முஸ்லிம் கட்சிகளை தங்களுடன் இணைந்து செயற்படுமாறும், அதிகார பகிர்வு தொடர்பில் திறந்த மனதுடன் பேசுவதற்கு காத்திருப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கிறார். 90ஆம் ஆண்டில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்களின் ஒருபிடி நிலத்தைக்கூட ஆக்கிரமிக்க விடமாட்டோம் எனவும் சொல்லியிருக்கிறார். இச்செய்தி இன்றைய ஊடகங்கள் பலவற்றிலும் முதன்மைச் செய்தியாக வெளிவந்திருக்கிறது.
இவ்விடத்தில் என் மனதில் பட்ட சிலதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஒருமுறை அமைச்சர் பசீர் சேகுதாவுத்துடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு விடயத்தைக் கூறினார். தமிழர் தரப்பு ஒவ்வொருமுறையும் முஸ்லிம் கட்சிகளை தங்களுடன் இணைய வருமாறு மட்டுமே அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், ஒருமுறையேனும் முஸ்லிம் கட்சிகளுடன் நாங்கள் இணைந்து செயற்படவிரும்புகிறோம் என தெரிவித்ததில்லை. சிறுபான்மை கட்சிகள் என்ற அடிப்படையில் முஸ்லிம் கட்சிகள் பேரம்பேசும் பலத்துடன் செயற்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ்க் கட்சிகளுக்கு குறிப்பாக தமிழ்த் தேசியக் கட்சிக்கு பேரம்பேசும் சக்தி இருந்ததில்லை. ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாகக் கூட இருந்ததில்லை. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக செயற்பட்டிருக்கிறது. ஆகையினால், முஸ்லிம் கட்சிகளுடன் தமிழ்க் கட்சிகள் இணைந்து செயற்பட முன்வரலாம் தானே? என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் அமைச்சர் பசீர்.
இக்கருத்துக்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் விட்டுக்கொடுப்பு என்பதுதான் சாமர்த்தியமானது எனத் தோன்றுகிறது. இறுதி யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தில் முஸ்லிம்கள் இணைந்துகொண்டமையை கண்டித்த தமிழர் தரப்பு, 90களில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது அமைதியாகத்தான் இருந்தது (ஒரு சிலரைத் தவிர). ஆகையினால், அரசியல் சாணக்கியம் என்பது இங்கு மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டியதொன்றாகிறது.
மாவையில் அழைப்பை முஸ்லிம் கட்சிகள் நிராகரித்தால் - அதுதான் அவர்களின் அரசியல் பேசுபொருளாக மாறிவிடும். ஏற்றுக்கொண்டால் சாணக்கியம் சறுக்கிவிடும். ஒருவரை அழைத்து ஆப்பு வைப்பது என்பது இதுதானோ என சிந்திக்கத் தோன்றுகிறது.
(குறிப்பு: பத்திரிகைத்துறை சாராத தனிப்பட்ட பதிவிது)