Saturday, October 02, 2010

எந்திரன்: தமிழ் திரையுலகின் ஹொலிவூட் படம்




பிரமாண்டங்களின் கூட்டணி, பிரமாண்ட படைப்பு, பிரபல்யங்களின் கை கோர்ப்பு: இப்படி ஏராளமான 'பிரபல்யம்' ஒன்றாக சேர்ந்த படைப்புத்தான் எந்திரன்.

எல்லோருக்கும் தெரிந்த கதையை மிகவும் பிரமாண்டமாக காட்டியிருக்கும் விதம்தான் எந்திரனின் முதுகெலும்பு. சுமார் 400 கோடி ரூபாய் செலவில் உருவாகியிருக்கும் எந்திரன் திரைப்படத்தினை சாதாரணமாக பிரமாண்ட படம் என்று வர்ணிப்பது பொருந்தாது. ஏனெனில் படம் முடிந்த பின்னரும் அந்த பிரமிப்பிலிருந்து எவராலும் மீளமுடியவில்லை என்பதுதான் அதற்கு சான்று.

கடந்த மூன்று வருடங்களாக இத்திரைப்படத்தினை உருவாக்கி வந்திருந்தார் இயக்குநர் ஷங்கர். வழமையாக தன்னுடைய படங்களுக்கு நீண்ட நாட்களை செலவிடும் ஷங்கர், இத்திரைப்படத்திற்கு மேலும் ஒருபடி மேலே சென்று தனது உழைப்பினைக் காட்டியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. தொழில்நுட்ப கலைஞர்கள் பிரமிக்க வைக்கிறார்கள். சரி... எல்லோருக்கும் தெரிந்த கதை என்று கூறியாயிற்று. அப்படி என்னதான் எந்திரன் கதை...?சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் ஒரு விஞ்ஞானி. 10 வருடங்களாக கஷ்டப்பட்டு மனிதனுக்கு ஈடான, தன்னைப்போலவே தோற்றம் கொண்ட ஓர் இயந்திர மனிதனை உருவாக்குகிறார். அந்த எந்திரனை உருவாக்கும் காலத்தில் தனது காதலியான ஐஸ்வர்யா ராயையும் கவனிக்க மறந்துவிடுகிறார். அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து தனது எந்திரனை உருவாக்கும் ரஜனி அதில் வெற்றியும் காண்கிறார்.

உருவாக்கிய எந்திரனை மக்களோடு மக்களாக பழகவிட்டு தனது கண்டுபிடிப்பிலுள்ள குறைபாடுகளை ஒவ்வொன்றாக சரிசெய்கிறார். விஞ்ஞானி ரஜனியின் குறிக்கோள், தனது கண்டுபிடிப்பான எந்திரனை இந்திய இராணுவத்திற்கு ஒப்படைத்து படை வீரர்களின் இழப்பை குறைப்பதுதான். இறுதியாக தனது கண்டுபிடிப்புக்கு அனுமதி கோருகிறார்.

அனுமதிகோரும் இடத்திலிருக்கும் தலைமை விஞ்ஞானிதான் ரஜனியின் குரு. இருந்தபோதிலும் ரஜனியின் கண்டுபிடிப்பு மீது பொறாமைப் படுகிறார். மனித குணங்களையுடைய எந்திரனை, தன் நாசகார செயலுக்கு பயன்படுத்த முயற்சிக்கிறார். இதனால் அந்த கண்டுபிடிப்புக்கு எப்படியாவது அனுமதி மறுப்பதையே குறிக்கோளாக அவர் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பரிசோதனைக்காக வரும் எந்திரனை அனைவருக்கும் பிடித்துப்போய்விடுகிறது. ஆனாலும் தலைமை விஞ்ஞானி அந்த எந்திரனை எப்படியாவது நிராகரிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

தனது கட்டளைப்படி அந்த எந்திரனை இயங்கச் சொல்கிறார். அந்த எந்திரனும் அவரது கட்டளைகளை சரியாக செய்கிறது. படிப்படியாக கட்டளைகளை கூட்டி, இறுதியாக விஞ்ஞானி ரஜனியை கத்தியால் குத்தச் சொல்கிறார். எந்திரனும் கட்டளைக்கு கட்டுப்பட்டு ரஜனியை கத்தியால் குத்தமுனைகிறது. உடனடியாக, அந்த எந்திரனினால் மனிதனுக்கு ஆபத்து என்று கூறி அனுமதி மறுக்கப்படுகிறது.கவலையுடன் திரும்பும் விஞ்ஞானி ரஜனிக்கு எந்திரனின் திறமையை நிரூபிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. நெருப்பில் சிக்கித்தவிக்கும் மக்களை எந்திரன் காப்பாற்றுகிறது. இந்த செயலை அனைத்து ஊடகங்களும் ஒளிபரப்புகின்றன. சந்தோஷமடையும் ரஜனி, தலைமை விஞ்ஞானியிடம் தகவலை கூறுகிறார். அவர் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கும்போது எந்திரன் ஒரு தவறை செய்கிறது. அதாவது நிர்வாணமாக குளித்துக்கொண்டிருந்த இளம் பெண் நெருப்பில் சிக்கியிருந்த நிலையில் அப்பெண்ணை நிர்வாணமாக எந்திரன் தூக்கி வருகிறது. இதனால் அவமானமடைந்து அப்பெண் லொறியில் அடிபட்டு இறந்துவிடுகிறாள்.

இதனையே காரணம் காட்டி மறுபடியும் எந்திரனுக்கு அனுமதி மறுக்கிறார் தலைமை விஞ்ஞானி. மனித உணர்வுகளை இந்த எந்திரனால் புரிந்துகொள்ள முடியவில்லை. வெட்கம், அவமானம், துக்கம், சந்தோஷம் போன்ற எந்த உணர்வுகளையும் இதனால் புரிந்துகொள்ள முடியாது, ஆகையினால் இந்த கண்டுபிடிப்பு ஆபத்தினை விளைவிக்கும் என்று கூறி மறுபடியும் எந்திரனுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

தன்னுடைய 10 வருட உழைப்புக்கு பலன் கிடைக்கவில்லை என மனம் வருந்தும் விஞ்ஞானி ரஜனி, மேலும் ஒருமாதகாலம் தவணை கேட்டு எந்திரனுக்கு உணர்வுகளை கற்பிக்கிறார். உணர்வுகளை முழுமையாக கற்றுக்கொள்ளும் எந்திரன் உலகிலுள்ள அனைத்து கலைகள், உணர்வுகள், மொழிகள் என எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளும் மனிதனுக்கு இணையான இயந்திர மனிதனாகிறது.

இந்நிலையில்தான் விஞ்ஞானி ரஜனியின் காதலியான ஐஸ்வர்யாராயை காதலிக்க தொடங்குகிறது எந்திரன். இதனை தடுக்க முடியாமல் தடுமாறும் விஞ்ஞானி ரஜனி, எந்திரனை சுக்குநூறாக்கி குப்பையில் வீசிவிடுகிறார். அந்த எந்திரனின் பாகங்களை தேடியெடுக்கும் தலைமை விஞ்ஞானி, எந்திரனை தீயசக்தியாக உருவாக்குகிறார்.

தீயசக்தியாக உருவெடுக்கும் எந்திரன் பல ஆயிரம் எந்திரன்களை தன்னைப்போலவே உருவாக்கி பல நாசகார செயல்களை செய்வதோடு ஐஸ்வர்யா ராயையும் சிறைபிடிக்கிறது. ஐஸ்வர்யா ராயினை எப்படி விஞ்ஞானி ரஜனிகாந்த் காப்பாற்றுகிறார், தீய சக்தியாக இயங்கும் எந்திரனை எப்படி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார் என்பதுதான் மீதிக்கதை.

எந்திரன் கதையினை திரைக்கதையாக நகர்த்தியிருக்கும் விதம் இயக்குநர் ஷங்கருக்கு சபாஷ் போட வைக்கிறது. பிரபல எழுத்தாளர் சுஜாதா இறுதியாக எழுதிய வசனங்கள் காதுக்கு இனிமையாக இருக்கின்றன. சில இடங்களில் இயக்குநர் ஷங்கரும் கார்க்கியும் வசனங்களை எழுதியிருக்கிறார்கள்.

எந்திரன் படத்தில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் பிரமாதமாக இருக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மானின் மற்றுமொரு இசை சாதனை எந்திரன் பாடல்கள். பாடல்களை படமாக்கியிருக்கும் விதம் மனதினை தொட்டுச் செல்கிறது. அழகான இடங்களில் பாடல்களை படப்பிடிப்பு செய்திருக்கிறார்கள்.

சண்டைக்காட்சிகளில் பிரமாதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரத்னவேல். பீட்டர் ஹெய்னினால் வடிவமைக்கப்பட்டிருக்கும் சண்டைக்காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. அத்தோடு தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு எந்திரனில் பிரமாதமாக இருக்கிறது.

படமாக்கப்பட்ட அனைத்து காட்சிகளையும் ஒன்றாக தொகுத்து பிரமாதமாக முழுமைப்படுத்தியிருக்கும் அன்டனியின் கைவண்ணத்துக்கு நிச்சயமாக பாராட்டு தெரிவித்தாகவேண்டும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய விதத்தில் எந்திரன் உருவாகியிருப்பது பாராட்டத்தக்கதே.

இலங்கையிலும் திரையிடப்பட்டதிலிருந்து கூட்டம் அலைமோதுவதை காணக்கூடியதாக இருக்கிறது. மொத்தத்தில் எந்திரன்: ஹொலிவூட் படங்களுக்கு இணையாக எடுக்கப்பட்டிருக்கும் ஒரு தமிழ் படம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

No comments: