Friday, January 30, 2009

பூ - நெஞ்சில் தவிப்பு(பூ)!

கொஞ்சநாளாகவே என்னுடைய அலுவலகத்தில் சரியான வேலை. தலைக்குமேல வேலைன்னு சொல்லுவாங்களே, அதுமாதிரித்தாங்க இது. நேற்றையோட அந்த வேலைங்க எல்லாத்தையும் முடிச்சிட்டு நிம்மதியா இருந்தன். அப்போதான் நான் மிஸ் பண்ணின படம் ஞாபகம் வந்திச்சு. அத பாத்திடனுங்கிற ஆசையும் தோணிச்சு. அழகான கவிதையாக வெளிவந்த படம்னு கேள்விப்பட்டன். ஊர் உறங்கிற நேரத்தில, நான் விழிச்சிருந்து படம் பார்க்கிறதுதான் எனக்குப் பிடிக்கும். அப்படிப் பார்த்த படம்தான் "பூ'. இந்தப்படம் வெளியாகி ரொம்ப நாளாச்சு. ஆனாலும் நான் நேற்றுத்தான் பார்த்தேன். பிடிச்சிருந்திச்சு, எழுதனுனு தோணிச்சு எழுதிறன்.

ச.தமிழ்செல்வனின் 'வெயிலோடு போய்' என்ற சிறுகதையை மையமாக வைத்து, சசி என்கிற இயக்குநர் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் (கதையோடு வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்...). திரைப்படத்திலே பல புதுமுகங்கள், சில பரிட்சய முகங்கள். அத்தனையும் முத்துக்கள். ஸ்ரீகாந்த் நீண்ட நாட்களுக்குப்பின் கதாநாயகனாக வாழ்ந்திருக்கிறார். பார்வதி என்கிற நாயகி அறிமுகமாகியிருக்கிறார். பருத்திவீரன் பிரியாமணியை அடிக்கடி ஞாபகப்படுத்துகிறார். இவர்களோடு இனிகோ, இன்பநிலா, பறவைமுனியம்மா என நீண்ட பட்டியல் தொடர்கிறது.

படத்தின் ஆரம்பத்திலேயே கிராமத்து வாசனை வீசுகிறது. வழமையாக கிராமம் என்றால் பசுமைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இங்கு கிராமத்தின் வரட்சியை, குளிர்மையை கலந்து காட்டியிருக்கிறார்கள். பசுமையைவிட வரட்சிதான் அதிகமாக தெரிகிறது... (புண்பட்ட நெஞ்சத்தின் வரட்சி, காட்சிகளிலும் தெரிகிறது).

படத்தின் ஆரம்பத்திலேயே படுக்கையறை காட்சி. அழகான சிரித்த முகத்துடன் கதாநாயகி அறிமுகம். எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்கும் பெண் அவள். காலில் அடிபட்டாலும் சிரிப்பாள், கணவன் திட்டினாலும் சிரிப்பாள். வெகுளியான பாசக்காறி. அந்தப் பெண்ணுக்குள் இருக்கின்ற வலிதான் கதையின் கரு (ஏற்கனவே இந்தப் படத்தின் விமர்சனங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்பதால் சுருக்கமாகச் சொல்கிறேன்...).

கிராமத்தில், சிறுவயதில் ஏற்படுகின்ற உறவுக்காதல். இனம்புரியாத வயதிலேயே தொற்றிக்கொள்ளும் காதல். ஆழமாக ஆழ்மனதில் வேர்விட்டு விருட்சமாகிவிட்ட காதலின் பிரிவினை அழகாக திரைக்கதையாக சொல்லியிருக்கிறார் சசி. தன்னுடைய மாமன் மகனின் நிழலைக்கூட உயிராக நினைத்து வாழும் பெண்ணின் தவிப்பு(பூ) இந்தப்படத்திலே தெரிகிறது. ஆண்களின் ஓட்டோகிராபினை சேரன் சொல்லித்தந்தார். அதேபோல் பெண்களின் ஓட்டோகிராபினை சசி சொல்லியிருக்கிறார்.

வழமையான காதலாக இருந்தாலும், பிரிவென்று வரும்போது தன்னவன் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக தன் வாழ்வையே அர்ப்பணிக்கின்ற காதலின் சிகரம் கதாநாயகி. பிரிவில்கூட சிரிக்கின்ற கதாநாயகி, தன்னுடைய காதலனின் வாழ்விற்காக தன் காதலை மூடி மறைக்கின்றாள். ஆனால், தன் அன்புக்குரியவனின் வாழ்வு நிம்மதியற்று இருக்கிறது என்பதை அறிந்தபோது அடக்கிவைத்த ஆசைகளை கண்ணீராய் சிந்துகிறாள். அந்த கதறலோடே படமும் நிறைவு பெறுகிறது. எங்கள் மனதும் கனக்கிறது.

சுருக்கமான கதை இதுதான். இதன் காட்சிகளை அழகாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா. கிராமத்தின் காட்சிகளை கமெரா கண்களால் துல்லியமாக எடுத்துக் காட்டியிருக்கிறார் முத்தையா. அந்தக் காட்சிகளை அழகாக தொகுத்திருக்கிறார் மதன் குணதேவா. படத்தின் கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது இசை. எஸ்.எஸ்.குமரனின் இசை அற்புதமாக இருக்கிறது. அனைத்துப் பாடல்களும் நெஞ்சைத் தொடுகின்றன. நா.முத்துக்குமார் பாடல்களை எழுதியிருக்கிறார். 'சூ...சூ...மாரி...' பாடல் ரொம்பப் பிரபல்யம். அதேபோல் ஒரு பாடலில் அறிமுகமாகியிருக்கிறார் ச.ஞானகரவேல். 'சிவகாசி ரதியே...' என்ற பாடலில் பழைய காதலின் நினைவுகளை அழகாக வடித்திருக்கிறார் அறிமுக பாடலாசிரியர். அதேபோல் நடன அமைப்புகளும் அருமை. கலை இயக்குநரான கே.வீரசமர் அருமையாக உழைத்திருக்கிறார்.

பூ- படத்தினைப் பொறுத்தவரையில் நட்பு(பூ), வெறுப்பு(பூ), தவிப்பு(பூ), கற்பு(பூ), சகிப்பு(பூ), மதிப்பு(பூ) என அனைத்துப் பூக்களுமே இருக்கின்றன. உறவில் திருமணம் முடித்தால் பிறக்கின்ற பிள்ளை ஊனமாக பிறக்கும் என்ற படிப்பினையும் சொல்கிறது கதை. அதேபோல் நட்புக்கும் காதலுக்கும் இடையில் நடக்கின்ற போராட்டம் என அழகாக நீள்கிறது கதை. நீண்ட நாட்களின் பின்னர் என் நெஞ்சில் ஒரு தவிப்பு(பூ). அழகான கவிதையினைப் படித்த உணர்வு இன்னமும் என் மனதில் நிழலாடுகிறது.

4 comments:

எம்.ரிஷான் ஷெரீப் said...

நல்ல திரைப்படம்.
பார்வதியின் நடிப்பைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே ? முதலில் த்ரிஷா நடிக்க மறுத்த கதாபாத்திரம் அது.

சாணக்கியன் said...

’வெயிலோடு போய்’ - சிறுகதை படிக்கக் கிடைக்குமா? இணையத்தில் ஏற்றித்தர முடியுமா?

நன்றி

Mathumathi said...

அன்பின் சாணக்கியனே நானும் அந்தக் கதையினை தேடினேன் கிடைக்கவில்லை. கிடைத்ததும் பதிவில் போடுகிறேன்.

Mathumathi said...

ரிஷான் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி. இதில் நான் பார்வதியின் கதாபாத்திரம் பற்றித்தானே 'வாழ்ந்திருக்கிறாள்' என்று சொல்லியிருக்கிறேன். 'அடக்கிவைத்த ஆசைகளை கண்ணீராய் சிந்துகிறாள். அந்த கதறலோடே படமும் நிறைவு பெறுகிறது. எங்கள் மனதும் கனக்கிறது...' இந்தவரிகள் பார்வதியின் நடிப்புக்கு சமர்ப்பணம்.