Thursday, January 15, 2009

ஐஸ் வளையம்...

உலகத்தில் அவ்வப்போது அதிசயங்கள் பல இடம்பெறுவது வழமை. எத்தனையோ அதிசயங்கள் கண்ணுக்கு தெரியாமலே மறைந்து விடுவதுமுண்டு. சில செக்கன்களில் மறைந்துவிடுகின்ற அதிசயங்களும் நிகழ்வதுண்டு. அப்படி சில நிமிடங்கள் நிகழ்ந்த அதிசயம் பற்றிய தகவலே இது. இங்கிலாந்தின் தெற்குப்பகுதியில் இருக்கின்ற டெவொன் (Devon) என்ற நாட்டின் ஆற்றில் இடம்பெற்றிருக்கிறது இந்த அதிசயம்.

ஐரோப்பாவில் இப்பொழுது கடும் குளிர் காலம் என்பதை யாவரும் அறிவீர்கள். காலநிலை மோசமான நிலைமையினால் பலர் தவிக்கின்றார்கள். Roy Jefferies என்பவர் வழமையாக காலையிலே தனது செல்லப்பிராணியான நாயுடன் ஆற்றங்கரையில் நடைபயில்வது வழமை. அன்றும் அப்படித்தான் அவர் ஆற்றங்கரையில் செல்லப்பிராணியுடன் சென்றுகொண்டிருந்தார். தற்செயலாக ஆற்றினைப் பார்த்தவருக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. ஆற்றின் நடுப்பகுதியிலே ஏதோ ஒரு தட்டு சுழன்று கொண்டிருப்பதை அவதானித்தார். இவரினால் அதனை என்னவென்று அனுமானிக்க முடியவில்லை. உடனே அருகில் வசிக்கும் தனது நண்பர் Blissetஐ அழைத்தார். தான் கண்ட அந்த அதிசயத்தை தனது நண்பருக்குக் காட்டினார். அவரினாலும் இதனை நம்ப முடியவில்லை.

நம்பமுடியாத நிகழ்வுகள், அதிசய நிகழ்வுகள் பற்றி தெரிந்து வைத்திருப்பவர் Blisset. ஆகையினால் அந்த அதிசயத்தை இலகுவில் இனங்காண முடிந்தது அவரால். மிகவும் அபூர்வமாக தோன்றுகின்ற "ஐஸ் வளையம்'தான் அது எனத் தெரிந்துகொண்டார். தன்னுடைய கமெராவினால் படமும் எடுத்துக்கொண்டார். சுமார் 10அடி விட்டம் கொண்ட அந்த "ஐஸ் வளையம்' நீரின் நடுவில் அழகாக சுழன்றுகொண்டிருப்பதை தனது கமெராவினால் பதிவுசெய்தார். அவர் பதிவுசெய்ய படங்களைத்தான் நீங்கள் இங்கு காண்கிறீர்கள். மெதுவான நீர் ஓட்டத்தினைக் கொண்ட ஆற்றில், குளிர்காலங்களில் இப்படியான ஐஸ் வளையங்கள் தோன்றுமாம். மிகவும் அபூர்வமாக தோன்றும் இந்த அதிசய ஐஸ் வளையம் குறுகிய நேரத்தில் இல்லாமலும் போய்விடுமாம் அல்லது உறைந்துவிடுமாம்.

1 comment:

"உழவன்" "Uzhavan" said...

மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் !


தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க


உழவர் திருநாள் வாழ்த்துக்களோடு...
உழவன்