசர மனிதனுக்கு அவசரமாக தொழில்நுட்பத்தை புகுத்தும் இலகுவழியாக இதனை வடிவமைத்திருக்கிறார்கள்.

மனிதநேயம்...

மனிதர்களுக்கு இருக்கவேண்டிய இந்த 'மனிதநேயம்' பலசமயங்களில் காணாமல் போய்விடுவதுண்டு. மனிதன் மனிதனாக வாழ்ந்தால்தானே மனிதநேயத்தினைப்பற்றிச் சிந்திப்பதற்கு. அவசர உலகில் தன்னையே மறந்துபோய் சுற்றித்திரிகின்ற மனிதனிடம் இதனை எதிர்பார்ப்பது தப்புத்தான். ஆனாலும் எங்கேயோ ஒரு மூலையில் அந்த உணர்வுகள் ஒட்டியிருப்பது நியாயமானதே. அப்படியொரு மனிதநேய போட்டோக்கள் நான்கு அண்மையில் எனக்கு மெயிலில் வந்தன. இந்த மனிதநேயத்தினை வார்த்தைகளால் வர்ணிப்பதை விட, நீங்களே பார்த்து உணர்ந்துகொள்ளுங்கள். இதுவும் மனிதநேயம்தான்... (என்ன எங்கேயோ வலிக்கிறமாதிரி இருக்கா...?

மாற்றமில்லாத மாற்றம்...

உலகத்தில எத்தனையோ விடயங்கள் எங்களுக்கு பிடிச்சிருக்கும். சில விடயங்கள் பிடிக்காமலும் போய்விடுவதுண்டு. பிடிக்காத விடயங்களுக்கு சிலசமயங்களில் காரணங்கள் தெரிவதில்லை. பிடித்த விடயங்களுக்கு பல காரணங்கள் தெரிவதுமுண்டு. சிலருக்கு இது மாறியும் இடம்பெறுவதுண்டு. எது எப்படியிருப்பினும் உலகத்தில் ரசனை என்பது கட்டாயமான தேவையாக இருக்கின்றதல்லவா?

உலகத்தில் எதற்கு அடிமையாகாதவர்களும் அன்புக்கு அடிமையாவார்கள். என்னைப் பொறுத்தவரையில் அன்பு ஒன்றுதான் ஒருமனிதனை முழு மனிதனாக்குகிறது என்பேன். கிடைக்காத அன்பொன்று எமக்குக் கிடைக்க வேண்டுமென்றால் எப்பெரிய தியாகத்தினையும் செய்யத் தயங்காதவர்கள் பலர் உள்ளனர்... உண்மையான அன்பென்பதற்கு என்னால் சரியான வரைவிலக்கணம் கொடுக்கமுடியவில்லை. காரணம் வரைவிலக்கணம் பெரிதாக அமைந்துவிடும். சுருக்கமாகச் சொன்னால் புரிதலுடன் நடந்துகொள்ளுதல்தான் உண்மையான அன்பு எனலாம்.

இந்த புனிதமான அன்பினை அடைவதற்காக எத்தனையோ மாற்றங்களை எங்களில் ஏற்படுத்திக் கொள்கின்றோம். "எப்படியிருந்த நான் இப்படி ஆகிட்டனே...' என்று சொல்லுமளவுக்கு பல மாற்றங்களை எங்களில் ஏற்படுத்திக் கொள்கின்றோம். இந்த மாற்றங்கள் உண்மையான அன்பிருந்தால் மட்டும்தான் ஏற்படுத்த முடியும். போலியாக ஏமாற்றுபவர்கள் இந்த மாற்றங்களை வெளிவேஷமாகவே அரங்கேற்றுவர். ஆனாலும் சிலர் இந்த வெளிவேஷங்களை மட்டுமே பெரிதாக நம்பிவிடுவர். உண்மையான பாசம் வைத்திருப்பவர்களை போலிகளாகவே எண்ணுபவர்களும் இல்லாமல் இல்லை.

எமது எண்ணத்திலே எது சரியெனப்படுகின்றதோ அதை செய்வதில் தப்பில்லை. ஒருவனது அன்பு நமக்கு போலியென தெரிந்தால் அதை விலத்திநடப்பதே சாலச் சிறந்தது. அதைவிடுத்து தெரிந்துகொண்டே மண்ணை தலையில் வாரிக்கொட்டுவதில் எந்தப்பயனும் கிடைக்கப்போவதில்லை. அன்பிற்காக மாற்றங்களை உள்வாங்கிய உண்மை உள்ளங்கள் ஊமையாகுவதைத்தவிர வேறென்ன செய்யமுடியும்? இதுதான் மனித வாழ்வின் யதார்த்தம்.

மாற்றமொன்றுதான் உலகத்திலே மாற்றமில்லாதது என்று சொல்லுவார்கள். என்னைப் பொறுத்தமட்டில் இந்த மாற்றமில்லாத மாற்றம் எதனால் ஏற்படுகிறது என்றால் அது அன்பினால்தான். அதிகாரத்தினால் ஒருவனை அடக்கி ஒடுக்குவதைவிட, அன்பினால் அடிபணியவைப்பது இலகுவான காரியம். உண்மையான அன்பிற்காக பல மாற்றங்களை உள்வாங்கிய உள்ளம், அந்த அன்பு கிடைக்கவில்லை என்றால் எவ்வளவு கஷ்டப்படும். அந்த வலியை வார்த்தைகளால் உணர்த்த முடியாது.

அன்பு வைத்தால் அந்த அன்பில் உருகும் உள்ளம் கிடைக்க வேண்டும். இல்லையெனில் உறைநிலையில் உறங்கவிடுதலே மேல்...

Monday, November 24, 2008

முதல் காதல்...

எதெதெல்லாம் நமக்கு முதலில் கிடைக்கின்றனவோ அவைகளை எம்மால் எளிதில் மறந்துவிட முடியாது. முதல் என்பது எமது வாழ்வின் மூலதனம் எனலாம். எமது வாழ்வை திறம்பட வாழ வேண்டுமானால் நிச்சயமாக இந்த "முதல்' தேவைப்படுகின்றது. அதனுடைய தாக்கம்தான் ஒருவனை பூரணப்படுத்துகின்றது என்றால் அது மிகையாகாது. முதலில் கிடைக்கின்ற ஒன்று நம்முடன் தொடர்ந்து வருவதென்பது கடினமானதே. அப்படியே தொடர்ந்து வந்தாலும் அது இடையில் பிரிந்துவிடுவதுதான் யதார்த்தமானது (உணர்ந்த வலி எனக்கும் இருக்கிறது...).

இந்த முதல்களின் வரிசையிலே காதல் என்பது இனிமையான வலி. ஒருசிலரைத் தவிர பலருக்கு இந்த முதல் காதல் தோல்வியில்தான் முடிகின்றது. முதல் காதலோடு மூச்சுள்ளவரை வாழ்ந்தவர்கள் ஒருசிலர்தான் எனலாம் (இதுவரை அப்படியொரு ஜோடியை நான் சந்தித்ததில்லை...). இந்தத் தோல்விக்கு என்ன காரணம் என வினவினால் பலருக்கு விடை தெரிவதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்துவிட்டோம் என்றே பலர் கூறக் கேள்விப்பட்டிருக்கின்றேன் (நானும் அப்படித்தான் சமாளித்திருக்கிறேன்...). எப்பொழுதுமே முதல் என்னும்போது பதற்றம் இருக்கும். இந்த பதற்றம்கூட பிரிவுக்குக் காரணமாக இருக்கலாமில்லையா?

சரி... அப்படியே முதல் காதல் பிரிந்துவிட்டால் இன்னொரு வாழ்வை தேடாதவர்களும் கிடையாது. இன்னொரு வாழ்வை நிச்சயமாகத் தேடிக் கொள்வார்கள். அப்படி இன்னொரு வாழ்க்கை வாழ்கின்ற சந்தர்ப்பத்தில் முதல் காதலை என்ன செய்வார்கள்? கணவன் மனைவி இருவருக்குமிடையில் முதல் காதல்களைப் பற்றி பரிமாறிக்கொள்வது குறைவுதான். அப்படியே கூறினாலும் அடிக்கடி அந்தக் கதைகளை கதைக்கமாட்டார்கள். ஏனெனில் குடும்பம் பிரிந்துவிடும் என்ற பயம். ஆக... அந்த முதல் காதலை நெஞ்சுக்குள்ளேயே வைத்து சமாதிகட்டிவிடுகிறார்கள்.

சிலர் இரண்டாவது காதலில் விழுகின்றபொழுது முதல் காதலைப்பற்றி அடிக்கடி கதைத்துக் கொள்வார்கள். இதற்கும் காரணம் இருக்கிறது. முதல் காதலின் வலியினை குறைப்பதற்கான யுக்தியாக இதனைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். இப்படி அவர்கள் சொல்வதை, வருகின்ற புதியவன்/ புதியவள் சகித்துக்கொள்பவராக இருந்தால் பிரச்சினை இருக்காது. இல்லையெனில் மீண்டும் பிரச்சினை வெடிக்கும். என்னைப் பொறுத்தமட்டில் எந்தவொரு விடயத்தினையும் வெளிப்படையாக பேசினால் பிரச்சினை இருக்காது என்றே நம்புகின்றேன். நமக்கும் இருக்கின்ற ரகசியங்களை பரிமாறிக் கொள்வதில் தப்பில்லை (அப்படிச் சொல்வதால் பல பிரச்சினைகளும் எழும்... அது வேறு கதை...).

ஆனால் எதற்கும் ஓர் அளவு இருக்கிறதல்லவா? முதல் காதலனுடன் நெருக்கமாக பழகிய சந்தர்ப்பங்களில் எங்கெல்லாம் சென்றோமோ? எதையெல்லாம் பார்த்தோமோ? அவை மறுபடியும் பார்க்கும்போது எம்மனதில் தோன்றுவது சகஜம்தான். அந்த நினைவுகளை எப்பொழுதும் எம் நெஞ்சம் மறந்துவிடாது. அதுதான் சுகமான சுமை என்பார்கள். இதனை வெளிப்படையாக இரண்டாவது துணையிடம் தெரிவித்தால் எத்தனைபேர் ஏற்றுக்கொள்வார்கள்? புரிந்துணர்வுள்ளவராக இருந்தால் நிச்சயமாக சமாளித்துக் கொள்வார். இல்லையேல் வீண் பிரச்சினைகள்தான் தோன்றும். ஆனாலும் அந்த உணர்வுகளை மறக்க முடியாதல்லவா? இதுதான் முதல் காதலின் புனிதம்.

நாங்கள் வெளிப்படையாக இருக்கின்றோம் என்பதற்காக அடிக்கடி இதனை நினைத்துக்கொண்டே வாழ்வதும் தவறுதான். எதற்கெடுத்தாலும் ஒப்பிட்டுக் கதைப்பதும், சதா அந்த நினைவாகவுமே இருப்பதால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. அதாவது புதிய துணை எதனைச் செய்கின்றபோதும் பழைய துணையினை ஒப்பிட்டுக் கதைப்பார்கள். என் முதல் காதலில் இதைவிட நன்றாக இருந்தேன் போன்ற வசனங்களை பிரயோகிப்பார்கள். இதனை முடிந்தளவு தவிர்த்துக் கொள்ளலாம்... (உணர்ந்தவர்களுக்குத்தான் வலி தெரியும் என நீங்கள் திட்டுவது நியாயம்தான்... இருந்தாலும் வாழ்வில் நடிப்பும் சரிபாதிதானே...). நமக்குக் கிடைக்கின்ற துணையிடம் அதிகமான பாசம் கிடைத்தால் எந்தத் துன்பமாக இருந்தாலும் அதனைத் துடைத்தெறிந்துவிடலாம்.

ஆக... நமக்குக் கிடைக்கின்ற துணை பாசமுள்ளவராக இருந்தால்தான் பழைய நினைவுகள் அடங்கியிருக்கும்... (நிச்சயமாக அழிந்துவிடாது...?). பழைய நினைவுகளை மீட்டிப் பார்ப்பதில் தப்பில்லை. ஆனால் அந்த நினைவுகளுடன் வாழனும் என நினைப்பதுதான் தப்பு. நினைவுகளுடன் வாழ்கின்ற வாழ்க்கை நிரந்தரமில்லாதது. ஆகையினால் நிரந்தரமான வாழ்வில் அன்பு ஒன்றுதான் ஜெயிக்கும். ஆகையினால் முதல் காதல் என்ற சுகமான சுமையினை இறக்கி வைப்பதற்கு பாசமுள்ள ஜீவன் ஒன்றை தேர்ந்தெடுத்தாலே போதுமானது... (என் பாசமுள்ள ஜீவன் எங்கிருக்காளோ...?).

உட்கார்ந்து யோசிப்பாங்களோ...?

அப்பப்ப ஏதாவது ஒரு மெயில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். சிலதினை வாசிக்காமலே அழித்துவிடுவதுமுண்டு. அப்படி ஒரு தர்மசங்கடத்தினை ஏற்படுத்திய மெயில் பற்றித்தான் நான் இப்ப சொல்லப்போகிறேன். ஒரு சின்னக்கதை. வாசிப்பவர்களுக்கு நிச்சயம் தங்களைப் பற்றி சொல்வதுபோல் தோன்றும் (பொதுவாக காதலிப்பவர்களுக்கு...). சரி இப்ப இந்த கதையை வாசிங்களேன்... (சுருக்கமாக எழுதியிருக்கிறேன்...).

காதல்ஜோடி ஒன்று இருக்கிறது. இந்த இருவரது காதலும் வீட்டாருக்கும் தெரியும். இவர்களது காதலுக்கு துணையாக இருப்பது இவர்கள் பாவிக்கின்ற செல்போன். காதலி முதலில் வேறொரு சிம் கார்ட்டினை பயன்படுத்துகின்றாள். அதன் பின்னர் சிக்கனப்படுத்துவதற்காக காதலன் பாவிக்கின்ற சிம்கார்ட் வகையினையே தானும் தெரிவுசெய்கின்றாள். அதன் பின்னர் மணித்தியாலக் கணக்கில் போனிலேயே இவர்களது காலம் கழிகின்றது. நாளின் அரைப்பகுதியை செல்போனுடனேயே செலவு செய்கின்றாள். இப்படி இருக்கும்போது தன் நண்பர்களிடம் அடிக்கடி சொல்கின்ற விடயம் என்னவென்றால்... தான் இறந்த பின்னர் தன்னுடன் சேர்த்து தன் செல்போனையும் சிம்கார்ட்டையும் எரித்துவிடுங்கள் என்பதேயாகும்.

நாட்கள் சில கடந்ததும் ஒரு விபத்தில் காதலி இறந்துவிடுகின்றாள். காதலனுக்கு தெரிந்தால் கவலைப்படுவான் என்பதனால் காதலி இறந்த செய்தியை மறைத்துவிடுகின்றார்கள். அதன் பின்னர் இறந்த காதலியின் உடலினை தூக்க முயற்சிக்கையில் எவராலும் தூக்க முடியவில்லை. பலர் முயன்றும் அது சாத்தியமாகவில்லை. இதனால் குழப்பமடைந்த குடும்பத்தினர் மந்திரவாதி ஒருவரின் உதவியை நாடுகின்றனர். அவர் வந்து மந்திரக் கோலினால் தடவிப் பார்த்துவிட்டு... "இந்தப் பெண் விரும்புகின்ற ஒன்றை விட்டுச் செல்ல மனம் இல்லாமல் தவிக்கின்றாள்...' என்று கூறுகின்றார். உடனே நண்பர்கள் இவள் முன்னர் சொல்கின்ற விடயத்தை குடும்பத்தாரிடம் சொல்கின்றனர். அதன்படி அவள் பாவித்த செல்போனினையும் சிம் கார்ட்டினையும் அவளது பெட்டியில் போடுகின்றனர். இப்பொழுது அவர்களால் பெட்டியை தூக்க முடிகின்றது.

இறுதிக்கிரியைகள் முடிந்து இரண்டு வாரங்கள் கழிந்துவிட்டன. காதலன், காதலியின் வீட்டிற்கு கோல் பண்ணி "அன்டி நான் இன்றைக்கு வீட்டிற்கு விருந்துக்கு வருகின்றேன். நீங்கள் அவளிடம் ஒன்றும் தெரியப்படுத்தவேண்டாம்...' என்று சொல்கின்றான். உடனே காதலியின் தாயாரும்... "நீங்கள் வீட்டிற்கு வாருங்கள், நானும் உங்களிடம் ஒருவிடயம் தெரிவிக்க வேண்டும்...' என்று குறிப்பிடுகின்றார். வீட்டிற்கு வந்தபின்னர் காதலியின் தாயார் நடந்த அனைத்து விடயங்களையும் தெரியப்படுத்துகின்றார்... அவன் அதனை நம்ப மறுக்கின்றான். டெட் சேர்ட்டிபிகேட் எல்லாத்தையும் கண்டவன் கலங்குகின்றான். "நீங்கள் என்னிடம் போலியாக ஏதேதோ சொல்கிறீர்கள். நான் நேற்றும் என் காதலியுடன் கதைத்தேன்...' என்று அழுது புலம்புகின்றான்.

இப்படி அழுதுகொண்டு இருக்கும்போது காதலியிடமிருந்து அவனுக்கு கோல் வருகிறது. அவன் அதனைக் காண்பித்து ஸ்பீக்கர் போனில் போட்டு பேசுகின்றான். வீட்டாருக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. மறுபடியும் அந்த மந்திரவாதியின் உதவியை நாடுகின்றனர். அவர் மீண்டும் பரீட்சித்துப் பார்த்துவிட்டு ஒரு முடிவினைக் கூறுகின்றார். இந்த முடிவுதான் வியக்க வைத்தது.
சோகமாகவும் ஆச்சரியமாகவும் வாசித்துக் கொண்டிருந்த உங்களுக்கு மேலும் ஓர் அதிர்ச்சிதான் அந்த முடிவு. அதாவது அவர் கண்டுபித்த முடிவு என்னவென்றால்... "இந்த காதல் ஜோடி பாவிக்கின்ற சிம்கார்ட் நெட்வோர்க் எல்லைகளைக் கடந்து செயற்படவல்லது... எங்கு சென்றாலும் அதனுடைய கவரேஜ் இருக்கும்...' என்று தெரிவிக்கின்றார்.
இது ஒரு தொலைதொடர்பு நிறுவனத்தின் விளம்பரம் என்பதை சுட்டிக்காட்டியாக வேண்டும். இதைத்தான் "உட்கார்ந்து யோசிப்பாங்களோ...?' என்பார்கள் போலும்...

Saturday, November 22, 2008

என் அன்பு...


தொடுவானம்...


தாங்காது என் நெஞ்சு...


நிழல்...


மூச்சுக்காற்று...


இதழ் சுவை...


வாரணம் ஆயிரம்...


அவசர வாழ்க்கையில் அனுபவங்களை மீட்டிப் பார்க்க உதவுவது சினிமா என்றால் அது சாலப் பொருந்தும். ஒருசில திரைப்படங்களைப் பார்க்கின்றபோது எங்களுடைய யதார்த்தத்தின் பிரதிபலிப்பாக தோன்றும். யதார்த்தத்தின் பிரதிபலிப்புத்தான் சினிமா என்பார்கள். இருப்பினும் எல்லோருடைய மனதினையும் கனமாக்குகின்ற கதைகள் ஒருசிலவே வெளிவருகின்றன. அந்தவகையில் அண்மையில் வெளிவந்த "வாரணம் ஆயிரம்' திரைப்படம் என் நெஞ்சைத் தொட்ட படம் என்பேன். தயவுசெய்து இந்தப் படத்தினுடைய விமர்சனமாக இக்கட்டுரையை வாசிக்காதீர்கள். வாரணம் ஆயிரம் படத்தில் என் நெஞ்சைத் தொட்ட சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

அம்மா சென்டிமென்டில் எத்தனையோ படங்களைப் பார்த்திருக்கின்றோம். அதேபோல் அப்பா சென்டிமென்ட் பற்றிய ஒருசில படங்களையும் பார்த்திருப்பீர்கள். ஆனால், வாரணம் ஆயிரம் திரைப்படம் கௌதம் மேனனின் சொந்தக் கதையின் உருகுதலையும் யதார்த்தத்தின் பிரதிபலிப்பையும் விம்பமாகக் காட்டி நிற்கிறது என்றால் அது மிகையாகாது. ஒரு தந்தை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், தாய் இப்படித்தான் இருப்பாள், தங்கை, காதலி, நண்பன் என அனைத்துப் பாத்திரங்களையும் பார்த்துப் பார்த்து வடித்திருக்கின்றார். ஏற்கனவே படம் பார்த்தவர்களுக்கு கதை தெரிந்திருக்கும். இருப்பினும் பார்க்காதவர்களுக்காக சுருக்கமாக கதையினைச் சொல்லலாம் என நினைக்கின்றேன். பார்த்தவர்கள் இந்தப் பந்தியினை விட்டு வாசியுங்கள்...வயதான தந்தையின் (அதுவும் சூரியாதான்) அறிமுகத்தோடு படம் தொடங்குகின்றது. கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் வயதான சூரியா. தலைமயிர் வெட்டிவிட்டு வீட்டுக்கு வரும் தந்தை சூர்யா, ரத்தவாந்தி எடுத்து இறக்கின்றார். இந்தசெய்தி இந்திய ராணுவத்தில் இருக்கின்ற மேஜர் சூரியாவிற்கு (இவரும் ஆணழகனாக தோன்றும் சூரியாதான்) கிட்டுகின்றது. ஓர் ராணுவ நடவடிக்கைக்காக சென்றுகொண்டிருக்கின்ற வேளையிலே இந்த துயரச் செய்தி கிடைக்கின்றது. இருப்பினும் கடமையின் நிமிர்த்தம் பணியினைத் தொடர்ந்து செல்கின்றார். அப்படிச் செல்கின்ற நேரத்திலேயே தந்தையின் நினைவலைகளை மீட்டிப் பார்க்கின்றார். உண்மையிலேயே அந்த அனுபவங்களை கதையாக சொல்வதைவிட பார்த்து அனுபவித்தால்தான் இதமாக இருக்கும். இதற்காக கௌதமுக்கு நன்றி சொல்லலாம்.

ஒரு தந்தையின் ஏக்கங்களை பிரதிபலிக்கின்ற பல காட்சிகள் இருக்கின்றன. ஒரு மகனாக இருந்து பார்க்கின்ற நேரத்திலே தந்தையின் பிரிவின் வலி மனதினை நெகிழ வைக்கின்றது. மகனுக்கு ரோல் மொடலாக இருக்கின்ற தந்தை அனைவரது பாராட்டினையும் தட்டிச் செல்கின்றார். அதேசமயத்தில் காதல் பண்ணுகின்ற சூரியாவும் மிக அழகாக இருக்கின்றார். காதலினை இப்படியும் சொல்லலாம் என சொல்லிக் காட்டியிருக்கின்றார் கௌதம். அடிக்கடி தன் காதலியின் கையினைக் கோர்த்து தன் நெஞ்சோடு ஒற்றிக் கொள்ளும் நேரத்தின் என் நெஞ்சிற்குள் ஏதேசெய்தது (அனுபவித்த வேதனையாக இருக்கலாம். நிறைய சுகமதைத்தந்த சுமை அது...). காதலியின் பிரிவில் தவிக்கின்ற தருணம், குழந்தையில் பாசத்தினைக் காட்டுகின்ற தருணம், யுத்தத்தில் காட்டுகின்ற தீவிரம் என அனைத்திலையுமே பின்னியெடுத்திருக்கிறார் சூரியா. இவருக்கு இணையாக சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஆகியோரும் திறமாக நடித்திருக்கிறார்கள்.

இந்த இடத்தில் ஒளிப்பதிவாளர் ரத்ணவேலுவையும் கட்டாயம் பாராட்டியாகவேண்டும். உயிரோட்டமான கதைக்கு அழகான காட்சியமைப்பு முக்கியம். அதனை சரியாக காண்பித்திருக்கின்றார் ரத்ணவேலு. பாடல்கள் அருமையாக இருக்கின்றன. ஹரிஸ் ஜெயராஜின் மற்றுமொரு மைல்கல் இப்படம். பின்னணி இசை தொடக்கம் பாடல்களின் இசைவரை அனுபவித்துச் செய்திருக்கிறார் ஹரிஸ். மொத்தத்தில் ஒரு திருப்தியான படம்பார்த்த சந்தோஷம் மனதில்.ஆனாலும் விமர்சனம் என்று பார்க்கும்போது பல இருக்கின்றன. அவற்றினை சுட்டிக்காட்ட விரும்பவில்லை. குறிப்பாக படம் கொஞ்சம் நீளமாக இருப்பதாக பலர் குறைபடுகின்றார்கள். விமர்சனங்களைத் தாண்டி, நம் யதார்த்த வாழ்வோடு படத்தினைப் பார்த்தால் அருமையாக இருக்கின்றது...

பணம் பந்தியிலே...


உலகத்திலே பணம் இல்லைன்னா எதுவுமே செய்ய முடியாதிங்கிறது எல்லோருடை கருத்தாகவும் இருக்கின்றது. பணத்தினால எதை வேண்டுமானாலும் வாங்கிவிடலாம் எங்கிற வாதிங்ககிட்ட ஒன்னு கேட்கனும்... உண்மையான அன்பினை உங்க பணத்தினால வாங்கிட முடியுங்களா...? சரி அந்த வாதத்திற்கு நான் வரலைங்க... எனக்கு ஒரு மெயில் வந்திச்சு, அதில உள்ள படங்களைத்தான் நீங்க இங்கே பார்க்கிறிங்க. ஒவ்வொரு நாட்டினுடைய பண நோட்டிலையும் ஒவ்வொரு தலைவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு தலைப்பாகை கட்டி அழகு பார்த்திருக்கிறார்கள். அந்த பணநோட்டினையே அழகாக மடித்து இப்படி அழகு படுத்தியிருக்காங்க... எவ்வளவு தத்ரூபமான சிந்தனை பார்த்திங்களா... நான் ரசிச்சத உங்களிடத்திலயும் பகிர்ந்துக்கிறேன்... (உட்கார்ந்து யோசிப்பாங்களோ...?)

Friday, November 21, 2008

என் வலி...


புரிதல்...


எனக்கில்லையா உரிமை..?


மதி...


மலைப்பாதை...


'குடி'மகன்

"மதுவோடு பழகும் 'மது'வே
உனக்கிது தகுமா...?
குடியில்லை என்றால்
குடியொன்றும் கெட்டிடாதே...
படிப்படியாய் விட்டுவிடு...''
பணிவோடு தட்டிவைத்த
என்னவளின் குரல் இன்னும்
என்காதில் ஒலிக்கிறது...

அன்பைப் பகிரும்
அருமை நேரத்தில்
விரும்பிப் பருகும்
விஷ பானம்...
உள்ளுக்குள் சென்றதும்
உணர்வுகள் பெருகிடும்
உபத்திரவ பானம்...
தவிர்க்கமுடியா விருந்துகளை
தவிப்போடு தவிர்த்திடவே
பலருக்கு வருத்தம் என்மேல்
எனக்கோ பிடிக்கும்
என்னவள் அன்புதனை...

அன்பென்னும்
போதைக்கு முன்னால்
எப்போதை வந்தாலும்
சப்பென்று ஆகிவிடும்...

பொங்கிவரும்
போதைதனை பார்க்கையிலே
பொங்குகின்ற என்னவளின்
பாசமுகம் கூட வரும்...
என்னசெய்ய
போதையா... பேதையா...
எடைபோட்டு பார்க்கையிலே
என் செல்லத்தின் பாசம்தான்
பொங்கிவருகிறது...

முத்தம்...


கருவின் நிஜம்...

என்னமோ தெரியலைங்க... எனக்கு சின்னச்சின்ன விசயங்களிலேயும் அதிகமா ஈர்ப்பு வந்திடும். சில சமயங்களில சின்னச்சின்ன எறும்புங்க ஊர்ந்து திரியிறதயே ரசிச்சிட்டிருப்பன். இத வாசிக்கிறவங்களுக்கு போலியான வர்ணணையா தெரிஞ்சாலும் எனக்கு அதாங்க உண்மை.

அண்மையில எனக்கு ஒரு மெயில் வந்திச்சு... சாதாரணமா நாங்க பாக்கிற கோழி குஞ்சினுடைய பரிணாம வளர்ச்சி... அந்தப் படங்கள பார்த்ததும் எனக்கு பழைய சில ஞாபகங்கள் வந்திச்சுங்க... நம்ம ஊரு பக்கங்களில எப்பவுமே வீட்டில ஆடு, மாடு, கோழி அப்படின்னு கட்டாயமா வளப்பாங்க. இதில சுவாரஸ்யம் என்னென்னா கோழிக்கு அடை வைக்கிறதுதானுங்க...

ஒவ்வொரு முட்டையிலையும் எங்களோட பெயர எழுதி, கோழிக்கு அடை வைப்போம். அதுக்கப்புறமா தினமும் அந்த முட்டைங்கள பரிசோதிக்கிறதுதான் நம்மளோட வேலை. மொத்தம் 21 நாட்கள் அடை வைக்கனும். 14 நாட்கள் கழிச்சு அடை வைச்ச முட்டைங்கள தண்ணியில போட்டு மிதக்குதா என்டு பார்ப்போம். அப்படி மிதக்கலைனா அது குஞ்சில்லைன்னு அர்த்தம். சில சமயங்களில நம்மட பெயர் எழுதின முட்டை மிதக்கலைன்னா கோழிக்கு இருக்கிற கவலையவிட நம்மளுக்கு அதிகமா இருக்கும். இப்படியே கோழிய விட அதிகமா அக்கறை எடுத்து, 21 நாட்கள் கழிச்சு குஞ்சு பொரிக்கும் பாருங்க... அந்த சந்தோஷத்த வார்த்தைகளால சொல்ல முடியாது. அனுபவிச்சவங்களுக்கு இப்பொழுது நினைச்சாலும் நெஞ்சு கனக்கும்... (என்னங்க உங்களுக்கும் நெஞ்சு கனக்குதா...?).

அப்புறமா கோழிக் குஞ்சுங்களுக்கு டை பூசி பத்திரமா வளர்த்தெடுக்கிறது பெரிய சந்தோஷம். அப்படி ஒரு காலம் எப்ப வருமுன்னே தெரியலை... ம்ஹூ... பெருமூச்சு விடறத தவிர வேற என்னததான் செய்ய... சரிங்க... இப்போ இந்த படங்கள பாருங்க. 21 நாட்களும் எப்படி முட்டையிலிருந்து கோழிக் குஞ்சு உருவாகுதின்னு...

சிதறிய இதயம்...

இதயமது இருக்குமட்டும்
இடர்களும் தொடருமடி...
தொடர்கின்ற இடர்கள்
படர்ந்துசென்று பரிகசிக்கும்
பாவியிவன் முகம்பார்த்து...

கட்டவிழ்ந்த சிந்தனையை
குட்டுப்போட்டு அடக்கிடவே
அசரீரியாய் ஒலித்திடுமே
அங்காங்கே பல குரல்கள்...

தேவையுந்தன் அன்பெனவே
சிந்தைகலங்க காத்திருப்பேன்
எந்தனுயிர் பிரிந்துவிட்டால்
ஆவியாக உனைத்தொடர்வேன்...
ஆயுள்வரை வாழவேண்டும் - இல்லை
ஆவிதுறந்து சாகவேண்டும்...

சோகம்தான் வாழ்க்கையென்றால்
சாவுதான் நண்பனென்பேன்...
சுக்குநூறாய் உடைந்தபின்னும்
இதயத்துள் நீயிருப்பாய்...
சொட்டும் உதிரத்தின் பக்கத்தில்
கொட்டும் என் காதல் முரசு...

கிடைக்கின்ற அன்பதனை
தடுக்கின்றான் படைத்தவன்...
மடைதிறந்த வெள்ளமாய்
பெருக்கெடுக்கும் அன்பிதனை
சுருக்கிட்டு கொலைபண்ண
மனமிதுதான் இடம்தருமா...?

சேராத காதலென
கேலியாக சொன்னாலும்
தாங்குதில்லை எந்தன்நெஞ்சமடி...
உன் நெஞ்சோடு முகம்புதைத்து
சோகங்கள் பகிரவேண்டும்
காலங்கள் கனிந்துவர
கனகாலம் காத்திருப்பேன்...

விடியலுக்கான அஸ்தமனம்...

அந்திப் பொழுததனை
குந்தியிருந்து ரசித்திடத்தான்
எந்தனுயிர் ஏங்குதடி...
தனிமையில் ரசித்திடத்தான்
உந்தன் மதி என்னருகில்
மதுரகானம் பாடவேண்டும்...

விளங்காத சமூகத்தின்
பழங்கதைகள் கேட்டெல்லாம்
பலகாலம் கடந்துவந்தோம்...
சிலகாலம் வாழ்ந்திடவே
புதிதாக சிந்திப்போம்
இனியாவது வாழ்ந்திடுவோம்...

தவறென்று சிந்திக்க
சிந்தையில்லை என்னிடத்தில்...
உந்தனுள்ளம் கலங்கிடாமல்
அன்பதனை பகிர்ந்திடவே
எந்தனுள்ளம் தவிக்கிறது...

சேராத வாழ்விதனில்
சேயொன்றும் ஈன்றெடுத்தோம்...
வாழாத வாழ்வதனை
கனவுலகில் வாழ்ந்திருக்கோம்...
நியமாக வேண்டுமிந்த வாழ்க்கையென
சுயமாக வேண்டியழும்
நம்மிதயத்தினை யாரறிவர்...?

கரையொதுங்கும் அலையிது
அலைபாயும் எம்மனம்போல்
வருவதும் பின்னர் செல்வதும்
சொல்லொனா துயரமடி...

ஆழ்கடலின் சீற்றத்தை
மறைத்திடவே உதட்டோரம்
புன்னகைக்கும் விரோதியாய்
அலையதனின்
விளையாட்டையாரறிவார்...?

எம்மனதின் வேதனையை
சீறாமல் பொத்திவைக்க
தார் ஊற்றி வைத்தாலும்
சிலநேரம் பாய்ந்துவரும்
பலருள்ளம் நொந்துவிடும்...

அந்தியில் ஒருதிசையில்
தனைமாய்க்கும் சூரியன்
விடியலின் திசையதனை
மாற்றியமைக்கும் விந்தைதனை
எம்மனதும் புரிந்துகொண்டால்
துன்பத்தின் திசைமாற்றி
புதுவாழ்வின் திசைகாட்டும்...

அந்திசாயும் நேரத்தில்
குந்தியிருந்து சிந்தித்தேன்
எந்தனுள்ளம் தெளியவில்லை...
ஓயாத அலைகளுடன்
பாயாக விரிந்திருக்கும்
கடலின் ஓய்வின்மையை
என் உள்ளமும் உணருதடி...

விடியலுக்காய்
தனையிழக்கும் சூரியனாய்
காத்திருப்பேன்
புதுவாழ்வு தோன்றுமட்டும்...

Thursday, November 20, 2008

ஏன் இப்படி...?


நடந்ததை மறந்திட
மனதொன்று இருந்திடின்
அவன் பெயர் இறைவனடி...

நிகழ்வதை நினைத்திட்டே
மனமது உருகிடின்
அவன் பெயர் மனிதனடி...

மனதினில் வலியதை
சுமந்திட்டே இருப்பவன்
சுமைகளின் சிகரமடி...

சுமைகளை ஒதுக்கி
விடிவதை தேடிடின்
மனிதனில் புனிதனடி...

சுமையுன்னை சூழ்ந்திட
வாழ்வதை மாய்த்திடின்
வாழ்க்கையே போலியடி...

உனக்கென்ன சக்தியென
உனை நீ புரிந்துகொள்
வாழ்வின் சுவை புரியும்...

அருகதையில்லை
உனக்கிது சொல்ல...
இருப்பினும்
வலியிருக்கு எனக்கும்...
உன்மீது அக்கறையிருக்கு
உயிரினும் மேலாக...

வேதனையில் மதியுன்னை
பார்க்கும் சக்தி இந்த
மதுவுக்கில்லை...