Monday, January 05, 2009

இது காதலா?

காதல்... இந்த வார்த்தையின் அர்த்தம் புரியாதவர்கள் உலகில் உயிருள்ளவர்களாக நடமாடுவதில் அர்த்தமே இல்லாதவர்கள். காதலை சிலர் வலி என்பர்..., சிலர் துன்பம் என்பர்..., சிலர் இன்ப வலி என்பர்..., சிலர் வர்ணிக்க முடியாத சுகம் என்பர். ஒவ்வொருவரும் புரிந்துகொள்கின்ற முறைக்கேற்ப காதல் சுகமாகவும் சுமையாகவும் பரிணாமமெடுக்கிறது.

கரடுமுரடான இந்தப் பூமியிலே பிறந்த ஒவ்வொருவருக்கும் அதாவது ஒவ்வொரு உயிருக்கும் காதல் ஏற்படுவது சகஜமே. சிலருக்கு காதல் பாதை, பூக்கள் நிறைந்ததாகக் காணப்படும். இன்னும் சிலருக்கோ காதல்பாதை முட்கள் நிறைந்தனவாகக் காணப்படும். இந்த வித்தியாசம் எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் அது அவரவர் மனதினால்தான் என்பது வெளிப்படையாகிறது.

உண்மையிலேயே காதல் என்பது மிகப் புனிதமான ஓர் உணர்வு. காதல் என்ற புனித உணர்வில் காமம் கலக்கின்றபோது உணர்வு உணர்ச்சிவசப்படுகிறது. அப்படி உணர்ச்சிவசப்படுகின்ற புனித உணர்வினால் காதல் காமத்தின் வசப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் காதலின் புனிதம் தூசுபடிந்த வைரமாகிவிடுகிறது. இதுதான் ஜதார்த்தம்.

காதல் திருமணம் செய்த பெற்றோர்கூட தம் பிள்ளைகள் காதலிக்கிறார்கள் என்றால் எதிர்க்கத்தான் செய்கிறார்கள். இதற்குக் காரணமில்லாமலில்லை. தாம்பட்ட வேதனை தம்பிள்ளைகள் படக்கூடாது என்ற நோக்கம் ஒருபுறம் இருக்கத்தான் செய்யும். இது ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கின்ற நியாயமான உணர்வுதானே? (ஒருசிலர் தேவையில்லாமலும் எதிர்ப்பர்...).

ஆனால், காதல் வயப்பட்ட பிள்ளைகளுக்கு அந்நேரத்தில் பெற்றோரின் அறிவுரைகள் எரிமலைக் குளம்புபோல் கொதியாய் கொதிக்கும். அந்தக் காதல் உணர்வு படுத்தும் பாடு அது.

காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். ஆனால், காதல் வயப்பட்டவர்கள்தான் கண்கெட்டதனமாக நடந்துகொள்கிறார்கள் எனவேண்டும். காதல்கொண்ட உள்ளங்கள் எப்பொழுதும் தூய்மையாக இருக்க வேண்டும். உள்ளங்கள் தூய்மை இழக்கும்போது அங்கு காதல் செத்துவிடுகிறது.

இன்றைய உலகில் காதலர்களை எடுத்துநோக்கினால் கடற்கரையில் குடையுடனோ அல்லது ஏசி பஸ்ஸில் பின் ஆசனத்திலோதான் காதல் லீலைகள் புரிகிறார்கள். பொது இடங்களில் காதலென்ற போர்வையில் காமலீலை புரிகிறார்கள். காதலின் சின்னம் இதயம் என்ற நிலைமாறி குடை என்ற நிலைக்கு மாறிவிட்டது. காதலருக்கு குடை அத்தியாவசியப் பொருளாகிவிட்டதென்னமோ துரதிர்ஷ்டவசம்தான். குடைக்குள் மழையாக காதல் சுகம் தேடுபவர்களுக்கு தாம் செய்வது சரியா? தப்பா? என்றுகூடத் தெரிவதில்லை. அதைப்பற்றி சிந்திப்பதற்கும் அவர்களின் புத்தி இடம்கொடுப்பதில்லை. காதல் என்ற அந்த சிற்றின்பம் வாழ்க்கை என்னும் பேரின்பத்தை மூடி மறைத்துவிடுகிறதல்லவா? இதனைத்தான் குறிப்பிடுகிறார்கள் தன்னிலை மறத்தல் என்று. எதையும் நாங்கள் அதிகமாக நேசிக்கின்றபொழுது எம்மை நாம் மறந்துவிடுகின்றோம். எதை நினைக்கின்றோமோ அதைத்தவிர வேறெதுவும் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. சிலர் கடவுள் கும்பிடும்போது தன்னிலை மறந்து சத்தமாக தேவாரம் பாடி கும்பிடுவார்கள். இவ்விடத்தில் அவர்கள் தங்களை மறக்கின்றார்கள். இதுபோல்தான் காதலர்கள் அளவுகடந்து காதலிக்கும்போது தம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை மறந்துவிடுகிறார்கள்... இது சமாளிப்பதற்காக சொல்லும் கருத்தல்ல, யாதார்த்தம் அதுதான். இந்நிலையை வெல்வதுதான் மனிதத்தன்மை.

உண்மையிலேயே காதல் என்பது ஒருவகை தீராத நோய் போன்றது. இந்த நோய் எளிதில் அனைவரையும் தொற்றிக்கொள்ளும். ஆனால் அதைக் குணப்படுத்த நினைப்பது முடியாத காரியமாகும். காதல் நோய் நம்மைத் தாக்காமல் கட்டுப்படுத்த நாமொன்றும் உணர்ச்சியில்லாத ஜடமல்லவே...?

ஆனால், இந்தக் காதல் நோய் ஒவ்வொரு உள்ளங்களையும் வெவ்வேறுவிதமாகத் தாக்குகின்றது. அந்த நோயின் தாக்கம் சிலருக்கு பாரியளவாக இருக்கலாம். ஆனால் அதன் தாக்கத்திலிருந்து எவரும் தப்பமுடியாது.

எதிர்பாலார் மீது ஏற்படுகின்ற கவர்ச்சியின் வெளிப்பாடுதான் இந்தக் காதல். இந்தக் கவர்ச்சி அதிகமாகி ஈர்க்கப்படும்போதுதான் காதலருக்கு குடைக்குள் மழை பெய்கிறது. கடற்கரையில் எந்நேரத்தில் நீங்கள் சென்று பார்த்தாலும் அங்கே ஏதோவொரு பாறையின் பின்னால் ஏதோவொரு நிறக்குடை தெரியும். காலையில் வேலைக்குச் செல்பவர்கள், மதியத்தில் பாடசாலைப் பிள்ளைகள், மாலையில் பொதுவான அனைவருமென கடற்கரைப் பாறைகளில் தஞ்சம் புகுகிறார்கள். காதலருக்கு இது தொந்தரவில்லாத இடமாக இருக்கலாம். ஆனால், காதலுக்கு அது தொந்தரவான இடம். ஏனெனில் அந்த வர்ணவர்ணக் குடைகளுக்குள் காதல் மட்டும் நடப்பதில்லை, காமத்தின் எல்லைவரை சென்றுவிடுகிறார்கள்.

இப்படியான சம்பவங்களால்தான் உண்மையான காதல்கள் பல கைகூடாமல் போயிருக்கின்றன. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். அதுபோல்தான் ஒருசிலரது காதலென்ற போர்வையிலான காமத்தை கண்டு வெறுத்தவர்களுக்கு உண்மைக் காதலும் போலியானதாகத்தான் தெரியும்.

காமம் என்ற சிற்றின்பத்துக்காக ஏன் வாழ்க்கை என்ற பேரின்பத்தை இழக்க வேண்டும்? ஐந்துநிமிட சுகத்தைத் தேடி காதலின் புனிதத்தைக் கெடுக்கலாமா? ஸ்பரிஷம் மட்டும்தான் காதலில் பெரிதென நினைப்பவர்களது காதல் வெறும் போலித்தனமானது. இது பாலியல் தூண்டல்களின் வெளிப்பாடேதவிர உண்மையான, தூய்மையான காதலாக இருக்க முடியாது.

அப்படியாயின் காதலில் வகைகள் இருக்கின்றனவா? என்ற கேள்வி ஒவ்வொருவருக்கும் எழும். காதலில் வகைகள் இல்லை. ஆனால், காதல் கொள்பவர்களில்தான் வகைகள் இருக்கின்றன. பலருக்கு பாலியல் தூண்டல்களால்தான் காதல் ஏற்படுகிறது. அதாவது ஒரு பெண்ணின் அங்க அசைவுகளை கண்டு, அவள்மீது ஏற்படுகின்ற தூண்டுதல்தான் அதிகமதிகம். அதேபோல் அழகான ஆண்களின் வெளித்தோற்றத்தைக் கண்டு அவர்களின் மீது ஏற்படுகின்ற மோகமும் காதலாகலாம். ஆனால், ஒருசிலர் மட்டும்தான் மனம்விட்டுப் பழகி இருமனம் இணைந்து காதல்கொள்கிறார்கள். இப்படியான காதல் நிச்சயம் வெற்றிபெறும் (சிலசமயம் காதல் வெற்றிபெறும், காதலர்கள் தோற்றுவிடுவார்கள்...). இல்லையேல் மரணத்தில் முடியும். வரலாறுகள் இதைத்தான் சொல்கின்றன.

ஆகையினால் காதலிக்குமுன் பலவற்றையும் சிந்தியுங்கள். எம் குடும்பம், எம் வாழ்க்கை, எம் சமூகம் என பலதையும் சிந்தியுங்கள். சிந்திக்க முடியாத கணப்பொழுதில் ஏற்படுவதுதான் காதல். இருப்பினும் அந்தக் கணத்தையும் மீறி மனதை கட்டுப்படுத்தி சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் சிந்தித்து முடிவெடுக்கின்ற நிலையில் காதல் உருவாகுமாக இருந்தால் அந்தக் காதல் நிச்சயம் வெற்றியில் முடியும். அதைவிடுத்து காதலித்துவிட்டு குடும்பம் ஒத்துவரவில்லை, பிரிந்துவிடலாம் என்ற தோரணையில் பிரிந்து செல்வதற்குப் பெயர் காதலல்ல. காதலென்ற புனிதத்தை தயவுசெய்து வார்த்தைகளால் கொச்சைப்படுத்தாதீர்கள்.

5 comments:

பிரணவன் said...

நன்றி தலைவா!!
காதலின் புனிதத்தை காப்பாற்ற நான் தாயார். ஆனால் நான் விரும்புபவள் என்னை விரும்புகிறாளா எனத்தெரியவில்லையே??
என்ன செய்ய!!
நானும் காதலிப்பவர்களில் ஒரு ரகம தானே??

sarava said...

very nice.

saravanan.n said...

it is very nice

saravanan.n said...

it is very nice and it shows that the real meaning of the love

saravanan.n said...

it shows that the real meaning of the love