இரவுகள் சிலநேரம்
நீளமாய் விரிகிறது...
படுக்கையில் தினம்தோறும்
தேடல்கள் தொடர்கிறது...
வாழ்த்தியனுப்பிய வாழ்க்கையின்று
தொலைந்துபோய் விட்டதடி...
நித்தமும்தான் தேடுகிறேன்
சொற்பமேனும் சிக்கவில்லை...
யதார்த்தத்தின் ஓரத்தில்
நம்வாழ்க்கை வழுக்கியதோ...
இழுக்கின்ற குற்றுயிராய்
சிலகாலம் தவிக்குதடி...
படகேறி பயணித்த நம்காதல்
திசைமாறி தவிக்குதடி...
தொடுவானம் தொட்டுவிட
துணிந்துதான் பயணித்தோம்
தனியோடம் கரைதனிலே
கறைபடிந்து கிடக்குதடி...
கரைசேர நினைத்துத்தானே
படகேறி கனதூரம் பயணித்தோம்...
படகுமட்டும் கரைசேர்ந்தது
நம் வாழ்வு நடுக்கடலில்
நர்த்தனம் புரிகிறதடி...
நம்பிக்கை இழக்கவில்லை
தொடுவானம் நெடுந்தூரமில்லை...
படகது முடங்கி கரையொதுங்கலாம்,
முதுகினில் சிறகு முளைத்து
முடிவில்லா சிகரம் தொடுவோம்...
திகட்டாத இன்ப வாழ்வை
இனிப்பாக வாழும் காலம்
நெடுந்தூரம் இல்லையடி...
உன்சோகம் தனைமறைத்து
என்நெஞ்சில் பால் வார்ப்பாய்...
நீ பாவம் என்றெண்ணி
என்மனதில் அடக்கிவைப்பேன்
துடிக்கின்ற வேதனையை...
இதுதான் வாழ்க்கையானால்
எதிர்காலம் என்னாகும்...?
நிகழ்கால இருட்டதனில்
தொலைத்துவிட்ட நம் வாழ்க்கை
எதிர்கால வெளிச்சத்தில்
கிடைக்கின்ற காலம் வருமா...?
No comments:
Post a Comment