Thursday, December 10, 2015

உரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)

மிருகங்கள் எங்களுடன் பழகுகின்ற விதத்தில் சில மனிதர்கள் பழகுவதில்லை. தேவைக்காய் பழகுகின்ற மனிதர்கள் மத்தியில் அன்புக்காய் ஆரத்தழுவும் மிருகங்களின் நற்குணம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

அவ்வப்போது மனதுக்கு ஆறுதல் தேடி, மரைன் ரைவில் வெள்ளவத்தை - தெஹிவளை பிரிப்பிடத்தோடு ஒட்டியிருக்கும் 'த ஸ்டேசன்' ரெஸ்ட்வுரன்டுக்குச் செல்வதுண்டு. 'நீ - நான் - நிலா' என்ற நிலையில் அங்கு செல்லவேண்டும் என்றுதான் நினைப்பேன். ஆனால், அதையும் தாண்டிய தனிமை எனக்குப் பிடிக்கும். கடல் அலைகளில் ஆக்ரோஷம், சில்லென்ற காற்று, அவ்வப்போது ரயில் போகும் சத்தம், இதமான இசை என அனைத்தும் நான் ரசிக்கும் சில விடயங்கள்.

இந்த அழகான இடத்தில் மிச்ச சொச்சங்களைத் தின்பதற்காக பல மிருகங்கள் இருக்கின்றன. அங்கிருக்கும் அழகான பூனை எனக்கு ரொம்பப் பிடித்த ஒரு மிருகம். ஆரம்பத்தில் நானும் பூனையும் நட்பாகிய விதம் இன்னமும் மனதுக்குள் பிடித்துப் போயிருக்கிறது. எந்த மொழி பேசுகின்றவர்கள் வளர்க்கின்ற பூனை என்றாலும் 'பூஸ்' என்ற வார்த்தைக்குக் கட்டுப்படும்.

ஒருமுறை நானும் நிழலும் அங்கிருக்கையில் தன்னைப் புலியாக நினைத்துக்கொண்டு ஒரு பூனை பந்தா காட்டியது. பலர் இப்பொழுதும் பூனையாக இருந்துகொண்டு புலியாகப் பந்தா காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடுகையில் இந்தப் 'பூஸ்' ஒன்றும் பெரிய பந்தா காட்டவில்லை. பலமுறை கூப்பிட்டுப் பார்த்தேன். திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. சேவியை மாத்திரம் உயர்த்தி என் ஒலியை உள்வாங்கியதே தவிர திரும்பிப் பார்ப்பதாக இல்லை.

நிமிடங்கள் மணித்துளிகளாகியதன் பின்னர் மெதுவாக என்னருகில் வந்தது அந்த 'பூஸ்'. தலையையும் கழுத்தையும் என் விரல்களால் வருடிவிட்டதன் பின்னர் என்னுடன் சகஜமாகிப் போனது அந்தப் 'பூஸ்'. இப்பொழுது நானும் அதுவும் நல்ல நண்பர்களாகிவிட்டோம். எப்போது அந்த இடத்துக்குச் சென்றாலும் 'புலி' என்ற பந்தாவுடன் அந்தப் 'பூஸ்' என்னருகில் வந்து ஒட்டிக்கொள்ளும். புரியாத பாஷையில் அன்புமொழி பேசுவதனால் நாமிருவரும் நல்ல நண்பர்கள்.

வழமைபோல் நேற்றும் இந்த இடத்துக்குச் செல்லவேண்டிய தேவை ஒன்று ஏற்பட்டது. மாலையில் கடும் மழைபெய்து இப்போது தூறிக்கொண்டிருந்தது. ஒரு கதை விவாதத்துக்காக என்னுடைய ஊடக நண்பனைச் சந்திக்க வேண்டிய தேவை. அதனால் எனக்குப் பிடித்தமான அந்த இடத்துக்குச் சென்றேன். வழமைபோல் வந்து பந்தா காட்டும் அந்த 'பூஸ்' வரவில்லை. தேடிப்பார்த்தேன், எங்கேயும் காணவில்லை. ஒருவேளை, மழை என்பதான் எங்கேனும் சென்றிருக்கலாம். இல்லையேல் என்னோடு நண்பரிருந்ததால் கண்ணில் தென்படாதிருக்கலாம். சில சமயங்களில் உண்மையான அன்புக்காகத் தேடிப்போகின்றபோது, அந்த அன்பு கிடைக்கவில்லை என்றால் மனதுக்குள் ஒருவித வருடல் இருக்கும். அதேபோன்றதொரு நிலைதான் என் மனதுக்குள் இன்று.

மனதுக்குள் 'பூஸ்' எங்கிருக்கிறதென்று தேடிக்கொண்டே நமது கதை விவாதத்துக்கான முன்னாயத்தம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். பரந்து விரிந்த கடல், அலைகளின் ஆர்ப்பரிக்கம் ஓசை, சூழ்ந்திருக்கும் கருமேகத்துக்குள் அவ்வப்போது தோன்றும் மின்னல் கீற்றுக்கள், தீப்பந்த ஒளியில் மங்கலாகத் தெரியும் எமதுருவம், சாதுவான மழைத் தூறல் என அனைத்துமே எமைப் புதியதொரு உலகில் சஞ்சரிக்க வைத்தது.

'யார் உங்கட பிரன்ட்?'

அவளின் கேள்விக்குரல் என்னை நிஜத்துக்குள் கொண்டு வந்து விட்டது.

'டிவில வேர்க் பண்றான். நல்ல டலன்ட் போய். கிரியேட்டிவ்வா சிந்திக்கிறவன்..'

'அப்ப அவருக்கு கதை எழுதத் தெரியாமலா என்ன வரச்சொன்னிங்க?'

'கதை அவன்கிட்ட இருக்கு. திரைக்கதை எழுதணும். அதையும் அவனே செய்வான். ஆனா, யதார்த்தமா - புதுசா வசனம் இருக்கணுங்கிறது அவனோட ஆசை...'

இப்படியே எமது உரையாடல் போய்க்கொண்டிருக்கையில், பக்கத்து மேசையில் இருந்த இரு தமிழரின் கதை எம் கவனத்தைத் திருப்பியது. யாழ்ப்பாணத்தில் பேசுகின்ற செந்தமிழில் அவர்களது உரையாடல் தொடர்ந்தது. அநேகமாக அவர்கள் லண்டனிலிருந்து விடுமுறைக்காக இங்கு வந்திருக்க வேண்டும்.

'அஞ்சுலச்சம் பவுண்ஸ் குடுத்து உந்த இடத்த வாங்கிறது பெரிய விஷயமில்லை. ஆனா, யாரையும் நம்பேலாம இருக்கு. எல்லாத்துக்கும் காசுதான்'

ஒருவரினால் இந்தக் கருத்துச் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்போதே அரை போத்தல் விஸ்கி முடிந்திருந்தது. ஐஸ் கட்டி கரைந்து போயிருந்ததால்

'தம்பி இஞ்ச வாரும்...' என்று வெயிட்டரைக் கூப்பிட்டார்.

இது கிறிஸ்மஸ் காலம் என்பதால் அங்கிருக்கும் அனைத்துப் பணியாளர்களும் கிறிஸ்மஸ் தொப்பி அணிந்திருந்தனர். கூப்பிட்ட குரலுக்கு அந்த வெயிட்டரும் ஓடிவந்தார்.

'தம்பி நீர் புட்டிஸ்டே?'

தமிழ் 'கொஞ்சம் கொஞ்சம்' பேசக்கூடிய வெயிட்டர் என்பதால் 'ஆம்' என்பதுபோல் தலையாட்டினான்.
'புத்தர பெரிஷா பேசிற நீங்க எதுக்கு உந்த தொப்பிய போட்டிருக்கிறியள். பௌத்தம் தான் பெருஷெண்டு சொல்லுற நீங்க எதுக்கு கிறிஸ்டியன்ட தொப்பிய போடுறியள்?'

இந்தக் கேள்வி அந்தப் பையனுக்கு நிச்சயமாகப் புரிந்திருக்காது. அவ்வளவு தமிழ் தெரியக்கூடிய வெயிட்டர் இல்லை அவன். ஆனாலும் ஏதோ புரிந்தவன் போல் தலையை மட்டும் சிறிதாய் ஆட்டி, புன்னகையைப் பதிலாகக் கூறிவிட்டு ஐஸ் கட்டி எடுத்துவருவதற்காகச் சென்று விட்டான்.

அவன் போனபின்னர் பலதும் பத்தும் பேசத் தொடங்கினர் அந்தப் பக்கத்து மேசை விருந்தாளிகள்.
சில சமயங்களில் எங்களின் செயற்பாடுகள் எதற்காக என்பதே தெரியாமல் நாங்கள் நடந்துகொள்கிறோம். செய்யும் தொழிலுக்காக பலதையும் செய்யவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். ஆனால், சிந்தித்துப் பார்த்தால் அவை அனைத்துமே பல கேள்விகளை நமக்குள் தோற்றுவிக்கும்.

பக்கத்து மேசைக்காரரின் இந்தக் கேள்வியும் பல உண்மைகளை உரக்கச் செய்தது எனக்குள். கிறிஸ்மஸ் என்பது பொதுப் பண்டிகையாகப் பலராலும் கொண்டாடப்படுகிறது. இதனை ஓர் ஒற்றுமைப் பண்டிகை என்றாலும் அதில் தப்பிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்த ஒற்றுமையைப் புரிந்துகொண்டால் பல பிரச்சினைகளுக்கு எப்பொழுதோ முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிக்கும்.

'என்னோட கதைக்கிறத விட்டுட்டு எங்க வாய் பாக்கிறிங்க?'

அவளின் கேள்விக்கணை என் காதைத் துளைத்ததும் தான் நாம் எதற்காக வந்தோம் என்ற சுயநினைவு வந்தது.

சிரிந்துக் கொண்டே வாசலைப் பார்த்தேன், என்னுடைய நண்பன் வந்து கொண்டிருந்தான்... அந்த “பூஸ்”ஸின் ஸ்பரிசத்தை என் மனம் ஏதோ தேடியது...

Monday, October 27, 2014

அழைப்பின் ஆப்பு

முஸ்லிம் கட்சிகளை தங்களுடன் இணைந்து செயற்படுமாறும், அதிகார பகிர்வு தொடர்பில் திறந்த மனதுடன் பேசுவதற்கு காத்திருப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கிறார். 90ஆம் ஆண்டில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்களின் ஒருபிடி நிலத்தைக்கூட ஆக்கிரமிக்க விடமாட்டோம் எனவும் சொல்லியிருக்கிறார். இச்செய்தி இன்றைய ஊடகங்கள் பலவற்றிலும் முதன்மைச் செய்தியாக வெளிவந்திருக்கிறது.

இவ்விடத்தில் என் மனதில் பட்ட சிலதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஒருமுறை அமைச்சர் பசீர் சேகுதாவுத்துடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு விடயத்தைக் கூறினார். தமிழர் தரப்பு ஒவ்வொருமுறையும் முஸ்லிம் கட்சிகளை தங்களுடன் இணைய வருமாறு மட்டுமே அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், ஒருமுறையேனும் முஸ்லிம் கட்சிகளுடன் நாங்கள் இணைந்து செயற்படவிரும்புகிறோம் என தெரிவித்ததில்லை. சிறுபான்மை கட்சிகள் என்ற அடிப்படையில் முஸ்லிம் கட்சிகள் பேரம்பேசும் பலத்துடன் செயற்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ்க் கட்சிகளுக்கு குறிப்பாக தமிழ்த் தேசியக் கட்சிக்கு பேரம்பேசும் சக்தி இருந்ததில்லை. ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாகக் கூட இருந்ததில்லை. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக செயற்பட்டிருக்கிறது. ஆகையினால், முஸ்லிம் கட்சிகளுடன் தமிழ்க் கட்சிகள் இணைந்து செயற்பட முன்வரலாம் தானே? என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் அமைச்சர் பசீர்.

இக்கருத்துக்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் விட்டுக்கொடுப்பு என்பதுதான் சாமர்த்தியமானது எனத் தோன்றுகிறது. இறுதி யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தில் முஸ்லிம்கள் இணைந்துகொண்டமையை கண்டித்த தமிழர் தரப்பு, 90களில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது அமைதியாகத்தான் இருந்தது (ஒரு சிலரைத் தவிர). ஆகையினால், அரசியல் சாணக்கியம் என்பது இங்கு மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டியதொன்றாகிறது.

மாவையில் அழைப்பை முஸ்லிம் கட்சிகள் நிராகரித்தால் - அதுதான் அவர்களின் அரசியல் பேசுபொருளாக மாறிவிடும். ஏற்றுக்கொண்டால் சாணக்கியம் சறுக்கிவிடும். ஒருவரை அழைத்து ஆப்பு வைப்பது என்பது இதுதானோ என சிந்திக்கத் தோன்றுகிறது.

(குறிப்பு: பத்திரிகைத்துறை சாராத தனிப்பட்ட பதிவிது)

Thursday, February 06, 2014

ஆறறிவு


நேற்றிரவு முக்கியமான, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு கம்பனியின் நிர்வாக உறுப்பினர் ஒருவரை இரவுநேர விருந்தொன்றில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எனது குடும்ப நண்பர்களின் அழைப்பின் பேரில் இந்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்டேன். இங்கு “முக்கியமான” தருணத்தில் அந்த தொழிலதிபர் கேள்வி ஒன்றினைக் கேட்டார். சாதாரணமான கேள்வியாக இருந்தாலும் அது சிந்திக்க வைத்தது.

“ஆறறிவு உள்ளவர்கள் யார்?” என்று கேட்டபோது, மனிதனுக்கு ஆறறிவு இல்லை என விஞ்ஞானிகளால் அண்மையில் அறிவிக்கப்பட்டபோதிலும் மனிதன்தான் ஆறறிவு படைத்தவன் என நாங்கள் கூறினோம்.

“ஐந்தறிவு உள்ளவர்கள் யார்?” என்று மறுபடியும் அவர் கேட்டார். அதற்கு வழமையான பதிலாக “மிருகங்கள்” என்று கூறினோம்.

“சரி... அப்படியென்றால், ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு, நாலறிவுள்ளவை எவை?” என்ற கேள்வியை கேட்டுவிட்டு, இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை என்றால் உங்களுக்கு இன்று தூக்கமே வராது. பதில் சொல்லிவிட்டால் எனக்கு சுவாரஸ்யமாக இருக்காது என்று சிரித்துக்கொண்டே கூறினார் அவர்.

இப்பொழுது, அந்த விருந்தில் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு பதிலாக சொல்லத் தொடங்கினார்கள். ஆனால், எந்தப் பதிலிலும் அவர் திருப்தியடையவில்லை. நீண்ட நேரத்தின் பின்னர், அதாவது விருந்துபசாரம் நிறைவடையும் தருணத்தில் அதற்கான பதிலை அந்த தொழிலதிபர் தந்தார். தன்னுடைய அனுபவத்தில் முக்கிய நபரொருவர் தனக்கு இதனை தெளிவுபடுத்தியதாகக் கூறியே அந்தப் பதிலினை பகிர்ந்தார்.

அதாவது, உயிர் வாழ்வுக்கு ஐம்பூதங்களின் முக்கியத்துவம் அவசியம். அதனடிப்படையில்தான் இந்த அறிவுகள் பிரிக்கப்படுகின்றன என்றும் கூறினார்.

அவர் கூறிய ஆறறிவு விபரம் இதுதான்...

முதலாம் அறிவு
மண்ணில் விதைக்கப்பட்டு வளர்கின்ற மரம், செடி, கொடி போன்ற அனைத்துமே ஓரறிவு உடையவை. ஏனெனில் இவை அனைத்தும் சுயமாக ஐம்பூதங்களை ஆட்கொள்பவை அல்ல. உதாரணமாக, ஒரு செடி - காற்றடித்தால் மட்டுமே அசையும். சுயமாக அவை அசைவதில்லை. ஆகையினால் அவை ஓரறிவு உடையவை என்று கருதப்படுகிறது.

இரண்டாம் அறிவு
புழு, பூச்சிகள் என்பன ஈரறி உடையவை. ஏனெனில் இவை சுயமாக அசையும் திறனுடையவை.

மூன்றாம் அறிவு
நீர்வாழ் உயிரினங்கள் மூவறிவு உடையவை. ஏனெனில் இவை தமக்குள் ஒரு வட்டத்தை வகுத்து வாழும் திறனுடையவை என்பதால் மூவறிவுடையனவாக இருக்கின்றன.

நான்காம் அறிவு
பறவைகள் நான்காவது அறிவுடையன. உதாரணமாக, புறா போன்ற பறவைகளை நாம் வளர்த்து, எங்காவது தொலைவில் சென்று விட்டாலும் அவை நம்மை தேடி வருகின்ற திறமை கொண்டவை. இந்த அறிவு அனைத்து பறவைகளுக்கும் இருக்கின்றது. ஆகையினால்தான் அவை நான்கறிவுடையனவாக இருக்கின்றன.

ஐந்தாம் அறிவு
விலங்குகள் அனைத்தும் ஐந்தறிவுடையன. ஏனெனில் அவைகளுக்கு பசி எடுத்தால் உணவு உட்கொள்ள தெரிவும், காமம் கொண்டால் புணர்ச்சியில் ஈடுபடுகின்றன. எதிரியை இனங்காணுகின்ற பண்பிருக்கிறது. இதுபோன்ற பல குணங்களைக் கொண்டவையாக விலங்குகள் இருப்பதால் அவை ஐந்தறிவு உடையனவாக இருக்கின்றன.

ஆறாம் அறிவு
மனிதன் ஆறறிவுடையவனாக இருக்கின்றான் (இப்பொழுது விஞ்ஞானிகள் மனிதனுக்கும் ஐந்தறிவு என்று கூறினாலும்கூட). மிருகங்களுக்கு இருக்கின்ற அனைத்து குணாதிசயங்களும் மனிதனுக்கும் இருக்கின்றன. ஆனாலும் சில சிறப்புத்தன்மை அவனிடம் இருக்கிறது. மனிதனுக்கு பசியெடுத்தால் கண்டதையும் சாப்பிடமாட்டான். எவ்வளவுதான் பசியெடுத்தாலும் விஷத்தினை மனிதன் உண்பதில்லை. அதேபோல், காமவுணர்வு ஏற்பட்டால் மிருகங்கள்போல் நடந்துகொள்வதில்லை. எவையெவை எப்படி செய்யவேண்டும் என்ற பகுத்துணர்வோடு வாழ்வதால் மனிதன் ஆறறிவுடையவனாக இருக்கின்றான்.

“ஆறறிவு” என்பதற்கு அந்த தொழிலதிபர் கொடுத்த மிகப்பெரிய வரைவிலக்கணம் இதுதான். இதில் சில நியாயங்கள் இருப்பதை உணரமுடிந்தது. இதில் எவ்வளவுதூரம் உண்மையான நிலை இருக்கிறது என்பதுபற்றி நான் ஆராயவில்லை. இருப்பினும், அந்த தொழிலதிபர் கூறிய காரணங்கள் சற்று சிந்திக்க வைத்தன. ஆகையினால் இதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

Monday, January 06, 2014

உரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 1)


நாம் அனைவருமே ஏதோ ஒன்றை உலகுக்கோ அல்லது நம்மைச் சார்ந்தவர்களுக்கோ சொல்வதற்கு தயாராக இருப்பவர்கள். இதில் எவரும் விதிவிலக்காகிவிட முடியாது. சில சமயங்களில் நாம் சொல்வதை அனைவரும் கேட்பதுண்டு. பல வேளைகளில் உரக்கக் கத்த நினைக்கின்ற ஊமைபோலவே இருந்துவிடுவதுமுண்டு.

அந்தவகையில், என் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை வைத்து, எனக்குள் எழுகின்ற கேள்விகளுக்கு பதில் தேடும் நோக்கில் 'உரக்கக் கத்தும் ஊமைகள்' என்னும் பதிவினை எழுதத் தொடங்கியிருக்கிறேன்.

அந்தவகையில், முதலாவது பதிவாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனின் இலங்கை விஜயம் தொடர்பாக எனக்கு தெரிந்தவற்றை ஆராயலாம் என நினைக்கிறேன்.

1981ஆம் ஆண்டு டிசெம்பர் 23ஆம் திகதி யாழ்ப்பாணத்திலே பிறந்த ராதிகா, தனது 5ஆவது வயதில் கனடாவில் குடும்பத்தாரோடு குடியேறிவிட்டார். அங்கேயே படித்து பட்டம் பெற்ற அவர், பிற்காலத்தில் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.

2004ஆம் ஆண்டு முதல், புதிய ஜனநாயக கட்சியின் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார். இதன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக்கொண்ட அவர், 2011ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி, ஸ்காபரோ ரூச் ரிவர் தொகுதியில் 18,935 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றுக்கு தெரிவானார்.

முதலாவது தமிழ் பிரதிநிதி என்பதோடு இளவயதில் தெரிவாகிய நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் போற்றப்பட்டார். இவரது தெரிவினை தமிழ் சமூகம் பெருமையாகக் கொண்டாடியது. இதற்கு, அன்றைய சூழலும் ஒரு காரணமாக அமைந்ததென்னமோ உண்மைதான்.

இந்நிலையில், கடந்த டிசெம்பர் 28ஆம் திகதி தனிப்பட்ட விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்தார் ராதிகா. இவரது வரவோடு பல சர்ச்சைகளும் சேர்ந்தே வந்தது. தனது சிறப்புரிமையை பயன்படுத்தாமல், சாதாரண குடிமகளாகவே ராதிகா, இலங்கைக்குள் வந்தார். ஆகையால் ஊடகங்களிடம் சிக்காமல் இருப்பதற்கே அவர் பெரிதும் முயற்சித்தார்.

இருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுடன் வடக்கில் பல இடங்களுக்கும் சென்று, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க தொடங்கியதும் இவரது வருகை பற்றி புகையத் தொடங்கிவிட்டது. சாதாரண சுற்றுலா விசாவில் வருகை தந்த அவர், எவ்வாறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பதே அரச தரப்பின் கேள்வியாக இருந்தது.

தனது சொந்தமண்ணின் சொந்தங்களை சந்திப்பதொன்றும் பெரிய குற்றமில்லை. ஆனால், அரசியல் சுயலாபங்களுக்காக நம் சொந்தங்களை பகடைக்காயாக பயன்படுத்துவதுதான் இங்கு கேள்விக்குரியது.
விசா நடைமுறை என்பது அனைத்து நாட்டிலும் கடுமையாக கடைப்பிடிக்கப்படுகின்ற ஒரு விடயம். இதற்கு எவரும் விதிவிலக்காக முடியாது. அண்டை நாடான இந்தியாவை எடுத்துக்கொண்டால் அங்கு இருக்கும் கெடுபிடிபோல் எங்கும் காணமாட்டீர்கள். சுற்றுலா விசாவில் செல்வதென்றால் அந்த வேலையை மட்டும்தான் செய்ய முடியும். அதனை மீறி எங்காவது தொழில் புரிவது அல்லது செய்தி சேகரித்தால் அது தண்டனைக்குரிய குற்றம். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் நீங்கள் சுற்றுலா விசாவில் இந்தியாவிற்குள் நுழைய முடியும். அதுமாத்திரமல்ல, ஊடகத் துறையில் பணிபுரிகின்ற நாங்கள், சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பித்தால் தரமாட்டார்கள். எங்களுக்கு 'ஜே' எனப்படுகின்ற ஊடகவியலாளர் விசாதான் கொடுப்பார்கள். அதற்கும் பல கேள்விகள், விசாரணைகள் உண்டு. இதுதான் நடைமுறை. இதேபோல்தான் கனடா, அமெரிக்கா, லண்டன், சுவிஸ் என பல நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படுகின்ற கடுமையான குடிவரவு சட்டம்.

ஆனால், இப்படியான கெடுபிடி குடிவரவு சட்டங்களுடன் வாழ்ந்துவந்தவர்கள் எமது நாட்டில் மட்டும் குடிவரவு நிபந்தனைகளை தளர்ந்தவேண்டும் என எதிர்பார்ப்பது எந்தவகையில் நியாயமானது எனத் தெரியவில்லை.

இவர்களின் நோக்கம், தம் மக்களின் துயரினை தாங்கள் துடைக்கின்றோம் என்பதோடு, அரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைப்பதொன்றைத் தவிர வேறெதுவும் இல்லை. இது அவரவர் சுயலாபம் அல்லது சுய அரசியல் என்பது மட்டும் தெளிவு. துயர் துடைக்க நினைப்பவர்கள் நிச்சயமாக தமது பிரபல்யத்திற்கு வித்திடமாட்டார்கள். அரசை நிர்ப்பந்தத்திற்குள் தள்ளி, தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வைப்பதன்மூலம் தம்மை உலகரங்கில் பிரபல்யமடைய செய்வதும் இதில் உள்ளடங்கும். இதனால், பாதிக்கப்பட்ட நமது மக்களுக்கு என்ன லாபம் கிடைக்கப்போகிறது..? ஒருவேளை உணவிற்கு வழியின்றி இருக்கும் மக்களை மீண்டும் தர்மசங்கட அடிமைகளாக்கும் முயற்சியாகவே இதனை பார்க்க வேண்டும்.

உண்மையில் இவர்கள் சொல்கின்ற நியாயம் வரவேற்கத்தக்கது என்று வைத்துக்கொள்வோம். இவர்களின் வருகைமூலம் இங்கிருக்கும் பிரச்சினைகளை வெளிநாட்டுக்கு படம்போட்டு காட்டலாம் என்று நம்புகிறார்கள். அதில் சிலர் வெற்றியும் அடைகிறார்கள். ஆனால், நடைமுறையில் பல சிக்கல்களை தோற்றுவிக்கிறார்கள். சாதாரணமாக திரிகின்ற மக்களையும், கண்காணிக்கும் படுபாதக விளைவுக்குள் நம் மக்களைத் தள்ளிவிட்டுவிடுகிறார்கள் என்ற உண்மையையும் அவர்கள் மறந்துவிடக்கூடாது.

ராதிகா இங்கு வரும்போது உரியமுறையில் வந்திருந்தாலும் எமது மக்களை நேரடியாகச் சென்று சந்தித்திருக்கலாம். அப்படி சந்திக்க முடியவில்லை, பாதுகாப்பு வலயங்கள் இருக்கின்றன என்றால் அதனை பெரிதுபடுத்துவது இலகுவாக இருந்திருக்கும். ஆனால், நீங்கள் வந்ததே நடைமுறைக்கு மாறாகா, இந்நிலையில் மற்றவர்களை அதாவது அரசாங்கத்தை எப்படிக் குறைகூறப்போகிறீர்கள்? இதில் ஏதோ சுயநலம் இருக்கிறது என்பதுமட்டும் உண்மை.

நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அடிக்கடி பல சிக்கல்களில் மாட்டிக்கொள்பவர். தனது மக்களுக்கு எதையாவது நல்லது செய்துவிடவேண்டும் என்பதற்காக எதனையும் செய்யத் துணிகின்ற ஒருவர். ஆனாலும், நேர்வழியில் அதனை செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். மோசடிக்கு துணைபோகின்றார் என்ற குற்றச்சாட்டுத்தான் இப்பொழுது அவர்மீது இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டினை வைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைக்க முடியுமா? சிறந்த ராஜதந்திர நகர்வுக்கு இது சிறந்த உதாரணமல்ல.

டிசெம்பர் 28ஆம் திகதி இலங்கைக்குள் வந்த ராதிகா எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதிதான் கனடா செல்வதாக இருந்தது. ஆனாலும், தனது பயணத்தினை இடைநிறுத்தி, கடந்த 4ஆம் திகதி அதிகாலை இந்தியாவுக்கு பயணமாகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த நிர்ப்பந்தம் எதனால் ஏற்பட்டது. விசா நடைமுறையை பின்பற்றவில்லை என்ற ஒரே காரணத்தினால்தானே... சரியான நடைமுறையை பின்பற்றி, உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தாலும் இலங்கை பாதுகாப்பு படைகளில் உளவுப்பிரிவு நிச்சயம் கண்காணித்துத்தான் இருக்கும். ஆனால் நேரிடையாக தலையிடுவது குறைந்திருக்கும். ஆனால், ஒரு வெளிநாட்டு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எச்சரிக்கும் அளவுக்கு எந்த நிகழ்வும் இடம்பெற்றிருக்காது என்பது மட்டும் உண்மை.

ஆக, எதற்காக இந்த நடைமுறையை பின்பற்றினார் ராதிகா? அதற்கு முன்பதாக உளவுப் பிரிவின் செயற்பாடு பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்.

2004ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 50ஆவது பிறந்ததினம் மற்றும் மாவீரர் தின நிகழ்வுகளை பற்றி செய்தி சேகரிப்பதற்காக நானும் புகைப்பட ஊடகவியலாளர் சுரேந்திரனும் முல்லைத்தீவுக்கு சென்றிருந்தோம். அப்பொழுது நான் வீரகேசரி வார வெளியீட்டில் பணிபுரிந்தேன்.

முல்லைத்தீவு கடற்கரையில் நிகழ்வுகள் நடைபெறவிருந்ததால், தமிழீழ விடுதலைப் புலிகளின் அன்றைய ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரின் அலுவலகத்தில் அனுமதி பெற்று முல்லைத்தீவுக்கு சென்றோம். நாம் செல்வதை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் இருவர் வந்தனர். முல்லைத்தீவு கடற்கரையில் கடற்புலிகளின் தளபதி சூசை மற்றும் பலர் குழுமியிருந்தனர். இவர்களுடன் இயக்குநர் பாராதிராஜா மற்றும் திருமாவளவன் போன்றவர்களும் உடனிருந்தனர்.

எமது புகைப்பட ஊடவியலாளர் சுரேந்திரன், அவர்களை புகைப்படமெடுக்க முற்பட்டபோது தடுக்கப்பட்டார். இங்கு வைத்து இவர்களை படமெடுக்காதீர்கள். அவர்கள் வந்திருப்பது வெளியில் யாருக்கும் தெரியாது என்றார்கள். சரியென நாமும் அதனை படமெடுக்காமல் விட்டுவிட்டு மீண்டும் கிளிநொச்சி நோக்கி வந்துகொண்டிருந்தோம். வரும் வழியில் ஒரு ஒதுக்குப்புற கடையில் நிறுத்தி தேனீர் குடித்துகொண்டிருந்தபோது, சடுதியாக அவ்விடத்திற்கு வந்த பிக்கப் வாகனமொன்றின் உள்ளிருந்தவர்கள் எம்மை உரத்த தொனியில் விசாரித்தார்கள். உள்ளிருப்பவர்களை வெளியில் தெரியாத விதத்தில் அந்த வாகனம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனுள்ளிருந்தவர்கள் எம்மை அங்கு அதிகநேரம் நிற்க விடவில்லை. இது அவர்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயம். இப்படியான அனுபவம் பலருக்கும் இருந்திருக்கும்.

அதேபோல்தான் எல்லா ஆளுந்தரப்பிற்குமென ஒவ்வொரு நடைமுறை இருக்கும். இதில் யாரையும் குறைகூற முடியாது.

ஆக, ராதிகாவின் இலங்கை விஜயம் எதனை அடிப்படையாகக் கொண்டிருந்தது? நான் அறிந்தமட்டில் அவரும் தனது அரசியல் இருப்பினை தக்க வைக்கும் நோக்கிலேயே இங்கு வந்து தன்னை ஸ்திரப்படுத்தியுள்ளார்.

அதாவது, கனடாவில் வெகு விரைவில் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. அதிலும், ராதிகா வெற்றிபெற்ற தொகு இப்பொழுது இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறதாம். அதில் ஒரு பகுதியில்தான் ராதிகா போட்டியிட வேண்டும். மற்றைய பகுதியில் வேறொருவர் போட்டியிடப்போகிறார். அந்தத் தொகுதி மிகவும் வலிமையானதாம். அந்தத் தொகுதியில் ஆனந்த சங்கரியின் மகன் தேர்தலில் குதிக்கப் போவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆகையால் ஆனந்த சங்கரியின் மகன் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பிருக்கிறதாம். ராதிகா போட்டிபோடவுள்ள தொகுதியில் அவருக்கு செல்வாக்கு மங்கிவருகிறதாம். அதனை சரிசெய்வதற்காகத்தான் இலங்கை வந்து தன்னை தமிழ்மக்களின் துயர் துடைப்பாளராக அடையாளம் காட்ட முற்பட்டிருக்கிறாராம்.

இதிலிருந்து பல விடயங்களுக்கான விடை தெரியவருகிறதல்லவா? இதனை சரியாகப் புரிந்துகொள்ளாமல் தலைமேல் தூக்கிவைத்து பிரச்சினைகளுக்கு தூபம் போட்டால் எதிர்காலத்தில் நம்மை எல்லோரும் ஏறி மிதிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆகையால், நன்மை செய்கிறோம் என்கிற நோக்கில், நம்மக்களின் துயரத்தை மீண்டும் அதிகரிக்கச் செய்யாமல் இருப்பதே இப்போதைய ராஜதந்திர நகர்வாகும்.

Tuesday, May 07, 2013

ஆடாத ஆட்டம்...இருக்கின்ற போதெல்லாம்
இறுக்கமாய் நீயிருந்தாய்...
இல்லையென்று ஆனபின்பும்
இன்னுயிராய் நீயிருக்காய்..!!!

வேரறுத்து வெட்டிவிட்ட
வேப்பமரம் நானில்லை...
வெதுவெதுப்பாய் தவிக்குதடி
வேண்டிநிற்கும் என்னுள்ளம்..!!!

மடிசாய்ந்து கதைபேசி
படிதாண்டிய வாழ்க்கையிது...
துடிதுடித்து சாவதற்கா
புடைபோட்டோம் தங்கமிதை..?!!

கோடிசொந்தம் சுற்றியிருந்தும்
தேடிவந்த செல்வம் நீயடி...
ஆடாத ஆட்டத்திலே
அரைநடுவில் போவதேனடி..?!!

செந்தணல்


Wednesday, September 26, 2012

இலங்கையின் பழங்குடியினர்...


வரலாற்று புகழ்மிக்க இலங்கை தீவின் பழங்குடியினர் பற்றிய தேடல்கள் இன்னமும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. நாட்டின் பாரம்பரியங்களை எடுத்தியம்புகின்ற விடயங்களில் அந்நாட்டின் பழங்குடியினரின் பங்கு பாரியளவானது. அந்தவகையில் எமது நாட்டின் பழங்குடியினர் பற்றிய தேடலும் முக்கியமானது.

பழங்குடியினர் என்றவுடனே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவதென்னமோ வேடுவர் என்ற பதம்தான். ஏனெனில் நமது பழங்குடியினரின் பிரதான தொழில் வேட்டை. கற்காலத்தில் வாழ்ந்த பழங்குடியினர் தற்காலத்திலும் வாழ்கின்றார்கள். எமது இலங்கைத் திருநாட்டைப் பொறுத்தவரையில் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும் வடமத்தி, ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

2002ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம் சுமார் 2500 பழங்குடியினர் எமது நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வெண்ணிக்கை இப்பொழுது குறைந்திருக்கலாம் அல்லது கூடியிருக்கலாம். எது எப்படியிருப்பினும் சிறியளவான பழங்குடியினரே இங்கு வாழ்கின்றார்கள். எங்கிருந்து வந்தும் குடியேறாமல் எமது நாட்டின் ஆதிக்குடியாக இருப்பதால்தான் இவர்களை பழங்குடியினர் என்று அழைக்கின்றோம்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எமது பழங்குடியினரின் சரித்திரம் தொடர்கிறது. வரலாற்று ஆய்வாளர்களின் தகவல்படி இலங்கைக்கு ஆரியரின் வருகைக்கு முன்னரே பழங்குடியினர் வரலாறு ஆரம்பிக்கிறது. எமது இலங்கையில் வாழ்கின்ற பழங்குடியினரின் மரபும் தென்னிந்தியாவில் வாழ்கின்ற பழங்குடியினரின் மரபும் ஒத்துப் போவதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் ஆதாரங்களினூடாக நிரூபித்திருக்கிறார்கள்.

இலங்கையின் பழம்பெரும் தொகுப்பு நூலான மஹாவம்சத்தில் இலங்கையின் முதல் மன்னனான விஜயன் இலங்கையை வந்தடைந்தபோது அவனை வரவேற்று பின்னர் விஜயனுடன் இணைந்து வாழ்ந்த குவேனி எனும் இயக்கர் குலப்பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தது பற்றி சொல்லப்படுகிறது. விஜயன் அரசமைத்து தனது பட்டத்து இளவரசியாக தென்னிந்தியாவில் பாண்டிய குலத்து பெண்ணை திருமணம் முடித்து பட்டத்து அரசியாக்கினான் என்றும், அதன் பின்னர் குவேனி இயக்கர் இனத்தவர்களாலேயே கொல்லப்பட்டாள் என்றும், விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த ஓர் ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் தப்பியோடி காடுகளில் வாழத்தலைப்பட்டனர் என்றும் குறிப்பிடப்படுகிறது. அப்படி தப்பிச் சென்று காடுகளில் வாழ்ந்த வாரிசுகளின் பரம்பரையினரே இன்றைய இலங்கை காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இப்படி காடுகளை தமது இருப்பிடமாக கொண்டு வாழ்ந்ததால் அவர்களின் பிரதான தொழில் வேட்டையாடுதலாக மாறியிருந்தது. இதனாலேயே அவர்களை வேடுவர்கள் என்று அழைக்கின்றார்கள். இருப்பினும், எமது பழங்குடியினர் தங்களை 'வன்னியலா எத்தோ' என்றே அழைக்கின்றனர். இதன் பொருளும் கிட்டத்தட்ட 'காடுகளில் வாழ்பவர்கள்' என்றே கொள்ளப்படுகிறது.

இலங்கை காடுகளில் வாழ்பவர்களின் மொழி வித்தியாசமாக இருக்கிறது. இதனை வேடுவ பாஷை என்று சொல்கிறார்கள். தமிழ் பிரதேசங்களில், குறிப்பாக கிழக்கில் வாழ்கின்ற பழங்குடியினரின் மொழியில் தமிழ் கலந்திருக்கிறது. அதேபோல் சிங்கள பிரதேசங்களில் வாழ்கின்ற பழங்குடியினரின் மொழியில் சிங்களம் கலந்திருக்கிறது. உண்மையிலே இந்த பழங்குடியினர் பேசுகின்ற மொழி ஆரிய மொழிகளல்லாத மொழியென ஆய்வாளர் வில்ஹெய்ம் செயகர் குறிப்பிட்டிருக்கிறார். நமது பழங்குடியினருக்கென தனித்துவமான மொழியொன்று இருந்திருக்கிறது. அந்த மொழியினை இப்பொழுதும் அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் சில ஆரிய மொழிகளின் கலப்புடன் பழங்குடியினரின் மொழி மாறியிருக்கிறது.

ஆரம்பத்தில் காடுகளையே பிரதான வாழ்விடமாக கொண்டிருந்த பழங்குடியினர் காலத்தின் நிர்ப்பந்தத்தினால் இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இயக்கர், நாகர் இனங்களில் வழித்தோன்றலில் எமது நாட்டில் வாழ்கின்ற பழங்குடியினர் இயக்கர் இனத்தின் மரபினர் என்றே கணிப்பிடப்பட்டிருக்கிறார்கள். இப்படி காடுகளை தஞ்சமடைந்திருந்த பழங்குடியினரின் வாழ்க்கை முறை, 5ஆம் நூற்றாண்டில் இடம்பெறத் தொடங்கிய ஆரிய குடியேற்றங்களால் மாற்றமடையத் தொடங்கியது. பழங்குடியினரின் இருப்பிடங்களான அடர்ந்த காடுகள் - மக்கள் குடியேற்றத்திற்காகவும் நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் அழிக்கப்படத் தொடங்கின. இதனால் அடர்ந்த காடுகளை நோக்கி பழங்குடியினர் இடம்பெயரத் தொடங்கினர்.

இடம்பெயரத் தொடங்கிய பழங்குடியினர் சாதாரண மக்களுடன் கலந்து வாழவேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டனர். இதனால் பழங்குடியினரின் வாழ்க்கைமுறை படிப்படியாக மாறத் தொடங்கியது. கிழக்கு மாகாணத்தை நோக்கி இடம்பெயர்ந்த பழங்குடியினர் தமிழ் பிரதேசங்களுடன் தொடர்புபட்டு வாழவேண்டிய நிலைக்கும், மய்யங்கனை நோக்கி இடம்பெயர்ந்த பழங்குடியினர் சிங்கள கிராமங்களை அண்டி வாழவேண்டிய சூழலுக்கும் தள்ளப்பட்டனர். இதனால் நமது பழங்குடியினரின் தனித்துவ மொழியுடன் தமிழ், சிங்கள மொழிகளும் கலக்கத் தொடங்கின. அதுமட்டுமல்லாமல் பழங்குடியினரின் வழிபாட்டு முறைகளிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

ஆரிய குடியேற்றங்களினால் குறுகிப்போன பழங்குடியினரின் வாழ்வு அண்மைக்காலத்தில் அதாவது 1978ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மஹாவலி அபிவிருத்தித் திட்டத்தினாலும் பாதிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக பல காடுகள் அழிக்கப்பட்டமையால் மீண்டும் எமது பழங்குடியினர் பாதிப்பிற்குள்ளாகினர். இறுதியாக 'மாதுறு ஓயா தேசிய பூங்கா' அமைப்பதற்காக எஞ்சிய பழங்குடி பிரதேசங்களும் பாதிக்கப்பட்டன. இப்படி படிப்படியாக ஓரங்கட்டப்பட்ட பழங்குடியினர் தற்சமயம் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும் மய்யங்கனை பிரதேசத்தின் 'தம்பன' கிராமத்திலும் வாழ்ந்து வருகிறார்கள்.

'தம்பன' கிராமம் தற்சமயம் பழங்குடியினரின் உத்தியோக கிராமமாக இருக்கிறது. இங்கு சுமார் 350 பழங்குடி குடும்பங்கள் வாழ்கிறார்கள். இவர்களின் தற்போதைய பிரதான தொழில் விவசாயமாக மாறியிருக்கிறது. இன்னும் சிலர் படித்து, வேலை பார்த்தும் வருகிறார்கள். சமுதாயத்தினால் ஒதுக்கப்பட்டு, அந்தஸ்திழந்து காணப்பட்ட நமது பழங்குடியினருக்கு அந்தஸ்தளித்தவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ. இவரது காலத்தில்தான் பழங்குடியினரும் நமது நாட்டின் குடிமக்கள்தான் என்ற உரிமை வழங்கப்பட்டது.

குடியுரிமையை பெற்றுக்கொண்ட தற்கால பழங்குடியினரின் சந்ததியினர் உயர் கல்விகளையும் தொடங்கியிருக்கிறார்கள். தமக்கென கல்வியை பெற்றுக்கொண்டு, அதன்மூலம் உயர் வாழ்வை வாழ – நமது பழங்குடியினரின் சந்ததியினர் முன்வந்திருக்கிறார்கள். இந்த முன்னேற்றம் ஆரோக்கியமானதாகக் காணப்படுகிறது. இருப்பினும் சாதாரண சமூகத்தோடு இணைந்து வாழ்வதில் இன்னமும் பழங்குடி சந்ததியினர் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். கல்வி கற்கச் செல்கின்ற இடங்களில்கூட பழங்குடியின மாணவர்களை ஏனைய மாணவர்கள் ஒதுக்கி வைக்கின்ற நிலை காணப்படுகிறது. பழங்குடியினரை சமுதாய நீரோட்டத்தில் கலக்க வைப்பதில் இப்படியான சிக்கல்கள் பாரிய முட்டுக் கட்டையாக இருக்கின்றமை வருத்தத்திற்குரியதே.

என்னதான் நமது பழங்குடியினர் பிள்ளைகள் படித்து ஒரு நல்ல நிலையை அடைகின்றபோதிலும், அவர்கள் 'பழங்குடியினர்' என்ற முத்திரை குத்தப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். இந்நிலை மாறுவதற்கு பல காலங்கள் எடுக்கலாம். மாற்றம் ஒன்றே இவ்வுலகில் மாற்றமில்லாதது. ஏனைய அனைத்துமே மாற்றமடையக்கூடியனவே. ஆகையினால் அந்த மாற்றங்கள் - நமது பழங்குடியினரின் ஆரோக்கிய வாழ்விற்கும் வழிசமைக்கும் என் நம்பிக்கை இருக்கிறது. எமது நாட்டின் ஆதிக்குடிகளா இவர்கள் பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷங்கள் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது,

Sunday, June 19, 2011

அவன் - இவன்: பாலாவின் பரிவட்டம்


தமிழ் சினிமாவின் போக்கு எங்கே செல்கிறது என்கிற கேள்வி இப்போது எல்லோர் மனதிலும் அதிகரித்திருப்பதென்னமோ உண்மைதான். ஆனால், இப்படி ஒரு பாதையிலும் சினிமாவை நகர்த்த முடியும் என நிரூபிக்கின்ற இயக்குநர்களும் ஒருசிலர் தமிழ் திரையுலகில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் பாலா.

அண்மைக்காலத்தில் பிரபலமாக இருக்கின்ற இரண்டு கதாநாயகர்களை ஒன்றிணைத்து 'அவன் - இவன்' என்னும் திரைப்படம் பாலாவின் இயக்கத்தில் கடந்தவாரம் வெளிவந்திருக்கிறது. பொதுவான பாலாவின் படமென்றால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். ஒருசிலருக்கு பாலாவின் படம் புரிவதில்லை. அதனால் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாமல் பாலா திண்டாடுவதும் உண்டு.

'அவன் இவன்' திரைப்படத்தினை பார்ப்பதற்காக தெஹிவளை கொன்ஹோட் திரையரங்கிற்கு இரண்டாம் நாள் சென்றேன். வழமையாக புதிய படமென்றால் கூட்டம் அலைமோதும். ஆனால், படம் வெளிவந்து இரண்டாம் நாளென்ற போதிலும் வெளியில் கூட்டம் இருக்கவில்லை. புதிய படம் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என நினைத்து ரசிகர்கள் திரையரங்கிற்கு வரவில்லையோ அல்லது பாலாவின் மீது நம்பிக்கை இல்லாமல் திரையரங்கிற்கு வரவில்லையோ தெரியவில்லை.

திரையரங்கில் பணிபுரிகின்ற நண்பர்களிடம் படம் எப்படி என்று கேட்டேன். படம் புரியவில்லை என்றார்கள். அப்பொழுதே பாலாவின் படம் என்பதை உணரக்கூடியதாக இருந்தது. சரி எப்படியாவது படத்தினை பார்த்துவிட வேண்டும் என தியேட்டருக்குள் புகுந்தேன். எதிர்பார்த்ததைவிட கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. வழமையாக விசிலடிக்கும் கூட்டம் இருக்கவில்லை. மாறாக பாலாவின் கதாபாத்திரங்கள் போன்ற ரசிகர்களே அங்கிருந்தார்.

அவன் - இவன் ஆரம்பித்தது. ஆரம்பத்திலேயே அரண்மனை வாசம் வீசியது. ஜமீந்தாரின் 60ஆவது பிறந்ததின கொண்டாட்ட ஆடல் ஆரம்பமாகியது. பாலாவின் கமெரா கண்ணுக்கு ஆதர் வில்சன் தனது கமெராவால் உயிர் கொடுத்திருக்கிறார். அவன் - இவன் திரைப்படத்தின் முதுகெலும்பாக கமெரா இயங்கியிருப்பது பாராட்டத்தக்கது. அதற்காக ஆதர் வில்சனை நிச்சயமாக பாராட்டியாக வேண்டும். ஏனெனில் பாலாபோன்ற வித்தியாசமாக கதைக்களங்களை தேடுகின்ற இயக்குநரின் திரைக்கதைக்கு உயிர் கொடுப்பதென்பது சாதாரண விஷயமா என்ன?

ஆரம்ப காட்சியிலேயே பெண் வேடமணிந்து குத்தாட்டம் போடுகிறார் விஷால். முறுக்கு உடம்போடு பொலிஸ் வேடங்களிலும் அடிதடி பாத்திரங்களிலும் கலக்கிய விஷால் இந்தத் திரைப்படத்தில் பெண்மை ததும்பும் பாத்திரத்தில் பின்னியெடுத்திருக்கிறார். ஆரம்பமே கலகலவென போகிறது. அடிப்படையில் நகைச்சுவை இளையோடுகிறது. இது பாலாவின் வழமையான திரைப்படத்தின் சாயலிலிருந்து சற்றே மாறுபட்டிருக்கிறது.

அவன் - இவன் திரைப்படத்தின் ஒருவரிக் கதை என்றால் அது 'மிருக வதை'. அதனை சொல்வதற்கு மிகப்பெரிய திரைக்களத்தினை உருவாக்கியிருக்கிறார். பாலாவின் திரைக்கதைக்கு யதார்த்தமான வசனங்களை லாவகமாக உலவவிட்டிருக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். இலக்கிய உலகில் யதார்த்த நடையில் எழுதக்கூடிய தரமான எழுத்தாளர்களில் ஒருவர்தான் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது சிறுகதைகள் இதற்கு சான்று. ஏலவே பல படங்களிற்கு வசனம் எழுதியிருந்தாலும் அவன் - இவன் திரைப்படத்தின் வசனங்கள் மிகவும் யதார்த்தமாக இருக்கின்றன. சாதாரண கிராமத்து குடும்பத்தில் லாவகமாக வருகின்ற கெட்டவார்த்தைகள் முதல் பெரியவர்களின் பௌவியமான வார்த்தைகள்வரை அனைத்தையும் மிக நுணுக்கமாக தனது வசனத்தின் மூலம் உயிர்கொடுத்து திரைக்கதையோடு உலாவவிட்டிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

மொத்த திரைப்படத்தின் சாரம் என்னவென்றால் இதுதான். சாதாரண ஒரு கிராமம். அவர்களின் பரம்பரை தொழில் களவெடுத்தல். களவெடுப்பதை நிறுத்திவிட்டால் தெய்வகுற்றம் ஆகிவிடுமென்று ஊர் பெரியவர்கள் பயமுறுத்துவதால் களவுத் தொழில் பரம்பரை பரம்பரையாக தொடர்கிறது.

இந்த கிராமத்தில் ஒரே தகப்பனுக்கு இரு தாரங்களின் மூலமாக பிறந்த பிள்ளைகள்தான் ஆர்யாவும் விஷாலும். இருதாரம் கட்டியவனின் யதார்த்த வாழ்வில் என்னவெல்லாம் நடக்கும் என்பதையும் திரைக்கதையில் புகுத்தியிருக்கும் பாலா இப்படத்திற்கு பாடல்களையும் பின்னணி இசையையும் பெரிதும் நம்பியிருக்கிறார். நா.முத்துக்குமாரின் அழகான வரிகளுக்கு யுவன் சங்கர்ராஜா இசைமூலம் உயிர்கொடுத்திருக்கிறார். பின்னணி இசையும் திரைக்கதையோட்டத்திற்கு ஏற்றாற்போல் அமைந்திருப்பது யுவனின் இசை ஞானத்திற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

களவுத் தொழிலை செய்துவருகின்ற கிராமத்தில் கலையினை நேசிக்கும் பெண்மைக் குணம்கொண்ட கதாபாத்திரத்தில் வலம் வருகிறார் விஷால். தனிக்கட்டையாக அரண்மனையில் வாழ்கின்ற ஜமீந்தாராக நடித்திருக்கிறார் ஜீ.எம்.குமார். இந்த ஜமீந்தாரை சுற்றியதாகத்தான் கதை பின்னப்பட்டிருக்கிறது. வாரிசுகள் இல்லாமல் தனி மனிதனாக வாழ்கின்ற ஜமீந்தார் - விஷாலையும் ஆர்யாவையும் தன் பிள்ளைகள்போல் வளர்த்து வருகிறார். ஜமீந்தாரின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருவரும் வளர்ந்து வருகிறார்கள். ஆனால், ஆர்யாவும் விஷாலும் அடிக்கடி மோதிக்கொள்வார்கள். தகப்பன் ஒன்றாகியபோதிலும் தாய்மார் இருவர் என்பதால் அவர்களுக்குள் எப்பொழுதும் ஒரு பனிப்போர் இருந்துகொண்டே இருக்கும்.

இப்படி செல்கின்ற கதையில் கதாநாயகிகளாக இருவர் திணிக்கப்பட்டிருக்கிறார்கள். பொலிஸ் கான்ஸ்டபிளாக ஜனனி ஐயரும் (விஷாலுக்கு இவர்தான் ஜோடி) மாணவியாக மது ஷாலினியும் (ஆர்யாவின் ஜோடி) நடித்திருக்கிறார்கள். இதில் மது ஷாலினி ஜமீந்தாரின் எதிரியின் மகள் என்பது ஆர்யா காதலிக்க தொடங்கிய பின்னர் தான் தெரியவருகிறது. இதனை அறிந்ததும் ஜமீந்தார் எதிர்க்கிறார்;. இதனால் ஜமீந்தாருக்கும் ஆர்யா – விஷாலுக்குமிடையில் சிறு பிரிவு ஏற்படுகிறது. அவர்கள் எப்படி ஒற்றுமையாகிறார்கள் என்பதையும் அழகாக பாலா எடுத்துக் காட்டியிருக்கிறார்.

இப்படிச் செல்கிற திரைக்கதையில் மிருகவதை என்ற ஒன்றை காட்டியிருக்கிறார். இதுதான் இத்திரைப்படத்தின் உயிர்நாடி. கட்டாக்காலி மாடுகளை இறைச்சிக்காக கடத்தி விற்கும் வில்லனான ஆர்.கே. நடித்திருக்கிறார். எல்லாம் அவன் செயல் படத்தில் வக்கீலாக வந்து குற்றவாளிகளை கொல்லும் கதாபாத்திரத்தில் நடித்த அதே ஆர்.கே.தான் அவன் - இவனில் வருகின்ற பிரதான வில்லன். இவனது குற்றச் செயல்களை கண்டு பொங்கியெழுகின்ற ஜமீந்தார் ஜீ.எம்.குமார் வில்லனான ஆர்.கேயை பொலிஸில் பிடித்துக் கொடுக்கிறார். இங்குதான் திரைக்கதையில் திருப்பம் ஏற்படுகிறது.

பொலிஸின் பிடியிலிருந்து வெளியில் வருகின்ற ஆர்.கே. – ஜமீந்தாரை கொடூரமான முறையில் கொல்கிறான். ஜீ.எம்.குமார் நிர்வாணமாக இந்த காட்சியிலே நடித்திருப்பார். ஜமீந்தாரை நிர்வாணமாக்கி சாட்டையினால் விரட்டி விரட்டி அடித்துக் கொலை செய்கின்ற காட்சி பாலாவின் தனித்துவத்திற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. அதன்பின்னர் வழமையான திரைப்படங்களின் பாணியில் ஜமீந்தாரை கொலை செய்த ஆர்.கேயை ஆர்யாவும் விஷாலும் கொலை செய்து ஜமீந்தாரின் பிரேதத்துடன் சேர்த்து எரிக்கிறார்கள். அத்தோடு படம் நிறைவடைகிறது. இறுதிக்காட்சியில் வில்லனை கொல்கின்ற காட்சிக்களம் மிக அருமை. அப்படி ஓர் இடத்தில் விஷாலுடன் வில்லன் ஆர்.கே. மோதுகின்ற காட்சியை ஒளிப்பதிவாளர் வில்சன் மிக அருமையாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.

பாலாவின் மூலம் முன்னணி கதாநாயகனாக உயர்ந்த நடிகர் சூர்யா அவன் - இவனின் சிறப்புத் தோற்றத்தில் வருவார். இந்தியாவின் அனைத்து பாகங்களிலும் சிறுவர்களை படிப்பிக்க உதவுகின்ற அகரம் பௌண்டேஷனை பற்றி நடக்கின்ற நிகழ்வில் அதிதியாக கலந்துகொள்வதுபோல் வந்து பல உண்மைகளை சொல்லிச் செல்கிறார். பாலாவின் படத்தில் இது ஒரு விளம்பரம் போல் இருந்தாலும் ஒரு செய்திக்காக அந்தக் காட்சியை வைத்திருக்கிறார் பாலா.

சூர்யாவின் முன்னால் விஷால் மேடையில் நவரசங்களை செய்து காட்டுகிறார். நவரசங்களில் இறுதியாக 'கருணை' யினை விஷால் செய்து காட்டுகின்றபோது திரைக்குள் இருக்கின்ற சூர்யா உட்பட அனைவரும் கண்கலங்கியதோடு மாத்திரமல்லாமல் திரையரங்கில் என்னருகில் இருந்த சிலரும் கண்கலங்கியதை காணக்கூடியதாக இருந்தது. மாறுகண், பெண்மை நடைகொண்ட நடிப்பு என விஷால் இத்திரைப்படத்தில் புதிய பரிணாமத்தினை எடுத்திருக்கிறார். அக்ஷன் ஹீரோவாக வலம்வந்த விஷாலிடம் இப்படியொரு நடிப்பினை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த நடிப்புக்காக விஷாலுக்கு விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மொத்தத்தில் அவன் - இவன் திரைப்படம் இயக்குநர் பாலாவிற்கு பரிவட்டமாக அமைந்திருந்தாலும் சில குறைபாடுகளும் இருக்கின்றன. ஆர்யாவின் பாத்திரம் ஏனோதானோவென்று இருப்பதுபோல் தோன்றுகிறது. இருந்தாலும் தன்னுடைய பாத்திரத்தினை சிறப்பாகவே ஆர்யா செய்திருக்கிறார். அடுத்ததாக திரைக்கதையில் ஒரு கட்டத்தில் ஒரு கோடி பெறுமதியாக மரங்களை விஷால் கடத்துகிறார். ஆனால் அந்த மரத்திற்கு இறுதியில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. திறமையான யதார்த்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை வசனம் எழுத வைத்துவிட்டு சில விரசமான வார்த்தைகளை யதார்த்தம் என்ற போர்வையில் உலாவவிட்டிருப்பதும் சிறு உறுத்தலாக இருந்தது. ஆனாலும் கதையோட்டத்திற்கு இது பொருந்தும் என்பதால் பொறுத்துக்கொள்ளலாம். எத்தனைபேர் இதனை யதார்த்தமாக எடுத்துக்கொள்வார்கள் என்பதுதான் கேள்வி.

பாலாவின் ஏனைய படங்களைவிட அவன் - இவன் ஒரு படி கீழேதான் நிற்கிறது. இருந்தபோதிலும் யதார்த்தமான சினிமாவிற்காக அனைவரும் இத்திரைப்படத்தினை பார்க்கலாம். மொத்தத்தில் அவன் - இவன் பாலாவிற்கு நல்லதொரு பரிவட்டம்.

Wednesday, December 15, 2010

10 தலை நாகமும் பரிகாச உலகமும்..!


கிட்டத்தட்ட ஒரு மாதங்களிருக்கும்... என்னுடைய மருமகன் கனடாவில் இருக்கிறான். அவன் எனக்கு 10 தலையுடன் இருக்கும் நாகபாம்பின் படத்தினை அனுப்பியிருந்தான். அப்பொழுது நான் அதை விளையாட்டாக விட்டுவிட்டேன். காரணம், கணினி உலகில் இதுபோன்ற மாயைகளை ஏராளம் உருவாக்கமுடியும் என்பதை நன்குணர்ந்ததால்.

இந்நிலையில்தான் கடந்தவாரம் சில ஊடகங்கள் இந்த 10 தலை நாகத்திற்கு புத்துயிர் கொடுத்திருந்தன. தொடர்ந்து இந்த 10 தலை நாகத்தின் படத்தினை பிரசுரித்ததோடு தெய்வாம்ச கதைகளையும் அவ்வூடகங்கள் அவிட்டுவிட்டிருந்தன. மஞ்சள் மழை பொழிந்தாNலு மாரியாத்தா கோபமா இருக்கா என்று பொங்கல் வைக்கிற நம்ம சனங்களுக்கு 10 தலை நாகத்தின் புகைப்படத்தை கண்டவுடன் கிருஷ்ணன் மீண்டும் அவதரித்து விட்டானே என்று பக்திமயமாகிவிட்டார்கள்.

வேளியாகிய புகைப்படங்களை வெட்டி ஒட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்ட பலரைப்பற்றியும் கேள்விப்பட்டாயிற்று. இது என்ன கொடுமைடா என்று இருந்தபோதுதான் அதன் உண்மை வடிவத்தினை என்னால் காணமுடிந்தது. பேஸ்புக் நண்பர்கள் சிலர் 10 தலை நாகத்தின் சித்து விளையாட்டை அதாங்க கிறபிக்ஸ் விளையாட்டை காட்டியிருந்தார்கள்.

ஒரு தலை நாகபாம்பின் படம் அழகாக இருக்கிறது. மிகப்பெரிய நாகபாம்பு அது. ஆழகாக அதனுடைய நிழல் பின்புலத்திலே தென்படுகிறது. இந்த பாம்பின் படத்தினை எடுத்து அதற்கு 10 தலை கொடுத்திருக்கிறார்கள் கணினி விற்பன்னர்கள். அருமையான கைவண்ணம். எளிதில் கண்டுபிடிக்க முடியாதளவுக்கு இந்த கைவண்ணம் இருந்ததென்னமோ உண்மைதான். பார்ப்பவர்களுக்கு நிச்சயம் புல்லரிக்கும்.

அப்படி அறியாமல் பார்த்த பத்திரிகை ஜாம்பவான்கள் என தங்களை பறைசாற்றிக்கொள்ளும் ஒருசிலர்தான் 10 தலை பாம்புக்கு தெய்வாம்ச கதை புகட்டியிருக்கிறார்கள் என்னும்போது வெட்கக்கேடாக இருக்கிறது. தமக்கு கணினி பற்றிய அறிவு இல்லையெனில் தெரிந்தவர்களிடம் கேட்டு அதனை மீள்பரிசீலனை செய்திருக்கலாம். எல்லாம் தெரிந்த பண்டிதர்கள் என நினைத்து பாமர மக்களை ஏமாற்றுவது எவ்வகையில் பத்திரிகை தர்மம் என்பதை நானறியேன்.

பத்திரிகை வாசகர்கள் பத்திரிகைகளில் வெளிவருகின்ற விடயங்களை அப்படியே நம்பிவிடுவர் (ஒரு சிலரை தவிர). இது அவர்கள் பத்திரிகையாளர்கள் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையை கெடுக்கின்ற விதமாக பத்திரிகைகள் நடந்துகொள்ளக் கூடாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விடயத்தில் குழப்பமடைந்தவர்கள் அப்பாவி மக்கள்தான். பாவம் அவர்கள். பக்தியென்றால் யார்தான் பின்நிற்பார்கள். அறியாமையின் உச்சகட்டத்தை பக்தி வெளிக்காட்டி நிற்பதென்னமோ உண்மைதான். அவர்களின் பக்தி பலவீனத்தை ஊடக விளம்பரத்திற்காக சிலர் பயன்படுத்த முனைவதுதான் அப்பட்டமான பத்திரிகை தர்ம மீறல். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தாலும் தப்பில்லை.

புராண இதிகாசங்களில் இந்த 10 தலை நாகங்களுக்கு தனியிடம் உண்டு. இப்படி சித்திரிக்கப்பட்டிருப்பது அதன் அசாத்திய தன்மையை வெளிப்படுத்துவதற்காக இருக்கலாம். ராமாயணத்தில் ராவணனுக்கும் 10 தலைதான். அதற்கும் காரணம் இருக்கிறது. ராவணனின் அசுர பலத்திற்கு 10 தலைகள் போதாது என்று கூறுவர். ஆக, ஒருவரின் பலத்தினை அதிகரித்து காட்டவேண்டுமென்றால் இப்படியாக எதையாவது சொல்லித்தான் ஆகவேண்டும். இதனையே கருவாகக்கொண்டு கிரபிக்ஸ் விற்பன்னர்களும் அபூர்வ பாம்பினத்தை கணினியில் உருவாக்கி மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.

ஆனாலும் இரண்டு தலையுடன் சில பாம்புகள் உலகத்தில் வாழ்கின்றன. இது அசாத்தியமான விடயம்தான். இயற்கைக்கு முரணான வகையில் பல உயிரினங்கள் வாழ்கின்றன. இவை சாத்தியமான விடயங்கள்தான். அப்படி அசாத்தியமான முறையில் பல தலைகளுடன் ஒரு பாம்பு பிறப்பதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு தெய்வமுலாம் பூசுவதுதான் தப்பு. மனிதனின் பலவீனத்தை உணர்ந்து மற்றவர்கள் பிழைப்பு நடத்தக்கூடாது.

10 தலை நாகபாம்பு என வெளியிடப்பட்ட புகைப்படத்தில் பல வழிகளில் நீங்கள் கிரபிக்ஸ் வித்தை என்பதை அறியமுடியும். 10 தலைகளின் நிழலும் உண்மையான ஒருதலை நாகத்தின் நிழலும் ஒரே மாதிரி இருக்கும். அத்தோடு கணினியின் உதவியில் வெட்டி ஒட்டப்பட்ட தலைகளின் ஒரு பக்கத்தில் 2 என்ற இலக்கம் தலைகீழாக இருக்கும். மறுபக்கம் அது கிடையாது. கீழ்ப்பக்க தலையின் கழுத்துப்பகுதிய ஒரே மாதிரியாக இருக்கும். இப்படியான குறைபாடுகளே அப்படம் பொய்யானது என்பதை உணர்வதற்கு சாட்சியமாக இருந்தபோதிலும் புத்திஜீவிகளுக்கு ஏன்தான் புரியவில்லையோ தெரியவில்லை.

உண்மையான ஒருதலை நாகத்தின் புகைப்படத்தையும் கிரபிக்ஸ் பண்ணப்பட்ட 10 தலை நாகத்தினையும் ஒன்றாக இங்கு தந்திருக்கிறேன். நீங்களே அதனை ஊகித்துக்கொள்ளுங்கள். தயவுசெய்து இப்படியான போலிகளை நம்பி நீங்கள் ஏமாறாதீர்கள். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல மதங்களுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் ஒரு விடயம் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.