Monday, February 02, 2009

வீரத்தமிழன்..!

எலும்பைச் சுற்றி சதையும்
சதையின் மேலே தோலும்
போர்த்திக் கொண்ட மானுடனாய்
மானமின்றி அலைகின்றேன்...

தமிழனென்று சொல்வதற்கு
சொற்பமேனும் அருகதையற்று
காற்றோடு கதைபேசி
காலத்தை வீணடிக்கிறேன்...

வித்துடல்கள் பல புதைத்து
வேர்விட்டு விருட்சமாகி
பலருக்கு நிழல் காட்டும்
புண்ணியபூமி நமதன்றோ...

யார்விட்ட சாபமதோ
தளிர்விட்டு போயின்று
பேயாட்டம் ஆடுறதே
பாவம் நம் சொந்தம்...

தமிழனில்லா நாடில்லையாம்
தமிழனுக்கே குடிலில்லை
குடிப்பதற்கு நீருமில்லை
குழிதோண்ட சக்தியில்லை...

அரசாட்சி காலந்தொட்டு
மனசாட்சி செத்துப்போச்சு...
பொய்சாட்சி சொல்லிவாழ
தன்மானமற்ற தமிழினம் நாமில்லை...

நம் தமிழின விடிவிற்காய்
குளிர்காயும் நம்மினங்கள்
குரல் கொடுப்பர்
வன்னியின் வரம்பு மீறல்களுக்காய்...

குறையின்றி வாழ்வதற்கு
உடலெரித்தான் முத்துக்குமார்...
துளிகூட இரங்கவில்லை
சர்வதேச சமூகமின்று...

பாதுகாப்பு வலையமென
பொய்யுரைத்த அரசாங்கம்
பொறிகிடங்காய் ஆக்கியதே
தமிழினத்தின் அழிவுக்காய்...

முதுகெலும்பு உனக்கிருந்தால்
நெஞ்சினிலே குத்திப்பார்...
செத்துப்போன உடல்களிலே
பெற்றோலூற்றி கொழுத்தாதே...

இனத்துக்காய் இடர்தாங்கும்
நம்குடி அழிவதா...?
சொடக்குப்போடும் நேரத்திலே
அடக்கிவிடுவர் ஆடாதே..!

புலம்பெயர் தமிழர்கள்
இடம்பெயர் சொந்தங்களின்
கரங்களில் தீப்பந்தங்களை
தாரைவார்ப்பர் கலங்காதே...

சுட்டெரிக்கும் தீப்பொறியாய்
சுடர்விட்டு எரித்துவிட
சுட்டுவிரலை தானமாக
தமிழினம் தந்துதவும்...

நாதியற்ற சொந்தமென
நாய்பாடு படுத்தாதே...
தேய்கின்ற பிறைகூட
பிரகாச நிலவாகும்...!

பிய்ந்துதொங்கும் கையைபார்த்து
சிரித்திருக்கும் பிஞ்சுமுகம்
நெஞ்சத்தை பிழிகிறது
அழிகிறதா நம்மினம்...?

அடக்கிவைத்த நம்குரலை
உடைத்தெறியும் காலம்வரும்
மடைதிறந்த வெள்ளம்போல்
உள்ளம்நிறைய வெல்லம் வழியும்...

உலகறிந்த உண்மைத்தமிழா!
உன் கால்களைக் கட்டிவைக்க
கவசப்படை தேவையென
உலகத்தின் பிச்சைகேட்கிறது அரசு...

முரசுகொட்டும் காலம் வரும்
வீரத்தமிழன் வீறுகொண்டெழுவான்
பார்முழங்க வெற்றிக்கோஷமிடுவான்
அன்றுதான் தமிழன் தலைதூக்குவான்!

No comments: