Friday, November 21, 2008

விடியலுக்கான அஸ்தமனம்...

அந்திப் பொழுததனை
குந்தியிருந்து ரசித்திடத்தான்
எந்தனுயிர் ஏங்குதடி...
தனிமையில் ரசித்திடத்தான்
உந்தன் மதி என்னருகில்
மதுரகானம் பாடவேண்டும்...

விளங்காத சமூகத்தின்
பழங்கதைகள் கேட்டெல்லாம்
பலகாலம் கடந்துவந்தோம்...
சிலகாலம் வாழ்ந்திடவே
புதிதாக சிந்திப்போம்
இனியாவது வாழ்ந்திடுவோம்...

தவறென்று சிந்திக்க
சிந்தையில்லை என்னிடத்தில்...
உந்தனுள்ளம் கலங்கிடாமல்
அன்பதனை பகிர்ந்திடவே
எந்தனுள்ளம் தவிக்கிறது...

சேராத வாழ்விதனில்
சேயொன்றும் ஈன்றெடுத்தோம்...
வாழாத வாழ்வதனை
கனவுலகில் வாழ்ந்திருக்கோம்...
நியமாக வேண்டுமிந்த வாழ்க்கையென
சுயமாக வேண்டியழும்
நம்மிதயத்தினை யாரறிவர்...?

கரையொதுங்கும் அலையிது
அலைபாயும் எம்மனம்போல்
வருவதும் பின்னர் செல்வதும்
சொல்லொனா துயரமடி...

ஆழ்கடலின் சீற்றத்தை
மறைத்திடவே உதட்டோரம்
புன்னகைக்கும் விரோதியாய்
அலையதனின்
விளையாட்டையாரறிவார்...?

எம்மனதின் வேதனையை
சீறாமல் பொத்திவைக்க
தார் ஊற்றி வைத்தாலும்
சிலநேரம் பாய்ந்துவரும்
பலருள்ளம் நொந்துவிடும்...

அந்தியில் ஒருதிசையில்
தனைமாய்க்கும் சூரியன்
விடியலின் திசையதனை
மாற்றியமைக்கும் விந்தைதனை
எம்மனதும் புரிந்துகொண்டால்
துன்பத்தின் திசைமாற்றி
புதுவாழ்வின் திசைகாட்டும்...

அந்திசாயும் நேரத்தில்
குந்தியிருந்து சிந்தித்தேன்
எந்தனுள்ளம் தெளியவில்லை...
ஓயாத அலைகளுடன்
பாயாக விரிந்திருக்கும்
கடலின் ஓய்வின்மையை
என் உள்ளமும் உணருதடி...

விடியலுக்காய்
தனையிழக்கும் சூரியனாய்
காத்திருப்பேன்
புதுவாழ்வு தோன்றுமட்டும்...

No comments: