அவசர வாழ்க்கையில் அனுபவங்களை மீட்டிப் பார்க்க உதவுவது சினிமா என்றால் அது சாலப் பொருந்தும். ஒருசில திரைப்படங்களைப் பார்க்கின்றபோது எங்களுடைய யதார்த்தத்தின் பிரதிபலிப்பாக தோன்றும். யதார்த்தத்தின் பிரதிபலிப்புத்தான் சினிமா என்பார்கள். இருப்பினும் எல்லோருடைய மனதினையும் கனமாக்குகின்ற கதைகள் ஒருசிலவே வெளிவருகின்றன. அந்தவகையில் அண்மையில் வெளிவந்த "வாரணம் ஆயிரம்' திரைப்படம் என் நெஞ்சைத் தொட்ட படம் என்பேன். தயவுசெய்து இந்தப் படத்தினுடைய விமர்சனமாக இக்கட்டுரையை வாசிக்காதீர்கள். வாரணம் ஆயிரம் படத்தில் என் நெஞ்சைத் தொட்ட சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
அம்மா சென்டிமென்டில் எத்தனையோ படங்களைப் பார்த்திருக்கின்றோம். அதேபோல் அப்பா சென்டிமென்ட் பற்றிய ஒருசில படங்களையும் பார்த்திருப்பீர்கள். ஆனால், வாரணம் ஆயிரம் திரைப்படம் கௌதம் மேனனின் சொந்தக் கதையின் உருகுதலையும் யதார்த்தத்தின் பிரதிபலிப்பையும் விம்பமாகக் காட்டி நிற்கிறது என்றால் அது மிகையாகாது. ஒரு தந்தை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், தாய் இப்படித்தான் இருப்பாள், தங்கை, காதலி, நண்பன் என அனைத்துப் பாத்திரங்களையும் பார்த்துப் பார்த்து வடித்திருக்கின்றார். ஏற்கனவே படம் பார்த்தவர்களுக்கு கதை தெரிந்திருக்கும். இருப்பினும் பார்க்காதவர்களுக்காக சுருக்கமாக கதையினைச் சொல்லலாம் என நினைக்கின்றேன். பார்த்தவர்கள் இந்தப் பந்தியினை விட்டு வாசியுங்கள்...வயதான தந்தையின் (அதுவும் சூரியாதான்) அறிமுகத்தோடு படம் தொடங்குகின்றது. கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் வயதான சூரியா. தலைமயிர் வெட்டிவிட்டு வீட்டுக்கு வரும் தந்தை சூர்யா, ரத்தவாந்தி எடுத்து இறக்கின்றார். இந்தசெய்தி இந்திய ராணுவத்தில் இருக்கின்ற மேஜர் சூரியாவிற்கு (இவரும் ஆணழகனாக தோன்றும் சூரியாதான்) கிட்டுகின்றது. ஓர் ராணுவ நடவடிக்கைக்காக சென்றுகொண்டிருக்கின்ற வேளையிலே இந்த துயரச் செய்தி கிடைக்கின்றது. இருப்பினும் கடமையின் நிமிர்த்தம் பணியினைத் தொடர்ந்து செல்கின்றார். அப்படிச் செல்கின்ற நேரத்திலேயே தந்தையின் நினைவலைகளை மீட்டிப் பார்க்கின்றார். உண்மையிலேயே அந்த அனுபவங்களை கதையாக சொல்வதைவிட பார்த்து அனுபவித்தால்தான் இதமாக இருக்கும். இதற்காக கௌதமுக்கு நன்றி சொல்லலாம்.
ஒரு தந்தையின் ஏக்கங்களை பிரதிபலிக்கின்ற பல காட்சிகள் இருக்கின்றன. ஒரு மகனாக இருந்து பார்க்கின்ற நேரத்திலே தந்தையின் பிரிவின் வலி மனதினை நெகிழ வைக்கின்றது. மகனுக்கு ரோல் மொடலாக இருக்கின்ற தந்தை அனைவரது பாராட்டினையும் தட்டிச் செல்கின்றார். அதேசமயத்தில் காதல் பண்ணுகின்ற சூரியாவும் மிக அழகாக இருக்கின்றார். காதலினை இப்படியும் சொல்லலாம் என சொல்லிக் காட்டியிருக்கின்றார் கௌதம். அடிக்கடி தன் காதலியின் கையினைக் கோர்த்து தன் நெஞ்சோடு ஒற்றிக் கொள்ளும் நேரத்தின் என் நெஞ்சிற்குள் ஏதேசெய்தது (அனுபவித்த வேதனையாக இருக்கலாம். நிறைய சுகமதைத்தந்த சுமை அது...). காதலியின் பிரிவில் தவிக்கின்ற தருணம், குழந்தையில் பாசத்தினைக் காட்டுகின்ற தருணம், யுத்தத்தில் காட்டுகின்ற தீவிரம் என அனைத்திலையுமே பின்னியெடுத்திருக்கிறார் சூரியா. இவருக்கு இணையாக சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஆகியோரும் திறமாக நடித்திருக்கிறார்கள்.
இந்த இடத்தில் ஒளிப்பதிவாளர் ரத்ணவேலுவையும் கட்டாயம் பாராட்டியாகவேண்டும். உயிரோட்டமான கதைக்கு அழகான காட்சியமைப்பு முக்கியம். அதனை சரியாக காண்பித்திருக்கின்றார் ரத்ணவேலு. பாடல்கள் அருமையாக இருக்கின்றன. ஹரிஸ் ஜெயராஜின் மற்றுமொரு மைல்கல் இப்படம். பின்னணி இசை தொடக்கம் பாடல்களின் இசைவரை அனுபவித்துச் செய்திருக்கிறார் ஹரிஸ். மொத்தத்தில் ஒரு திருப்தியான படம்பார்த்த சந்தோஷம் மனதில்.ஆனாலும் விமர்சனம் என்று பார்க்கும்போது பல இருக்கின்றன. அவற்றினை சுட்டிக்காட்ட விரும்பவில்லை. குறிப்பாக படம் கொஞ்சம் நீளமாக இருப்பதாக பலர் குறைபடுகின்றார்கள். விமர்சனங்களைத் தாண்டி, நம் யதார்த்த வாழ்வோடு படத்தினைப் பார்த்தால் அருமையாக இருக்கின்றது...
1 comment:
வாரணம் ஆயிரம் நாம் பார்த்தேன். தியேட்டரில் - பல விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு நடுவில். அமைதியாக இருந்து அணுவணுவாக ரசிக்கவேண்டிய திரைப்படத்தை ஏன் இப்படி இரைச்சலால் கெடுத்து விட்டார்கள் என்ற கோபம் தான் வந்தது. இப்படிப்பட்ட பக்குவப்படாத தன்மை எதனால வந்தது? இதைத்தான் வளர்ப்பு என்பார்களா?
நீங்கள் தவறவிட்ட இன்னுமொன்றையும் கூறுகின்றேன். இந்தத் திரைப்படம் நேர்த்தியாக, பாசத்துடன் வளர்க்கப்பட்டு, ஏதோ ஒரு தருணத்தில் காதல் சோகம் கதவு தட்டிச் சென்ற அனுபவத்தினையுடைய இளையவர்களின் வாழ்வில் நடந்த ஏதோ ஒரு தருணத்தினை நினைவுபடுத்திச் செல்கின்றது. எத்தனை சோகம் வந்தாலும், பீனிக்ஸ் பறவையாய் ஜீவன் பெற்று உயராந்தவாறே, வாழ்க்கையை சிறந்த கோணத்தில் ரசிப்பவர்களுக்கு இந்தப் படத்தினை மிகவும் பிடிக்கும்
Post a Comment