Friday, January 23, 2009

முயற்சியே மூலதனம்...

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். பெண் இருப்பாளோ இல்லையோ நிச்சயம் நம்பிக்கையும் விடாமுயற்சியும் இருத்தல் வேண்டும். இன்றைய ஆண்கள் பெரும்பாலும் க.பொ.த. சாதாரண தர, உயர்தரப் பரீட்சை முடிந்ததும் தொழில்நுட்பக் கல்வியை தொடர்கின்றனர். அவ்வாறே சில காலங்களை கடத்துகின்றனர். அதன்பின் தொழில் தேடுகின்றனர். இதில் அவர்களில் காலத்தின் பெரும்பகுதி வீணாகிவிடுகிறது. வேலை கிடைக்கும்வரை பெற்றோரின் உழைப்பிலேயே வாழ்கின்றனர். இது தவறு. பாடசாலைக் கல்வி முடிந்ததும் சிறு தொழிலையாவது தேடிக்கொள்ள வேண்டும். அவ்வருமானத்தில் தொழில் கல்வியை தொடரவேண்டும். ஏனெனில் காலம் மிகவும் பொன்னானது. காலத்தை வீணடிக்கக்கூடாது. உயர்தரப் பரீட்சை முடிந்தபின் கல்விக்கென்று மட்டுமே வாழ்நாட்களில் காலங்களை ஒதுக்குவது தவறு. அவ்வேளை ஏதாவது தொழிலை செய்துகொண்டே கற்கவேண்டும். ஏதாவது தொழிலில் இருக்கும்போது தொழில் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும். அதைவிட நான் என் சொந்தக்காலில் நின்று முன்னேறுவேன் என்ற நம்பிக்கையுடன் செயற்படவும் முடியும். ஏனெனில் தாம் உழைக்கும்போதுதான் பணத்தின் மதிப்பு தெரியும். மேலும் உழைக்க வேண்டும் என்ற வெறி, சிறு வயதிலேயே தோன்றும்.

இன்று பல வெற்றிகளைப் பெற்று போற்றுதற்குரிய நிலையிலுள்ள ஆண்களின் கடந்த காலங்களை நோக்கினால் அதில் எண்ணற்ற அவமானங்கள், சரிவுகள், பாதிப்புகள் என்று கரடு முரடானதாகவே இருக்கும். அத்தனை தடைகளையும் தாண்டியே அவர்கள் இந்நிலைக்கு வந்துள்ளனர் எனலாம். நிச்சயமாக அவர்களுக்கு சிறுவயதிலிருந்தே உழைக்கவேண்டும் என்ற அவா இருந்திருக்கும்.

ஆனால், பல ஆண்கள் தங்கள் திறமைக்கு ஏற்ற தொழில் கிடைத்ததும் அதுவே போதும் என்று தொழில் செய்வதிலும் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதிலுமே காலத்தை செலவிடுகின்றனர். இதில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது. நிச்சயம் தாம் இருக்கும் நிலையிலிருந்து உயர் நிலைக்குச் செல்ல வேண்டும் என்றே ஒவ்வொரு நிமிடமும் சிந்திக்கவேண்டும். வீணாக காலத்தை நண்பர்களுடன் அரட்டை அடிப்பதில் செலவிடாது தமது தொழிலில் முன்னேறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிக்கலாம். மேலதிக பட்டப்படிப்பைப் தொடரலாம். இன்றைய இளைஞர்கள் பலபேர் படித்து முடிந்ததும் தொழில் தேடுவது... அதுவரை தமது பயணம் முடிந்து விட்டதாக கருதுகின்றனர். அதன் பின் திருமணம், குழந்தைகள் என்று பெண்களைப் போலவே ஒரு வட்டத்திற்குள் இருக்க நினைக்கின்றனர். இதைவிடுத்து எதையாவது சாதிக்கவேண்டும். எத்துறையிலாவது பிரகாசிக்கவேண்டும் என்று செயற்பட்டால் என்ன? ஒரு சிறு வெற்றி கிடைத்தாலும் அது பெரிய விடயம்தானே...?

எல்லாவற்றையும் விட நல்லவராக இருக்க முயற்சி செய்யுங்கள். முதலில் வீட்டில் நல்லவராக இருங்கள். பெற்றோருக்கு அன்பான பிள்ளையாக, மனைவிக்கு ஆசைக் கணவனாக, குழந்தைக்கு பொறுப்புள்ள தந்தையாக இருங்கள். பின் உங்கள் பெருமை தானாக வெளியில் பரவும். நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் நேர்மையாக இருங்கள். எப்போதும் உண்மையைப் பேசுங்கள். மற்றவர்கள் மதிப்பை சம்பாதித்துக் கொள்ளவேண்டும். உங்கள் நடவடிக்கையைப் பார்த்தே பிறர் உங்களை மதிப்பர். எனவே நல்ல முறையில் நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அனைவரையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். யாராவது சின்ன அறிவுரை சொன்னாலும் கூட கேட்கத் தவறாதீர்கள்.

எடுக்கும் சம்பளப் பணத்தை வீணாக செலவழிக்காது ஒரு திட்டம் தீட்டி செலவிடப்பாருங்கள். நாம் எதையாவது ஒன்றைப் பெறவேண்டுமானால் ஏதாவது ஒன்றை இழந்துதான் ஆக வேண்டும். எனவே, சிக்கனப்படுத்தி உங்கள் முன்னேற்றத்திற்கு ஏற்ற செலவுகளை மட்டும் செய்யுங்கள். இன்றைய ஆண்களுக்குரிய மிகப் பெரிய மைனஸ் பொயின்ட் அவர்களது கோபம். அதனால் எண்ணற்ற பல வாய்ப்புகளை தவறவிடுகின்றனர். எப்போதும் பொறுமையை கடைபிடிக்க முயற்சிசெய்யுங்கள். உங்கள் வழியில் தெளிவு ஏற்படுமளவிற்குச் செயற்படுங்கள்.

எச்சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையை இழக்கவேண்டாம். எத்தனை சரிவுகள் வந்தாலும் எடுத்த கருமத்திலிருந்து பின்வாங்க வேண்டாம். நீங்கள் இருக்கும் துறையிலேயே நீங்கள் முன்னுக்கு வரலாம். தொடர்ந்து முயற்சி செய்து, காலத்தை வீணடிக்காது, உங்கள் குறிக்கோளையே சிந்தித்து, வேறு எண்ணங்கள் இல்லாது செயற்பட்டால் வெற்றி நிச்சயம்.

2 comments:

பிரணவன் said...

கொண்ணுட்டிங்க ஐயா

அன்புடன் அருணா said...

A very inspiring post.
anbudan aruna