Sunday, June 19, 2011

அவன் - இவன்: பாலாவின் பரிவட்டம்


தமிழ் சினிமாவின் போக்கு எங்கே செல்கிறது என்கிற கேள்வி இப்போது எல்லோர் மனதிலும் அதிகரித்திருப்பதென்னமோ உண்மைதான். ஆனால், இப்படி ஒரு பாதையிலும் சினிமாவை நகர்த்த முடியும் என நிரூபிக்கின்ற இயக்குநர்களும் ஒருசிலர் தமிழ் திரையுலகில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் பாலா.

அண்மைக்காலத்தில் பிரபலமாக இருக்கின்ற இரண்டு கதாநாயகர்களை ஒன்றிணைத்து 'அவன் - இவன்' என்னும் திரைப்படம் பாலாவின் இயக்கத்தில் கடந்தவாரம் வெளிவந்திருக்கிறது. பொதுவான பாலாவின் படமென்றால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். ஒருசிலருக்கு பாலாவின் படம் புரிவதில்லை. அதனால் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாமல் பாலா திண்டாடுவதும் உண்டு.

'அவன் இவன்' திரைப்படத்தினை பார்ப்பதற்காக தெஹிவளை கொன்ஹோட் திரையரங்கிற்கு இரண்டாம் நாள் சென்றேன். வழமையாக புதிய படமென்றால் கூட்டம் அலைமோதும். ஆனால், படம் வெளிவந்து இரண்டாம் நாளென்ற போதிலும் வெளியில் கூட்டம் இருக்கவில்லை. புதிய படம் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என நினைத்து ரசிகர்கள் திரையரங்கிற்கு வரவில்லையோ அல்லது பாலாவின் மீது நம்பிக்கை இல்லாமல் திரையரங்கிற்கு வரவில்லையோ தெரியவில்லை.

திரையரங்கில் பணிபுரிகின்ற நண்பர்களிடம் படம் எப்படி என்று கேட்டேன். படம் புரியவில்லை என்றார்கள். அப்பொழுதே பாலாவின் படம் என்பதை உணரக்கூடியதாக இருந்தது. சரி எப்படியாவது படத்தினை பார்த்துவிட வேண்டும் என தியேட்டருக்குள் புகுந்தேன். எதிர்பார்த்ததைவிட கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. வழமையாக விசிலடிக்கும் கூட்டம் இருக்கவில்லை. மாறாக பாலாவின் கதாபாத்திரங்கள் போன்ற ரசிகர்களே அங்கிருந்தார்.

அவன் - இவன் ஆரம்பித்தது. ஆரம்பத்திலேயே அரண்மனை வாசம் வீசியது. ஜமீந்தாரின் 60ஆவது பிறந்ததின கொண்டாட்ட ஆடல் ஆரம்பமாகியது. பாலாவின் கமெரா கண்ணுக்கு ஆதர் வில்சன் தனது கமெராவால் உயிர் கொடுத்திருக்கிறார். அவன் - இவன் திரைப்படத்தின் முதுகெலும்பாக கமெரா இயங்கியிருப்பது பாராட்டத்தக்கது. அதற்காக ஆதர் வில்சனை நிச்சயமாக பாராட்டியாக வேண்டும். ஏனெனில் பாலாபோன்ற வித்தியாசமாக கதைக்களங்களை தேடுகின்ற இயக்குநரின் திரைக்கதைக்கு உயிர் கொடுப்பதென்பது சாதாரண விஷயமா என்ன?

ஆரம்ப காட்சியிலேயே பெண் வேடமணிந்து குத்தாட்டம் போடுகிறார் விஷால். முறுக்கு உடம்போடு பொலிஸ் வேடங்களிலும் அடிதடி பாத்திரங்களிலும் கலக்கிய விஷால் இந்தத் திரைப்படத்தில் பெண்மை ததும்பும் பாத்திரத்தில் பின்னியெடுத்திருக்கிறார். ஆரம்பமே கலகலவென போகிறது. அடிப்படையில் நகைச்சுவை இளையோடுகிறது. இது பாலாவின் வழமையான திரைப்படத்தின் சாயலிலிருந்து சற்றே மாறுபட்டிருக்கிறது.

அவன் - இவன் திரைப்படத்தின் ஒருவரிக் கதை என்றால் அது 'மிருக வதை'. அதனை சொல்வதற்கு மிகப்பெரிய திரைக்களத்தினை உருவாக்கியிருக்கிறார். பாலாவின் திரைக்கதைக்கு யதார்த்தமான வசனங்களை லாவகமாக உலவவிட்டிருக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். இலக்கிய உலகில் யதார்த்த நடையில் எழுதக்கூடிய தரமான எழுத்தாளர்களில் ஒருவர்தான் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது சிறுகதைகள் இதற்கு சான்று. ஏலவே பல படங்களிற்கு வசனம் எழுதியிருந்தாலும் அவன் - இவன் திரைப்படத்தின் வசனங்கள் மிகவும் யதார்த்தமாக இருக்கின்றன. சாதாரண கிராமத்து குடும்பத்தில் லாவகமாக வருகின்ற கெட்டவார்த்தைகள் முதல் பெரியவர்களின் பௌவியமான வார்த்தைகள்வரை அனைத்தையும் மிக நுணுக்கமாக தனது வசனத்தின் மூலம் உயிர்கொடுத்து திரைக்கதையோடு உலாவவிட்டிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

மொத்த திரைப்படத்தின் சாரம் என்னவென்றால் இதுதான். சாதாரண ஒரு கிராமம். அவர்களின் பரம்பரை தொழில் களவெடுத்தல். களவெடுப்பதை நிறுத்திவிட்டால் தெய்வகுற்றம் ஆகிவிடுமென்று ஊர் பெரியவர்கள் பயமுறுத்துவதால் களவுத் தொழில் பரம்பரை பரம்பரையாக தொடர்கிறது.

இந்த கிராமத்தில் ஒரே தகப்பனுக்கு இரு தாரங்களின் மூலமாக பிறந்த பிள்ளைகள்தான் ஆர்யாவும் விஷாலும். இருதாரம் கட்டியவனின் யதார்த்த வாழ்வில் என்னவெல்லாம் நடக்கும் என்பதையும் திரைக்கதையில் புகுத்தியிருக்கும் பாலா இப்படத்திற்கு பாடல்களையும் பின்னணி இசையையும் பெரிதும் நம்பியிருக்கிறார். நா.முத்துக்குமாரின் அழகான வரிகளுக்கு யுவன் சங்கர்ராஜா இசைமூலம் உயிர்கொடுத்திருக்கிறார். பின்னணி இசையும் திரைக்கதையோட்டத்திற்கு ஏற்றாற்போல் அமைந்திருப்பது யுவனின் இசை ஞானத்திற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

களவுத் தொழிலை செய்துவருகின்ற கிராமத்தில் கலையினை நேசிக்கும் பெண்மைக் குணம்கொண்ட கதாபாத்திரத்தில் வலம் வருகிறார் விஷால். தனிக்கட்டையாக அரண்மனையில் வாழ்கின்ற ஜமீந்தாராக நடித்திருக்கிறார் ஜீ.எம்.குமார். இந்த ஜமீந்தாரை சுற்றியதாகத்தான் கதை பின்னப்பட்டிருக்கிறது. வாரிசுகள் இல்லாமல் தனி மனிதனாக வாழ்கின்ற ஜமீந்தார் - விஷாலையும் ஆர்யாவையும் தன் பிள்ளைகள்போல் வளர்த்து வருகிறார். ஜமீந்தாரின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருவரும் வளர்ந்து வருகிறார்கள். ஆனால், ஆர்யாவும் விஷாலும் அடிக்கடி மோதிக்கொள்வார்கள். தகப்பன் ஒன்றாகியபோதிலும் தாய்மார் இருவர் என்பதால் அவர்களுக்குள் எப்பொழுதும் ஒரு பனிப்போர் இருந்துகொண்டே இருக்கும்.

இப்படி செல்கின்ற கதையில் கதாநாயகிகளாக இருவர் திணிக்கப்பட்டிருக்கிறார்கள். பொலிஸ் கான்ஸ்டபிளாக ஜனனி ஐயரும் (விஷாலுக்கு இவர்தான் ஜோடி) மாணவியாக மது ஷாலினியும் (ஆர்யாவின் ஜோடி) நடித்திருக்கிறார்கள். இதில் மது ஷாலினி ஜமீந்தாரின் எதிரியின் மகள் என்பது ஆர்யா காதலிக்க தொடங்கிய பின்னர் தான் தெரியவருகிறது. இதனை அறிந்ததும் ஜமீந்தார் எதிர்க்கிறார்;. இதனால் ஜமீந்தாருக்கும் ஆர்யா – விஷாலுக்குமிடையில் சிறு பிரிவு ஏற்படுகிறது. அவர்கள் எப்படி ஒற்றுமையாகிறார்கள் என்பதையும் அழகாக பாலா எடுத்துக் காட்டியிருக்கிறார்.

இப்படிச் செல்கிற திரைக்கதையில் மிருகவதை என்ற ஒன்றை காட்டியிருக்கிறார். இதுதான் இத்திரைப்படத்தின் உயிர்நாடி. கட்டாக்காலி மாடுகளை இறைச்சிக்காக கடத்தி விற்கும் வில்லனான ஆர்.கே. நடித்திருக்கிறார். எல்லாம் அவன் செயல் படத்தில் வக்கீலாக வந்து குற்றவாளிகளை கொல்லும் கதாபாத்திரத்தில் நடித்த அதே ஆர்.கே.தான் அவன் - இவனில் வருகின்ற பிரதான வில்லன். இவனது குற்றச் செயல்களை கண்டு பொங்கியெழுகின்ற ஜமீந்தார் ஜீ.எம்.குமார் வில்லனான ஆர்.கேயை பொலிஸில் பிடித்துக் கொடுக்கிறார். இங்குதான் திரைக்கதையில் திருப்பம் ஏற்படுகிறது.

பொலிஸின் பிடியிலிருந்து வெளியில் வருகின்ற ஆர்.கே. – ஜமீந்தாரை கொடூரமான முறையில் கொல்கிறான். ஜீ.எம்.குமார் நிர்வாணமாக இந்த காட்சியிலே நடித்திருப்பார். ஜமீந்தாரை நிர்வாணமாக்கி சாட்டையினால் விரட்டி விரட்டி அடித்துக் கொலை செய்கின்ற காட்சி பாலாவின் தனித்துவத்திற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. அதன்பின்னர் வழமையான திரைப்படங்களின் பாணியில் ஜமீந்தாரை கொலை செய்த ஆர்.கேயை ஆர்யாவும் விஷாலும் கொலை செய்து ஜமீந்தாரின் பிரேதத்துடன் சேர்த்து எரிக்கிறார்கள். அத்தோடு படம் நிறைவடைகிறது. இறுதிக்காட்சியில் வில்லனை கொல்கின்ற காட்சிக்களம் மிக அருமை. அப்படி ஓர் இடத்தில் விஷாலுடன் வில்லன் ஆர்.கே. மோதுகின்ற காட்சியை ஒளிப்பதிவாளர் வில்சன் மிக அருமையாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.

பாலாவின் மூலம் முன்னணி கதாநாயகனாக உயர்ந்த நடிகர் சூர்யா அவன் - இவனின் சிறப்புத் தோற்றத்தில் வருவார். இந்தியாவின் அனைத்து பாகங்களிலும் சிறுவர்களை படிப்பிக்க உதவுகின்ற அகரம் பௌண்டேஷனை பற்றி நடக்கின்ற நிகழ்வில் அதிதியாக கலந்துகொள்வதுபோல் வந்து பல உண்மைகளை சொல்லிச் செல்கிறார். பாலாவின் படத்தில் இது ஒரு விளம்பரம் போல் இருந்தாலும் ஒரு செய்திக்காக அந்தக் காட்சியை வைத்திருக்கிறார் பாலா.

சூர்யாவின் முன்னால் விஷால் மேடையில் நவரசங்களை செய்து காட்டுகிறார். நவரசங்களில் இறுதியாக 'கருணை' யினை விஷால் செய்து காட்டுகின்றபோது திரைக்குள் இருக்கின்ற சூர்யா உட்பட அனைவரும் கண்கலங்கியதோடு மாத்திரமல்லாமல் திரையரங்கில் என்னருகில் இருந்த சிலரும் கண்கலங்கியதை காணக்கூடியதாக இருந்தது. மாறுகண், பெண்மை நடைகொண்ட நடிப்பு என விஷால் இத்திரைப்படத்தில் புதிய பரிணாமத்தினை எடுத்திருக்கிறார். அக்ஷன் ஹீரோவாக வலம்வந்த விஷாலிடம் இப்படியொரு நடிப்பினை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த நடிப்புக்காக விஷாலுக்கு விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மொத்தத்தில் அவன் - இவன் திரைப்படம் இயக்குநர் பாலாவிற்கு பரிவட்டமாக அமைந்திருந்தாலும் சில குறைபாடுகளும் இருக்கின்றன. ஆர்யாவின் பாத்திரம் ஏனோதானோவென்று இருப்பதுபோல் தோன்றுகிறது. இருந்தாலும் தன்னுடைய பாத்திரத்தினை சிறப்பாகவே ஆர்யா செய்திருக்கிறார். அடுத்ததாக திரைக்கதையில் ஒரு கட்டத்தில் ஒரு கோடி பெறுமதியாக மரங்களை விஷால் கடத்துகிறார். ஆனால் அந்த மரத்திற்கு இறுதியில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. திறமையான யதார்த்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை வசனம் எழுத வைத்துவிட்டு சில விரசமான வார்த்தைகளை யதார்த்தம் என்ற போர்வையில் உலாவவிட்டிருப்பதும் சிறு உறுத்தலாக இருந்தது. ஆனாலும் கதையோட்டத்திற்கு இது பொருந்தும் என்பதால் பொறுத்துக்கொள்ளலாம். எத்தனைபேர் இதனை யதார்த்தமாக எடுத்துக்கொள்வார்கள் என்பதுதான் கேள்வி.

பாலாவின் ஏனைய படங்களைவிட அவன் - இவன் ஒரு படி கீழேதான் நிற்கிறது. இருந்தபோதிலும் யதார்த்தமான சினிமாவிற்காக அனைவரும் இத்திரைப்படத்தினை பார்க்கலாம். மொத்தத்தில் அவன் - இவன் பாலாவிற்கு நல்லதொரு பரிவட்டம்.

No comments: