Thursday, January 22, 2009

உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் முத்தம்

மனித உடம்பில் ஏற்படுகின்ற அனைத்து உணர்வுகளையும் ஒன்றுதிரட்டுகின்ற சக்தி எதற்கிருக்கின்றது என்று நினைக்கிறீர்கள்? ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக் குறிப்பிவார்கள். ஆனால் முத்தத்திற்கு அந்தச் சக்தி இருக்கின்றது என்றால் நம்புவீர்களா? ஆனால் உண்மை அதுதான்.

சத்தம் போட்டு சாதிக்க முடியாததை ஒரே ஒரு முத்தத்தினால் சாதித்துவிடமுடியும். இதை நீங்கள் வீடுகளிலும் உணர்ந்திருப்பீர்கள். சில சமயங்களில் பிள்ளைகள் அடம்பிடித்துக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு சத்தம் போட்டுத் திட்டினாலும் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் செய்ததையே திரும்பத்திரும்பச் செய்வார்கள். இப்படியான சந்தர்ப்பத்தில் அன்பாக அவர்களை அரவணைத்து, கன்னத்தில் அல்லது நெற்றியில் முத்தமிட்டு 'செல்லம் இப்படிச்செய்யக்கூடாது...' என்று சொல்லிப்பாருங்கள். அந்தப்பிள்ளை குழப்படியினை நிறுத்திவிடும். அந்த முத்தத்திற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.

முத்தம் என்ற சொல்லுக்கே தனியொரு அழுத்தம் இருக்கிறது. அந்த வார்த்தையை உச்சரித்துப்பாருங்கள். முத்தம் என்ற அந்த வார்த்தையின் அழுத்தத்தினை நீங்கள் உணர்வீர்கள். உச்சரிப்பிலும் அழுத்தம் மிக்க அந்த வார்த்தை உள்ளத்தையும் அழுத்தம் மிக்கதாக மாற்றும் ஆற்றல் மிக்கது. எம் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கும் சக்தி அந்த முத்தத்திற்கு இருக்கிறது.

இப்படி பல சக்திகளை உள்ளடக்கிய அந்த முத்தம் பல வகைப்படும். அதாவது முத்தத்தினைப் பரிமாறும் விதத்தில் அது வேறுபடுகிறது. ஒரு தாய், தன் பிள்ளைக்குக் கொடுக்கின்ற முத்தத்தில் ஒருபாசம் இருக்கிறது. அதே தாய், தன் கணவனுக்கு முத்தம் கொடுக்கும்போது அந்த இடத்தில் காதல் இருக்கிறது. அதே தாய், தன் சகோதரனுக்கு அல்லது சகோதரிக்கு முத்தம் கொடுக்கும்போது அங்கு சகோதரத்துவம் இருக்கிறது. இப்படி யார் யாருக்கு முத்தம் கொடுக்கின்றோமோ அதைப்பொறுத்து முத்தத்தின் பெறுமதி வேறுபடுகிறது. விலை மதிக்கமுடியாத பரிசுகளில் ஒன்று முத்தம் தான்.

காதலின் ஆரம்பம் கண்களில் தொடங்குவதாகச் சொல்வார்கள். ஆரம்பம் கண்களாக இருந்தாலும் காதலில் வளர்ச்சி முத்தத்தில்தான் தங்கியிருக்கிறது. இதை காதலர்கள் ஒத்துக்கொள்வார்கள் (ஒரு சிலரைத் தவிர). காதலிப்பதே ஒரு சுகம்தான். அந்த சுகத்திற்கு இன்னும் சுகம் சேர்ப்பதுதான் இந்த முத்தம். அப்படி என்னதான் இருக்கிறது இந்த முத்தத்தில்...? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் முறையாக யாரும் பதில் சொல்லமாட்டார்கள். முத்தம் கொடுக்கின்றபோது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை உள்ள அனைத்து உறுப்புக்களும் உணர்வு பெறுகிறது. இரத்தம் மிக வேகமாக ஓடுவதால் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. இத்தனை பாரிய சக்தி அந்த முத்தத்திற்கு இருக்கிறது.

ஆனால் ஒரு சிலரது கருத்து என்னவெனில் முத்தம் கொடுப்பது தப்பென்பதாகும். அதாவது முத்தம் கொடுக்கும்போது எச்சிலினூடாக கிருமிகள் பரவி நோய் தொற்றுக்கள் ஏற்பட்டுவிடுமென்று கூறுவார்கள். இதில் ஓரளவு உண்மையிருக்கிறதுதான்.அதாவது நோயுள்ள ஒருவர் இன்னொருவருக்கு முத்தமிடும்போது கிருமிகளின் தொற்று மிக வேகமாக இடம்பெறுவதாக கூறுகின்றார்கள். ஆகையினால் நோயுள்ளவர்கள் முத்தமிடுவதை தவிர்த்துக்கொள்வது சிறந்ததாகும். குறிப்பாக உதட்டில் முத்தமிடுவதைத் தவிர்த்துக்கொள்ளலாம்.

எங்களுடைய சுவாசம் எப்போழுதும் தூய்மையாக இருக்க வேண்டும். சுவாசம் தூய்மையாக இல்லாதவிடத்து எமது வாய்நாற்றம் அதிகமாக இருக்கும். இப்படியான சந்தர்ப்பத்தில் முத்தத்தின் சக்தி இல்லாமல் போய்விடும். எனவே முத்தமிட நினைப்பவர்கள் உங்களுடைய வாய் நாற்றத்தையும் கவனத்திற்கொள்ளவேண்டும். சுவாசம் தூய்மையாக இருக்கவேண்டுமானால் அதிகமாக தண்ணீர் அருந்தவேண்டும். அதேபோல் நிறைய பழவகைகள் சாப்பிடவேண்டும். குளிர்மையான ஆகாரங்கள் எடுக்கவேண்டும். இப்படிச் செய்துவந்தால் உங்களுடைய சுவாசம் எப்பொழுதும் தூய்மையாக இருக்கும். முத்தமிடுவதற்கு முன் உங்களுடைய மூச்சுக்காற்று முகத்தில்படும்போது உணர்வுகள் தூண்டப்படுகின்றன. அந்த மூச்சுக்காற்று தூய்மையாக இருக்கும்போதுதான் உணர்வுகள் தூண்டப்படும். இல்லையேல் முத்தத்தில் வெறுப்புத்தான் ஏற்படுமாம். ஆகையினால் முத்தப்பிரியர்கள் கட்டாயமாக தங்கள் சுவாசத்தினைத் தூய்மையாக வைத்திருக்கப் பழகிக்கொள்ளவேண்டும்.

முத்தத்தினை வெறுக்கின்ற உள்ளங்கள் இருக்கமாட்டார்கள். மேலைத்தேய நாடுகளில் முத்தம் என்பது அத்தியாவசியமான ஒரு ஸ்பரிஸமாக இருக்கிறது. ஒருவரையொருவர் காணும்போது முத்தத்தினைப் பரிமாறிக்கொள்கிறார்கள். ஆனால் எமது கலாசாரம் அதற்கு இடம்கொடுப்பதில்லை. ஆகையினால் முத்தம் என்றாலே அது ஆபாசம் என்று நினைக்கிறார்கள். உண்மையில் முத்தம் என்பது ஆபாசமானதொன்றல்ல. ஆரோக்கியமான ஒன்றென்றே கூறவேண்டும். ஆகையினால் முத்தத்தினைப் பரிமாறிக்கொள்வதில் தயக்கம் காட்டத்தேவையில்லை. ஆனால் யாருக்கு முத்தம் கொடுக்கிறோம் என்பதைப்பொறுத்து முத்தத்தின் தன்மையை மாற்றிக்கொள்ளுங்கள். அண்ணன், தங்கைக்கு உதட்டில் முத்தமிட முடியுமா? அதேபோல் நாம் யாருக்கு முத்தமிட நினைக்கிறோமோ அதற்கமைய முத்தம் கொடுக்கும் இடத்தினை மாற்றிக்கொள்ளுங்கள்.

பொதுவாக யாராக இருந்தாலும் நெற்றியில் முத்தமிடுங்கள். இது ஓர் உறவினை வலுப்படுத்துவதாக அமையும். சிறியோர் முதல் பெரியோர் வரை எவருக்கு வேண்டுமானாலும் நெற்றியில் முத்தமிடலாம். இந்த முத்தம் பாசத்தின் வெளிப்பாடாகவே கருதப்படும். இப்படியான முத்தங்களைப் பரிமாறும்போது எமது அனைத்து உறுப்புக்களுக்கும் புதுத் தெம்பு கிடைக்கிறது. இப்படி தெம்பாக இருக்கும்போது எந்தவிடயத்தையும் தெளிவாகப் புரிந்து கொள்ளக்கூடிய தன்மை ஏற்படுகிறது. உறைந்திருக்கும் எமது இரத்த ஓட்டத்தின் வேகத்தினை அதிகரிக்கச் செய்யும்போது புது உற்சாகம் ஏற்படுகிறது. இச்சந்தர்ப்பத்தில் எமது மூளை மிக நிதானமாகச் செயற்படுகிறது. அவ்வேளையில் நாமெடுக்கின்ற முடிவுகள் மிக நிதானமானவையாக இருக்கின்றன.

பார்த்தீர்களா... ஒரு சாதாரண முத்தத்தில் எத்தனை நன்மைகள் பொதிந்திருக்கின்றன என்று... இப்படிப்பட்ட முத்தத்தினை வெறுப்பது சரியா...? எனவே உங்கள் பாசத்தின் வெளிப்பாடாக முத்தத்தினை அதிகளவில் கொடுங்கள்... புத்துணர்ச்சியைப் பெறுவீர்கள்...! (தவறாக யாருக்கும் முத்தம் கொடுத்து அடி வாங்கினால் நான் பொறுப்பல்ல... ஹி... ஹி... ஹி...).

4 comments:

Vilvaraja Prashanthan said...

எப்பிடி அண்ணே! உங்களால மட்டும் இப்படியேல்லாம் புட்டுபுட்டு வைக்க முடியுது. ஆனா நீங்க சொன்ன அத்தனையும் உண்மைதான் அண்ணே... அதெல்லாம் அனுபவிச்சவனுங்களுக்குதான் புரியும் ..... ம்ம்ம்ம்ம்ம்ம்..............

Focus Lanka said...

Focus Lanka திரட்டியிலும் இணைந்து கொள்ளுங்கள்
http://www.focuslanka.com

தேவன் மாயம் said...

ஒரு சாதாரண முத்தத்தில் எத்தனை நன்மைகள் பொதிந்திருக்கின்றன என்று... இப்படிப்பட்ட முத்தத்தினை வெறுப்பது சரியா...? எனவே உங்கள் பாசத்தின் வெளிப்பாடாக முத்தத்தினை அதிகளவில் கொடுங்கள்... புத்துணர்ச்சியைப் பெறுவீர்கள்...! (தவறாக யாருக்கும் முத்தம் கொடுத்து அடி வாங்கினால் நான் பொறுப்பல்ல... ஹி... ஹி... ஹி...). ///

பாசத்தின் வெளிப்பாடு நல்லா இருக்குங்க>>>

தேவா.....

RAMASUBRAMANIA SHARMA said...

நல்ல பதிவு... முத்தத்தை பற்றி விரிவான ஆராய்ச்சி செய்து இருக்கீர்...வசூல் ராஜா சினிமாவிலும் கமல் இந்த கட்டிபுடி டெக்னிக் பயன்படுத்தி இருப்பார் ....அனேகமாக இரண்டுமே ஒரே விளைவை தர வாய்ப்பு உள்ளது எண்டு நினைக்கிறேன். ...