Wednesday, December 31, 2008

விடைபெறு 2008

எத்தனை துன்பங்கள்
அத்தனையும் தந்து
மொத்தமாய் பரிதவித்து
பித்தனாய் சுற்றவைத்தாயே...

யுத்தத்தின் கோரங்கள்
சத்தத்தின் அவலங்கள்
எத்தனை துன்பமடா...?
அத்தனையும் கடந்தங்கே
சந்தோஷ நினைவலைகள்
ஆழ்மனதில் நிழலாட
நிலாவொளியில் நீ வாடுகிறாய்...

தீராத வேதனைகள்
புரியாத சோதனைகள்
எத்தனைதான் தாங்குமெந்தன்
புண்பட்ட நெஞ்சமிது...
கொஞ்சமாவது இரக்கம் காட்டி
சொர்க்கமதை அருகில் காட்டு...

அநியாய கொலைகளால்
அநாதைகள் அதிகரிக்க
காதல் பிரிவுகளால்
இதயங்கள் சிதறடித்தாய்...
உருண்டையான உலகத்தை
இருண்டதாய் மாற்றிடவே
உலகத்து சமநிலையை
சிலநேரம் குழப்பிவிட்டாய்...
ஈரமில்லா நெஞ்சங்களை
கொஞ்சநேரம் குளிரவைக்க
கடலுக்குள் இழுத்துச் சென்றாய்...
இத்தனையும் செய்துவிட்டாய்
வாழ்க்கையின் இன்பமதை
திருப்பித்தாராயோ...?

நீங்காத சொந்தமதை
இவ்வாண்டில் மீட்டுவந்தாய்...
துன்பத்தை குழிதோண்டி
புதைக்கவைத்தாய்...
போகின்ற இரண்டாயிரத்தெட்டே
உன் உளம்தொட்டு வாழ்த்திவிடு
என்னவள் மனம்தொட்டதுபோல்
கரம்பிடித்து வாழவேண்டுமென...!

கஜினி...

இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் கஜினி. தமிழ் மொழியில் ஏற்கனவே வெளிவந்த கஜினி திரைப்படம் ஹிந்தியில் உருவாகியிருக்கிறது. ஹிந்தியில் உருவாகிய கஜினி திரைப்படத்தினை இவ்வருடத்தில் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். எதிர்பார்த்ததைப்போல் வெளியாகி பல சாதனைகளை முறியடித்திருக்கின்றது ஹிந்தி கஜினி.தமிழில் வெளியாகிய கஜினி திரைப்படத்தின் ரீமேக்காகவே ஹிந்தியில் கஜினி உருவாகியிருக்கிறது. தமிழில் இயக்கிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஹிந்தி கஜினியையும் இயக்கியிருக்கின்றார். இந்த இருபடத்திற்கும் மூலமான படம் ஹொலிவூட்டில் வெளியாகிய Memento என்ற ஆங்கிலப்படமாகும். Memento படத்தினை Christopher Nolan என்பவர் இயக்கியிருந்தார். இதனுடைய தமிழாக்கமாகத்தான் கஜினி திரைப்படத்தினை முருகதாஸ் உருவாக்கியிருந்தார்.

Geetha Artsஇன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஹிந்தி கஜினியில் அமீர்கான் ஹீரோவாக நடித்திருக்கின்றார். இவருடைய காதலியாக அசினும் (Asin), மருத்துவக்கல்லூரி மாணவியாக ஜியா கானும் (Jiah Khan) நடித்திருக்கிறார்கள். வில்லனாக பிரதீப் ரவாட் (Pradeep Rawat), பொலிஸ் அதிகாரியாக றியாஸ் கான் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் ஏற்கனவே நான்கு படங்களை இயக்கியிருக்கின்றார். அஜித்குமார் நடித்த தீனா, விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி (தமிழ்), சிரஞ்சீவி நடித்த ஸ்டாலின் (தெலுங்கு) ஆகிய படங்களே முருகதாஸினால் இயக்கப்பட்டன. இப்பொழுது அமீர்கான் நடிப்பில் வெளிவந்திருக்கும் கஜினி, முருகதாஸின் 5ஆவது படமாகும். வெற்றிப்பட இயக்குநர் என பெயரெடுத்திருக்கும் இவரின் உழைப்பு இந்தப் படத்திலே அதிகமாகத் தெரிகின்றது. ஜதார்த்தமான படங்கள் என்பதற்கு அப்பாற்பட்டு, வணிகரீதியான மசாலா படமாக கஜினியை உருவாக்கியிருக்கிறார் முருகதாஸ். அதனால்தான் வணிகரீதியாக படம் சாதனை படைத்திருக்கிறது. சுமார் 45 கோடி ரூபாய் (இந்திய ரூபாய்) செலவில் உருவாகிய இத்திரைப்படம் வெளியாகி ஒருவாரத்திலேயே போட்ட முதலை மீளப்பெற்றிருக்கிறதாம்.

இந்தப்படத்திற்கு மற்றுமொரு பிளஸ் பொயின்ட், கமெரா தொழில்நுட்பம் என்றால் அது மிகையாகாது. ரவி கே.சந்திரன் அவர்களே இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார். ரவி கே.சந்திரனைப் பற்றிச் சொல்லியேயாகவேண்டும். தேசிய விருதுபெற்ற ஓர் ஒளிப்பதிவாளர். இயக்குநர் மணிரத்தினத்தின் அன்புக்குரிய ஒளிப்பதிவாளர். இதுவரை பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக கடமையாற்றியிருக்கிறார். அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில படங்களாவன மின்சார கனவு, சிட்டிசன், கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, போய்ஸ். இந்தப்படங்களில் காட்சிகள் இப்போதும் மனக்கண்ணில் தோன்றும். அவ்வளவு அழகாக கமெராவினைப் பயன்படுத்தியிருப்பார் ரவி கே.சந்திரன். இவரது உழைப்பு கஜினியில் (ஹிந்தி) அதிகமாகவே இருக்கின்றது. குறிப்பாக பாடல் காட்சிகளைக் குறிப்பிடலாம்.

கஜினியின் அடுத்த பிளஸ் பொயின்ட் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ் கஜினியில் ஹரிஸ் ஜெயராஜ் புகுந்து விளையாடியிருந்தார். ஹிந்தி கஜினியில் ஏ.ஆர்.ரஹ்மான் புகுந்து விளையாடியிருக்கிறார். இருப்பினும் ஏதோ ஒன்று குறைவதுபோல் தோன்றுகிறது பாடல்களில். ஒருவேளை ஹிந்தி ரசிகர்களுக்கு இது பிடிக்கக்கூடியதாகவும் இருக்கலாம். ஹிந்தி கஜினியின் பின்னணி இசை பிரம்மாதமாக இருக்கிறது.

இவர்களது ஒட்டுமொத்த முயற்சிகளையும் ஒருங்கிணைத்து சுவைபட தொகுத்திருக்கின்றார் அன்டனி. எடிட்டிங்கில் தனக்கென தனிமுத்திரை பதித்திருக்கும் அன்டனி, இந்தப் படத்திலும் அதிகமாகவே உழைத்திருக்கின்றார். ஒவ்வொரு காட்சியின் தொகுப்பும் மனதைத் தொடுவனவாக இருக்கின்றன.

அமீர்கான் தனது உடலை வருத்தி நடித்திருக்கிறார். "6 பக்' உடம்பினை உருவாக்கி மிரளவைத்திருக்கிறார். தமிழில் சூரியாவா? ஹிந்தியில் அமீர்கானா? என்று பார்த்தால், சூரியா உயரத்தில் இருக்கிறார். சூரியாவின் யதார்த்தமான நடிப்பினை அமீர்கானிடம் காணமுடியவில்லை. அசினைப் பொறுத்தமட்டில் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார். அசினின் குறும்பு ரசிக்க வைக்கிறது. ஜியா கானும் நன்றாக நடித்திருக்கிறார். நயன்தாராவோடு ஒப்பிடும்போது ஜியா கானிடம் துடுக்குத்தனம் அதிகமாகவே இருக்கிறது எனலாம். வில்லனாக நடித்திருக்கும் பிரதீப் ரவாட், பொலிஸ் அதிகாரியாக நடித்திருக்கும் றியாஸ் கான் ஆகியோரும் தங்களுடைய பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

தமிழ் கஜினியா? ஹிந்தி கஜினியா? சிறந்தது என பார்த்தால் தமிழ் கஜினி சிறப்பாக இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும் பிரம்மாண்டத்தில் ஹிந்தி கஜினி விஞ்சி நிற்கின்றது. தமிழில் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் சினிமாத்தனமாக இருக்கும். அதனை உணர்ந்த இயக்குநர் முருகதாஸ், ஹிந்தியிலே யதார்த்தபூர்வமாக மாற்றியிருக்கிறார். இது ரசிக்கக்கூடியதாக இருக்கின்றது.

மொத்தத்தில் சினிமாத்தனமாக வெளிவந்திருக்கும் மசாலா திரைப்படம் கஜினி, மக்கள் மனதினை வெல்லும் என்றுதான் சொல்லத்தோணுகிறது.

Saturday, December 27, 2008

புதிதாய் ஒரு பூமி...

பல்லில்லா பாலகனும்
ஷெல் சத்தம் கேட்டிங்கு
கொல்லையிலே நடுங்குகிறான்...
கொடுங்கோல் ஆட்சியென
கொக்கரிக்கும் ஐநாவும்
கைகட்டி வேடிக்கை பார்க்கையிலே
பகடைக்காய் நாங்களல்லோ...

யுத்தங்கள் வேண்டாமென
சத்தங்கள் பல எழுந்தும்
பொத்திய காதுகளை
திறக்காத அரசிதனை
யார்தான் கேட்பாரோ...?
கூக்குரலில் குதூகலிக்கும்
கலிகாலம் ஆகிப்போச்சு...
வெடிகுண்டு வாசனையில்
பூஜை அறை சாமிகளும்
ஒய்யார தூக்கமிங்கே...!

பதிவில்லா இறப்புகளின்
இறுக்கமான நினைவுகளை
நித்தமும்தான் சொல்கின்றோம்...
இரக்கமற்ற சர்வதேசம்
வெளிவேஷம் போடுதிங்கே...
புழுதியிலே பிணங்களிங்கே
கருவாடாய் காயுதய்யா...!

விதிவரைந்த பாதையென
விசராக கதைத்திங்கே
பதைபதைக்கும் உள்ளங்கள்
பாரிதனைத் தூற்றுகின்றனர்...
நித்தமும் வேதனையில்
சொத்துக்கள் சொந்தங்களை
பார்த்திருக்க பறிகொடுத்து
பரிதவிக்கும் உள்ளங்களின்
சோகங்களைத் துடைத்திடவே
புதிதாய் ஒரு பூமி
தோன்றாதோ நாளைதனில்...!

விரக்தி...

பருவத்தின் சீற்றத்தில்
பார்ப்பதெல்லாம் காதலாகும்
பாழ்பட்ட காலந்தனை
கண்ணீரில் கடந்துவந்தேன்...
தீண்டாத காதலாக
ஆண்டுகள் கரைந்ததனால்
தீண்டத்தகாத ஆண்டியாய்
அவனியிலே அலைகின்றேன்..!

நொண்டிச்சாட்டு சொல்லிவாழ
தூண்டில்பட்ட மீனானேன்...
துடிக்கின்ற உள்ளந்தனை
அடக்கிவைக்க பழகிவிட்டேன்...
அன்பென்ற ஒன்றால் மட்டும்
அடக்கியாழ முடியுமென்னை!
அன்புமட்டும் போலியானால்
காலியாகும் எந்தனுள்ளம்...

பிழைகள் பலசெய்து
தளைத்துத்தான் வாழ்ந்திடவே
புதுவாழ்வை தேடிநின்றேன்...
புரியாத ஜென்மமென
புரையேற தட்டிவைப்பர்
புழுதியில் புழுவாக
துடிதுடித்து போயிடுவேன்...

புண்ணியம் பண்ணியதால்
கன்னியுன்னை கண்டுகொண்டேன்
கனகாலம் கழித்துன்னை...
இனிவாழ்ந்தால் உன்னோடு
சிறப்பாகும் என்வாழ்வென
உனை சிறைவைக்க நினைக்கிறேன்...
சிந்தையில் வேறொருவன்
சிலகாலம் பழகியதால்
சிகரத்தில் இருப்பதனை
பலநேரம் சொல்லிவைப்பாய்...

முழுமதியாய் உனைநம்பி
இருள்வாழ்வை அகற்றிடவே
இன்பமாய் நானிருந்தேன்...
சூரியனில் ஒளிவாங்கி
உலகத்து இருட்டதனை
சிலநேரம் நீக்கிவைக்கும்
நிலவாக நீயென்னை
அணைக்கின்றாய் இப்போது...
அந்தச் சூரியன் என்னைச் சுடுமென
சிறிதேனும் நினைக்காமல்
சிரிக்கின்றாய் வாழ்வெண்ணி...
அரிக்கின்றது இதயமிங்கு...!

எதிர்காலம்தனைமட்டும்
எதிர்க்காமல் சிந்தித்திடு...
நினைவென்ற நிழலோடு
அந்தரத்தில் வாழ்வதா...
நிஜமென்ற நினைவோடு
நிரந்தரமாய் இருப்பதா...?

நிர்ப்பந்த வாழ்வதனில்
சுத்தமாய் பிடிப்பில்லை...
உன் மனம்போல வாழவைக்க
மனதார துடிக்கின்றேன்...
அடிபட்ட உள்ளமிதை
இடியொன்றும் தாக்காது...
உன் இன்பத்திற்காய்
என் துன்பங்களை புதைத்திட
துயரமாய் துடிக்கின்றேன்...

உன்நினைவை வெல்லமுடியா
வீணான அன்பெனது என்பதனை
அப்பப்ப சொல்லிவைப்பாய்
ஷெல்வந்து வீழ்ந்ததுபோல்
சொல்லொணா துயரத்தில்
துடித்திடுமே எனதுள்ளம்...

உன் உளம்நோக நடக்கவில்லை
உள்மனதில் நானுமில்லை...
தள்ளியே நிற்கின்றேன்
தனிமையிலே தவிக்கின்றேன்...
சொல்லியழ சொந்தமில்லை,
குறைசொல்ல நானொன்றும்
புத்தனுமில்லை...

இழைக்கின்ற பிழைகளை
துளைக்கின்ற வார்த்தைகளால்
கிழிக்கின்றாய்...
நிம்மதியாய் நீ வாழ
நிரந்தரமாய் உறங்கிடலாம்,
உயிரோடு உறவாடும்
உன் நினைவுகள் என்னோடு
நித்தமும் இருப்பதனால்
சித்தம் கலங்கி தவிக்கின்றேன்...

Friday, December 26, 2008

சுனாமி...

பாலகன் பிறந்த பரவசத்தில்
பிரசவித்த விடியலதை
கொடிய அஸ்தமனமாக்கிய
படுபாவி இயற்கையன்னையே...
பால்குடி மறவா பிஞ்சுகளை
பிய்த்தெடுத்த கொடுமைதனை
அரங்கேற்றிய இயற்கையே...
உன் சீற்றத்தை சிறுசுகளில்
காட்டிய கோரமென்ன...?

உன்னை அன்னையாக
அரவணைத்த உள்ளங்களை
ஆக்ரோஷ அலைகொண்டு
அழித்தொழித்த ஆவேசமென்ன?
வேஷம்போட்டு மோசம்பண்ணிய
பாவக்காறி நீயல்லவோ...?

உன்னையே நம்பிவாழ்ந்த
சொந்தங்களில் சொத்துக்களை
தும்புதும்பாய் துடைத்தெறிந்த
கோரம்தான் உனக்கெதற்கு..?

ஆழ்கடலில் முத்தெடுத்து
ஆனந்தமாய் வாழவைத்த
அன்பான அன்னை நீயே..!
அரையுயிர் போகும்முன்னே
குற்றுயிராய் குதறடித்த
குரோதக்காறியும் நீயல்லவோ?

பிரேதங்கள் பார்த்துத்தான்
மனங்குளிரும் என்றெண்ணி
பலபேரைக் கொன்றொழித்தாய்...
சாந்தமாய் இருந்துகொண்டே
தாண்டவமாடிய கோவமென்ன..?

நம்பிய உள்ளங்களை
நார்நாராய் கிழித்தெறிந்து
நாதியற்று அலையவிட்டாய்...
அலையாக வந்தெம்மை
அலைக்களித்து அநாதையாக்கினாய்...
அடங்கவில்லை உன்கோவம்!
அப்பாவி உயிர்கள்தான்
உனக்கான உணவென்று
தப்பாக எமையேன்
ஒப்பாரி போடவைத்தாய்...?

உன் கோர தாண்டவத்தின்
நான்காண்டு நிறைவாயிற்று...
அடிபட்ட உள்ளங்கள்
அலறித்துடிப்பதை
அலட்டிக்கொள்ளாமல்
வேடிக்கை பார்க்கின்றாய்...
அடங்கியே இருந்துவிடு,
ஆர்ப்பரித்து எழுந்துவந்து
கோபத்தை காட்டாதே...!

பிஞ்சுப்பாதம்...

Thursday, December 25, 2008

இதழ்கள்...


மாற்றீடு...

இயற்கையின் கைவண்ணம்

ஆகாயம் என்றாலே அதிசயங்களுக்கு பஞ்சமிருக்காது. அதில் பல அதிசயங்கள் இருப்பினும், நாம் அடிக்கடி காண்கின்ற அதிசயம் முகில்கள் என்றால் அது மிகையாகாது. முகில் கூட்டங்களை உற்றுநோக்கினால் ஒவ்வொரு உருவம் நம்முள்ளத்திலே தோன்றும். சிறுவர் மாத்திரமல்ல பெரியவர்களும் இதனை அதிகம் நேசிப்பார்கள். நமக்குப் பிடித்த ஏதாவது ஒன்றினை நினைத்துக்கொண்டு முகிலைப் பார்த்தால் அந்த பிடிப்பான விடயம் போலவே முகில்கள் காட்சிதரும் சில சமயங்களில். சில மிருகங்களில் உருவங்கள், மனித முகம்போன்ற தோற்றங்கள் என பல அதிசயங்கள் முகில்களில் தோன்றும். அப்படி உலகளாவிய ரீதியில் தோன்றிய சில முகில்கூட்டங்களில் படங்களை இங்கு தருகின்றேன் பாருங்கள். ஒவ்வொன்றிலும் ஏதோவொரு உருவம் உங்களுக்குத் தோன்றும்.

Wednesday, December 24, 2008

மிகப்பெரிய தக்கை ஓவியம்...

மொசைக் (Mosaic) கலைபற்றி அறிந்திருப்பீர்கள். இதுவும் அப்படியான ஒன்றுதான். வைன் போத்தல்களை அடைத்து வருகின்ற தக்கைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மொசைக் சித்திரமே (World’s Largest Cork Mosaic) இது. 229,764 தக்கைகளைக் கொண்டு Saimir Strati என்பவரால் 27 நாட்களில் உருவாக்கப்பட்டதே இந்த சித்திரம். இவர் ஒவ்வொரு நாளும் 14 மணித்தியாலங்கள் உழைத்திருக்கின்றார். இரண்டு மாடி உயரமும் 13மீற்றர் அகலமும் கொண்டது இந்த சித்திரம்.

Glass Painting

அடிக்கடி எங்கள் வீடுகளில் உடைந்துபோகின்ற பாத்திரங்கள் இந்த கண்ணாடி பாத்திரங்கள்தான். உடைகின்ற இந்த பாத்திரங்களை வைத்து கலைவண்ணம் காண்பிக்கின்ற எத்தனையோ விடயங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் இது வித்தியாசமானது. உடையாத கண்ணாடி பாத்திரங்களை எப்படி அழகுபடுத்தலாம் என்பதற்கு சான்றாக சில படங்களை இங்கு தருகின்றேன் பார்த்து மகிழுங்கள்.


சதையுள்ள கடவுள்...

தமக்கென ஓர் உள்ளம்
இருப்பதை உணர்ந்திடா
செருக்கதில் திரிந்திடும்
விருப்பற்ற உள்ளங்கள்
இருந்தென்ன லாபம்...?

உறைத்திட சொன்னாலும்
மனம் திறந்திடா உள்ளத்திற்கு
பாறைதான் உவமையென
உவர்ப்பான உண்மைதனை
உள்ளத்தால் சொல்லிடுவேன்...

தோழ்கொடுக்கும் தோழனாக
யார்யாரோ வந்துபோக...
தோள்தொய்யும் வேளைதனில்
ஆழரவம் அறிந்திடாமல்
அகன்றிடும் உறவுகளை
வென்றுவந்த தேன்நிலவாய்
உந்தன்தோழி உன்னருகில்...

பால்நிலவின் தேய்தல் கண்டு
பாரதிர தேம்பியழும்
பொய்யற்ற மனமதுவை
மெய்யாக கண்டேனே
மனதார பூரித்தேன்
பூத்தூவி பூஜிக்கிறேன்...

சாதுவாய் இருந்துகொண்டே
சகலதையும் சகித்துக்கொள்ளும்
சதையுள்ள கடவுளாய் காண்கிறேன்...
கண்மூடும்போதெல்லாம்
என்காதில் எதிரொலிக்கும்
என்னவளுக்காய் நீசொன்ன
உபதேச வார்த்தைகள்...

உபத்திரவம் இல்லாத
உண்மையான நட்பதனை
பெற்றிட்ட என்னவளே...
உளம்தொட்டு வாழ்த்துகிறேன்
நட்பென்றால் இதுவல்லோ..!

Tuesday, December 23, 2008

'Blue Hole'
உலகத்திலே எத்தனையோ அதிசயங்கள் இருக்கின்றன. அவற்றினை கண்டறிவதில் போட்டி நிலவுவதை யாவரும் அறிவீர்கள். இயற்கையின் அதிசயங்கள் எக்கச்சக்கம். அப்படியான அதிசயங்களில் ஒன்றுதான் 'Blue Hole' என்று அழைக்கப்படுகின்ற பெரிய செங்குத்தான நீர்கீழ் சுரங்கங்கள். இதனை நீர்மூழ்கிக் குகை, ஆழ்ந்த துவாரம், செங்குத்தான குகை போன்ற சொற்பதங்களாலும் அழைப்பர்.
கடலுக்கு அடியில் பல மீற்றர்கள் ஆழமான இந்தகுகைகள் சில சமயங்களில் ஆபத்தானவையும்கூட. இருப்பினும் இந்த ஆபத்துக்களில் விளையாடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் தமது உயிரினைப் பணயம் வைத்து பல சாகசங்களையும் நிகழ்த்துகின்றனர். குகை போன்ற ஆழமான பகுதி வெளியிலிருந்து பார்க்கும்போது கடும் நீல நிறத்தில் காட்சிதரும். இதனைச் சுற்றியுள்ள பகுதிகள் இளநீலத்தில் இருக்கும். இதனைவைத்தே இந்த 'Blue Hole'களை இனம் காண்கிறார்கள்.
இந்த 'Blue Hole'கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த உறை பாறைகளால் உருவானதாக கூறுகிறார்கள். அதாவது உறைநிலையிலிருக்கும் பனிப்பாறைகள் நீர் மட்டம் உயரும்போது உருகுவதால் இந்த துவாரங்கள் தோன்றுகின்றனவாம். உலகிலேயே மிகவும் பெரிய 'Blue Hole'ஆக Dean's Blue Hole விளங்குவதாகக் குறிப்பிடுகிறார்கள். இது 663 அடிகள் ஆழம் கொண்டனவாம். இதில் பல சாதனைகளும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இவ்வருடம் நடைபெற்ற டைவிங் போட்டியிலே 5 உலக சாதனைகளும் 25 தேசிய சாதனைகளும் நிலைநாட்டப்பட்டனவாம். நியூஸிலாந்தினைச் சேர்ந்த William Trubridge என்பவர் தனது சாதனைகளையே பலமுறை உடைத்திருக்கின்றார். அதில் மிகவும் முக்கியமானது, நீச்சல் வீரர்கள் காலில் அணிகின்ற துடுப்பு இல்லாமல் 84மீற்றர் ஆழம்வரை சென்று திரும்பியதாகும். இப்படி பல சாதனைகளுக்கு இவர் சொந்தக்காரர்.
Dean's Blue Hole இற்கு அடுத்தபடியாக திகழ்வது Belize's Creat Blue Hole. இது 305 மீற்றர் (1000அடி) விட்டமும் 123 மீற்றர் (400அடி) ஆழமும் கொண்ட பிரம்மாண்டமான துவாரமாகும். இதுபோன்ற பல Blue Holeகள் உலகளாவிய ரீதியில் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு தந்திருக்கின்றேன் பாருங்கள். வித்தியாசத்தை விரும்புபவர்கள் தங்கள் உயிரினைப் பணயம் வைத்து இங்கு சென்று வரலாம்.