Monday, February 09, 2009

நான் கடவுள்

மூன்று வருடங்களுக்கு மேலாக இயக்குநர் பாலாவினால் செதுக்கிய சிற்பம் கடந்த 6ஆம் திகதி மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு காலம் எடுத்து படத்தினை இயக்கியிருக்கிறாரே என பலர் திட்டித் தீர்த்தார்கள் பாலாவினை. இயக்குநர் பாலாவினால் செதுக்கப்பட்ட சிற்பம் 'நான் கடவுள்' அவதாரம் எடுத்து சிறப்பாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தினைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக பாலா எடுத்துக்கொண்ட கால அவகாசம் நியாயமானது என ஏற்றுக்கொள்வார்கள்.


தன்னைத்தானே கடவுள் என நினைத்து வாழ்கின்ற அகோரிகளைப் பற்றிய அடிப்படைக் கதை. காசியிலே வாழ்கின்ற அகோரிகளின் வாழ்வினை மிகவும் சிரமப்பட்டு படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலா. படத்தின் கரு என எடுத்துக்கொண்டால் பிச்சைக்காரர்கள் தான். பிச்சைக்காரர்களின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற கசப்பான அனுபவங்களை தத்ரூபமாக வடித்திருக்கிறார் பாலா. நந்தா, சேது, பிதாமகன் போன்ற படங்களிலும் இப்படியான பல நடைமுறைப் பிரச்சினைகளைப் படமாக்கியிருப்பார் பாலா. அதே பாணியினைத்தான் நான் கடவுள் படத்திலும் பின்பற்றியிருக்கிறார்.
ஆரம்ப காட்சியே அழகான காசியினைக் காட்டுவதாக அமைகின்றது. சன நெருக்கடி மிகுந்த காசியில் படமாக்கியிருக்கின்ற விதம் மெய்சிலிர்க்க வைக்கின்றது. ஜோதிடர் ஒருவர் சொன்ன கதையினை நம்பி தனது மகனை காசியிலே கொண்டுவந்து விட்டுச் செல்கின்ற தகப்பன், 14 வருடங்களின் பின்னர் அவனைத் தேடி காசி வருகிறார். வருகின்ற தகப்பன் அகோரி வடிவில் இருக்கின்ற தனது மகன் ஆர்யாவைக் காண்கின்றார். ஆர்யாவின் அறிமுகமே அசத்தலாக இருக்கின்றது. வேறு எந்த கதாநாயகனுக்கும் கிடைக்காத அறிமுகம் ஆர்யாவுக்கு இந்தப் படத்திலே கிடைத்திருக்கின்றது எனலாம்.


காசியிலே பிணங்கள் எரிகின்ற மயானத்தில் அகோரியாக குருவின் கட்டளைக்குப் பணிந்து இருக்கிறார் ஆர்யா. எரிகின்ற உடலின் ஆத்மா சுவனம் செல்லவேண்டுமா? நரகம் செல்ல வேண்டுமா? என்பதை அகோரிகள் அறிவார்களாம். அதனால்தான் எங்கோ இறந்தவர்களின் உடலினை காசியிலே கொண்டுவந்து அகோரிகள் முன் எரிப்பார்களாம். அப்படியிருக்கின்ற தனது மகனை அழைத்துச் செல்ல முயற்சிக்கும் தந்தையின் வேண்டுதல் பலிக்கிறது. தன்னைக் கடவுளாக நினைத்து வாழ்கின்ற ஆர்யாவினால் சொந்த பந்தங்களுடன் பழக முடிவதில்லை. அதனால் தனிப்பட குகைகளில் வாழ்கின்றார்.


இந்தச் சூழ்நிலையில்தான் பிச்சைக்காரர்களை உருவாக்கி, அவர்கள் எடுக்கின்ற பிச்சையிலே தான் குளிர்காய்கின்ற ராஜேந்திரன் அறிமுகமாகிறார். அவர்தான் வில்லன். ஊனமுற்ற பிச்சைக்காரர்களை உண்மையிலேயே பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பாலா. அவர்களை எப்படித்தான் நடிக்கவைத்தாரோ தெரியவில்லை. அதனால்தான் பாலாவிற்கு நீண்ட காலம் தேவைப்பட்டிருக்கலாம். இப்படிப் பிச்சைக்காரர்களை தேடிப்பிடிக்கின்றவர்கள் கையிலே மாட்டுகின்றார் கண் தெரியாத பூஜா. அழகுதேவதையாக தோன்றுகின்ற பூஜாவா இது என்னும் அளவுக்கு அற்புதமாக நடித்திருக்கிறார். மன்னிக்கவும், வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால்தான் பொருந்தும். அகோரியா ஆர்யா நடிப்பில் பின்னி எடுக்கின்றார் என்றால், கண்தெரியாத பிச்சைக்காரியாக பூஜா அசத்தியிருக்கிறார். இருவரும் விருதுக்கு போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல அந்தப் படத்தின் அத்தனை கதாபாத்திரங்களும் நிஜமாக வாழ்ந்திருக்கிறார்கள்.


இந்த பிச்சைக்காரர்களை மையமாக வைத்து கதை நகர்ந்து செல்கிறது. இதற்கிடையில் மூட நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என பலதும் சுழல்கிறது. இயக்குநர் பாலாவின் பசிக்கு அற்புதமாக தீனி போட்டிருக்கிறார் கமெராமான் ஆதர் வில்சன். ஒவ்வொரு காட்சியும் நம் மனக்கண்ணில் பதியுமளவிற்கு அற்புதமாக கமெரா கண்ணினால் பார்த்திருக்கிறார் ஆதர் வில்சன். இந்தப் படத்தின் மற்றுமொரு பலம் ஜெயமோகனின் வசனம். ஜெயமோகன் சிறந்த பல நாவல்களை எழுதிப் புகழ்பெற்றவர். அதில் ஒன்றுதான் 'விஷ்ணுபுரம்'. பௌத்தம், இந்து சமயம் சார்ந்த இந்த நாவலினால்தான் இயக்குநர் பாலா தன் படத்திற்கு வசனம் எழுதக் கொடுத்தாரோ தெரியவில்லை. ஆனால் தன்னுடைய பணியினை மிக அருமையாகச் செய்திருக்கிறார் ஜெயமோகன். பல இடங்களில் அவரது வசனங்கள் மனதைத் தொடுகின்றன. எதிர்பார்ப்பிற்குப் பஞ்சமில்லாமல் தான் இன்னமும் ராஜாதான் என நிரூபித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. பாடல்கள் அற்புதமாக இருக்கின்றன. அதனைவிட பின்னணி இசையினைப் பொறுத்தமட்டில் நிஜமாகவே எங்களை திரைக்கதையோடு அழைத்துச் சென்றிருக்கிறார் இளையராஜா. மொத்தத்தில் அனைத்துமே அற்புதமாக அமைந்திருக்கிறது பாலாவிற்கு.


இடைவேளையின் பின்னர் படத்தினிலே அவசரம் தெரிகிறது. சென்ஸர் செய்த சதியாகக்கூட இருக்கலாம். படமும் மிக விரைவாகவே முடிந்துவிடுகிறது. இறுதிக் காட்சியிலே ஆர்யாவின் நடிப்பும் பூஜாவின் நடிப்பும் எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது என்னமோ உண்மைதான். நிச்சயமாக இவர்களுக்கு விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வளவுகாலம் பொறுத்திருந்ததற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.


நான் கடவுள் படத்தினைப் பொறுத்தமட்டில் குறைகளை குடையாமல் அனுபவித்துப் பார்த்தால் பல அர்த்தங்கள் அந்தப் படத்திலே பொதிந்திருக்கின்றன. பாலாவின் மற்றுமொரு அசத்தலான படைப்பு 'நான் கடவுள்'.

No comments: