நல்லூர் கந்தன் பற்றி தெரியாதவர்கள் குறைவுதான். யாழ்ப்பாணத்தின் சின்னமாகவும் இலங்கையின் புனித அடையாளமாகவும் திகழும் நல்லூர் கந்தனின் தேர் உற்சவத்தில் முதல் முதலாக கலந்துகொள்ளும் வாய்ப்பு இல்லையேல் கொடுப்பனவு எனக்கு இம்முறை கிடைத்தது.
யாழ்ப்பாணத்திற்கு பலதடவை சென்றிருந்தபோதிலும் நல்லூர் கந்தனின் அலங்கார ரத பவனியை காணும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததில்லை. அதுபற்றிய அனுபவம் எனக்கு கிடைக்கவில்லை என்னும்போது எனக்கு வெட்கமாகத்தான் இருந்தது. காரணம் நானும் வடபகுதியை சேர்ந்தவன் என்பதால். ஆரம்பகாலத்திலேயே புலம்பெயர்ந்துவிட்டதால் அந்த அரிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்காமலே போய்விட்டது. நீ…ண்…ட… காலத்தின் பின்னர் அச்சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி.
தற்சமயம் நான் பணிபுரிகின்ற நிறுவனம் இலங்கையின் முன்னணி பத்திரிகை வெளியீட்டு நிறுவனமான விஜயா நியூஸ்பேப்பர்ஸ். இதில் தமிழ்மிரர் இணைய (www.tamilmirror.lk) வெளியீட்டின் ஆசிரியராக நான் இருக்கின்றேன். தமிழ்மிரர் (www.tamilmirror.lk) இணையத்தளத்தில் நல்லூர் கந்தனின் திருவிழா நிகழ்வுகளை உடனுக்குடன் பதிவிட்டு வந்தோம். அதனைத் தொடர்ந்து நேரடியாக, அலங்கார நல்லூர் கந்தனின் ரத பவனியை நேரில் பார்த்து அதன் தொகுப்பை பதிவிடும்படி பணிக்கப்பட்டிருந்தேன். அதற்கமைய என்னுடைய குழுவுடன் இம்முறை நல்லூர் சென்றிருந்தேன்.
இப்படி ஒரு ஜனத்திரளை புகைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்த எனக்கு நேரில் பூரிப்பை ஏற்படுத்தியது. சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான அடியார்கள் ஒரே இடத்தில் கூடி ‘அரோகரா’ என்று ஒலியெழுப்புவது தேவலோகத்தில் இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்தியது. நீண்ட வரலாற்றினைக் கொண்ட நல்லூர் கந்தன் கோயிலில் இன்னமும் சட்டங்கள் ஒரேமாதிரியாக இருக்கின்றன. பெரும் புள்ளிகள் முதல் சிறு புள்ளிகள்வரை ஒரே நடைமுறைதான். இந்த நடைமுறையை நான் இதுவரை அனுபவித்ததில்லை. 'ஒரு ரூபாய்க்கு அர்ச்சனை' என்னும் நடைமுறை என் நெஞ்சை தொட்டது. பொதுவாக கோயில்களில் பணத்தைப் பெற்று கடமைக்கு அர்ச்சனை செய்வது எனக்கு பிடிக்காத போதிலும், இந்த 'ஒரு ரூபாய் அர்ச்சனை' என்பது ஏழைகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று நினைக்கும்போது பூரிப்பாகவிருந்தது.
நல்லூர் கந்தனின் தேர் பவனியினை புகைப்படம் எடுப்பதோடு ஒளிப்பதிவும் செய்வதற்காக என்னுடைய நிறுவன புகைப்பட கலைஞர் 'வருண' என்னுடன் அங்கு வந்திருந்தார். ஒரே நேரத்தில் ஒளிப்பதிவையும் புகைப்படத்தினையும் எடுப்பது சிரமம் என்பதை உணர்ந்த நான், ஒளிப்பதிவு கருவியை பொறுப்பேற்றேன். புகைப்படம் எடுப்பது, ஒளிப்பதிவு செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு பிடித்த விடயத்தை செய்யும்போது மனம் இன்னமும் உயர பறக்கத் தொடங்கியது. இன்னமும் என்னுடைய கால் நூறுவீதம் குணமடையாத போதிலும் ஆர்வக்கோளாறில் ஜனத்திரளில் நானும் மிதக்கலாகினேன்.
அங்கு கூடியிருந்த அத்தனை அடியார்களும் என்னதவம் செய்தார்களோ தெரியவில்லை, அப்படியொரு பாக்கியத்தினைப் பெற்றிருந்தார்கள். இதோ என் அருகில் அலங்கார கந்தன் ரதமேறி பவனி வருகிறான். அந்த ஆறுமுக கந்தனை மிக அருகில் சந்திக்கின்றேன். இவ்வளவுநாள் அவரை சந்திக்காமல் இருந்தது அருகில் தரிசிப்பதற்குதானோ என எண்ணிக்கொண்டேன். என்னுடைய வலிகளை மறந்து நல்லூர் கந்தனின் ரத ஊர்வலத்தை படமாக்கிக்கொண்டிருந்தேன். ஜனத்திரளோடு கந்தனும் மிதந்து சென்ற அழகு இன்னமும் என் மனதில் நிழலாடுகிறது.
பாதுகாப்பு படை வீரர்கள் முதற்கொண்டு பாமர மக்கள்வரை ஒரே சிந்தனையோடு ஒன்றுகூடியிருந்த இடம் நல்லூர் ஆலயம். இங்கு எனக்குக் கிடைந்த அனுபவத்தை உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். நீங்கள் பலர் இந்த அனுபவத்தை ஏற்கனவே பெற்றிருப்பீர்கள். இருப்பினும் எனக்கு இது முதற்தடவை என்பதால் பதிவிட்டேன். நல்லூர் கந்தனின் ரத உற்சவ படங்களை www.tamilmirror.lk இல் நீங்கள் பார்க்கலாம்.
No comments:
Post a Comment