எதெதெல்லாம் நமக்கு முதலில் கிடைக்கின்றனவோ அவைகளை எம்மால் எளிதில் மறந்துவிட முடியாது. முதல் என்பது எமது வாழ்வின் மூலதனம் எனலாம். எமது வாழ்வை திறம்பட வாழ வேண்டுமானால் நிச்சயமாக இந்த "முதல்' தேவைப்படுகின்றது. அதனுடைய தாக்கம்தான் ஒருவனை பூரணப்படுத்துகின்றது என்றால் அது மிகையாகாது. முதலில் கிடைக்கின்ற ஒன்று நம்முடன் தொடர்ந்து வருவதென்பது கடினமானதே. அப்படியே தொடர்ந்து வந்தாலும் அது இடையில் பிரிந்துவிடுவதுதான் யதார்த்தமானது (உணர்ந்த வலி எனக்கும் இருக்கிறது...).
இந்த முதல்களின் வரிசையிலே காதல் என்பது இனிமையான வலி. ஒருசிலரைத் தவிர பலருக்கு இந்த முதல் காதல் தோல்வியில்தான் முடிகின்றது. முதல் காதலோடு மூச்சுள்ளவரை வாழ்ந்தவர்கள் ஒருசிலர்தான் எனலாம் (இதுவரை அப்படியொரு ஜோடியை நான் சந்தித்ததில்லை...). இந்தத் தோல்விக்கு என்ன காரணம் என வினவினால் பலருக்கு விடை தெரிவதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்துவிட்டோம் என்றே பலர் கூறக் கேள்விப்பட்டிருக்கின்றேன் (நானும் அப்படித்தான் சமாளித்திருக்கிறேன்...). எப்பொழுதுமே முதல் என்னும்போது பதற்றம் இருக்கும். இந்த பதற்றம்கூட பிரிவுக்குக் காரணமாக இருக்கலாமில்லையா?
சரி... அப்படியே முதல் காதல் பிரிந்துவிட்டால் இன்னொரு வாழ்வை தேடாதவர்களும் கிடையாது. இன்னொரு வாழ்வை நிச்சயமாகத் தேடிக் கொள்வார்கள். அப்படி இன்னொரு வாழ்க்கை வாழ்கின்ற சந்தர்ப்பத்தில் முதல் காதலை என்ன செய்வார்கள்? கணவன் மனைவி இருவருக்குமிடையில் முதல் காதல்களைப் பற்றி பரிமாறிக்கொள்வது குறைவுதான். அப்படியே கூறினாலும் அடிக்கடி அந்தக் கதைகளை கதைக்கமாட்டார்கள். ஏனெனில் குடும்பம் பிரிந்துவிடும் என்ற பயம். ஆக... அந்த முதல் காதலை நெஞ்சுக்குள்ளேயே வைத்து சமாதிகட்டிவிடுகிறார்கள்.
சிலர் இரண்டாவது காதலில் விழுகின்றபொழுது முதல் காதலைப்பற்றி அடிக்கடி கதைத்துக் கொள்வார்கள். இதற்கும் காரணம் இருக்கிறது. முதல் காதலின் வலியினை குறைப்பதற்கான யுக்தியாக இதனைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். இப்படி அவர்கள் சொல்வதை, வருகின்ற புதியவன்/ புதியவள் சகித்துக்கொள்பவராக இருந்தால் பிரச்சினை இருக்காது. இல்லையெனில் மீண்டும் பிரச்சினை வெடிக்கும். என்னைப் பொறுத்தமட்டில் எந்தவொரு விடயத்தினையும் வெளிப்படையாக பேசினால் பிரச்சினை இருக்காது என்றே நம்புகின்றேன். நமக்கும் இருக்கின்ற ரகசியங்களை பரிமாறிக் கொள்வதில் தப்பில்லை (அப்படிச் சொல்வதால் பல பிரச்சினைகளும் எழும்... அது வேறு கதை...).
ஆனால் எதற்கும் ஓர் அளவு இருக்கிறதல்லவா? முதல் காதலனுடன் நெருக்கமாக பழகிய சந்தர்ப்பங்களில் எங்கெல்லாம் சென்றோமோ? எதையெல்லாம் பார்த்தோமோ? அவை மறுபடியும் பார்க்கும்போது எம்மனதில் தோன்றுவது சகஜம்தான். அந்த நினைவுகளை எப்பொழுதும் எம் நெஞ்சம் மறந்துவிடாது. அதுதான் சுகமான சுமை என்பார்கள். இதனை வெளிப்படையாக இரண்டாவது துணையிடம் தெரிவித்தால் எத்தனைபேர் ஏற்றுக்கொள்வார்கள்? புரிந்துணர்வுள்ளவராக இருந்தால் நிச்சயமாக சமாளித்துக் கொள்வார். இல்லையேல் வீண் பிரச்சினைகள்தான் தோன்றும். ஆனாலும் அந்த உணர்வுகளை மறக்க முடியாதல்லவா? இதுதான் முதல் காதலின் புனிதம்.
நாங்கள் வெளிப்படையாக இருக்கின்றோம் என்பதற்காக அடிக்கடி இதனை நினைத்துக்கொண்டே வாழ்வதும் தவறுதான். எதற்கெடுத்தாலும் ஒப்பிட்டுக் கதைப்பதும், சதா அந்த நினைவாகவுமே இருப்பதால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. அதாவது புதிய துணை எதனைச் செய்கின்றபோதும் பழைய துணையினை ஒப்பிட்டுக் கதைப்பார்கள். என் முதல் காதலில் இதைவிட நன்றாக இருந்தேன் போன்ற வசனங்களை பிரயோகிப்பார்கள். இதனை முடிந்தளவு தவிர்த்துக் கொள்ளலாம்... (உணர்ந்தவர்களுக்குத்தான் வலி தெரியும் என நீங்கள் திட்டுவது நியாயம்தான்... இருந்தாலும் வாழ்வில் நடிப்பும் சரிபாதிதானே...). நமக்குக் கிடைக்கின்ற துணையிடம் அதிகமான பாசம் கிடைத்தால் எந்தத் துன்பமாக இருந்தாலும் அதனைத் துடைத்தெறிந்துவிடலாம்.
ஆக... நமக்குக் கிடைக்கின்ற துணை பாசமுள்ளவராக இருந்தால்தான் பழைய நினைவுகள் அடங்கியிருக்கும்... (நிச்சயமாக அழிந்துவிடாது...?). பழைய நினைவுகளை மீட்டிப் பார்ப்பதில் தப்பில்லை. ஆனால் அந்த நினைவுகளுடன் வாழனும் என நினைப்பதுதான் தப்பு. நினைவுகளுடன் வாழ்கின்ற வாழ்க்கை நிரந்தரமில்லாதது. ஆகையினால் நிரந்தரமான வாழ்வில் அன்பு ஒன்றுதான் ஜெயிக்கும். ஆகையினால் முதல் காதல் என்ற சுகமான சுமையினை இறக்கி வைப்பதற்கு பாசமுள்ள ஜீவன் ஒன்றை தேர்ந்தெடுத்தாலே போதுமானது... (என் பாசமுள்ள ஜீவன் எங்கிருக்காளோ...?).
No comments:
Post a Comment