Sunday, June 19, 2011

அவன் - இவன்: பாலாவின் பரிவட்டம்


தமிழ் சினிமாவின் போக்கு எங்கே செல்கிறது என்கிற கேள்வி இப்போது எல்லோர் மனதிலும் அதிகரித்திருப்பதென்னமோ உண்மைதான். ஆனால், இப்படி ஒரு பாதையிலும் சினிமாவை நகர்த்த முடியும் என நிரூபிக்கின்ற இயக்குநர்களும் ஒருசிலர் தமிழ் திரையுலகில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் பாலா.

அண்மைக்காலத்தில் பிரபலமாக இருக்கின்ற இரண்டு கதாநாயகர்களை ஒன்றிணைத்து 'அவன் - இவன்' என்னும் திரைப்படம் பாலாவின் இயக்கத்தில் கடந்தவாரம் வெளிவந்திருக்கிறது. பொதுவான பாலாவின் படமென்றால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். ஒருசிலருக்கு பாலாவின் படம் புரிவதில்லை. அதனால் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாமல் பாலா திண்டாடுவதும் உண்டு.

'அவன் இவன்' திரைப்படத்தினை பார்ப்பதற்காக தெஹிவளை கொன்ஹோட் திரையரங்கிற்கு இரண்டாம் நாள் சென்றேன். வழமையாக புதிய படமென்றால் கூட்டம் அலைமோதும். ஆனால், படம் வெளிவந்து இரண்டாம் நாளென்ற போதிலும் வெளியில் கூட்டம் இருக்கவில்லை. புதிய படம் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என நினைத்து ரசிகர்கள் திரையரங்கிற்கு வரவில்லையோ அல்லது பாலாவின் மீது நம்பிக்கை இல்லாமல் திரையரங்கிற்கு வரவில்லையோ தெரியவில்லை.

திரையரங்கில் பணிபுரிகின்ற நண்பர்களிடம் படம் எப்படி என்று கேட்டேன். படம் புரியவில்லை என்றார்கள். அப்பொழுதே பாலாவின் படம் என்பதை உணரக்கூடியதாக இருந்தது. சரி எப்படியாவது படத்தினை பார்த்துவிட வேண்டும் என தியேட்டருக்குள் புகுந்தேன். எதிர்பார்த்ததைவிட கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. வழமையாக விசிலடிக்கும் கூட்டம் இருக்கவில்லை. மாறாக பாலாவின் கதாபாத்திரங்கள் போன்ற ரசிகர்களே அங்கிருந்தார்.

அவன் - இவன் ஆரம்பித்தது. ஆரம்பத்திலேயே அரண்மனை வாசம் வீசியது. ஜமீந்தாரின் 60ஆவது பிறந்ததின கொண்டாட்ட ஆடல் ஆரம்பமாகியது. பாலாவின் கமெரா கண்ணுக்கு ஆதர் வில்சன் தனது கமெராவால் உயிர் கொடுத்திருக்கிறார். அவன் - இவன் திரைப்படத்தின் முதுகெலும்பாக கமெரா இயங்கியிருப்பது பாராட்டத்தக்கது. அதற்காக ஆதர் வில்சனை நிச்சயமாக பாராட்டியாக வேண்டும். ஏனெனில் பாலாபோன்ற வித்தியாசமாக கதைக்களங்களை தேடுகின்ற இயக்குநரின் திரைக்கதைக்கு உயிர் கொடுப்பதென்பது சாதாரண விஷயமா என்ன?

ஆரம்ப காட்சியிலேயே பெண் வேடமணிந்து குத்தாட்டம் போடுகிறார் விஷால். முறுக்கு உடம்போடு பொலிஸ் வேடங்களிலும் அடிதடி பாத்திரங்களிலும் கலக்கிய விஷால் இந்தத் திரைப்படத்தில் பெண்மை ததும்பும் பாத்திரத்தில் பின்னியெடுத்திருக்கிறார். ஆரம்பமே கலகலவென போகிறது. அடிப்படையில் நகைச்சுவை இளையோடுகிறது. இது பாலாவின் வழமையான திரைப்படத்தின் சாயலிலிருந்து சற்றே மாறுபட்டிருக்கிறது.

அவன் - இவன் திரைப்படத்தின் ஒருவரிக் கதை என்றால் அது 'மிருக வதை'. அதனை சொல்வதற்கு மிகப்பெரிய திரைக்களத்தினை உருவாக்கியிருக்கிறார். பாலாவின் திரைக்கதைக்கு யதார்த்தமான வசனங்களை லாவகமாக உலவவிட்டிருக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். இலக்கிய உலகில் யதார்த்த நடையில் எழுதக்கூடிய தரமான எழுத்தாளர்களில் ஒருவர்தான் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது சிறுகதைகள் இதற்கு சான்று. ஏலவே பல படங்களிற்கு வசனம் எழுதியிருந்தாலும் அவன் - இவன் திரைப்படத்தின் வசனங்கள் மிகவும் யதார்த்தமாக இருக்கின்றன. சாதாரண கிராமத்து குடும்பத்தில் லாவகமாக வருகின்ற கெட்டவார்த்தைகள் முதல் பெரியவர்களின் பௌவியமான வார்த்தைகள்வரை அனைத்தையும் மிக நுணுக்கமாக தனது வசனத்தின் மூலம் உயிர்கொடுத்து திரைக்கதையோடு உலாவவிட்டிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

மொத்த திரைப்படத்தின் சாரம் என்னவென்றால் இதுதான். சாதாரண ஒரு கிராமம். அவர்களின் பரம்பரை தொழில் களவெடுத்தல். களவெடுப்பதை நிறுத்திவிட்டால் தெய்வகுற்றம் ஆகிவிடுமென்று ஊர் பெரியவர்கள் பயமுறுத்துவதால் களவுத் தொழில் பரம்பரை பரம்பரையாக தொடர்கிறது.

இந்த கிராமத்தில் ஒரே தகப்பனுக்கு இரு தாரங்களின் மூலமாக பிறந்த பிள்ளைகள்தான் ஆர்யாவும் விஷாலும். இருதாரம் கட்டியவனின் யதார்த்த வாழ்வில் என்னவெல்லாம் நடக்கும் என்பதையும் திரைக்கதையில் புகுத்தியிருக்கும் பாலா இப்படத்திற்கு பாடல்களையும் பின்னணி இசையையும் பெரிதும் நம்பியிருக்கிறார். நா.முத்துக்குமாரின் அழகான வரிகளுக்கு யுவன் சங்கர்ராஜா இசைமூலம் உயிர்கொடுத்திருக்கிறார். பின்னணி இசையும் திரைக்கதையோட்டத்திற்கு ஏற்றாற்போல் அமைந்திருப்பது யுவனின் இசை ஞானத்திற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

களவுத் தொழிலை செய்துவருகின்ற கிராமத்தில் கலையினை நேசிக்கும் பெண்மைக் குணம்கொண்ட கதாபாத்திரத்தில் வலம் வருகிறார் விஷால். தனிக்கட்டையாக அரண்மனையில் வாழ்கின்ற ஜமீந்தாராக நடித்திருக்கிறார் ஜீ.எம்.குமார். இந்த ஜமீந்தாரை சுற்றியதாகத்தான் கதை பின்னப்பட்டிருக்கிறது. வாரிசுகள் இல்லாமல் தனி மனிதனாக வாழ்கின்ற ஜமீந்தார் - விஷாலையும் ஆர்யாவையும் தன் பிள்ளைகள்போல் வளர்த்து வருகிறார். ஜமீந்தாரின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருவரும் வளர்ந்து வருகிறார்கள். ஆனால், ஆர்யாவும் விஷாலும் அடிக்கடி மோதிக்கொள்வார்கள். தகப்பன் ஒன்றாகியபோதிலும் தாய்மார் இருவர் என்பதால் அவர்களுக்குள் எப்பொழுதும் ஒரு பனிப்போர் இருந்துகொண்டே இருக்கும்.

இப்படி செல்கின்ற கதையில் கதாநாயகிகளாக இருவர் திணிக்கப்பட்டிருக்கிறார்கள். பொலிஸ் கான்ஸ்டபிளாக ஜனனி ஐயரும் (விஷாலுக்கு இவர்தான் ஜோடி) மாணவியாக மது ஷாலினியும் (ஆர்யாவின் ஜோடி) நடித்திருக்கிறார்கள். இதில் மது ஷாலினி ஜமீந்தாரின் எதிரியின் மகள் என்பது ஆர்யா காதலிக்க தொடங்கிய பின்னர் தான் தெரியவருகிறது. இதனை அறிந்ததும் ஜமீந்தார் எதிர்க்கிறார்;. இதனால் ஜமீந்தாருக்கும் ஆர்யா – விஷாலுக்குமிடையில் சிறு பிரிவு ஏற்படுகிறது. அவர்கள் எப்படி ஒற்றுமையாகிறார்கள் என்பதையும் அழகாக பாலா எடுத்துக் காட்டியிருக்கிறார்.

இப்படிச் செல்கிற திரைக்கதையில் மிருகவதை என்ற ஒன்றை காட்டியிருக்கிறார். இதுதான் இத்திரைப்படத்தின் உயிர்நாடி. கட்டாக்காலி மாடுகளை இறைச்சிக்காக கடத்தி விற்கும் வில்லனான ஆர்.கே. நடித்திருக்கிறார். எல்லாம் அவன் செயல் படத்தில் வக்கீலாக வந்து குற்றவாளிகளை கொல்லும் கதாபாத்திரத்தில் நடித்த அதே ஆர்.கே.தான் அவன் - இவனில் வருகின்ற பிரதான வில்லன். இவனது குற்றச் செயல்களை கண்டு பொங்கியெழுகின்ற ஜமீந்தார் ஜீ.எம்.குமார் வில்லனான ஆர்.கேயை பொலிஸில் பிடித்துக் கொடுக்கிறார். இங்குதான் திரைக்கதையில் திருப்பம் ஏற்படுகிறது.

பொலிஸின் பிடியிலிருந்து வெளியில் வருகின்ற ஆர்.கே. – ஜமீந்தாரை கொடூரமான முறையில் கொல்கிறான். ஜீ.எம்.குமார் நிர்வாணமாக இந்த காட்சியிலே நடித்திருப்பார். ஜமீந்தாரை நிர்வாணமாக்கி சாட்டையினால் விரட்டி விரட்டி அடித்துக் கொலை செய்கின்ற காட்சி பாலாவின் தனித்துவத்திற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. அதன்பின்னர் வழமையான திரைப்படங்களின் பாணியில் ஜமீந்தாரை கொலை செய்த ஆர்.கேயை ஆர்யாவும் விஷாலும் கொலை செய்து ஜமீந்தாரின் பிரேதத்துடன் சேர்த்து எரிக்கிறார்கள். அத்தோடு படம் நிறைவடைகிறது. இறுதிக்காட்சியில் வில்லனை கொல்கின்ற காட்சிக்களம் மிக அருமை. அப்படி ஓர் இடத்தில் விஷாலுடன் வில்லன் ஆர்.கே. மோதுகின்ற காட்சியை ஒளிப்பதிவாளர் வில்சன் மிக அருமையாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.

பாலாவின் மூலம் முன்னணி கதாநாயகனாக உயர்ந்த நடிகர் சூர்யா அவன் - இவனின் சிறப்புத் தோற்றத்தில் வருவார். இந்தியாவின் அனைத்து பாகங்களிலும் சிறுவர்களை படிப்பிக்க உதவுகின்ற அகரம் பௌண்டேஷனை பற்றி நடக்கின்ற நிகழ்வில் அதிதியாக கலந்துகொள்வதுபோல் வந்து பல உண்மைகளை சொல்லிச் செல்கிறார். பாலாவின் படத்தில் இது ஒரு விளம்பரம் போல் இருந்தாலும் ஒரு செய்திக்காக அந்தக் காட்சியை வைத்திருக்கிறார் பாலா.

சூர்யாவின் முன்னால் விஷால் மேடையில் நவரசங்களை செய்து காட்டுகிறார். நவரசங்களில் இறுதியாக 'கருணை' யினை விஷால் செய்து காட்டுகின்றபோது திரைக்குள் இருக்கின்ற சூர்யா உட்பட அனைவரும் கண்கலங்கியதோடு மாத்திரமல்லாமல் திரையரங்கில் என்னருகில் இருந்த சிலரும் கண்கலங்கியதை காணக்கூடியதாக இருந்தது. மாறுகண், பெண்மை நடைகொண்ட நடிப்பு என விஷால் இத்திரைப்படத்தில் புதிய பரிணாமத்தினை எடுத்திருக்கிறார். அக்ஷன் ஹீரோவாக வலம்வந்த விஷாலிடம் இப்படியொரு நடிப்பினை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த நடிப்புக்காக விஷாலுக்கு விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மொத்தத்தில் அவன் - இவன் திரைப்படம் இயக்குநர் பாலாவிற்கு பரிவட்டமாக அமைந்திருந்தாலும் சில குறைபாடுகளும் இருக்கின்றன. ஆர்யாவின் பாத்திரம் ஏனோதானோவென்று இருப்பதுபோல் தோன்றுகிறது. இருந்தாலும் தன்னுடைய பாத்திரத்தினை சிறப்பாகவே ஆர்யா செய்திருக்கிறார். அடுத்ததாக திரைக்கதையில் ஒரு கட்டத்தில் ஒரு கோடி பெறுமதியாக மரங்களை விஷால் கடத்துகிறார். ஆனால் அந்த மரத்திற்கு இறுதியில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. திறமையான யதார்த்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை வசனம் எழுத வைத்துவிட்டு சில விரசமான வார்த்தைகளை யதார்த்தம் என்ற போர்வையில் உலாவவிட்டிருப்பதும் சிறு உறுத்தலாக இருந்தது. ஆனாலும் கதையோட்டத்திற்கு இது பொருந்தும் என்பதால் பொறுத்துக்கொள்ளலாம். எத்தனைபேர் இதனை யதார்த்தமாக எடுத்துக்கொள்வார்கள் என்பதுதான் கேள்வி.

பாலாவின் ஏனைய படங்களைவிட அவன் - இவன் ஒரு படி கீழேதான் நிற்கிறது. இருந்தபோதிலும் யதார்த்தமான சினிமாவிற்காக அனைவரும் இத்திரைப்படத்தினை பார்க்கலாம். மொத்தத்தில் அவன் - இவன் பாலாவிற்கு நல்லதொரு பரிவட்டம்.

Wednesday, December 15, 2010

10 தலை நாகமும் பரிகாச உலகமும்..!


கிட்டத்தட்ட ஒரு மாதங்களிருக்கும்... என்னுடைய மருமகன் கனடாவில் இருக்கிறான். அவன் எனக்கு 10 தலையுடன் இருக்கும் நாகபாம்பின் படத்தினை அனுப்பியிருந்தான். அப்பொழுது நான் அதை விளையாட்டாக விட்டுவிட்டேன். காரணம், கணினி உலகில் இதுபோன்ற மாயைகளை ஏராளம் உருவாக்கமுடியும் என்பதை நன்குணர்ந்ததால்.

இந்நிலையில்தான் கடந்தவாரம் சில ஊடகங்கள் இந்த 10 தலை நாகத்திற்கு புத்துயிர் கொடுத்திருந்தன. தொடர்ந்து இந்த 10 தலை நாகத்தின் படத்தினை பிரசுரித்ததோடு தெய்வாம்ச கதைகளையும் அவ்வூடகங்கள் அவிட்டுவிட்டிருந்தன. மஞ்சள் மழை பொழிந்தாNலு மாரியாத்தா கோபமா இருக்கா என்று பொங்கல் வைக்கிற நம்ம சனங்களுக்கு 10 தலை நாகத்தின் புகைப்படத்தை கண்டவுடன் கிருஷ்ணன் மீண்டும் அவதரித்து விட்டானே என்று பக்திமயமாகிவிட்டார்கள்.

வேளியாகிய புகைப்படங்களை வெட்டி ஒட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்ட பலரைப்பற்றியும் கேள்விப்பட்டாயிற்று. இது என்ன கொடுமைடா என்று இருந்தபோதுதான் அதன் உண்மை வடிவத்தினை என்னால் காணமுடிந்தது. பேஸ்புக் நண்பர்கள் சிலர் 10 தலை நாகத்தின் சித்து விளையாட்டை அதாங்க கிறபிக்ஸ் விளையாட்டை காட்டியிருந்தார்கள்.

ஒரு தலை நாகபாம்பின் படம் அழகாக இருக்கிறது. மிகப்பெரிய நாகபாம்பு அது. ஆழகாக அதனுடைய நிழல் பின்புலத்திலே தென்படுகிறது. இந்த பாம்பின் படத்தினை எடுத்து அதற்கு 10 தலை கொடுத்திருக்கிறார்கள் கணினி விற்பன்னர்கள். அருமையான கைவண்ணம். எளிதில் கண்டுபிடிக்க முடியாதளவுக்கு இந்த கைவண்ணம் இருந்ததென்னமோ உண்மைதான். பார்ப்பவர்களுக்கு நிச்சயம் புல்லரிக்கும்.

அப்படி அறியாமல் பார்த்த பத்திரிகை ஜாம்பவான்கள் என தங்களை பறைசாற்றிக்கொள்ளும் ஒருசிலர்தான் 10 தலை பாம்புக்கு தெய்வாம்ச கதை புகட்டியிருக்கிறார்கள் என்னும்போது வெட்கக்கேடாக இருக்கிறது. தமக்கு கணினி பற்றிய அறிவு இல்லையெனில் தெரிந்தவர்களிடம் கேட்டு அதனை மீள்பரிசீலனை செய்திருக்கலாம். எல்லாம் தெரிந்த பண்டிதர்கள் என நினைத்து பாமர மக்களை ஏமாற்றுவது எவ்வகையில் பத்திரிகை தர்மம் என்பதை நானறியேன்.

பத்திரிகை வாசகர்கள் பத்திரிகைகளில் வெளிவருகின்ற விடயங்களை அப்படியே நம்பிவிடுவர் (ஒரு சிலரை தவிர). இது அவர்கள் பத்திரிகையாளர்கள் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையை கெடுக்கின்ற விதமாக பத்திரிகைகள் நடந்துகொள்ளக் கூடாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விடயத்தில் குழப்பமடைந்தவர்கள் அப்பாவி மக்கள்தான். பாவம் அவர்கள். பக்தியென்றால் யார்தான் பின்நிற்பார்கள். அறியாமையின் உச்சகட்டத்தை பக்தி வெளிக்காட்டி நிற்பதென்னமோ உண்மைதான். அவர்களின் பக்தி பலவீனத்தை ஊடக விளம்பரத்திற்காக சிலர் பயன்படுத்த முனைவதுதான் அப்பட்டமான பத்திரிகை தர்ம மீறல். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தாலும் தப்பில்லை.

புராண இதிகாசங்களில் இந்த 10 தலை நாகங்களுக்கு தனியிடம் உண்டு. இப்படி சித்திரிக்கப்பட்டிருப்பது அதன் அசாத்திய தன்மையை வெளிப்படுத்துவதற்காக இருக்கலாம். ராமாயணத்தில் ராவணனுக்கும் 10 தலைதான். அதற்கும் காரணம் இருக்கிறது. ராவணனின் அசுர பலத்திற்கு 10 தலைகள் போதாது என்று கூறுவர். ஆக, ஒருவரின் பலத்தினை அதிகரித்து காட்டவேண்டுமென்றால் இப்படியாக எதையாவது சொல்லித்தான் ஆகவேண்டும். இதனையே கருவாகக்கொண்டு கிரபிக்ஸ் விற்பன்னர்களும் அபூர்வ பாம்பினத்தை கணினியில் உருவாக்கி மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.

ஆனாலும் இரண்டு தலையுடன் சில பாம்புகள் உலகத்தில் வாழ்கின்றன. இது அசாத்தியமான விடயம்தான். இயற்கைக்கு முரணான வகையில் பல உயிரினங்கள் வாழ்கின்றன. இவை சாத்தியமான விடயங்கள்தான். அப்படி அசாத்தியமான முறையில் பல தலைகளுடன் ஒரு பாம்பு பிறப்பதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு தெய்வமுலாம் பூசுவதுதான் தப்பு. மனிதனின் பலவீனத்தை உணர்ந்து மற்றவர்கள் பிழைப்பு நடத்தக்கூடாது.

10 தலை நாகபாம்பு என வெளியிடப்பட்ட புகைப்படத்தில் பல வழிகளில் நீங்கள் கிரபிக்ஸ் வித்தை என்பதை அறியமுடியும். 10 தலைகளின் நிழலும் உண்மையான ஒருதலை நாகத்தின் நிழலும் ஒரே மாதிரி இருக்கும். அத்தோடு கணினியின் உதவியில் வெட்டி ஒட்டப்பட்ட தலைகளின் ஒரு பக்கத்தில் 2 என்ற இலக்கம் தலைகீழாக இருக்கும். மறுபக்கம் அது கிடையாது. கீழ்ப்பக்க தலையின் கழுத்துப்பகுதிய ஒரே மாதிரியாக இருக்கும். இப்படியான குறைபாடுகளே அப்படம் பொய்யானது என்பதை உணர்வதற்கு சாட்சியமாக இருந்தபோதிலும் புத்திஜீவிகளுக்கு ஏன்தான் புரியவில்லையோ தெரியவில்லை.

உண்மையான ஒருதலை நாகத்தின் புகைப்படத்தையும் கிரபிக்ஸ் பண்ணப்பட்ட 10 தலை நாகத்தினையும் ஒன்றாக இங்கு தந்திருக்கிறேன். நீங்களே அதனை ஊகித்துக்கொள்ளுங்கள். தயவுசெய்து இப்படியான போலிகளை நம்பி நீங்கள் ஏமாறாதீர்கள். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல மதங்களுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் ஒரு விடயம் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

Saturday, October 02, 2010

எந்திரன்: தமிழ் திரையுலகின் ஹொலிவூட் படம்




பிரமாண்டங்களின் கூட்டணி, பிரமாண்ட படைப்பு, பிரபல்யங்களின் கை கோர்ப்பு: இப்படி ஏராளமான 'பிரபல்யம்' ஒன்றாக சேர்ந்த படைப்புத்தான் எந்திரன்.

எல்லோருக்கும் தெரிந்த கதையை மிகவும் பிரமாண்டமாக காட்டியிருக்கும் விதம்தான் எந்திரனின் முதுகெலும்பு. சுமார் 400 கோடி ரூபாய் செலவில் உருவாகியிருக்கும் எந்திரன் திரைப்படத்தினை சாதாரணமாக பிரமாண்ட படம் என்று வர்ணிப்பது பொருந்தாது. ஏனெனில் படம் முடிந்த பின்னரும் அந்த பிரமிப்பிலிருந்து எவராலும் மீளமுடியவில்லை என்பதுதான் அதற்கு சான்று.

கடந்த மூன்று வருடங்களாக இத்திரைப்படத்தினை உருவாக்கி வந்திருந்தார் இயக்குநர் ஷங்கர். வழமையாக தன்னுடைய படங்களுக்கு நீண்ட நாட்களை செலவிடும் ஷங்கர், இத்திரைப்படத்திற்கு மேலும் ஒருபடி மேலே சென்று தனது உழைப்பினைக் காட்டியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. தொழில்நுட்ப கலைஞர்கள் பிரமிக்க வைக்கிறார்கள். சரி... எல்லோருக்கும் தெரிந்த கதை என்று கூறியாயிற்று. அப்படி என்னதான் எந்திரன் கதை...?சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் ஒரு விஞ்ஞானி. 10 வருடங்களாக கஷ்டப்பட்டு மனிதனுக்கு ஈடான, தன்னைப்போலவே தோற்றம் கொண்ட ஓர் இயந்திர மனிதனை உருவாக்குகிறார். அந்த எந்திரனை உருவாக்கும் காலத்தில் தனது காதலியான ஐஸ்வர்யா ராயையும் கவனிக்க மறந்துவிடுகிறார். அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து தனது எந்திரனை உருவாக்கும் ரஜனி அதில் வெற்றியும் காண்கிறார்.

உருவாக்கிய எந்திரனை மக்களோடு மக்களாக பழகவிட்டு தனது கண்டுபிடிப்பிலுள்ள குறைபாடுகளை ஒவ்வொன்றாக சரிசெய்கிறார். விஞ்ஞானி ரஜனியின் குறிக்கோள், தனது கண்டுபிடிப்பான எந்திரனை இந்திய இராணுவத்திற்கு ஒப்படைத்து படை வீரர்களின் இழப்பை குறைப்பதுதான். இறுதியாக தனது கண்டுபிடிப்புக்கு அனுமதி கோருகிறார்.

அனுமதிகோரும் இடத்திலிருக்கும் தலைமை விஞ்ஞானிதான் ரஜனியின் குரு. இருந்தபோதிலும் ரஜனியின் கண்டுபிடிப்பு மீது பொறாமைப் படுகிறார். மனித குணங்களையுடைய எந்திரனை, தன் நாசகார செயலுக்கு பயன்படுத்த முயற்சிக்கிறார். இதனால் அந்த கண்டுபிடிப்புக்கு எப்படியாவது அனுமதி மறுப்பதையே குறிக்கோளாக அவர் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பரிசோதனைக்காக வரும் எந்திரனை அனைவருக்கும் பிடித்துப்போய்விடுகிறது. ஆனாலும் தலைமை விஞ்ஞானி அந்த எந்திரனை எப்படியாவது நிராகரிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

தனது கட்டளைப்படி அந்த எந்திரனை இயங்கச் சொல்கிறார். அந்த எந்திரனும் அவரது கட்டளைகளை சரியாக செய்கிறது. படிப்படியாக கட்டளைகளை கூட்டி, இறுதியாக விஞ்ஞானி ரஜனியை கத்தியால் குத்தச் சொல்கிறார். எந்திரனும் கட்டளைக்கு கட்டுப்பட்டு ரஜனியை கத்தியால் குத்தமுனைகிறது. உடனடியாக, அந்த எந்திரனினால் மனிதனுக்கு ஆபத்து என்று கூறி அனுமதி மறுக்கப்படுகிறது.கவலையுடன் திரும்பும் விஞ்ஞானி ரஜனிக்கு எந்திரனின் திறமையை நிரூபிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. நெருப்பில் சிக்கித்தவிக்கும் மக்களை எந்திரன் காப்பாற்றுகிறது. இந்த செயலை அனைத்து ஊடகங்களும் ஒளிபரப்புகின்றன. சந்தோஷமடையும் ரஜனி, தலைமை விஞ்ஞானியிடம் தகவலை கூறுகிறார். அவர் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கும்போது எந்திரன் ஒரு தவறை செய்கிறது. அதாவது நிர்வாணமாக குளித்துக்கொண்டிருந்த இளம் பெண் நெருப்பில் சிக்கியிருந்த நிலையில் அப்பெண்ணை நிர்வாணமாக எந்திரன் தூக்கி வருகிறது. இதனால் அவமானமடைந்து அப்பெண் லொறியில் அடிபட்டு இறந்துவிடுகிறாள்.

இதனையே காரணம் காட்டி மறுபடியும் எந்திரனுக்கு அனுமதி மறுக்கிறார் தலைமை விஞ்ஞானி. மனித உணர்வுகளை இந்த எந்திரனால் புரிந்துகொள்ள முடியவில்லை. வெட்கம், அவமானம், துக்கம், சந்தோஷம் போன்ற எந்த உணர்வுகளையும் இதனால் புரிந்துகொள்ள முடியாது, ஆகையினால் இந்த கண்டுபிடிப்பு ஆபத்தினை விளைவிக்கும் என்று கூறி மறுபடியும் எந்திரனுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

தன்னுடைய 10 வருட உழைப்புக்கு பலன் கிடைக்கவில்லை என மனம் வருந்தும் விஞ்ஞானி ரஜனி, மேலும் ஒருமாதகாலம் தவணை கேட்டு எந்திரனுக்கு உணர்வுகளை கற்பிக்கிறார். உணர்வுகளை முழுமையாக கற்றுக்கொள்ளும் எந்திரன் உலகிலுள்ள அனைத்து கலைகள், உணர்வுகள், மொழிகள் என எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளும் மனிதனுக்கு இணையான இயந்திர மனிதனாகிறது.

இந்நிலையில்தான் விஞ்ஞானி ரஜனியின் காதலியான ஐஸ்வர்யாராயை காதலிக்க தொடங்குகிறது எந்திரன். இதனை தடுக்க முடியாமல் தடுமாறும் விஞ்ஞானி ரஜனி, எந்திரனை சுக்குநூறாக்கி குப்பையில் வீசிவிடுகிறார். அந்த எந்திரனின் பாகங்களை தேடியெடுக்கும் தலைமை விஞ்ஞானி, எந்திரனை தீயசக்தியாக உருவாக்குகிறார்.

தீயசக்தியாக உருவெடுக்கும் எந்திரன் பல ஆயிரம் எந்திரன்களை தன்னைப்போலவே உருவாக்கி பல நாசகார செயல்களை செய்வதோடு ஐஸ்வர்யா ராயையும் சிறைபிடிக்கிறது. ஐஸ்வர்யா ராயினை எப்படி விஞ்ஞானி ரஜனிகாந்த் காப்பாற்றுகிறார், தீய சக்தியாக இயங்கும் எந்திரனை எப்படி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார் என்பதுதான் மீதிக்கதை.

எந்திரன் கதையினை திரைக்கதையாக நகர்த்தியிருக்கும் விதம் இயக்குநர் ஷங்கருக்கு சபாஷ் போட வைக்கிறது. பிரபல எழுத்தாளர் சுஜாதா இறுதியாக எழுதிய வசனங்கள் காதுக்கு இனிமையாக இருக்கின்றன. சில இடங்களில் இயக்குநர் ஷங்கரும் கார்க்கியும் வசனங்களை எழுதியிருக்கிறார்கள்.

எந்திரன் படத்தில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் பிரமாதமாக இருக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மானின் மற்றுமொரு இசை சாதனை எந்திரன் பாடல்கள். பாடல்களை படமாக்கியிருக்கும் விதம் மனதினை தொட்டுச் செல்கிறது. அழகான இடங்களில் பாடல்களை படப்பிடிப்பு செய்திருக்கிறார்கள்.

சண்டைக்காட்சிகளில் பிரமாதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரத்னவேல். பீட்டர் ஹெய்னினால் வடிவமைக்கப்பட்டிருக்கும் சண்டைக்காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. அத்தோடு தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு எந்திரனில் பிரமாதமாக இருக்கிறது.

படமாக்கப்பட்ட அனைத்து காட்சிகளையும் ஒன்றாக தொகுத்து பிரமாதமாக முழுமைப்படுத்தியிருக்கும் அன்டனியின் கைவண்ணத்துக்கு நிச்சயமாக பாராட்டு தெரிவித்தாகவேண்டும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய விதத்தில் எந்திரன் உருவாகியிருப்பது பாராட்டத்தக்கதே.

இலங்கையிலும் திரையிடப்பட்டதிலிருந்து கூட்டம் அலைமோதுவதை காணக்கூடியதாக இருக்கிறது. மொத்தத்தில் எந்திரன்: ஹொலிவூட் படங்களுக்கு இணையாக எடுக்கப்பட்டிருக்கும் ஒரு தமிழ் படம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

Friday, September 10, 2010

சொல்வதற்கு வெட்கம்தான்…

நல்லூர் கந்தன் பற்றி தெரியாதவர்கள் குறைவுதான். யாழ்ப்பாணத்தின் சின்னமாகவும் இலங்கையின் புனித அடையாளமாகவும் திகழும் நல்லூர் கந்தனின் தேர் உற்சவத்தில் முதல் முதலாக கலந்துகொள்ளும் வாய்ப்பு இல்லையேல் கொடுப்பனவு எனக்கு இம்முறை கிடைத்தது.

யாழ்ப்பாணத்திற்கு பலதடவை சென்றிருந்தபோதிலும் நல்லூர் கந்தனின் அலங்கார ரத பவனியை காணும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததில்லை. அதுபற்றிய அனுபவம் எனக்கு கிடைக்கவில்லை என்னும்போது எனக்கு வெட்கமாகத்தான் இருந்தது. காரணம் நானும் வடபகுதியை சேர்ந்தவன் என்பதால். ஆரம்பகாலத்திலேயே புலம்பெயர்ந்துவிட்டதால் அந்த அரிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்காமலே போய்விட்டது. நீ…ண்…ட… காலத்தின் பின்னர் அச்சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி.

தற்சமயம் நான் பணிபுரிகின்ற நிறுவனம் இலங்கையின் முன்னணி பத்திரிகை வெளியீட்டு நிறுவனமான விஜயா நியூஸ்பேப்பர்ஸ். இதில் தமிழ்மிரர் இணைய (www.tamilmirror.lk) வெளியீட்டின் ஆசிரியராக நான் இருக்கின்றேன். தமிழ்மிரர் (www.tamilmirror.lk) இணையத்தளத்தில் நல்லூர் கந்தனின் திருவிழா நிகழ்வுகளை உடனுக்குடன் பதிவிட்டு வந்தோம். அதனைத் தொடர்ந்து நேரடியாக, அலங்கார நல்லூர் கந்தனின் ரத பவனியை நேரில் பார்த்து அதன் தொகுப்பை பதிவிடும்படி பணிக்கப்பட்டிருந்தேன். அதற்கமைய என்னுடைய குழுவுடன் இம்முறை நல்லூர் சென்றிருந்தேன்.

இப்படி ஒரு ஜனத்திரளை புகைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்த எனக்கு நேரில் பூரிப்பை ஏற்படுத்தியது. சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான அடியார்கள் ஒரே இடத்தில் கூடி ‘அரோகரா’ என்று ஒலியெழுப்புவது தேவலோகத்தில் இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்தியது. நீண்ட வரலாற்றினைக் கொண்ட நல்லூர் கந்தன் கோயிலில் இன்னமும் சட்டங்கள் ஒரேமாதிரியாக இருக்கின்றன. பெரும் புள்ளிகள் முதல் சிறு புள்ளிகள்வரை ஒரே நடைமுறைதான். இந்த நடைமுறையை நான் இதுவரை அனுபவித்ததில்லை. 'ஒரு ரூபாய்க்கு அர்ச்சனை' என்னும் நடைமுறை என் நெஞ்சை தொட்டது. பொதுவாக கோயில்களில் பணத்தைப் பெற்று கடமைக்கு அர்ச்சனை செய்வது எனக்கு பிடிக்காத போதிலும், இந்த 'ஒரு ரூபாய் அர்ச்சனை' என்பது ஏழைகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று நினைக்கும்போது பூரிப்பாகவிருந்தது.

நல்லூர் கந்தனின் தேர் பவனியினை புகைப்படம் எடுப்பதோடு ஒளிப்பதிவும் செய்வதற்காக என்னுடைய நிறுவன புகைப்பட கலைஞர் 'வருண' என்னுடன் அங்கு வந்திருந்தார். ஒரே நேரத்தில் ஒளிப்பதிவையும் புகைப்படத்தினையும் எடுப்பது சிரமம் என்பதை உணர்ந்த நான், ஒளிப்பதிவு கருவியை பொறுப்பேற்றேன். புகைப்படம் எடுப்பது, ஒளிப்பதிவு செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு பிடித்த விடயத்தை செய்யும்போது மனம் இன்னமும் உயர பறக்கத் தொடங்கியது. இன்னமும் என்னுடைய கால் நூறுவீதம் குணமடையாத போதிலும் ஆர்வக்கோளாறில் ஜனத்திரளில் நானும் மிதக்கலாகினேன்.

அங்கு கூடியிருந்த அத்தனை அடியார்களும் என்னதவம் செய்தார்களோ தெரியவில்லை, அப்படியொரு பாக்கியத்தினைப் பெற்றிருந்தார்கள். இதோ என் அருகில் அலங்கார கந்தன் ரதமேறி பவனி வருகிறான். அந்த ஆறுமுக கந்தனை மிக அருகில் சந்திக்கின்றேன். இவ்வளவுநாள் அவரை சந்திக்காமல் இருந்தது அருகில் தரிசிப்பதற்குதானோ என எண்ணிக்கொண்டேன். என்னுடைய வலிகளை மறந்து நல்லூர் கந்தனின் ரத ஊர்வலத்தை படமாக்கிக்கொண்டிருந்தேன். ஜனத்திரளோடு கந்தனும் மிதந்து சென்ற அழகு இன்னமும் என் மனதில் நிழலாடுகிறது.

பாதுகாப்பு படை வீரர்கள் முதற்கொண்டு பாமர மக்கள்வரை ஒரே சிந்தனையோடு ஒன்றுகூடியிருந்த இடம் நல்லூர் ஆலயம். இங்கு எனக்குக் கிடைந்த அனுபவத்தை உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். நீங்கள் பலர் இந்த அனுபவத்தை ஏற்கனவே பெற்றிருப்பீர்கள். இருப்பினும் எனக்கு இது முதற்தடவை என்பதால் பதிவிட்டேன். நல்லூர் கந்தனின் ரத உற்சவ படங்களை www.tamilmirror.lk இல் நீங்கள் பார்க்கலாம்.

Sunday, September 05, 2010

நீ…ண்…ட... இடைவெளி…

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

நீ…ண்…ட…தொரு இடைவெளிக்குப் பின்னர் இந்த பதிவிடுதலினூடாக உங்களை சந்திக்கிறேன். எதிர்பாராத துரதிர்ஷ்டத்தில் சிக்கியதால் சிலகாலம் என்னால் எதுவுமே செய்யமுடியவில்லை. கடந்த வருடம் (2009) பெப்ரவரி 22ஆம் திகதி என்வாழ்வில் திருப்புமுனையான நாள். அன்றைய நாள் எனக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்த நாள்.

வாழ்வின் எந்தவிட குறிக்கோளும் இல்லாமல் தறிகெட்டு சுற்றித்திரிந்த என்னுடைய வாழ்விற்கு ஆண்டவன் போட்ட கடிவாளம் அந்நாள். எந்தவிதமான சேமிப்புகளோ, நாளைய சிந்தனைகளோ இல்லாமல் அன்றைய வாழ்வை இனிமையாக செலவுசெய்த என் வாழ்வில் இழவுவிழுந்த நாள். இப்படியொரு நாளினை நான் எதிர்கொள்ளாவிட்டால் இன்று இந்நிலையில் நான் இருப்பது சந்தேகமே.

கடந்தவருடம் பெப்ரவரி 13ஆம் திகதி காரியாலய விடயம் சம்பந்தமாக இந்தியா சென்றேன். எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (வீரகேசரி) நிறுவனத்தின் ‘இசை உலகம்’ சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்தமையால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பல தகவல்களை இந்தியாவில் திரட்டவேண்டி இருந்தமையால் அங்கு சென்றேன். என்னுடைய நண்பன் டிரோனும் அங்கு என்னுடன் இணைந்துகொண்டான். 9 நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்து, தகவல்களை திரட்டிக்கொண்டு 21ஆம் திகதி இரவு இலங்கை வந்தோம்.

22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வழமைபோல் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்துவிட்டு வந்திருந்தபோது என்னுடைய செல்லக்குட்டி (அது என்னுடைய வளர்ப்புப் பூனை. ஆதன் பெயர் குட்டி) என்மடியில் ஏறி விளையாடிக்கொண்டிருந்தது. நீண்டநாள் என்னை காணாததால் அதிகமாகவே என்னோடு விளையாடியது என் குட்டி. இப்படியே இருக்கும்போது 'விதி' என்னை அழைத்தது. மதிகெட்டு நானும் செல்ல தயாராகினேன். காலை 10.20 மணிக்கு என்னுடைய மோட்டார் சைக்கிளில் விதியை எதிர்கொள்ள கிளம்பும்போது வாசற்படியில் கால் தடுக்கியது. அம்மா சொன்னா… ‘தம்பி… அஞ்சு நிமிசம் இருந்திட்டு போ…’. மதிமயக்கத்தில் சொன்னேன் ‘இதெல்லாம் யாரு பாக்கிறது… சும்மா இருங்கோவன், நான் அவசரமா போகனும்…’.

அவசரமாக செல்லவேண்டும் என்பதால் வழமையாகவே வேகமாக செல்லும் நான், அன்றைய தினம் என்னும் வேகமாக சென்றேன். சென்னுகொண்டிருக்கும்போது எங்கிருந்தோ வந்த வாகனம் பாதையை குறுக்கிட்டது. அடுத்தநிமிடம் நான் தூக்கி எறியப்பட்டேன். நிமிர்ந்துபார்த்தேன், என்னுடைய தலைக்கும் வாகன டயருக்கும் 'ஓர் அடி' வித்தியாசம்தான் இருந்தது..! 'அப்பாடா… தலைதப்பியது..' என்று நினைத்துக்கொண்டே, அவசரமாக செல்லவேண்டும் என்பதால் எழுந்திருக்க முயற்சித்தேன். என்னால் எழுந்துகொள்ள முடியவில்லை. மறுபடியும் முயற்சித்தேன் முடியவில்லை. என் காலினைப் பார்த்தேன். அது ஒரு சுற்று சுற்றியிருந்தது. அதைப் பார்த்ததும் எனது தலையும் சுற்றியது. என் எதிர்காலம் எங்கோ தொலைவில் போய்க்கொண்டிருப்பதாய் உணர்ந்தேன்.

மறுகணம் என்னை எதிர்பார்த்திருக்கும் விதியின் அழைப்பு. ‘என்னும் வரவில்லையா..?’ என்றது. என்னுடைய விபத்தினை சொன்னேன். அதற்குமேல் என்னாலும் பேசமுடியவில்லை. அழைப்பினை துண்டித்தேன். வலியினால் துடித்தேன். கெண்டைக்கால் எலும்பு இரண்டும் உடைந்து, கால் தொங்கிக் கொண்டிருந்தது. என்னை மோதிய சாரதி பயத்தில் தடுமாறினார். நான் அவரை சமாதானப் படுத்தினேன். 'விபத்து என்பது எதிர்பாராமல் நடப்பதுதானே...' என்றேன். புரிந்தவராய் என்னை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றார். செல்லும்போதே என் உடன்பிறவா தங்கை லக்ஷாவின் அழைப்பு. ‘அண்ணா என்னாச்சு..?’ நடந்ததை சொன்னேன். அதன் பின்னர் வீட்டாருக்கு தெரிவித்தேன். அவர்கள் நம்பவில்லை. ஏனொனில் நான் வீட்டிலிருந்து கிளம்பி 15ஆவது நிமிடத்தில் விபத்து. விபத்து நடந்த இடத்திற்கு சாதாரணமாக செல்வதானால் 30 நிமிடங்கள் ஆகும். ஆகையினால் 15 நிமிடத்தில் அவ்விடத்தில் விபத்து என்பதை வீட்டார்கள் நம்பவில்லை. நிலைமையை தெளிவாக விளங்கப்படுத்தினேன். அதன் பிறகுதான் துடிதுடித்தார்கள்.

காலை 11 மணியளவில் மருத்துவமனையில் சேர்த்தார்கள். பரிசோதித்த மருத்துவர்கள், 6 மணித்தியாலங்களின் பின்னர்தான் சத்திரசிகிச்சை செய்யமுடியும் என்றார்கள். உணவு உட்கொண்டு 6 மணித்தியாலங்களின் பின்னர்தான் மயக்க மருந்து கொடுக்க வேண்டும் என்பது மருத்துவ விதி. அங்கும் 'விதி' என்னோடு விளையாடியது.

வலியினை குறைப்பதற்காக மருந்து கொடுத்தார்கள். ஓரளவு வலி குறைந்தது. வலிநீக்கி கொடுத்து 6 மணித்தியாலங்கள் கட்டிலில் கிடந்தபொழுது என் எதிர்காலம் கண்முன்னே தெரிந்தது. 'இனி என்ன செய்வது..?' என்று அப்பொழுதுதான் சிந்தித்தேன். தொலைதூரம்வரை இருள்தான் தெரிந்தது. அந்த 6 மணித்தியாலங்களில் என்னுடைய நண்பர்கள் பலர் அழைத்தார்கள். அவர்களால் நான் விபத்துக்குள்ளாகியதை நம்ப முடியவில்லை. ஒருசிலர் நேரில் வந்தார்கள். அவர்களுடன் உரையாடும்போதும் என்னுடைய நினைவுகள் எதையோ தேடிக்கொண்டிருந்தது. தொலைந்துகொண்டிருக்கும் எதிர்காலம் அது.

மாலை 5 மணியளவில் சத்திரசிகிச்சை செய்தார்கள். அது சாதாரண சிகிச்சைதான். உடைந்த எலும்பை ஒன்றாக சேர்த்து பத்துப்போட்டார்கள். மூன்று மாதங்களுக்கு ஓய்வெடுக்கச் சொன்னார்கள். அப்பொழுது ஓரளவு நம்பிக்கை வந்தது. மூன்று மாதங்களில் சரியாகிவிடும் என்று. காலங்கள் காற்றோடு கலைந்தது. என்னோடு நெருங்கி இருந்த உறவுகள் ‘பொயின் லெஸ்’ என்று சொல்லி ஒவ்வொன்றாய் விலகத் தொடங்கினார்கள். மதனின் கதை அவ்வளவுதான் என்று என் காதுபடவே பலர் கூறினார்கள். இவை என் வாழ்வுக்கு உரமாகியது. என் மனதும் உரமாகியது. உறுதியோடு காத்திருந்தேன். மூன்றாவது மாதத்தில் மருத்துவமனை சென்று பார்த்தபோது மறுபடியும் எலும்பு விலகிவிட்டது என்றார்கள். என் வாழ்வின் எதிர்காலமும் என்னை விட்டு விடகத் தொடங்கியது. என் நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.

மறுபடியும் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. இன்னும் 3 மாதங்கள் காத்திருக்கச் சொன்னார்கள். காத்திருப்பதைத்தவிர வேறு என்னதான் செய்யமுடியும். அன்று அம்மா சொல்லும்போது '5 நிமிடம்' காத்திருந்திருந்தால் ஒருவேளை என்னுடைய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம் என நினைத்துக் கொண்டேன். இப்பொழுது என் கூட இருப்பவர்கள் கொஞ்சம்தான். ஏனையவர்கள் ஏனோ என்னை விட்டு விலகத் தொடங்கினார்கள். எதற்காக விலகினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் கவனிக்காதிருந்த பல சொந்தங்கள் என்னோடு உறவாடத் தொடங்கின. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்த சொந்தங்கள் எனக்கு ஆறுதலாக இருந்தன. அவர்களின் ஆறுதல் வார்த்தைகள்தான் இன்று என்னை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. சிந்தனையோடே எஞ்சிய மூன்று மாதங்களும் ஓடிவிட்டன. மறுபடியும் மருத்துவமனை. இம்முறையும் கால் எலும்பு விலகியிருந்தது கண்டு வாய்விட்டு அழுதேன். இதற்குமேல் எனக்கு எதிர்காலம் இல்லை என குமுறினேன்.

அரச மருத்துவமனை வேண்டாம் என வெளியேறினேன். சில காலம் ஆயுர்வேத சிகிச்சை செய்தேன். ஓரளவு குணமாகியது. இருப்பினும் என்னுடைய கால் ஓர் அங்குலம் சிறிதாகிவிட்டதாக அந்த ஆயுர்வேத மருத்துவர் கூறினார். அதனை குணப்படுத்த முடியாது. ஆரம்பத்தில் ஏற்பட்ட தவறால் இது நிகழ்ந்திருக்கிறது என்றார்கள். அப்பொழுது நினைத்துக்கொண்டேன்… வாழ்க்கை முழுவதும் நொண்ட வேண்டியது போலத்தான் இருக்கிறது என. 9 மாதங்கள் கழிந்தும் இன்னமும் என் கால்கள் குணமடையவில்லை. மனம் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழக்கத் தொடங்கியது.

இந்நிலையில்தான் என்னுடைய இந்திய நண்பனொருவன் என்னை அங்கு அழைத்தான். அதன் பின்னர் அங்கு சென்று சத்திரசிகிச்சை செய்தேன். 5ஆவது நாள் என்னால் எழுந்து நடக்க முடிந்தது. மறுபடியும் நம்பிக்கை துளிர்விட்டது. என் உடன்பிறப்புகளின் உதவியோடு நடைபெற்ற அந்த சத்திரசிகிச்சைக்கு துணையாக என்னுடைய உடன்பிறவாக சகோதரர்கள்போல் இருந்தவர்கள் அங்கிருக்கும் நண்பர்கள்தான். இயக்குநர் முத்துசெழியன் என்கூடவே 5 நாட்கள் மருத்துவமனையில் தங்கினார். அவரை எனக்கு அறிமுகப்படுத்திய கார்த்திக் (விஜய் டிவி) அடிக்கடி என்னை சந்திப்பார். கணேஷ் (உதவி இயக்குநர்) எப்பொழுது நான் அழைத்தாலும் உடனே ஓடிவந்து உதவி செய்பவர். இவர்கள்தான் எனக்கு உறுதுணையாக நம்பிக்கையூட்டியவர்கள்.

இந்த இடைப்பட்ட காலத்தில் என்னுடைய தொழிலினையும் இழக்கவேண்டி ஏற்பட்டது. நீண்ட விடுமுறையை எந்த நிறுவனம்தான் தாங்கிக் கொள்ளும். அதன் பின்னர் படிப்படியாக குணமடையத் தொடங்கினேன். இப்பொழுது 99 வீதம் குணமடைந்துவிட்டது. மறுபடியும் எழுந்திருக்கிறேன்… என் உள்ளத்தாலும்.

இந்த இடைப்பட்ட காலத்தில் என்னால் எந்தவிதமான விடயத்திலும் மனதினை செலுத்த முடியவில்லை. அதனால்தான் நீண்ட காலமாக என்னுடைய தளத்தினை கவனிக்கவில்லை. இப்பொழுது நானும் என் உள்ளமும் தெளிவாக இருக்கிறது. ஆகையினால் தொடர்ந்து உங்களை சந்திக்கிறேன். என் துக்கத்தில் பங்குகொண்ட அனைந்து சொந்தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய அனைவருக்கும் என உளமார்ந்த நன்றிகள் பலகோடி உரித்தாகட்டும்.

Thursday, February 12, 2009

உலகின் மிகச்சிறிய குரங்கு


உலகத்திலேயே மிகச்சிறிய குரங்கினத்தினை Marmouset என அழைக்கிறார்கள். இது பிரஞ்சுக் சொல்லாகும். அதன் அர்த்தம் குள்ள மனிதன், குறுனி இறால் எனப்படுமாம். இந்தவகை Marmousetகள் பிரேஸில், பெரு, கொலம்பியா போன்ற நாடுகளின் மழைக்காடுகளில் வசிக்கின்றனவாம். இதனுடைய வளர்ச்சி 5 தொடக்கம் 6 அங்குலங்கள்தான் இருக்குமாம்... (வால் தவிர்த்து). மிகவும் அபூர்வமாக 6 தொடக்கம் 8 அங்குலங்களும் வளரக் கூடியனவாம். இந்த சிறியவகை குரங்குகள் பெரும்பாலும் மரத்தின் உச்சியில்தான் குடிகொள்கின்றனவாம். ஆகையினால் இவற்றினை நீங்கள் புகைப்படங்களில்தான் பார்க்க முடியும். காட்டினுள் சென்று பார்ப்பவர்களுக்குக் கூட இதன் அசைவுகளைக் கண்டுபிடிப்பது கடினம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

காதலர்தின பரிசு...

வருடத்தில் ஒருதினம் காதலர்களுக்கு என்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். பெப்ரவரி 14ஆம் திகதி வருகிறதென்றாலே அனைத்து வியாபார நிறுவனங்களும் தங்களுடைய நிறங்களையே மாற்றிக் கொள்கிறார்கள். காதலர்களினால் இந்த விழா கொண்டாடப்படுகிறது என்பதற்கு அப்பால், வியாபார விருத்திக்காக காதலர்தினம் பிரபல்யப்படுத்தப்படுகிறது என்று சொன்னால் அதில் தப்பில்லை என நினைக்கின்றேன்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் தனியார் வானொலிகளின் வரவின் பின்னர்தான் இந்த காதலர்தின கொண்டாட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கின. அதற்குமுன்னர் இதனைப்பற்றி யாரும் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. காதலும் வியாபாரமாக்கப்பட்டிருக்கின்றமைதான் இங்கு வேடிக்கையான விடயம். தங்கள் காதல் துணையினை தேடி அலைபவர்களுக்கு இந்த காதலர் தினம் பெரிய கொண்டாட்டமாக அமைகின்றது. அன்றைய தினத்தில்தான் அவர்கள் பல பரிசுப் பொருள்களை வாரி வழங்கும் வள்ளலாக மாறுகின்றார்கள்.

உண்மையிலேயே பரிசில்கள் கொடுப்பதால் காதல் சிறப்படைகின்றதா? என்ற கேள்வியினை ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள். நிச்சயமாக பரிசில்கள் பரிமாறும்போது பாசம் அதிகரிக்கின்றமை உண்மைதான். ஆனால், குறிப்பிட்ட ஒருதினத்தில் சிறப்பான பரிசில்கள் என்ற போர்வையில் காதலை கொச்சைப்படுத்துவது நியாயமா? அப்படியே அன்றை தினத்தை சிறப்பானதாக கொண்டாட நினைத்தால் உங்கள் பாசத்தினை அதிகமாக வெளிப்படுத்திக் காட்டுங்கள். அதைவிடுத்து, பரிசில்கள் என்ற போர்வையில் காதலை வியாபாரமாக்காதீர்கள்.

காதலர்களுக்கிடையில் பரிமாற்றங்கள் இருப்பது சிறந்ததுதான். அது பரிசில்களாக இருக்கலாம், பாடல்களாக இருக்கலாம், கவிதைகளாக இருக்கலாம். அவரவர்க்கு என்ன பிடிக்குமோ அதனை அதிகமாக பகிர்ந்து கொள்வது காதலின் ஈடுபாட்டை அதிகப்படுத்தும். இது ஒரு தினத்தில் மட்டும் செய்யாமல், எப்போதெல்லாம் உங்களுக்கு முடிகிறதோ அப்போதெல்லாம் செய்யுங்கள். விலைகொடுத்து வாங்கிக் கொடுக்கும் பரிசில்களைவிட, விலைமதிக்கமுடியாத எத்தனையோ பரிசில்கள் உங்கள் துணைக்குப் பிடித்திருக்கலாம். அதனைத் கண்டுபிடித்து பரிசளிப்பீர்களேயானால் அதுதான் உங்களுடைய திறமை. அங்குதான் உங்கள் காதல் உயர்ச்சியடையும்.

எனவே, காதலர் தினத்தில் பரிசில்கள் வழங்கவேண்டும் என ஓடித் திரியாமல், பிடித்த விடயங்களை தேடிக் கண்டுபிடித்து காதலை வளப்படுத்துங்கள். வாழ்க காதல், வாழ்க காதலர்கள்...

அலையோசை...

அந்திப் பொழுதினிலே
ஆர்ப்பரிக்கும் அலைக்கரையில்
அமைதியாக நானிருந்து
நாணியிருக்கும் உன்முகத்தை
பார்த்துரசிக்க ஆசை கொண்டேன்...

சிந்தை நிறைந்த சிந்தனையை
சிதறாமல் மூடிவைத்து
சிலையாக எப்படியுன்னால்
சிலநேரம் நிற்கமுடிகிறது...?
எத்தனைமுறை முயற்சித்தும்
என்னால்மட்டும் முடியவில்லை,
ஓயாத அலையோசைபோல்
மனதோரம் சங்கீதம் எப்போதும்
இனிமையாய் கேட்குதடி...!

அலைமோதும் பாறைதனில்
ஈரக் கசிவுகள் கல்லின் மேலிருக்கும்,
என் பாசக் கனிவுகள் உன் உள்ளத்தில்
உளிகொண்டு செதுக்கப்பட்டிருக்கும்...!
சிறுபிள்ளைத்தனமான உன்பேச்சை
என் மூச்சோடு சேர்த்துவைத்து
சுவாசித்து சுவை அறிவேன்...
அதை அறிந்திருக்கும் நீகூட
உன்பேச்சை சிலநேரம்
சிக்கனமாய் உதிர்ப்பாயே...
என் உள்ளத்தை உசுப்பிப் பார்ப்பதில்
உனக்கு அவ்வளவு பிரியமா...?

கடலின் ஆழத்தை அறிவதற்கு
முடியாது முடமாகிய கோவத்தில்
கரையேறி கல்தனில் தலைமோதிய
ஆர்ப்பரிக்கும் அலையோசை
என்காதில் சொல்வதென்னவோ
உன்மன ஆழத்தையாவது அறிந்துவா
என்றுதான் எண்ணுகின்றேன்...

செறிந்த அன்பதனை பரிவாக உன்மீது
பவளமாய் பதித்திருக்கேன்...
புரிந்தென்னை நேசிக்கிறாய்,
உள்மனது தவிக்குதடி செல்லமே
எப்போதும் என்னோடு சேர்ந்துவா
சொர்க்கங்கள் பலவற்றை
கட்டி நாம் வாழவேண்டுமடி...!

Monday, February 09, 2009

நான் கடவுள்

மூன்று வருடங்களுக்கு மேலாக இயக்குநர் பாலாவினால் செதுக்கிய சிற்பம் கடந்த 6ஆம் திகதி மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு காலம் எடுத்து படத்தினை இயக்கியிருக்கிறாரே என பலர் திட்டித் தீர்த்தார்கள் பாலாவினை. இயக்குநர் பாலாவினால் செதுக்கப்பட்ட சிற்பம் 'நான் கடவுள்' அவதாரம் எடுத்து சிறப்பாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தினைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக பாலா எடுத்துக்கொண்ட கால அவகாசம் நியாயமானது என ஏற்றுக்கொள்வார்கள்.


தன்னைத்தானே கடவுள் என நினைத்து வாழ்கின்ற அகோரிகளைப் பற்றிய அடிப்படைக் கதை. காசியிலே வாழ்கின்ற அகோரிகளின் வாழ்வினை மிகவும் சிரமப்பட்டு படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலா. படத்தின் கரு என எடுத்துக்கொண்டால் பிச்சைக்காரர்கள் தான். பிச்சைக்காரர்களின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற கசப்பான அனுபவங்களை தத்ரூபமாக வடித்திருக்கிறார் பாலா. நந்தா, சேது, பிதாமகன் போன்ற படங்களிலும் இப்படியான பல நடைமுறைப் பிரச்சினைகளைப் படமாக்கியிருப்பார் பாலா. அதே பாணியினைத்தான் நான் கடவுள் படத்திலும் பின்பற்றியிருக்கிறார்.
ஆரம்ப காட்சியே அழகான காசியினைக் காட்டுவதாக அமைகின்றது. சன நெருக்கடி மிகுந்த காசியில் படமாக்கியிருக்கின்ற விதம் மெய்சிலிர்க்க வைக்கின்றது. ஜோதிடர் ஒருவர் சொன்ன கதையினை நம்பி தனது மகனை காசியிலே கொண்டுவந்து விட்டுச் செல்கின்ற தகப்பன், 14 வருடங்களின் பின்னர் அவனைத் தேடி காசி வருகிறார். வருகின்ற தகப்பன் அகோரி வடிவில் இருக்கின்ற தனது மகன் ஆர்யாவைக் காண்கின்றார். ஆர்யாவின் அறிமுகமே அசத்தலாக இருக்கின்றது. வேறு எந்த கதாநாயகனுக்கும் கிடைக்காத அறிமுகம் ஆர்யாவுக்கு இந்தப் படத்திலே கிடைத்திருக்கின்றது எனலாம்.


காசியிலே பிணங்கள் எரிகின்ற மயானத்தில் அகோரியாக குருவின் கட்டளைக்குப் பணிந்து இருக்கிறார் ஆர்யா. எரிகின்ற உடலின் ஆத்மா சுவனம் செல்லவேண்டுமா? நரகம் செல்ல வேண்டுமா? என்பதை அகோரிகள் அறிவார்களாம். அதனால்தான் எங்கோ இறந்தவர்களின் உடலினை காசியிலே கொண்டுவந்து அகோரிகள் முன் எரிப்பார்களாம். அப்படியிருக்கின்ற தனது மகனை அழைத்துச் செல்ல முயற்சிக்கும் தந்தையின் வேண்டுதல் பலிக்கிறது. தன்னைக் கடவுளாக நினைத்து வாழ்கின்ற ஆர்யாவினால் சொந்த பந்தங்களுடன் பழக முடிவதில்லை. அதனால் தனிப்பட குகைகளில் வாழ்கின்றார்.


இந்தச் சூழ்நிலையில்தான் பிச்சைக்காரர்களை உருவாக்கி, அவர்கள் எடுக்கின்ற பிச்சையிலே தான் குளிர்காய்கின்ற ராஜேந்திரன் அறிமுகமாகிறார். அவர்தான் வில்லன். ஊனமுற்ற பிச்சைக்காரர்களை உண்மையிலேயே பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பாலா. அவர்களை எப்படித்தான் நடிக்கவைத்தாரோ தெரியவில்லை. அதனால்தான் பாலாவிற்கு நீண்ட காலம் தேவைப்பட்டிருக்கலாம். இப்படிப் பிச்சைக்காரர்களை தேடிப்பிடிக்கின்றவர்கள் கையிலே மாட்டுகின்றார் கண் தெரியாத பூஜா. அழகுதேவதையாக தோன்றுகின்ற பூஜாவா இது என்னும் அளவுக்கு அற்புதமாக நடித்திருக்கிறார். மன்னிக்கவும், வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால்தான் பொருந்தும். அகோரியா ஆர்யா நடிப்பில் பின்னி எடுக்கின்றார் என்றால், கண்தெரியாத பிச்சைக்காரியாக பூஜா அசத்தியிருக்கிறார். இருவரும் விருதுக்கு போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல அந்தப் படத்தின் அத்தனை கதாபாத்திரங்களும் நிஜமாக வாழ்ந்திருக்கிறார்கள்.


இந்த பிச்சைக்காரர்களை மையமாக வைத்து கதை நகர்ந்து செல்கிறது. இதற்கிடையில் மூட நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என பலதும் சுழல்கிறது. இயக்குநர் பாலாவின் பசிக்கு அற்புதமாக தீனி போட்டிருக்கிறார் கமெராமான் ஆதர் வில்சன். ஒவ்வொரு காட்சியும் நம் மனக்கண்ணில் பதியுமளவிற்கு அற்புதமாக கமெரா கண்ணினால் பார்த்திருக்கிறார் ஆதர் வில்சன். இந்தப் படத்தின் மற்றுமொரு பலம் ஜெயமோகனின் வசனம். ஜெயமோகன் சிறந்த பல நாவல்களை எழுதிப் புகழ்பெற்றவர். அதில் ஒன்றுதான் 'விஷ்ணுபுரம்'. பௌத்தம், இந்து சமயம் சார்ந்த இந்த நாவலினால்தான் இயக்குநர் பாலா தன் படத்திற்கு வசனம் எழுதக் கொடுத்தாரோ தெரியவில்லை. ஆனால் தன்னுடைய பணியினை மிக அருமையாகச் செய்திருக்கிறார் ஜெயமோகன். பல இடங்களில் அவரது வசனங்கள் மனதைத் தொடுகின்றன. எதிர்பார்ப்பிற்குப் பஞ்சமில்லாமல் தான் இன்னமும் ராஜாதான் என நிரூபித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. பாடல்கள் அற்புதமாக இருக்கின்றன. அதனைவிட பின்னணி இசையினைப் பொறுத்தமட்டில் நிஜமாகவே எங்களை திரைக்கதையோடு அழைத்துச் சென்றிருக்கிறார் இளையராஜா. மொத்தத்தில் அனைத்துமே அற்புதமாக அமைந்திருக்கிறது பாலாவிற்கு.


இடைவேளையின் பின்னர் படத்தினிலே அவசரம் தெரிகிறது. சென்ஸர் செய்த சதியாகக்கூட இருக்கலாம். படமும் மிக விரைவாகவே முடிந்துவிடுகிறது. இறுதிக் காட்சியிலே ஆர்யாவின் நடிப்பும் பூஜாவின் நடிப்பும் எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது என்னமோ உண்மைதான். நிச்சயமாக இவர்களுக்கு விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வளவுகாலம் பொறுத்திருந்ததற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.


நான் கடவுள் படத்தினைப் பொறுத்தமட்டில் குறைகளை குடையாமல் அனுபவித்துப் பார்த்தால் பல அர்த்தங்கள் அந்தப் படத்திலே பொதிந்திருக்கின்றன. பாலாவின் மற்றுமொரு அசத்தலான படைப்பு 'நான் கடவுள்'.