மிருகங்கள் எங்களுடன் பழகுகின்ற விதத்தில் சில மனிதர்கள் பழகுவதில்லை. தேவைக்காய் பழகுகின்ற மனிதர்கள் மத்தியில் அன்புக்காய் ஆரத்தழுவும் மிருகங்களின் நற்குணம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
அவ்வப்போது மனதுக்கு ஆறுதல் தேடி, மரைன் ரைவில் வெள்ளவத்தை - தெஹிவளை பிரிப்பிடத்தோடு ஒட்டியிருக்கும் 'த ஸ்டேசன்' ரெஸ்ட்வுரன்டுக்குச் செல்வதுண்டு. 'நீ - நான் - நிலா' என்ற நிலையில் அங்கு செல்லவேண்டும் என்றுதான் நினைப்பேன். ஆனால், அதையும் தாண்டிய தனிமை எனக்குப் பிடிக்கும். கடல் அலைகளில் ஆக்ரோஷம், சில்லென்ற காற்று, அவ்வப்போது ரயில் போகும் சத்தம், இதமான இசை என அனைத்தும் நான் ரசிக்கும் சில விடயங்கள்.
இந்த அழகான இடத்தில் மிச்ச சொச்சங்களைத் தின்பதற்காக பல மிருகங்கள் இருக்கின்றன. அங்கிருக்கும் அழகான பூனை எனக்கு ரொம்பப் பிடித்த ஒரு மிருகம். ஆரம்பத்தில் நானும் பூனையும் நட்பாகிய விதம் இன்னமும் மனதுக்குள் பிடித்துப் போயிருக்கிறது. எந்த மொழி பேசுகின்றவர்கள் வளர்க்கின்ற பூனை என்றாலும் 'பூஸ்' என்ற வார்த்தைக்குக் கட்டுப்படும்.
ஒருமுறை நானும் நிழலும் அங்கிருக்கையில் தன்னைப் புலியாக நினைத்துக்கொண்டு ஒரு பூனை பந்தா காட்டியது. பலர் இப்பொழுதும் பூனையாக இருந்துகொண்டு புலியாகப் பந்தா காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடுகையில் இந்தப் 'பூஸ்' ஒன்றும் பெரிய பந்தா காட்டவில்லை. பலமுறை கூப்பிட்டுப் பார்த்தேன். திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. சேவியை மாத்திரம் உயர்த்தி என் ஒலியை உள்வாங்கியதே தவிர திரும்பிப் பார்ப்பதாக இல்லை.
நிமிடங்கள் மணித்துளிகளாகியதன் பின்னர் மெதுவாக என்னருகில் வந்தது அந்த 'பூஸ்'. தலையையும் கழுத்தையும் என் விரல்களால் வருடிவிட்டதன் பின்னர் என்னுடன் சகஜமாகிப் போனது அந்தப் 'பூஸ்'. இப்பொழுது நானும் அதுவும் நல்ல நண்பர்களாகிவிட்டோம். எப்போது அந்த இடத்துக்குச் சென்றாலும் 'புலி' என்ற பந்தாவுடன் அந்தப் 'பூஸ்' என்னருகில் வந்து ஒட்டிக்கொள்ளும். புரியாத பாஷையில் அன்புமொழி பேசுவதனால் நாமிருவரும் நல்ல நண்பர்கள்.
வழமைபோல் நேற்றும் இந்த இடத்துக்குச் செல்லவேண்டிய தேவை ஒன்று ஏற்பட்டது. மாலையில் கடும் மழைபெய்து இப்போது தூறிக்கொண்டிருந்தது. ஒரு கதை விவாதத்துக்காக என்னுடைய ஊடக நண்பனைச் சந்திக்க வேண்டிய தேவை. அதனால் எனக்குப் பிடித்தமான அந்த இடத்துக்குச் சென்றேன். வழமைபோல் வந்து பந்தா காட்டும் அந்த 'பூஸ்' வரவில்லை. தேடிப்பார்த்தேன், எங்கேயும் காணவில்லை. ஒருவேளை, மழை என்பதான் எங்கேனும் சென்றிருக்கலாம். இல்லையேல் என்னோடு நண்பரிருந்ததால் கண்ணில் தென்படாதிருக்கலாம். சில சமயங்களில் உண்மையான அன்புக்காகத் தேடிப்போகின்றபோது, அந்த அன்பு கிடைக்கவில்லை என்றால் மனதுக்குள் ஒருவித வருடல் இருக்கும். அதேபோன்றதொரு நிலைதான் என் மனதுக்குள் இன்று.
மனதுக்குள் 'பூஸ்' எங்கிருக்கிறதென்று தேடிக்கொண்டே நமது கதை விவாதத்துக்கான முன்னாயத்தம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். பரந்து விரிந்த கடல், அலைகளின் ஆர்ப்பரிக்கம் ஓசை, சூழ்ந்திருக்கும் கருமேகத்துக்குள் அவ்வப்போது தோன்றும் மின்னல் கீற்றுக்கள், தீப்பந்த ஒளியில் மங்கலாகத் தெரியும் எமதுருவம், சாதுவான மழைத் தூறல் என அனைத்துமே எமைப் புதியதொரு உலகில் சஞ்சரிக்க வைத்தது.
'யார் உங்கட பிரன்ட்?'
அவளின் கேள்விக்குரல் என்னை நிஜத்துக்குள் கொண்டு வந்து விட்டது.
'டிவில வேர்க் பண்றான். நல்ல டலன்ட் போய். கிரியேட்டிவ்வா சிந்திக்கிறவன்..'
'அப்ப அவருக்கு கதை எழுதத் தெரியாமலா என்ன வரச்சொன்னிங்க?'
'கதை அவன்கிட்ட இருக்கு. திரைக்கதை எழுதணும். அதையும் அவனே செய்வான். ஆனா, யதார்த்தமா - புதுசா வசனம் இருக்கணுங்கிறது அவனோட ஆசை...'
இப்படியே எமது உரையாடல் போய்க்கொண்டிருக்கையில், பக்கத்து மேசையில் இருந்த இரு தமிழரின் கதை எம் கவனத்தைத் திருப்பியது. யாழ்ப்பாணத்தில் பேசுகின்ற செந்தமிழில் அவர்களது உரையாடல் தொடர்ந்தது. அநேகமாக அவர்கள் லண்டனிலிருந்து விடுமுறைக்காக இங்கு வந்திருக்க வேண்டும்.
'அஞ்சுலச்சம் பவுண்ஸ் குடுத்து உந்த இடத்த வாங்கிறது பெரிய விஷயமில்லை. ஆனா, யாரையும் நம்பேலாம இருக்கு. எல்லாத்துக்கும் காசுதான்'
ஒருவரினால் இந்தக் கருத்துச் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்போதே அரை போத்தல் விஸ்கி முடிந்திருந்தது. ஐஸ் கட்டி கரைந்து போயிருந்ததால்
'தம்பி இஞ்ச வாரும்...' என்று வெயிட்டரைக் கூப்பிட்டார்.
இது கிறிஸ்மஸ் காலம் என்பதால் அங்கிருக்கும் அனைத்துப் பணியாளர்களும் கிறிஸ்மஸ் தொப்பி அணிந்திருந்தனர். கூப்பிட்ட குரலுக்கு அந்த வெயிட்டரும் ஓடிவந்தார்.
'தம்பி நீர் புட்டிஸ்டே?'
தமிழ் 'கொஞ்சம் கொஞ்சம்' பேசக்கூடிய வெயிட்டர் என்பதால் 'ஆம்' என்பதுபோல் தலையாட்டினான்.
'புத்தர பெரிஷா பேசிற நீங்க எதுக்கு உந்த தொப்பிய போட்டிருக்கிறியள். பௌத்தம் தான் பெருஷெண்டு சொல்லுற நீங்க எதுக்கு கிறிஸ்டியன்ட தொப்பிய போடுறியள்?'
இந்தக் கேள்வி அந்தப் பையனுக்கு நிச்சயமாகப் புரிந்திருக்காது. அவ்வளவு தமிழ் தெரியக்கூடிய வெயிட்டர் இல்லை அவன். ஆனாலும் ஏதோ புரிந்தவன் போல் தலையை மட்டும் சிறிதாய் ஆட்டி, புன்னகையைப் பதிலாகக் கூறிவிட்டு ஐஸ் கட்டி எடுத்துவருவதற்காகச் சென்று விட்டான்.
அவன் போனபின்னர் பலதும் பத்தும் பேசத் தொடங்கினர் அந்தப் பக்கத்து மேசை விருந்தாளிகள்.
சில சமயங்களில் எங்களின் செயற்பாடுகள் எதற்காக என்பதே தெரியாமல் நாங்கள் நடந்துகொள்கிறோம். செய்யும் தொழிலுக்காக பலதையும் செய்யவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். ஆனால், சிந்தித்துப் பார்த்தால் அவை அனைத்துமே பல கேள்விகளை நமக்குள் தோற்றுவிக்கும்.
பக்கத்து மேசைக்காரரின் இந்தக் கேள்வியும் பல உண்மைகளை உரக்கச் செய்தது எனக்குள். கிறிஸ்மஸ் என்பது பொதுப் பண்டிகையாகப் பலராலும் கொண்டாடப்படுகிறது. இதனை ஓர் ஒற்றுமைப் பண்டிகை என்றாலும் அதில் தப்பிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்த ஒற்றுமையைப் புரிந்துகொண்டால் பல பிரச்சினைகளுக்கு எப்பொழுதோ முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிக்கும்.
'என்னோட கதைக்கிறத விட்டுட்டு எங்க வாய் பாக்கிறிங்க?'
அவளின் கேள்விக்கணை என் காதைத் துளைத்ததும் தான் நாம் எதற்காக வந்தோம் என்ற சுயநினைவு வந்தது.
சிரிந்துக் கொண்டே வாசலைப் பார்த்தேன், என்னுடைய நண்பன் வந்து கொண்டிருந்தான்... அந்த “பூஸ்”ஸின் ஸ்பரிசத்தை என் மனம் ஏதோ தேடியது...
Thursday, December 10, 2015
Monday, October 27, 2014
அழைப்பின் ஆப்பு
முஸ்லிம் கட்சிகளை தங்களுடன் இணைந்து செயற்படுமாறும், அதிகார பகிர்வு தொடர்பில் திறந்த மனதுடன் பேசுவதற்கு காத்திருப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கிறார். 90ஆம் ஆண்டில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்களின் ஒருபிடி நிலத்தைக்கூட ஆக்கிரமிக்க விடமாட்டோம் எனவும் சொல்லியிருக்கிறார். இச்செய்தி இன்றைய ஊடகங்கள் பலவற்றிலும் முதன்மைச் செய்தியாக வெளிவந்திருக்கிறது.
இவ்விடத்தில் என் மனதில் பட்ட சிலதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஒருமுறை அமைச்சர் பசீர் சேகுதாவுத்துடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு விடயத்தைக் கூறினார். தமிழர் தரப்பு ஒவ்வொருமுறையும் முஸ்லிம் கட்சிகளை தங்களுடன் இணைய வருமாறு மட்டுமே அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், ஒருமுறையேனும் முஸ்லிம் கட்சிகளுடன் நாங்கள் இணைந்து செயற்படவிரும்புகிறோம் என தெரிவித்ததில்லை. சிறுபான்மை கட்சிகள் என்ற அடிப்படையில் முஸ்லிம் கட்சிகள் பேரம்பேசும் பலத்துடன் செயற்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ்க் கட்சிகளுக்கு குறிப்பாக தமிழ்த் தேசியக் கட்சிக்கு பேரம்பேசும் சக்தி இருந்ததில்லை. ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாகக் கூட இருந்ததில்லை. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக செயற்பட்டிருக்கிறது. ஆகையினால், முஸ்லிம் கட்சிகளுடன் தமிழ்க் கட்சிகள் இணைந்து செயற்பட முன்வரலாம் தானே? என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் அமைச்சர் பசீர்.
இக்கருத்துக்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் விட்டுக்கொடுப்பு என்பதுதான் சாமர்த்தியமானது எனத் தோன்றுகிறது. இறுதி யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தில் முஸ்லிம்கள் இணைந்துகொண்டமையை கண்டித்த தமிழர் தரப்பு, 90களில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது அமைதியாகத்தான் இருந்தது (ஒரு சிலரைத் தவிர). ஆகையினால், அரசியல் சாணக்கியம் என்பது இங்கு மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டியதொன்றாகிறது.
மாவையில் அழைப்பை முஸ்லிம் கட்சிகள் நிராகரித்தால் - அதுதான் அவர்களின் அரசியல் பேசுபொருளாக மாறிவிடும். ஏற்றுக்கொண்டால் சாணக்கியம் சறுக்கிவிடும். ஒருவரை அழைத்து ஆப்பு வைப்பது என்பது இதுதானோ என சிந்திக்கத் தோன்றுகிறது.
(குறிப்பு: பத்திரிகைத்துறை சாராத தனிப்பட்ட பதிவிது)
இவ்விடத்தில் என் மனதில் பட்ட சிலதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஒருமுறை அமைச்சர் பசீர் சேகுதாவுத்துடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு விடயத்தைக் கூறினார். தமிழர் தரப்பு ஒவ்வொருமுறையும் முஸ்லிம் கட்சிகளை தங்களுடன் இணைய வருமாறு மட்டுமே அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், ஒருமுறையேனும் முஸ்லிம் கட்சிகளுடன் நாங்கள் இணைந்து செயற்படவிரும்புகிறோம் என தெரிவித்ததில்லை. சிறுபான்மை கட்சிகள் என்ற அடிப்படையில் முஸ்லிம் கட்சிகள் பேரம்பேசும் பலத்துடன் செயற்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ்க் கட்சிகளுக்கு குறிப்பாக தமிழ்த் தேசியக் கட்சிக்கு பேரம்பேசும் சக்தி இருந்ததில்லை. ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாகக் கூட இருந்ததில்லை. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக செயற்பட்டிருக்கிறது. ஆகையினால், முஸ்லிம் கட்சிகளுடன் தமிழ்க் கட்சிகள் இணைந்து செயற்பட முன்வரலாம் தானே? என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் அமைச்சர் பசீர்.
இக்கருத்துக்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் விட்டுக்கொடுப்பு என்பதுதான் சாமர்த்தியமானது எனத் தோன்றுகிறது. இறுதி யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தில் முஸ்லிம்கள் இணைந்துகொண்டமையை கண்டித்த தமிழர் தரப்பு, 90களில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது அமைதியாகத்தான் இருந்தது (ஒரு சிலரைத் தவிர). ஆகையினால், அரசியல் சாணக்கியம் என்பது இங்கு மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டியதொன்றாகிறது.
மாவையில் அழைப்பை முஸ்லிம் கட்சிகள் நிராகரித்தால் - அதுதான் அவர்களின் அரசியல் பேசுபொருளாக மாறிவிடும். ஏற்றுக்கொண்டால் சாணக்கியம் சறுக்கிவிடும். ஒருவரை அழைத்து ஆப்பு வைப்பது என்பது இதுதானோ என சிந்திக்கத் தோன்றுகிறது.
(குறிப்பு: பத்திரிகைத்துறை சாராத தனிப்பட்ட பதிவிது)
Labels:
அரசியல்
Thursday, February 06, 2014
ஆறறிவு
நேற்றிரவு முக்கியமான, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு கம்பனியின் நிர்வாக உறுப்பினர் ஒருவரை இரவுநேர விருந்தொன்றில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எனது குடும்ப நண்பர்களின் அழைப்பின் பேரில் இந்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்டேன். இங்கு “முக்கியமான” தருணத்தில் அந்த தொழிலதிபர் கேள்வி ஒன்றினைக் கேட்டார். சாதாரணமான கேள்வியாக இருந்தாலும் அது சிந்திக்க வைத்தது.
“ஆறறிவு உள்ளவர்கள் யார்?” என்று கேட்டபோது, மனிதனுக்கு ஆறறிவு இல்லை என விஞ்ஞானிகளால் அண்மையில் அறிவிக்கப்பட்டபோதிலும் மனிதன்தான் ஆறறிவு படைத்தவன் என நாங்கள் கூறினோம்.
“ஐந்தறிவு உள்ளவர்கள் யார்?” என்று மறுபடியும் அவர் கேட்டார். அதற்கு வழமையான பதிலாக “மிருகங்கள்” என்று கூறினோம்.
“சரி... அப்படியென்றால், ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு, நாலறிவுள்ளவை எவை?” என்ற கேள்வியை கேட்டுவிட்டு, இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை என்றால் உங்களுக்கு இன்று தூக்கமே வராது. பதில் சொல்லிவிட்டால் எனக்கு சுவாரஸ்யமாக இருக்காது என்று சிரித்துக்கொண்டே கூறினார் அவர்.
இப்பொழுது, அந்த விருந்தில் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு பதிலாக சொல்லத் தொடங்கினார்கள். ஆனால், எந்தப் பதிலிலும் அவர் திருப்தியடையவில்லை. நீண்ட நேரத்தின் பின்னர், அதாவது விருந்துபசாரம் நிறைவடையும் தருணத்தில் அதற்கான பதிலை அந்த தொழிலதிபர் தந்தார். தன்னுடைய அனுபவத்தில் முக்கிய நபரொருவர் தனக்கு இதனை தெளிவுபடுத்தியதாகக் கூறியே அந்தப் பதிலினை பகிர்ந்தார்.
அதாவது, உயிர் வாழ்வுக்கு ஐம்பூதங்களின் முக்கியத்துவம் அவசியம். அதனடிப்படையில்தான் இந்த அறிவுகள் பிரிக்கப்படுகின்றன என்றும் கூறினார்.
அவர் கூறிய ஆறறிவு விபரம் இதுதான்...
முதலாம் அறிவு
மண்ணில் விதைக்கப்பட்டு வளர்கின்ற மரம், செடி, கொடி போன்ற அனைத்துமே ஓரறிவு உடையவை. ஏனெனில் இவை அனைத்தும் சுயமாக ஐம்பூதங்களை ஆட்கொள்பவை அல்ல. உதாரணமாக, ஒரு செடி - காற்றடித்தால் மட்டுமே அசையும். சுயமாக அவை அசைவதில்லை. ஆகையினால் அவை ஓரறிவு உடையவை என்று கருதப்படுகிறது.
இரண்டாம் அறிவு
புழு, பூச்சிகள் என்பன ஈரறி உடையவை. ஏனெனில் இவை சுயமாக அசையும் திறனுடையவை.
மூன்றாம் அறிவு
நீர்வாழ் உயிரினங்கள் மூவறிவு உடையவை. ஏனெனில் இவை தமக்குள் ஒரு வட்டத்தை வகுத்து வாழும் திறனுடையவை என்பதால் மூவறிவுடையனவாக இருக்கின்றன.
நான்காம் அறிவு
பறவைகள் நான்காவது அறிவுடையன. உதாரணமாக, புறா போன்ற பறவைகளை நாம் வளர்த்து, எங்காவது தொலைவில் சென்று விட்டாலும் அவை நம்மை தேடி வருகின்ற திறமை கொண்டவை. இந்த அறிவு அனைத்து பறவைகளுக்கும் இருக்கின்றது. ஆகையினால்தான் அவை நான்கறிவுடையனவாக இருக்கின்றன.
ஐந்தாம் அறிவு
விலங்குகள் அனைத்தும் ஐந்தறிவுடையன. ஏனெனில் அவைகளுக்கு பசி எடுத்தால் உணவு உட்கொள்ள தெரிவும், காமம் கொண்டால் புணர்ச்சியில் ஈடுபடுகின்றன. எதிரியை இனங்காணுகின்ற பண்பிருக்கிறது. இதுபோன்ற பல குணங்களைக் கொண்டவையாக விலங்குகள் இருப்பதால் அவை ஐந்தறிவு உடையனவாக இருக்கின்றன.
ஆறாம் அறிவு
மனிதன் ஆறறிவுடையவனாக இருக்கின்றான் (இப்பொழுது விஞ்ஞானிகள் மனிதனுக்கும் ஐந்தறிவு என்று கூறினாலும்கூட). மிருகங்களுக்கு இருக்கின்ற அனைத்து குணாதிசயங்களும் மனிதனுக்கும் இருக்கின்றன. ஆனாலும் சில சிறப்புத்தன்மை அவனிடம் இருக்கிறது. மனிதனுக்கு பசியெடுத்தால் கண்டதையும் சாப்பிடமாட்டான். எவ்வளவுதான் பசியெடுத்தாலும் விஷத்தினை மனிதன் உண்பதில்லை. அதேபோல், காமவுணர்வு ஏற்பட்டால் மிருகங்கள்போல் நடந்துகொள்வதில்லை. எவையெவை எப்படி செய்யவேண்டும் என்ற பகுத்துணர்வோடு வாழ்வதால் மனிதன் ஆறறிவுடையவனாக இருக்கின்றான்.
“ஆறறிவு” என்பதற்கு அந்த தொழிலதிபர் கொடுத்த மிகப்பெரிய வரைவிலக்கணம் இதுதான். இதில் சில நியாயங்கள் இருப்பதை உணரமுடிந்தது. இதில் எவ்வளவுதூரம் உண்மையான நிலை இருக்கிறது என்பதுபற்றி நான் ஆராயவில்லை. இருப்பினும், அந்த தொழிலதிபர் கூறிய காரணங்கள் சற்று சிந்திக்க வைத்தன. ஆகையினால் இதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
Labels:
கட்டுரைகள்
Monday, January 06, 2014
உரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 1)
நாம் அனைவருமே ஏதோ ஒன்றை உலகுக்கோ அல்லது நம்மைச் சார்ந்தவர்களுக்கோ சொல்வதற்கு தயாராக இருப்பவர்கள். இதில் எவரும் விதிவிலக்காகிவிட முடியாது. சில சமயங்களில் நாம் சொல்வதை அனைவரும் கேட்பதுண்டு. பல வேளைகளில் உரக்கக் கத்த நினைக்கின்ற ஊமைபோலவே இருந்துவிடுவதுமுண்டு.
அந்தவகையில், என் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை வைத்து, எனக்குள் எழுகின்ற கேள்விகளுக்கு பதில் தேடும் நோக்கில் 'உரக்கக் கத்தும் ஊமைகள்' என்னும் பதிவினை எழுதத் தொடங்கியிருக்கிறேன்.
அந்தவகையில், முதலாவது பதிவாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனின் இலங்கை விஜயம் தொடர்பாக எனக்கு தெரிந்தவற்றை ஆராயலாம் என நினைக்கிறேன்.
1981ஆம் ஆண்டு டிசெம்பர் 23ஆம் திகதி யாழ்ப்பாணத்திலே பிறந்த ராதிகா, தனது 5ஆவது வயதில் கனடாவில் குடும்பத்தாரோடு குடியேறிவிட்டார். அங்கேயே படித்து பட்டம் பெற்ற அவர், பிற்காலத்தில் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.
2004ஆம் ஆண்டு முதல், புதிய ஜனநாயக கட்சியின் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார். இதன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக்கொண்ட அவர், 2011ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி, ஸ்காபரோ ரூச் ரிவர் தொகுதியில் 18,935 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றுக்கு தெரிவானார்.
முதலாவது தமிழ் பிரதிநிதி என்பதோடு இளவயதில் தெரிவாகிய நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் போற்றப்பட்டார். இவரது தெரிவினை தமிழ் சமூகம் பெருமையாகக் கொண்டாடியது. இதற்கு, அன்றைய சூழலும் ஒரு காரணமாக அமைந்ததென்னமோ உண்மைதான்.
இந்நிலையில், கடந்த டிசெம்பர் 28ஆம் திகதி தனிப்பட்ட விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்தார் ராதிகா. இவரது வரவோடு பல சர்ச்சைகளும் சேர்ந்தே வந்தது. தனது சிறப்புரிமையை பயன்படுத்தாமல், சாதாரண குடிமகளாகவே ராதிகா, இலங்கைக்குள் வந்தார். ஆகையால் ஊடகங்களிடம் சிக்காமல் இருப்பதற்கே அவர் பெரிதும் முயற்சித்தார்.
இருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுடன் வடக்கில் பல இடங்களுக்கும் சென்று, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க தொடங்கியதும் இவரது வருகை பற்றி புகையத் தொடங்கிவிட்டது. சாதாரண சுற்றுலா விசாவில் வருகை தந்த அவர், எவ்வாறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பதே அரச தரப்பின் கேள்வியாக இருந்தது.
தனது சொந்தமண்ணின் சொந்தங்களை சந்திப்பதொன்றும் பெரிய குற்றமில்லை. ஆனால், அரசியல் சுயலாபங்களுக்காக நம் சொந்தங்களை பகடைக்காயாக பயன்படுத்துவதுதான் இங்கு கேள்விக்குரியது.
விசா நடைமுறை என்பது அனைத்து நாட்டிலும் கடுமையாக கடைப்பிடிக்கப்படுகின்ற ஒரு விடயம். இதற்கு எவரும் விதிவிலக்காக முடியாது. அண்டை நாடான இந்தியாவை எடுத்துக்கொண்டால் அங்கு இருக்கும் கெடுபிடிபோல் எங்கும் காணமாட்டீர்கள். சுற்றுலா விசாவில் செல்வதென்றால் அந்த வேலையை மட்டும்தான் செய்ய முடியும். அதனை மீறி எங்காவது தொழில் புரிவது அல்லது செய்தி சேகரித்தால் அது தண்டனைக்குரிய குற்றம். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் நீங்கள் சுற்றுலா விசாவில் இந்தியாவிற்குள் நுழைய முடியும். அதுமாத்திரமல்ல, ஊடகத் துறையில் பணிபுரிகின்ற நாங்கள், சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பித்தால் தரமாட்டார்கள். எங்களுக்கு 'ஜே' எனப்படுகின்ற ஊடகவியலாளர் விசாதான் கொடுப்பார்கள். அதற்கும் பல கேள்விகள், விசாரணைகள் உண்டு. இதுதான் நடைமுறை. இதேபோல்தான் கனடா, அமெரிக்கா, லண்டன், சுவிஸ் என பல நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படுகின்ற கடுமையான குடிவரவு சட்டம்.
ஆனால், இப்படியான கெடுபிடி குடிவரவு சட்டங்களுடன் வாழ்ந்துவந்தவர்கள் எமது நாட்டில் மட்டும் குடிவரவு நிபந்தனைகளை தளர்ந்தவேண்டும் என எதிர்பார்ப்பது எந்தவகையில் நியாயமானது எனத் தெரியவில்லை.
இவர்களின் நோக்கம், தம் மக்களின் துயரினை தாங்கள் துடைக்கின்றோம் என்பதோடு, அரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைப்பதொன்றைத் தவிர வேறெதுவும் இல்லை. இது அவரவர் சுயலாபம் அல்லது சுய அரசியல் என்பது மட்டும் தெளிவு. துயர் துடைக்க நினைப்பவர்கள் நிச்சயமாக தமது பிரபல்யத்திற்கு வித்திடமாட்டார்கள். அரசை நிர்ப்பந்தத்திற்குள் தள்ளி, தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வைப்பதன்மூலம் தம்மை உலகரங்கில் பிரபல்யமடைய செய்வதும் இதில் உள்ளடங்கும். இதனால், பாதிக்கப்பட்ட நமது மக்களுக்கு என்ன லாபம் கிடைக்கப்போகிறது..? ஒருவேளை உணவிற்கு வழியின்றி இருக்கும் மக்களை மீண்டும் தர்மசங்கட அடிமைகளாக்கும் முயற்சியாகவே இதனை பார்க்க வேண்டும்.
உண்மையில் இவர்கள் சொல்கின்ற நியாயம் வரவேற்கத்தக்கது என்று வைத்துக்கொள்வோம். இவர்களின் வருகைமூலம் இங்கிருக்கும் பிரச்சினைகளை வெளிநாட்டுக்கு படம்போட்டு காட்டலாம் என்று நம்புகிறார்கள். அதில் சிலர் வெற்றியும் அடைகிறார்கள். ஆனால், நடைமுறையில் பல சிக்கல்களை தோற்றுவிக்கிறார்கள். சாதாரணமாக திரிகின்ற மக்களையும், கண்காணிக்கும் படுபாதக விளைவுக்குள் நம் மக்களைத் தள்ளிவிட்டுவிடுகிறார்கள் என்ற உண்மையையும் அவர்கள் மறந்துவிடக்கூடாது.
ராதிகா இங்கு வரும்போது உரியமுறையில் வந்திருந்தாலும் எமது மக்களை நேரடியாகச் சென்று சந்தித்திருக்கலாம். அப்படி சந்திக்க முடியவில்லை, பாதுகாப்பு வலயங்கள் இருக்கின்றன என்றால் அதனை பெரிதுபடுத்துவது இலகுவாக இருந்திருக்கும். ஆனால், நீங்கள் வந்ததே நடைமுறைக்கு மாறாகா, இந்நிலையில் மற்றவர்களை அதாவது அரசாங்கத்தை எப்படிக் குறைகூறப்போகிறீர்கள்? இதில் ஏதோ சுயநலம் இருக்கிறது என்பதுமட்டும் உண்மை.
நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அடிக்கடி பல சிக்கல்களில் மாட்டிக்கொள்பவர். தனது மக்களுக்கு எதையாவது நல்லது செய்துவிடவேண்டும் என்பதற்காக எதனையும் செய்யத் துணிகின்ற ஒருவர். ஆனாலும், நேர்வழியில் அதனை செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். மோசடிக்கு துணைபோகின்றார் என்ற குற்றச்சாட்டுத்தான் இப்பொழுது அவர்மீது இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டினை வைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைக்க முடியுமா? சிறந்த ராஜதந்திர நகர்வுக்கு இது சிறந்த உதாரணமல்ல.
டிசெம்பர் 28ஆம் திகதி இலங்கைக்குள் வந்த ராதிகா எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதிதான் கனடா செல்வதாக இருந்தது. ஆனாலும், தனது பயணத்தினை இடைநிறுத்தி, கடந்த 4ஆம் திகதி அதிகாலை இந்தியாவுக்கு பயணமாகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த நிர்ப்பந்தம் எதனால் ஏற்பட்டது. விசா நடைமுறையை பின்பற்றவில்லை என்ற ஒரே காரணத்தினால்தானே... சரியான நடைமுறையை பின்பற்றி, உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தாலும் இலங்கை பாதுகாப்பு படைகளில் உளவுப்பிரிவு நிச்சயம் கண்காணித்துத்தான் இருக்கும். ஆனால் நேரிடையாக தலையிடுவது குறைந்திருக்கும். ஆனால், ஒரு வெளிநாட்டு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எச்சரிக்கும் அளவுக்கு எந்த நிகழ்வும் இடம்பெற்றிருக்காது என்பது மட்டும் உண்மை.
ஆக, எதற்காக இந்த நடைமுறையை பின்பற்றினார் ராதிகா? அதற்கு முன்பதாக உளவுப் பிரிவின் செயற்பாடு பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்.
2004ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 50ஆவது பிறந்ததினம் மற்றும் மாவீரர் தின நிகழ்வுகளை பற்றி செய்தி சேகரிப்பதற்காக நானும் புகைப்பட ஊடகவியலாளர் சுரேந்திரனும் முல்லைத்தீவுக்கு சென்றிருந்தோம். அப்பொழுது நான் வீரகேசரி வார வெளியீட்டில் பணிபுரிந்தேன்.
முல்லைத்தீவு கடற்கரையில் நிகழ்வுகள் நடைபெறவிருந்ததால், தமிழீழ விடுதலைப் புலிகளின் அன்றைய ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரின் அலுவலகத்தில் அனுமதி பெற்று முல்லைத்தீவுக்கு சென்றோம். நாம் செல்வதை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் இருவர் வந்தனர். முல்லைத்தீவு கடற்கரையில் கடற்புலிகளின் தளபதி சூசை மற்றும் பலர் குழுமியிருந்தனர். இவர்களுடன் இயக்குநர் பாராதிராஜா மற்றும் திருமாவளவன் போன்றவர்களும் உடனிருந்தனர்.
எமது புகைப்பட ஊடவியலாளர் சுரேந்திரன், அவர்களை புகைப்படமெடுக்க முற்பட்டபோது தடுக்கப்பட்டார். இங்கு வைத்து இவர்களை படமெடுக்காதீர்கள். அவர்கள் வந்திருப்பது வெளியில் யாருக்கும் தெரியாது என்றார்கள். சரியென நாமும் அதனை படமெடுக்காமல் விட்டுவிட்டு மீண்டும் கிளிநொச்சி நோக்கி வந்துகொண்டிருந்தோம். வரும் வழியில் ஒரு ஒதுக்குப்புற கடையில் நிறுத்தி தேனீர் குடித்துகொண்டிருந்தபோது, சடுதியாக அவ்விடத்திற்கு வந்த பிக்கப் வாகனமொன்றின் உள்ளிருந்தவர்கள் எம்மை உரத்த தொனியில் விசாரித்தார்கள். உள்ளிருப்பவர்களை வெளியில் தெரியாத விதத்தில் அந்த வாகனம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனுள்ளிருந்தவர்கள் எம்மை அங்கு அதிகநேரம் நிற்க விடவில்லை. இது அவர்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயம். இப்படியான அனுபவம் பலருக்கும் இருந்திருக்கும்.
அதேபோல்தான் எல்லா ஆளுந்தரப்பிற்குமென ஒவ்வொரு நடைமுறை இருக்கும். இதில் யாரையும் குறைகூற முடியாது.
ஆக, ராதிகாவின் இலங்கை விஜயம் எதனை அடிப்படையாகக் கொண்டிருந்தது? நான் அறிந்தமட்டில் அவரும் தனது அரசியல் இருப்பினை தக்க வைக்கும் நோக்கிலேயே இங்கு வந்து தன்னை ஸ்திரப்படுத்தியுள்ளார்.
அதாவது, கனடாவில் வெகு விரைவில் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. அதிலும், ராதிகா வெற்றிபெற்ற தொகு இப்பொழுது இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறதாம். அதில் ஒரு பகுதியில்தான் ராதிகா போட்டியிட வேண்டும். மற்றைய பகுதியில் வேறொருவர் போட்டியிடப்போகிறார். அந்தத் தொகுதி மிகவும் வலிமையானதாம். அந்தத் தொகுதியில் ஆனந்த சங்கரியின் மகன் தேர்தலில் குதிக்கப் போவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆகையால் ஆனந்த சங்கரியின் மகன் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பிருக்கிறதாம். ராதிகா போட்டிபோடவுள்ள தொகுதியில் அவருக்கு செல்வாக்கு மங்கிவருகிறதாம். அதனை சரிசெய்வதற்காகத்தான் இலங்கை வந்து தன்னை தமிழ்மக்களின் துயர் துடைப்பாளராக அடையாளம் காட்ட முற்பட்டிருக்கிறாராம்.
இதிலிருந்து பல விடயங்களுக்கான விடை தெரியவருகிறதல்லவா? இதனை சரியாகப் புரிந்துகொள்ளாமல் தலைமேல் தூக்கிவைத்து பிரச்சினைகளுக்கு தூபம் போட்டால் எதிர்காலத்தில் நம்மை எல்லோரும் ஏறி மிதிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆகையால், நன்மை செய்கிறோம் என்கிற நோக்கில், நம்மக்களின் துயரத்தை மீண்டும் அதிகரிக்கச் செய்யாமல் இருப்பதே இப்போதைய ராஜதந்திர நகர்வாகும்.
Labels:
கட்டுரைகள்
Saturday, May 25, 2013
Tuesday, May 07, 2013
ஆடாத ஆட்டம்...
இருக்கின்ற போதெல்லாம்
இறுக்கமாய் நீயிருந்தாய்...
இல்லையென்று ஆனபின்பும்
இன்னுயிராய் நீயிருக்காய்..!!!
வேரறுத்து வெட்டிவிட்ட
வேப்பமரம் நானில்லை...
வெதுவெதுப்பாய் தவிக்குதடி
வேண்டிநிற்கும் என்னுள்ளம்..!!!
மடிசாய்ந்து கதைபேசி
படிதாண்டிய வாழ்க்கையிது...
துடிதுடித்து சாவதற்கா
புடைபோட்டோம் தங்கமிதை..?!!
கோடிசொந்தம் சுற்றியிருந்தும்
தேடிவந்த செல்வம் நீயடி...
ஆடாத ஆட்டத்திலே
அரைநடுவில் போவதேனடி..?!!
Labels:
காதல் கவிதைகள்
Wednesday, September 26, 2012
இலங்கையின் பழங்குடியினர்...
வரலாற்று புகழ்மிக்க இலங்கை தீவின் பழங்குடியினர் பற்றிய தேடல்கள் இன்னமும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. நாட்டின் பாரம்பரியங்களை எடுத்தியம்புகின்ற விடயங்களில் அந்நாட்டின் பழங்குடியினரின் பங்கு பாரியளவானது. அந்தவகையில் எமது நாட்டின் பழங்குடியினர் பற்றிய தேடலும் முக்கியமானது.
பழங்குடியினர் என்றவுடனே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவதென்னமோ வேடுவர் என்ற பதம்தான். ஏனெனில் நமது பழங்குடியினரின் பிரதான தொழில் வேட்டை. கற்காலத்தில் வாழ்ந்த பழங்குடியினர் தற்காலத்திலும் வாழ்கின்றார்கள். எமது இலங்கைத் திருநாட்டைப் பொறுத்தவரையில் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும் வடமத்தி, ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்.
2002ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம் சுமார் 2500 பழங்குடியினர் எமது நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வெண்ணிக்கை இப்பொழுது குறைந்திருக்கலாம் அல்லது கூடியிருக்கலாம். எது எப்படியிருப்பினும் சிறியளவான பழங்குடியினரே இங்கு வாழ்கின்றார்கள். எங்கிருந்து வந்தும் குடியேறாமல் எமது நாட்டின் ஆதிக்குடியாக இருப்பதால்தான் இவர்களை பழங்குடியினர் என்று அழைக்கின்றோம்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எமது பழங்குடியினரின் சரித்திரம் தொடர்கிறது. வரலாற்று ஆய்வாளர்களின் தகவல்படி இலங்கைக்கு ஆரியரின் வருகைக்கு முன்னரே பழங்குடியினர் வரலாறு ஆரம்பிக்கிறது. எமது இலங்கையில் வாழ்கின்ற பழங்குடியினரின் மரபும் தென்னிந்தியாவில் வாழ்கின்ற பழங்குடியினரின் மரபும் ஒத்துப் போவதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் ஆதாரங்களினூடாக நிரூபித்திருக்கிறார்கள்.
இலங்கையின் பழம்பெரும் தொகுப்பு நூலான மஹாவம்சத்தில் இலங்கையின் முதல் மன்னனான விஜயன் இலங்கையை வந்தடைந்தபோது அவனை வரவேற்று பின்னர் விஜயனுடன் இணைந்து வாழ்ந்த குவேனி எனும் இயக்கர் குலப்பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தது பற்றி சொல்லப்படுகிறது. விஜயன் அரசமைத்து தனது பட்டத்து இளவரசியாக தென்னிந்தியாவில் பாண்டிய குலத்து பெண்ணை திருமணம் முடித்து பட்டத்து அரசியாக்கினான் என்றும், அதன் பின்னர் குவேனி இயக்கர் இனத்தவர்களாலேயே கொல்லப்பட்டாள் என்றும், விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த ஓர் ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் தப்பியோடி காடுகளில் வாழத்தலைப்பட்டனர் என்றும் குறிப்பிடப்படுகிறது. அப்படி தப்பிச் சென்று காடுகளில் வாழ்ந்த வாரிசுகளின் பரம்பரையினரே இன்றைய இலங்கை காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இப்படி காடுகளை தமது இருப்பிடமாக கொண்டு வாழ்ந்ததால் அவர்களின் பிரதான தொழில் வேட்டையாடுதலாக மாறியிருந்தது. இதனாலேயே அவர்களை வேடுவர்கள் என்று அழைக்கின்றார்கள். இருப்பினும், எமது பழங்குடியினர் தங்களை 'வன்னியலா எத்தோ' என்றே அழைக்கின்றனர். இதன் பொருளும் கிட்டத்தட்ட 'காடுகளில் வாழ்பவர்கள்' என்றே கொள்ளப்படுகிறது.
இலங்கை காடுகளில் வாழ்பவர்களின் மொழி வித்தியாசமாக இருக்கிறது. இதனை வேடுவ பாஷை என்று சொல்கிறார்கள். தமிழ் பிரதேசங்களில், குறிப்பாக கிழக்கில் வாழ்கின்ற பழங்குடியினரின் மொழியில் தமிழ் கலந்திருக்கிறது. அதேபோல் சிங்கள பிரதேசங்களில் வாழ்கின்ற பழங்குடியினரின் மொழியில் சிங்களம் கலந்திருக்கிறது. உண்மையிலே இந்த பழங்குடியினர் பேசுகின்ற மொழி ஆரிய மொழிகளல்லாத மொழியென ஆய்வாளர் வில்ஹெய்ம் செயகர் குறிப்பிட்டிருக்கிறார். நமது பழங்குடியினருக்கென தனித்துவமான மொழியொன்று இருந்திருக்கிறது. அந்த மொழியினை இப்பொழுதும் அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் சில ஆரிய மொழிகளின் கலப்புடன் பழங்குடியினரின் மொழி மாறியிருக்கிறது.
ஆரம்பத்தில் காடுகளையே பிரதான வாழ்விடமாக கொண்டிருந்த பழங்குடியினர் காலத்தின் நிர்ப்பந்தத்தினால் இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இயக்கர், நாகர் இனங்களில் வழித்தோன்றலில் எமது நாட்டில் வாழ்கின்ற பழங்குடியினர் இயக்கர் இனத்தின் மரபினர் என்றே கணிப்பிடப்பட்டிருக்கிறார்கள். இப்படி காடுகளை தஞ்சமடைந்திருந்த பழங்குடியினரின் வாழ்க்கை முறை, 5ஆம் நூற்றாண்டில் இடம்பெறத் தொடங்கிய ஆரிய குடியேற்றங்களால் மாற்றமடையத் தொடங்கியது. பழங்குடியினரின் இருப்பிடங்களான அடர்ந்த காடுகள் - மக்கள் குடியேற்றத்திற்காகவும் நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் அழிக்கப்படத் தொடங்கின. இதனால் அடர்ந்த காடுகளை நோக்கி பழங்குடியினர் இடம்பெயரத் தொடங்கினர்.
இடம்பெயரத் தொடங்கிய பழங்குடியினர் சாதாரண மக்களுடன் கலந்து வாழவேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டனர். இதனால் பழங்குடியினரின் வாழ்க்கைமுறை படிப்படியாக மாறத் தொடங்கியது. கிழக்கு மாகாணத்தை நோக்கி இடம்பெயர்ந்த பழங்குடியினர் தமிழ் பிரதேசங்களுடன் தொடர்புபட்டு வாழவேண்டிய நிலைக்கும், மய்யங்கனை நோக்கி இடம்பெயர்ந்த பழங்குடியினர் சிங்கள கிராமங்களை அண்டி வாழவேண்டிய சூழலுக்கும் தள்ளப்பட்டனர். இதனால் நமது பழங்குடியினரின் தனித்துவ மொழியுடன் தமிழ், சிங்கள மொழிகளும் கலக்கத் தொடங்கின. அதுமட்டுமல்லாமல் பழங்குடியினரின் வழிபாட்டு முறைகளிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
ஆரிய குடியேற்றங்களினால் குறுகிப்போன பழங்குடியினரின் வாழ்வு அண்மைக்காலத்தில் அதாவது 1978ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மஹாவலி அபிவிருத்தித் திட்டத்தினாலும் பாதிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக பல காடுகள் அழிக்கப்பட்டமையால் மீண்டும் எமது பழங்குடியினர் பாதிப்பிற்குள்ளாகினர். இறுதியாக 'மாதுறு ஓயா தேசிய பூங்கா' அமைப்பதற்காக எஞ்சிய பழங்குடி பிரதேசங்களும் பாதிக்கப்பட்டன. இப்படி படிப்படியாக ஓரங்கட்டப்பட்ட பழங்குடியினர் தற்சமயம் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும் மய்யங்கனை பிரதேசத்தின் 'தம்பன' கிராமத்திலும் வாழ்ந்து வருகிறார்கள்.
'தம்பன' கிராமம் தற்சமயம் பழங்குடியினரின் உத்தியோக கிராமமாக இருக்கிறது. இங்கு சுமார் 350 பழங்குடி குடும்பங்கள் வாழ்கிறார்கள். இவர்களின் தற்போதைய பிரதான தொழில் விவசாயமாக மாறியிருக்கிறது. இன்னும் சிலர் படித்து, வேலை பார்த்தும் வருகிறார்கள். சமுதாயத்தினால் ஒதுக்கப்பட்டு, அந்தஸ்திழந்து காணப்பட்ட நமது பழங்குடியினருக்கு அந்தஸ்தளித்தவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ. இவரது காலத்தில்தான் பழங்குடியினரும் நமது நாட்டின் குடிமக்கள்தான் என்ற உரிமை வழங்கப்பட்டது.
குடியுரிமையை பெற்றுக்கொண்ட தற்கால பழங்குடியினரின் சந்ததியினர் உயர் கல்விகளையும் தொடங்கியிருக்கிறார்கள். தமக்கென கல்வியை பெற்றுக்கொண்டு, அதன்மூலம் உயர் வாழ்வை வாழ – நமது பழங்குடியினரின் சந்ததியினர் முன்வந்திருக்கிறார்கள். இந்த முன்னேற்றம் ஆரோக்கியமானதாகக் காணப்படுகிறது. இருப்பினும் சாதாரண சமூகத்தோடு இணைந்து வாழ்வதில் இன்னமும் பழங்குடி சந்ததியினர் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். கல்வி கற்கச் செல்கின்ற இடங்களில்கூட பழங்குடியின மாணவர்களை ஏனைய மாணவர்கள் ஒதுக்கி வைக்கின்ற நிலை காணப்படுகிறது. பழங்குடியினரை சமுதாய நீரோட்டத்தில் கலக்க வைப்பதில் இப்படியான சிக்கல்கள் பாரிய முட்டுக் கட்டையாக இருக்கின்றமை வருத்தத்திற்குரியதே.
என்னதான் நமது பழங்குடியினர் பிள்ளைகள் படித்து ஒரு நல்ல நிலையை அடைகின்றபோதிலும், அவர்கள் 'பழங்குடியினர்' என்ற முத்திரை குத்தப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். இந்நிலை மாறுவதற்கு பல காலங்கள் எடுக்கலாம். மாற்றம் ஒன்றே இவ்வுலகில் மாற்றமில்லாதது. ஏனைய அனைத்துமே மாற்றமடையக்கூடியனவே. ஆகையினால் அந்த மாற்றங்கள் - நமது பழங்குடியினரின் ஆரோக்கிய வாழ்விற்கும் வழிசமைக்கும் என் நம்பிக்கை இருக்கிறது. எமது நாட்டின் ஆதிக்குடிகளா இவர்கள் பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷங்கள் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது,
Labels:
கட்டுரைகள்
Sunday, June 19, 2011
அவன் - இவன்: பாலாவின் பரிவட்டம்

தமிழ் சினிமாவின் போக்கு எங்கே செல்கிறது என்கிற கேள்வி இப்போது எல்லோர் மனதிலும் அதிகரித்திருப்பதென்னமோ உண்மைதான். ஆனால், இப்படி ஒரு பாதையிலும் சினிமாவை நகர்த்த முடியும் என நிரூபிக்கின்ற இயக்குநர்களும் ஒருசிலர் தமிழ் திரையுலகில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் பாலா.
அண்மைக்காலத்தில் பிரபலமாக இருக்கின்ற இரண்டு கதாநாயகர்களை ஒன்றிணைத்து 'அவன் - இவன்' என்னும் திரைப்படம் பாலாவின் இயக்கத்தில் கடந்தவாரம் வெளிவந்திருக்கிறது. பொதுவான பாலாவின் படமென்றால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். ஒருசிலருக்கு பாலாவின் படம் புரிவதில்லை. அதனால் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாமல் பாலா திண்டாடுவதும் உண்டு.
'அவன் இவன்' திரைப்படத்தினை பார்ப்பதற்காக தெஹிவளை கொன்ஹோட் திரையரங்கிற்கு இரண்டாம் நாள் சென்றேன். வழமையாக புதிய படமென்றால் கூட்டம் அலைமோதும். ஆனால், படம் வெளிவந்து இரண்டாம் நாளென்ற போதிலும் வெளியில் கூட்டம் இருக்கவில்லை. புதிய படம் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என நினைத்து ரசிகர்கள் திரையரங்கிற்கு வரவில்லையோ அல்லது பாலாவின் மீது நம்பிக்கை இல்லாமல் திரையரங்கிற்கு வரவில்லையோ தெரியவில்லை.
திரையரங்கில் பணிபுரிகின்ற நண்பர்களிடம் படம் எப்படி என்று கேட்டேன். படம் புரியவில்லை என்றார்கள். அப்பொழுதே பாலாவின் படம் என்பதை உணரக்கூடியதாக இருந்தது. சரி எப்படியாவது படத்தினை பார்த்துவிட வேண்டும் என தியேட்டருக்குள் புகுந்தேன். எதிர்பார்த்ததைவிட கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. வழமையாக விசிலடிக்கும் கூட்டம் இருக்கவில்லை. மாறாக பாலாவின் கதாபாத்திரங்கள் போன்ற ரசிகர்களே அங்கிருந்தார்.
அவன் - இவன் ஆரம்பித்தது. ஆரம்பத்திலேயே அரண்மனை வாசம் வீசியது. ஜமீந்தாரின் 60ஆவது பிறந்ததின கொண்டாட்ட ஆடல் ஆரம்பமாகியது. பாலாவின் கமெரா கண்ணுக்கு ஆதர் வில்சன் தனது கமெராவால் உயிர் கொடுத்திருக்கிறார். அவன் - இவன் திரைப்படத்தின் முதுகெலும்பாக கமெரா இயங்கியிருப்பது பாராட்டத்தக்கது. அதற்காக ஆதர் வில்சனை நிச்சயமாக பாராட்டியாக வேண்டும். ஏனெனில் பாலாபோன்ற வித்தியாசமாக கதைக்களங்களை தேடுகின்ற இயக்குநரின் திரைக்கதைக்கு உயிர் கொடுப்பதென்பது சாதாரண விஷயமா என்ன?
ஆரம்ப காட்சியிலேயே பெண் வேடமணிந்து குத்தாட்டம் போடுகிறார் விஷால். முறுக்கு உடம்போடு பொலிஸ் வேடங்களிலும் அடிதடி பாத்திரங்களிலும் கலக்கிய விஷால் இந்தத் திரைப்படத்தில் பெண்மை ததும்பும் பாத்திரத்தில் பின்னியெடுத்திருக்கிறார். ஆரம்பமே கலகலவென போகிறது. அடிப்படையில் நகைச்சுவை இளையோடுகிறது. இது பாலாவின் வழமையான திரைப்படத்தின் சாயலிலிருந்து சற்றே மாறுபட்டிருக்கிறது.
அவன் - இவன் திரைப்படத்தின் ஒருவரிக் கதை என்றால் அது 'மிருக வதை'. அதனை சொல்வதற்கு மிகப்பெரிய திரைக்களத்தினை உருவாக்கியிருக்கிறார். பாலாவின் திரைக்க
தைக்கு யதார்த்தமான வசனங்களை லாவகமாக உலவவிட்டிருக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். இலக்கிய உலகில் யதார்த்த நடையில் எழுதக்கூடிய தரமான எழுத்தாளர்களில் ஒருவர்தான் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது சிறுகதைகள் இதற்கு சான்று. ஏலவே பல படங்களிற்கு வசனம் எழுதியிருந்தாலும் அவன் - இவன் திரைப்படத்தின் வசனங்கள் மிகவும் யதார்த்தமாக இருக்கின்றன. சாதாரண கிராமத்து குடும்பத்தில் லாவகமாக வருகின்ற கெட்டவார்த்தைகள் முதல் பெரியவர்களின் பௌவியமான வார்த்தைகள்வரை அனைத்தையும் மிக நுணுக்கமாக தனது வசனத்தின் மூலம் உயிர்கொடுத்து திரைக்கதையோடு உலாவவிட்டிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.மொத்த திரைப்படத்தின் சாரம் என்னவென்றால் இதுதான். சாதாரண ஒரு கிராமம். அவர்களின் பரம்பரை தொழில் களவெடுத்தல். களவெடுப்பதை நிறுத்திவிட்டால் தெய்வகுற்றம் ஆகிவிடுமென்று ஊர் பெரியவர்கள் பயமுறுத்துவதால் களவுத் தொழில் பரம்பரை பரம்பரையாக தொடர்கிறது.
இந்த கிராமத்தில் ஒரே தகப்பனுக்கு இரு தாரங்களின் மூலமாக பிறந்த பிள்ளைகள்தான் ஆர்யாவும் விஷாலும். இருதாரம் கட்டியவனின் யதார்த்த வாழ்வில் என்னவெல்லாம் நடக்கும் என்பதையும் திரைக்கதையில் புகுத்தியிருக்கும் பாலா இப்படத்திற்கு பாடல்களையும் பின்னணி இசையையும் பெரிதும் நம்பியிருக்கிறார். நா.முத்துக்குமாரின் அழகான வரிகளுக்கு யுவன் சங்கர்ராஜா இசைமூலம் உயிர்கொடுத்திருக்கிறார். பின்னணி இசையும் திரைக்கதையோட்டத்திற்கு ஏற்றாற்போல் அமைந்திருப்பது யுவனின் இசை ஞானத்திற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.
களவுத் தொழிலை செய்துவருகின்ற கிராமத்தில் கலையினை நேசிக்கும் பெண்மைக் குணம்கொண்ட கதாபாத்திரத்தில் வலம் வருகிறார் விஷால். தனிக்கட்டையாக அரண்மனையில் வாழ்கின்ற ஜமீந்தாராக நடித்திருக்கிறார் ஜீ.எம்.குமார். இந்த ஜமீந்தாரை சுற்றியதாகத்தான் கதை பின்னப்பட்டிருக்கிறது. வாரிசுகள் இல்லாமல் தனி மனிதனாக வாழ்கின்ற ஜமீந்தார் - விஷாலையும் ஆர்யாவையும் தன் பிள்ளைகள்போல் வளர்த்து வருகிறார். ஜமீந்தாரின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருவரும் வளர்ந்து வருகிறார்கள். ஆனால், ஆர்யாவும் விஷாலும் அடிக்கடி மோதிக்கொள்வார்கள். தகப்பன் ஒன்றாகியபோதிலும் தாய்மார் இருவர் என்பதால் அவர்களுக்குள் எப்பொழுதும் ஒரு பனிப்போர் இருந்துகொண்டே இருக்கும்.
இப்படி செல்கின்ற கதையில் கதாநாயகிகளாக இருவர் திணிக்கப்பட்டிருக்கிறார்கள். பொலிஸ் கான்ஸ்டபிளாக ஜனனி ஐயரும் (விஷாலுக்கு இவர்தான் ஜோடி) மாணவியாக மது ஷாலினியும் (ஆர்யாவின் ஜோடி) நடித்திருக்கிறார்கள். இதில் மது ஷாலினி ஜமீந்தாரின் எதிரியின் மகள் என்பது ஆர்யா காதலிக்க தொடங்கிய பின்னர் தான் தெரியவருகிறது. இதனை அறிந்ததும் ஜமீந்தார் எதிர்க்கிறார்;. இதனால் ஜமீந்தாருக்கும் ஆர்யா – விஷாலுக்குமிடையில் சிறு பிரிவு ஏற்படுகிறது. அவர்கள் எப்படி ஒற்றுமையாகிறார்கள் என்பதையும் அழகாக பாலா எடுத்துக் காட்டியிருக்கிறார்.
இப்படிச் செல்கிற திரைக்கதையில் மிருகவதை என்ற ஒன்றை காட்டியிருக்கிறார். இதுதான் இத்திரைப்படத்தின் உயிர்நாடி. கட்டாக்காலி மாடுகளை இறைச்சிக்காக கடத்தி விற்கும் வில்லனான ஆர்.கே. நடித்திருக்கிறார். எல்லாம் அவன் செயல் படத்தில் வக்கீலாக வந்து குற்றவாளிகளை கொல்லும் கதாபாத்திரத்தில் நடித்த அதே ஆர்.கே.தான் அவன் - இவனில் வருகின்ற பிரதான வில்லன். இவனது குற்றச் செயல்களை கண்டு பொங்கியெழுகின்ற ஜமீந்தார் ஜீ.எம்.குமார் வில்லனான ஆர்.கேயை பொலிஸில் பிடித்துக் கொடுக்கிறார். இங்குதான் திரைக்கதையில் திருப்பம் ஏற்படுகிறது.
பொலிஸின் பிடியிலிருந்து வெளியில் வருகின்ற ஆர்.கே. – ஜமீந்தாரை கொடூரமான முறையில் கொல்கிறான். ஜீ.எம்.குமார் நிர்வாணமாக இந்த காட்சியிலே நடித்திருப்பார். ஜமீந்தாரை நிர்வாணமாக்கி சாட்டையினால் விரட்டி விரட்டி அடித்துக் கொலை செய்கின்ற காட்சி பாலாவின் தனித்துவத்திற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. அதன்பின்னர் வழமையான திரைப்படங்களின் பாணியில் ஜமீந்தாரை கொலை செய்த ஆர்.கேயை ஆர்யாவும் விஷாலும் கொலை செய்து ஜமீந்தாரின் பிரேதத்துடன் சேர்த்து எரிக்கிறார்கள். அத்தோடு படம் நிறைவடைகிறது. இறுதிக்காட்சியில் வில்லனை கொல்கின்ற காட்சிக்களம் மிக அருமை. அப்படி ஓர் இடத்தில் விஷாலுடன் வில்லன் ஆர்.கே. மோதுகின்ற காட்சியை ஒளிப்பதிவாளர் வில்சன் மிக அருமையாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.
பாலாவின் மூலம் முன்னணி கதாநாயகனாக உயர்ந்த நடிகர் சூர்யா அவன் - இவனின் சிறப்புத் தோற்றத்தில் வருவார். இந்தியாவின் அனைத்து பாகங்களிலும் சிறுவர்களை படிப்பிக்க உதவுகின்ற அகரம் பௌண்டேஷனை பற்றி நடக்கின்ற நிகழ்வில் அதிதியாக கலந்துகொள்வதுபோல் வந்து பல உண்மைகளை சொல்லிச் செல்கிறார். பாலாவின் படத்தில் இது ஒரு விளம்பரம் போல் இருந்தாலும் ஒரு செய்திக்காக அந்தக் காட்சியை வைத்திருக்கிறார் பாலா.
சூர்யாவின் முன்னால் விஷால் மேடையில் நவரசங்களை செய்து காட்டுகிறார். நவரசங்களில் இறுதியாக 'கருணை' யினை விஷால் செய்து காட்டுகின்றபோது திரைக்குள் இருக்கின்ற சூர்யா உட்பட அனைவரும் கண்கலங்கியதோடு மாத்திரமல்லாமல் திரையரங்கில் என்னருகில் இருந்த சிலரும் கண்கலங்கியதை காணக்கூடியதாக இருந்தது. மாறுகண், பெண்மை நடைகொண்ட நடிப்பு என விஷால் இத்திரைப்படத்தில் புதிய பரிணாமத்தினை எடுத்திருக்கிறார். அக்ஷன் ஹீரோவாக வலம்வந்த விஷாலிடம் இப்படியொரு நடிப்பினை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த நடிப்புக்காக விஷாலுக்கு விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மொத்தத்தில் அவன் - இவன் திரைப்படம் இயக்குநர் பாலாவிற்கு பரிவட்டமாக அமைந்திருந்தாலும் சில குறைபாடுகளும் இருக்கின்றன. ஆர்யாவின் பாத்திரம் ஏனோதானோவென்று இருப்பதுபோல் தோன்றுகிறது. இருந்தாலும் தன்னுடைய பாத்திரத்தினை சிறப்பாகவே ஆர்யா செய்திருக்கிறார். அடுத்ததாக திரைக்கதையில் ஒரு கட்டத்தில் ஒரு கோடி பெறுமதியாக மரங்களை விஷால் கடத்துகிறார். ஆனால் அந்த மரத்திற்கு இறுதியில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. திறமையான யதார்த்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை வசனம் எழுத வைத்துவிட்டு சில விரசமான வார்த்தைகளை யதார்த்தம் என்ற போர்வையில் உலாவவிட்டிருப்பதும் சிறு உறுத்தலாக இருந்தது. ஆனாலும் கதையோட்டத்திற்கு இது பொருந்தும் என்பதால் பொறுத்துக்கொள்ளலாம். எத்தனைபேர் இதனை யதார்த்தமாக எடுத்துக்கொள்வார்கள் என்பதுதான் கேள்வி.
பாலாவின் ஏனைய படங்களைவிட அவன் - இவன் ஒரு படி கீழேதான் நிற்கிறது. இருந்தபோதிலும் யதார்த்தமான சினிமாவிற்காக அனைவரும் இத்திரைப்படத்தினை பார்க்கலாம். மொத்தத்தில் அவன் - இவன் பாலாவிற்கு நல்லதொரு பரிவட்டம்.
Labels:
சினிமா
Wednesday, December 15, 2010
10 தலை நாகமும் பரிகாச உலகமும்..!

கிட்டத்தட்ட ஒரு மாதங்களிருக்கும்... என்னுடைய மருமகன் கனடாவில் இருக்கிறான். அவன் எனக்கு 10 தலையுடன் இருக்கும் நாகபாம்பின் படத்தினை அனுப்பியிருந்தான். அப்பொழுது நான் அதை விளையாட்டாக விட்டுவிட்டேன். காரணம், கணினி உலகில் இதுபோன்ற மாயைகளை ஏராளம் உருவாக்கமுடியும் என்பதை நன்குணர்ந்ததால்.
இந்நிலையில்தான் கடந்தவாரம் சில ஊடகங்கள் இந்த 10 தலை நாகத்திற்கு புத்துயிர் கொடுத்திருந்தன. தொடர்ந்து இந்த 10 தலை நாகத்தின் படத்தினை பிரசுரித்ததோடு தெய்வாம்ச கதைகளையும் அவ்வூடகங்கள் அவிட்டுவிட்டிருந்தன. மஞ்சள் மழை பொழிந்தாNலு மாரியாத்தா கோபமா இருக்கா என்று பொங்கல் வைக்கிற நம்ம சனங்களுக்கு 10 தலை நாகத்தின் புகைப்படத்தை கண்டவுடன் கிருஷ்ணன் மீண்டும் அவதரித்து விட்டானே என்று பக்திமயமாகிவிட்டார்கள்.
வேளியாகிய புகைப்படங்களை வெட்டி ஒட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்ட பலரைப்பற்றியும் கேள்விப்பட்டாயிற்று. இது என்ன கொடுமைடா என்று இருந்தபோதுதான் அதன் உண்மை வடிவத்தினை என்னால் காணமுடிந்தது. பேஸ்புக் நண்பர்கள் சிலர் 10 தலை நாகத்தின் சித்து விளையாட்டை அதாங்க கிறபிக்ஸ் விளையாட்டை காட்டியிருந்தார்கள்.
ஒரு தலை நாகபாம்பின் படம் அழகாக இருக்கிறது. மிகப்பெரிய நாகபாம்பு அது. ஆழகாக அதனுடைய நிழல் பின்புலத்திலே தென்படுகிறது. இந்த பாம்பின் படத்தினை எடுத்து அதற்கு 10 தலை கொடுத்திருக்கிறார்கள் கணினி விற்பன்னர்கள். அருமையான கைவண்ணம். எளிதில் கண்டுபிடிக்க முடியாதளவுக்கு இந்த கைவண்ணம் இருந்ததென்னமோ உண்மைதான். பார்ப்பவர்களுக்கு நிச்சயம் புல்லரிக்கும்.
அப்படி அறியாமல் பார்த்த பத்திரிகை ஜாம்பவான்கள் என தங்களை பறைசாற்றிக்கொள்ளும் ஒருசிலர்தான் 10 தலை பாம்புக்கு தெய்வாம்ச கதை புகட்டியிருக்கிறார்கள் என்னும்போது வெட்கக்கேடாக இருக்கிறது. தமக்கு கணினி பற்றிய அறிவு இல்லையெனில் தெரிந்தவர்களிடம் கேட்டு அதனை மீள்பரிசீலனை செய்திருக்கலாம். எல்லாம் தெரிந்த பண்டிதர்கள் என நினைத்து பாமர மக்களை ஏமாற்றுவது எவ்வகையில் பத்திரிகை தர்மம் என்பதை நானறியேன்.
பத்திரிகை வாசகர்கள் பத்திரிகைகளில் வெளிவருகின்ற விடயங்களை அப்படியே நம்பிவிடுவர் (ஒரு சிலரை தவிர). இது அவர்கள் பத்திரிகையாளர்கள் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையை கெடுக்கின்ற விதமாக பத்திரிகைகள் நடந்துகொள்ளக் கூடாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விடயத்தில் குழப்பமடைந்தவர்கள் அப்பாவி மக்கள்தான். பாவம் அவர்கள். பக்தியென்றால் யார்தான் பின்நிற்பார்கள். அறியாமையின் உச்சகட்டத்தை பக்தி வெளிக்காட்டி நிற்பதென்னமோ உண்மைதான். அவர்களின் பக்தி பலவீனத்தை ஊடக விளம்பரத்திற்காக சிலர் பயன்படுத்த முனைவதுதான் அப்பட்டமான பத்திரிகை தர்ம மீறல். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தாலும் தப்பில்லை.
புராண இதிகாசங்களில் இந்த 10 தலை நாகங்களுக்கு தனியிடம் உண்டு. இப்படி சித்திரிக்கப்பட்டிருப்பது அதன் அசாத்திய தன்மையை வெளிப்படுத்துவதற்காக இருக்கலாம். ராமாயணத்தில் ராவணனுக்கும் 10 தலைதான். அதற்கும் காரணம் இருக்கிறது. ராவணனின் அசுர பலத்திற்கு 10 தலைகள் போதாது என்று கூறுவர். ஆக, ஒருவரின் பலத்தினை அதிகரித்து காட்டவேண்டுமென்றால் இப்படியாக எதையாவது சொல்லித்தான் ஆகவேண்டும். இதனையே கருவாகக்கொண்டு கிரபிக்ஸ் விற்பன்னர்களும் அபூர்வ பாம்பினத்தை கணினியில் உருவாக்கி மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.
ஆனாலும் இரண்டு தலையுடன் சில பாம்புகள் உலகத்தில் வாழ்கின்றன. இது அசாத்தியமான விடயம்தான். இயற்கைக்கு முரணான வகையில் பல உயிரினங்கள் வாழ்கின்றன. இவை சாத்தியமான விடயங்கள்தான். அப்படி அசாத்தியமான முறையில் பல தலைகளுடன் ஒரு பாம்பு பிறப்பதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு தெய்வமுலாம் பூசுவதுதான் தப்பு. மனிதனின் பலவீனத்தை உணர்ந்து மற்றவர்கள் பிழைப்பு நடத்தக்கூடாது.
10 தலை நாகபாம்பு என வெளியிடப்பட்ட புகைப்படத்தில் பல வழிகளில் நீங்கள் கிரபிக்ஸ் வித்தை என்பதை அறியமுடியும். 10 தலைகளின் நிழலும் உண்மையான ஒருதலை நாகத்தின் நிழலும் ஒரே மாதிரி இருக்கும். அத்தோடு கணினியின் உதவியில் வெட்டி ஒட்டப்பட்ட தலைகளின் ஒரு பக்கத்தில் 2 என்ற இலக்கம் தலைகீழாக இருக்கும். மறுபக்கம் அது கிடையாது. கீழ்ப்பக்க தலையின் கழுத்துப்பகுதிய ஒரே மாதிரியாக இருக்கும். இப்படியான குறைபாடுகளே அப்படம் பொய்யானது என்பதை உணர்வதற்கு சாட்சியமாக இருந்தபோதிலும் புத்திஜீவிகளுக்கு ஏன்தான் புரியவில்லையோ தெரியவில்லை.
உண்மையான ஒருதலை நாகத்தின் புகைப்படத்தையும் கிரபிக்ஸ் பண்ணப்பட்ட 10 தலை நாகத்தினையும் ஒன்றாக இங்கு தந்திருக்கிறேன். நீங்களே அதனை ஊகித்துக்கொள்ளுங்கள். தயவுசெய்து இப்படியான போலிகளை நம்பி நீங்கள் ஏமாறாதீர்கள். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல மதங்களுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் ஒரு விடயம் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
Labels:
கட்டுரைகள்
Saturday, October 02, 2010
எந்திரன்: தமிழ் திரையுலகின் ஹொலிவூட் படம்



பிரமாண்டங்களின் கூட்டணி, பிரமாண்ட படைப்பு, பிரபல்யங்களின் கை கோர்ப்பு: இப்படி ஏராளமான 'பிரபல்யம்' ஒன்றாக சேர்ந்த படைப்புத்தான் எந்திரன்.
எல்லோருக்கும் தெரிந்த கதையை மிகவும் பிரமாண்டமாக காட்டியிருக்கும் விதம்தான் எந்திரனின் முதுகெலும்பு. சுமார் 400 கோடி ரூபாய் செலவில் உருவாகியிருக்கும் எந்திரன் திரைப்படத்தினை சாதாரணமாக பிரமாண்ட படம் என்று வர்ணிப்பது பொருந்தாது. ஏனெனில் படம் முடிந்த பின்னரும் அந்த பிரமிப்பிலிருந்து எவராலும் மீளமுடியவில்லை என்பதுதான் அதற்கு சான்று.
கடந்த மூன்று வருடங்களாக இத்திரைப்படத்தினை உருவாக்கி வந்திருந்தார் இயக்குநர் ஷங்கர். வழமையாக தன்னுடைய படங்களுக்கு நீண்ட நாட்களை செலவிடும் ஷங்கர், இத்திரைப்படத்திற்கு மேலும் ஒருபடி மேலே சென்று தனது உழைப்பினைக் காட்டியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. தொழில்நுட்ப கலைஞர்கள் பிரமிக்க வைக்கிறார்கள். சரி... எல்லோருக்கும் தெரிந்த கதை என்று கூறியாயிற்று. அப்படி என்னதான் எந்திரன் கதை...?
சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் ஒரு விஞ்ஞானி. 10 வருடங்களாக கஷ்டப்பட்டு மனிதனுக்கு ஈடான, தன்னைப்போலவே தோற்றம் கொண்ட ஓர் இயந்திர மனிதனை உருவாக்குகிறார். அந்த எந்திரனை உருவாக்கும் காலத்தில் தனது காதலியான ஐஸ்வர்யா ராயையும் கவனிக்க மறந்துவிடுகிறார். அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து தனது எந்திரனை உருவாக்கும் ரஜனி அதில் வெற்றியும் காண்கிறார்.உருவாக்கிய எந்திரனை மக்களோடு மக்களாக பழகவிட்டு தனது கண்டுபிடிப்பிலுள்ள குறைபாடுகளை ஒவ்வொன்றாக சரிசெய்கிறார். விஞ்ஞானி ரஜனியின் குறிக்கோள், தனது கண்டுபிடிப்பான எந்திரனை இந்திய இராணுவத்திற்கு ஒப்படைத்து படை வீரர்களின் இழப்பை குறைப்பதுதான். இறுதியாக தனது கண்டுபிடிப்புக்கு அனுமதி கோருகிறார்.
அனுமதிகோரும் இடத்திலிருக்கும் தலைமை விஞ்ஞானிதான் ரஜனியின் குரு. இருந்தபோதிலும் ரஜனியின் கண்டுபிடிப்பு மீது பொறாமைப் படுகிறார். மனித குணங்களையுடைய எந்திரனை, தன் நாசகார செயலுக்கு பயன்படுத்த முயற்சிக்கிறார். இதனால் அந்த கண்டுபிடிப்புக்கு எப்படியாவது அனுமதி மறுப்பதையே குறிக்கோளாக அவர் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பரிசோதனைக்காக வரும் எந்திரனை அனைவருக்கும் பிடித்துப்போய்விடுகிறது. ஆனாலும் தலைமை விஞ்ஞானி அந்த எந்திரனை எப்படியாவது நிராகரிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.
தனது கட்டளைப்படி அந்த எந்திரனை இயங்கச் சொல்கிறார். அந்த எந்திரனும் அவரது கட்டளைகளை சரியாக செய்கிறது. படிப்படியாக கட்டளைகளை கூட்டி, இறுதியாக விஞ்ஞானி ரஜனியை கத்தியால் குத்தச் சொல்கிறார். எந்திரனும் கட்டளைக்கு கட்டுப்பட்டு ரஜனியை கத்தியால் குத்தமுனைகிறது. உடனடியாக, அந்த எந்திரனினால் மனிதனுக்கு ஆபத்து என்று கூறி அனுமதி மறுக்கப்படுகிறது.
கவலையுடன் திரும்பும் விஞ்ஞானி ரஜனிக்கு எந்திரனின் திறமையை நிரூபிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. நெருப்பில் சிக்கித்தவிக்கும் மக்களை எந்திரன் காப்பாற்றுகிறது. இந்த செயலை அனைத்து ஊடகங்களும் ஒளிபரப்புகின்றன. சந்தோஷமடையும் ரஜனி, தலைமை விஞ்ஞானியிடம் தகவலை கூறுகிறார். அவர் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கும்போது எந்திரன் ஒரு தவறை செய்கிறது. அதாவது நிர்வாணமாக குளித்துக்கொண்டிருந்த இளம் பெண் நெருப்பில் சிக்கியிருந்த நிலையில் அப்பெண்ணை நிர்வாணமாக எந்திரன் தூக்கி வருகிறது. இதனால் அவமானமடைந்து அப்பெண் லொறியில் அடிபட்டு இறந்துவிடுகிறாள்.இதனையே காரணம் காட்டி மறுபடியும் எந்திரனுக்கு அனுமதி மறுக்கிறார் தலைமை விஞ்ஞானி. மனித உணர்வுகளை இந்த எந்திரனால் புரிந்துகொள்ள முடியவில்லை. வெட்கம், அவமானம், துக்கம், சந்தோஷம் போன்ற எந்த உணர்வுகளையும் இதனால் புரிந்துகொள்ள முடியாது, ஆகையினால் இந்த கண்டுபிடிப்பு ஆபத்தினை விளைவிக்கும் என்று கூறி மறுபடியும் எந்திரனுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
தன்னுடைய 10 வருட உழைப்புக்கு பலன் கிடைக்கவில்லை என மனம் வருந்தும் விஞ்ஞானி ரஜனி, மேலும் ஒருமாதகாலம் தவணை கேட்டு எந்திரனுக்கு உணர்வுகளை கற்பிக்கிறார். உணர்வுகளை முழுமையாக கற்றுக்கொள்ளும் எந்திரன் உலகிலுள்ள அனைத்து கலைகள், உணர்வுகள், மொழிகள் என எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளும் மனிதனுக்கு இணையான இயந்திர மனிதனாகிறது.
இந்நிலையில்தான் விஞ்ஞானி ரஜனியின் காதலியான ஐஸ்வர்யாராயை காதலிக்க தொடங்குகிறது எந்திரன். இதனை தடுக்க முடியாமல் தடுமாறும் விஞ்ஞானி ரஜனி, எந்திரனை சுக்குநூறாக்கி குப்பையில் வீசிவிடுகிறார். அந்த எந்திரனின் பாகங்களை தேடியெடுக்கும் தலைமை விஞ்ஞானி, எந்திரனை தீயசக்தியாக உருவாக்குகிறார்.
தீயசக்தியாக உருவெடுக்கும் எந்திரன் பல ஆயிரம் எந்திரன்களை தன்னைப்போலவே உருவாக்கி பல நாசகார செயல்களை செய்வதோடு ஐஸ்வர்யா ராயையும் சிறைபிடிக்கிறது. ஐஸ்வர்யா ராயினை எப்படி விஞ்ஞானி ரஜனிகாந்த் காப்பாற்றுகிறார், தீய சக்தியாக இயங்கும் எந்திரனை எப்படி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார் என்பதுதான் மீதிக்கதை.
எந்திரன் கதையினை திரைக்கதையாக நகர்த்தியிருக்கும் விதம் இயக்குநர் ஷங்கருக்கு சபாஷ் போட வைக்கிறது. பிரபல எழுத்தாளர் சுஜாதா இறுதியாக எழுதிய வசனங்கள் காதுக்கு இனிமையாக இருக்கின்றன. சில இடங்களில் இயக்குநர் ஷங்கரும் கார்க்கியும் வசனங்களை எழுதியிருக்கிறார்கள்.
எந்திரன் படத்தில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் பிரமாதமாக இருக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மானின் மற்றுமொரு இசை சாதனை எந்திரன் பாடல்கள். பாடல்களை படமாக்கியிருக்கும் விதம் மனதினை தொட்டுச் செல்கிறது. அழகான இடங்களில் பாடல்களை படப்பிடிப்பு செய்திருக்கிறார்கள்.
சண்டைக்காட்சிகளில் பிரமாதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரத்னவேல். பீட்டர் ஹெய்னினால் வடிவமைக்கப்பட்டிருக்கும் சண்டைக்காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. அத்தோடு தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு எந்திரனில் பிரமாதமாக இருக்கிறது.
படமாக்கப்பட்ட அனைத்து காட்சிகளையும் ஒன்றாக தொகுத்து பிரமாதமாக முழுமைப்படுத்தியிருக்கும் அன்டனியின் கைவண்ணத்துக்கு நிச்சயமாக பாராட்டு தெரிவித்தாகவேண்டும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய விதத்தில் எந்திரன் உருவாகியிருப்பது பாராட்டத்தக்கதே.
இலங்கையிலும் திரையிடப்பட்டதிலிருந்து கூட்டம் அலைமோதுவதை காணக்கூடியதாக இருக்கிறது. மொத்தத்தில் எந்திரன்: ஹொலிவூட் படங்களுக்கு இணையாக எடுக்கப்பட்டிருக்கும் ஒரு தமிழ் படம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
Labels:
சினிமா
Sunday, September 19, 2010
Friday, September 10, 2010
சொல்வதற்கு வெட்கம்தான்…
நல்லூர் கந்தன் பற்றி தெரியாதவர்கள் குறைவுதான். யாழ்ப்பாணத்தின் சின்னமாகவும் இலங்கையின் புனித அடையாளமாகவும் திகழும் நல்லூர் கந்தனின் தேர் உற்சவத்தில் முதல் முதலாக கலந்துகொள்ளும் வாய்ப்பு இல்லையேல் கொடுப்பனவு எனக்கு இம்முறை கிடைத்தது.யாழ்ப்பாணத்திற்கு பலதடவை சென்றிருந்தபோதிலும் நல்லூர் கந்தனின் அலங்கார ரத பவனியை காணும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததில்லை. அதுபற்றிய அனுபவம் எனக்கு கிடைக்கவில்லை என்னும்போது எனக்கு வெட்கமாகத்தான் இருந்தது. காரணம் நானும் வடபகுதியை சேர்ந்தவன் என்பதால். ஆரம்பகாலத்திலேயே புலம்பெயர்ந்துவிட்டதால் அந்த அரிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்காமலே போய்விட்டது. நீ…ண்…ட… காலத்தின் பின்னர் அச்சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி.
தற்சமயம் நான் பணிபுரிகின்ற நிறுவனம் இலங்கையின் முன்னணி பத்திரிகை வெளியீட்டு நிறுவனமான விஜயா நியூஸ்பேப்பர்ஸ். இதில் தமிழ்மிரர் இணைய (www.tamilmirror.lk) வெளியீட்டின் ஆசிரியராக நான் இருக்கின்றேன். தமிழ்மிரர் (www.tamilmirror.lk) இணையத்தளத்தில் நல்லூர் கந்தனின் திருவிழா நிகழ்வுகளை உடனுக்குடன் பதிவிட்டு வந்தோம். அதனைத் தொடர்ந்து நேரடியாக, அலங்கார நல்லூர் கந்தனின் ரத பவனியை நேரில் பார்த்து அதன் தொகுப்பை பதிவிடும்படி பணிக்கப்பட்டிருந்தேன். அதற்கமைய என்னுடைய குழுவுடன் இம்முறை நல்லூர் சென்றிருந்தேன்.
இப்படி ஒரு ஜனத்திரளை புகைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்த எனக்கு நேரில் பூரிப்பை ஏற்படுத்தியது. சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான அடியார்கள் ஒரே இடத்தில் கூடி ‘அரோகரா’ என்று ஒலியெழுப்புவது தேவலோகத்தில் இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்தியது. நீண்ட வரலாற்றினைக் கொண்ட நல்லூர் கந்தன் கோயிலில் இன்னமும் சட்டங்கள் ஒரேமாதிரியாக இருக்கின்றன. பெரும் புள்ளிகள் முதல் சிறு புள்ளிகள்வரை ஒரே நடைமுறைதான். இந்த நடைமுறையை நான் இதுவரை அனுபவித்ததில்லை. 'ஒரு ரூபாய்க்கு அர்ச்சனை' என்னும் நடைமுறை என் நெஞ்சை தொட்டது. பொதுவாக கோயில்களில் பணத்தைப் பெற்று கடமைக்கு அர்ச்சனை செய்வது எனக்கு பிடிக்காத போதிலும், இந்த 'ஒரு ரூபாய் அர்ச்சனை' என்பது ஏழைகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று நினைக்கும்போது பூரிப்பாகவிருந்தது.

நல்லூர் கந்தனின் தேர் பவனியினை புகைப்படம் எடுப்பதோடு ஒளிப்பதிவும் செய்வதற்காக என்னுடைய நிறுவன புகைப்பட கலைஞர் 'வருண' என்னுடன் அங்கு வந்திருந்தார். ஒரே நேரத்தில் ஒளிப்பதிவையும் புகைப்படத்தினையும் எடுப்பது சிரமம் என்பதை உணர்ந்த நான், ஒளிப்பதிவு கருவியை பொறுப்பேற்றேன். புகைப்படம் எடுப்பது, ஒளிப்பதிவு செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு பிடித்த விடயத்தை செய்யும்போது மனம் இன்னமும் உயர பறக்கத் தொடங்கியது. இன்னமும் என்னுடைய கால் நூறுவீதம் குணமடையாத போதிலும் ஆர்வக்கோளாறில் ஜனத்திரளில் நானும் மிதக்கலாகினேன்.
அங்கு கூடியிருந்த அத்தனை அடியார்களும் என்னதவம் செய்தார்களோ தெரியவில்லை, அப்படியொரு பாக்கியத்தினைப் பெற்றிருந்தார்கள். இதோ என் அருகில் அலங்கார கந்தன் ரதமேறி பவனி வருகிறான். அந்த ஆறுமுக கந்தனை மிக அருகில் சந்திக்கின்றேன். இவ்வளவுநாள் அவரை சந்திக்காமல் இருந்தது அருகில் தரிசிப்பதற்குதானோ என எண்ணிக்கொண்டேன். என்னுடைய வலிகளை மறந்து நல்லூர் கந்தனின் ரத ஊர்வலத்தை படமாக்கிக்கொண்டிருந்தேன். ஜனத்திரளோடு கந்தனும் மிதந்து சென்ற அழகு இன்னமும் என் மனதில் நிழலாடுகிறது.
பாதுகாப்பு படை வீரர்கள் முதற்கொண்டு பாமர மக்கள்வரை ஒரே சிந்தனையோடு ஒன்றுகூடியிருந்த இடம் நல்லூர் ஆலயம். இங்கு எனக்குக் கிடைந்த அனுபவத்தை உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். நீங்கள் பலர் இந்த அனுபவத்தை ஏற்கனவே பெற்றிருப்பீர்கள். இருப்பினும் எனக்கு இது முதற்தடவை என்பதால் பதிவிட்டேன். நல்லூர் கந்தனின் ரத உற்சவ படங்களை www.tamilmirror.lk இல் நீங்கள் பார்க்கலாம்.

Labels:
கட்டுரைகள்
Sunday, September 05, 2010
நீ…ண்…ட... இடைவெளி…
வணக்கம் அன்பு நெஞ்சங்களே!நீ…ண்…ட…தொரு இடைவெளிக்குப் பின்னர் இந்த பதிவிடுதலினூடாக உங்களை சந்திக்கிறேன். எதிர்பாராத துரதிர்ஷ்டத்தில் சிக்கியதால் சிலகாலம் என்னால் எதுவுமே செய்யமுடியவில்லை. கடந்த வருடம் (2009) பெப்ரவரி 22ஆம் திகதி என்வாழ்வில் திருப்புமுனையான நாள். அன்றைய நாள் எனக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்த நாள்.
வாழ்வின் எந்தவிட குறிக்கோளும் இல்லாமல் தறிகெட்டு சுற்றித்திரிந்த என்னுடைய வாழ்விற்கு ஆண்டவன் போட்ட கடிவாளம் அந்நாள். எந்தவிதமான சேமிப்புகளோ, நாளைய சிந்தனைகளோ இல்லாமல் அன்றைய வாழ்வை இனிமையாக செலவுசெய்த என் வாழ்வில் இழவுவிழுந்த நாள். இப்படியொரு நாளினை நான் எதிர்கொள்ளாவிட்டால் இன்று இந்நிலையில் நான் இருப்பது சந்தேகமே.
கடந்தவருடம் பெப்ரவரி 13ஆம் திகதி காரியாலய விடயம் சம்பந்தமாக இந்தியா சென்றேன். எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (வீரகேசரி) நிறுவனத்தின் ‘இசை உலகம்’ சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்தமையால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பல தகவல்களை இந்தியாவில் திரட்டவேண்டி இருந்தமையால் அங்கு சென்றேன். என்னுடைய நண்பன் டிரோனும் அங்கு என்னுடன் இணைந்துகொண்டான். 9 நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்து, தகவல்களை திரட்டிக்கொண்டு 21ஆம் திகதி இரவு இலங்கை வந்தோம்.
22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வழமைபோல் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்துவிட்டு வந்திருந்தபோது என்னுடைய செல்லக்குட்டி (அது என்னுடைய வளர்ப்புப் பூனை. ஆதன் பெயர் குட்டி) என்மடியில் ஏறி விளையாடிக்கொண்டிருந்தது. நீண்டநாள் என்னை காணாததால் அதிகமாகவே என்னோடு விளையாடியது என் குட்டி. இப்படியே இருக்கும்போது 'விதி' என்னை அழைத்தது. மதிகெட்டு நானும் செல்ல தயாராகினேன். காலை 10.20 மணிக்கு என்னுடைய மோட்டார் சைக்கிளில் விதியை எதிர்கொள்ள கிளம்பும்போது வாசற்படியில் கால் தடுக்கியது. அம்மா சொன்னா… ‘தம்பி… அஞ்சு நிமிசம் இருந்திட்டு போ…’. மதிமயக்கத்தில் சொன்னேன் ‘இதெல்லாம் யாரு பாக்கிறது… சும்மா இருங்கோவன், நான் அவசரமா போகனும்…’.
அவசரமாக செல்லவேண்டும் என்பதால் வழமையாகவே வேகமாக செல்லும் நான், அன்றைய தினம் என்னும் வேகமாக சென்றேன். சென்னுகொண்டிருக்கும்போது எங்கிருந்தோ வந்த வாகனம் பாதையை குறுக்கிட்டது. அடுத்தநிமிடம் நான் தூக்கி எறியப்பட்டேன். நிமிர்ந்துபார்த்தேன், என்னுடைய தலைக்கும் வாகன டயருக்கும் 'ஓர் அடி' வித்தியாசம்தான் இருந்தது..! 'அப்பாடா… தலைதப்பியது..' என்று நினைத்துக்கொண்டே, அவசரமாக செல்லவேண்டும் என்பதால் எழுந்திருக்க முயற்சித்தேன். என்னால் எழுந்துகொள்ள முடியவில்லை. மறுபடியும் முயற்சித்தேன் முடியவில்லை. என் காலினைப் பார்த்தேன். அது ஒரு சுற்று சுற்றியிருந்தது. அதைப் பார்த்ததும் எனது தலையும் சுற்றியது. என் எதிர்காலம் எங்கோ தொலைவில் போய்க்கொண்டிருப்பதாய் உணர்ந்தேன்.

மறுகணம் என்னை எதிர்பார்த்திருக்கும் விதியின் அழைப்பு. ‘என்னும் வரவில்லையா..?’ என்றது. என்னுடைய விபத்தினை சொன்னேன். அதற்குமேல் என்னாலும் பேசமுடியவில்லை. அழைப்பினை துண்டித்தேன். வலியினால் துடித்தேன். கெண்டைக்கால் எலும்பு இரண்டும் உடைந்து, கால் தொங்கிக் கொண்டிருந்தது. என்னை மோதிய சாரதி பயத்தில் தடுமாறினார். நான் அவரை சமாதானப் படுத்தினேன். 'விபத்து என்பது எதிர்பாராமல் நடப்பதுதானே...' என்றேன். புரிந்தவராய் என்னை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றார். செல்லும்போதே என் உடன்பிறவா தங்கை லக்ஷாவின் அழைப்பு. ‘அண்ணா என்னாச்சு..?’ நடந்ததை சொன்னேன். அதன் பின்னர் வீட்டாருக்கு தெரிவித்தேன். அவர்கள் நம்பவில்லை. ஏனொனில் நான் வீட்டிலிருந்து கிளம்பி 15ஆவது நிமிடத்தில் விபத்து. விபத்து நடந்த இடத்திற்கு சாதாரணமாக செல்வதானால் 30 நிமிடங்கள் ஆகும். ஆகையினால் 15 நிமிடத்தில் அவ்விடத்தில் விபத்து என்பதை வீட்டார்கள் நம்பவில்லை. நிலைமையை தெளிவாக விளங்கப்படுத்தினேன். அதன் பிறகுதான் துடிதுடித்தார்கள்.
காலை 11 மணியளவில் மருத்துவமனையில் சேர்த்தார்கள். பரிசோதித்த மருத்துவர்கள், 6 மணித்தியாலங்களின் பின்னர்தான் சத்திரசிகிச்சை செய்யமுடியும் என்றார்கள். உணவு உட்கொண்டு 6 மணித்தியாலங்களின் பின்னர்தான் மயக்க மருந்து கொடுக்க வேண்டும் என்பது மருத்துவ விதி. அங்கும் 'விதி' என்னோடு விளையாடியது.
வலியினை குறைப்பதற்காக மருந்து கொடுத்தார்கள். ஓரளவு வலி குறைந்தது. வலிநீக்கி கொடுத்து 6 மணித்தியாலங்கள் கட்டிலில் கிடந்தபொழுது என் எதிர்காலம் கண்முன்னே தெரிந்தது. 'இனி என்ன செய்வது..?' என்று அப்பொழுதுதான் சிந்தித்தேன். தொலைதூரம்வரை இருள்தான் தெரிந்தது. அந்த 6 மணித்தியாலங்களில் என்னுடைய நண்பர்கள் பலர் அழைத்தார்கள். அவர்களால் நான் விபத்துக்குள்ளாகியதை நம்ப முடியவில்லை. ஒருசிலர் நேரில் வந்தார்கள். அவர்களுடன் உரையாடும்போதும் என்னுடைய நினைவுகள் எதையோ தேடிக்கொண்டிருந்தது. தொலைந்துகொண்டிருக்கும் எதிர்காலம் அது.
மாலை 5 மணியளவில் சத்திரசிகிச்சை செய்தார்கள். அது சாதாரண சிகிச்சைதான். உடைந்த எலும்பை ஒன்றாக சேர்த்து பத்துப்போட்டார்கள். மூன்று மாதங்களுக்கு ஓய்வெடுக்கச் சொன்னார்கள். அப்பொழுது ஓரளவு நம்பிக்கை வந்தது. மூன்று மாதங்களில் சரியாகிவிடும் என்று. காலங்கள் காற்றோடு கலைந்தது. என்னோடு நெருங்கி இருந்த உறவுகள் ‘பொயின் லெஸ்’ என்று சொல்லி ஒவ்வொன்றாய் விலகத் தொடங்கினார்கள். மதனின் கதை அவ்வளவுதான் என்று என் காதுபடவே பலர் கூறினார்கள். இவை என் வாழ்வுக்கு உரமாகியது. என் மனதும் உரமாகியது. உறுதியோடு காத்திருந்தேன். மூன்றாவது மாதத்தில் மருத்துவமனை சென்று பார்த்தபோது மறுபடியும் எலும்பு விலகிவிட்டது என்றார்கள். என் வாழ்வின் எதிர்காலமும் என்னை விட்டு விடகத் தொடங்கியது. என் நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.
மறுபடியும் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. இன்னும் 3 மாதங்கள் காத்திருக்கச் சொன்னார்கள். காத்திருப்பதைத்தவிர வேறு என்னதான் செய்யமுடியும். அன்று அம்மா சொல்லும்போது '5 நிமிடம்' காத்திருந்திருந்தால் ஒருவேளை என்னுடைய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம் என நினைத்துக் கொண்டேன். இப்பொழுது என் கூட இருப்பவர்கள் கொஞ்சம்தான். ஏனையவர்கள் ஏனோ என்னை விட்டு விலகத் தொடங்கினார்கள். எதற்காக விலகினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் கவனிக்காதிருந்த பல சொந்தங்கள் என்னோடு உறவாடத் தொடங்கின. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்த சொந்தங்கள் எனக்கு ஆறுதலாக இருந்தன. அவர்களின் ஆறுதல் வார்த்தைகள்தான் இன்று என்னை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. சிந்தனையோடே எஞ்சிய மூன்று மாதங்களும் ஓடிவிட்டன. மறுபடியும் மருத்துவமனை. இம்முறையும் கால் எலும்பு விலகியிருந்தது கண்டு வாய்விட்டு அழுதேன். இதற்குமேல் எனக்கு எதிர்காலம் இல்லை என குமுறினேன்.
அரச மருத்துவமனை வேண்டாம் என வெளியேறினேன். சில காலம் ஆயுர்வேத சிகிச்சை செய்தேன். ஓரளவு குணமாகியது. இருப்பினும் என்னுடைய கால் ஓர் அங்குலம் சிறிதாகிவிட்டதாக அந்த ஆயுர்வேத மருத்துவர் கூறினார். அதனை குணப்படுத்த முடியாது. ஆரம்பத்தில் ஏற்பட்ட தவறால் இது நிகழ்ந்திருக்கிறது என்றார்கள். அப்பொழுது நினைத்துக்கொண்டேன்… வாழ்க்கை முழுவதும் நொண்ட வேண்டியது போலத்தான் இருக்கிறது என. 9 மாதங்கள் கழிந்தும் இன்னமும் என் கால்கள் குணமடையவில்லை. மனம் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழக்கத் தொடங்கியது.
இந்நிலையில்தான் என்னுடைய இந்திய நண்பனொருவன் என்னை அங்கு அழைத்தான். அதன் பின்னர் அங்கு சென்று சத்திரசிகிச்சை செய்தேன். 5ஆவது நாள் என்னால் எழுந்து நடக்க முடிந்தது. மறுபடியும் நம்பிக்கை துளிர்விட்டது. என் உடன்பிறப்புகளின் உதவியோடு நடைபெற்ற அந்த சத்திரசிகிச்சைக்கு துணையாக என்னுடைய உடன்பிறவாக சகோதரர்கள்போல் இருந்தவர்கள் அங்கிருக்கும் நண்பர்கள்தான். இயக்குநர் முத்துசெழியன் என்கூடவே 5 நாட்கள் மருத்துவமனையில் தங்கினார். அவரை எனக்கு அறிமுகப்படுத்திய கார்த்திக் (விஜய் டிவி) அடிக்கடி என்னை சந்திப்பார். கணேஷ் (உதவி இயக்குநர்) எப்பொழுது நான் அழைத்தாலும் உடனே ஓடிவந்து உதவி செய்பவர். இவர்கள்தான் எனக்கு உறுதுணையாக நம்பிக்கையூட்டியவர்கள்.
இந்த இடைப்பட்ட காலத்தில் என்னுடைய தொழிலினையும் இழக்கவேண்டி ஏற்பட்டது. நீண்ட விடுமுறையை எந்த நிறுவனம்தான் தாங்கிக் கொள்ளும். அதன் பின்னர் படிப்படியாக குணமடையத் தொடங்கினேன். இப்பொழுது 99 வீதம் குணமடைந்துவிட்டது. மறுபடியும் எழுந்திருக்கிறேன்… என் உள்ளத்தாலும்.
இந்த இடைப்பட்ட காலத்தில் என்னால் எந்தவிதமான விடயத்திலும் மனதினை செலுத்த முடியவில்லை. அதனால்தான் நீண்ட காலமாக என்னுடைய தளத்தினை கவனிக்கவில்லை. இப்பொழுது நானும் என் உள்ளமும் தெளிவாக இருக்கிறது. ஆகையினால் தொடர்ந்து உங்களை சந்திக்கிறேன். என் துக்கத்தில் பங்குகொண்ட அனைந்து சொந்தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய அனைவருக்கும் என உளமார்ந்த நன்றிகள் பலகோடி உரித்தாகட்டும்.
Labels:
கட்டுரைகள்
Thursday, February 12, 2009
உலகின் மிகச்சிறிய குரங்கு

உலகத்திலேயே மிகச்சிறிய குரங்கினத்தினை Marmouset என அழைக்கிறார்கள். இது பிரஞ்சுக் சொல்லாகும். அதன் அர்த்தம் குள்ள மனிதன், குறுனி இறால் எனப்படுமாம். இந்தவகை Marmousetகள் பிரேஸில், பெரு, கொலம்பியா போன்ற நாடுகளின் மழைக்காடுகளில் வசிக்கின்றனவாம். இதனுடைய வளர்ச்சி 5 தொடக்கம் 6 அங்குலங்கள்தான் இருக்குமாம்... (வால் தவிர்த்து). மிகவும் அபூர்வமாக 6 தொடக்கம் 8 அங்குலங்களும் வளரக் கூடியனவாம். இந்த சிறியவகை குரங்குகள் பெரும்பாலும் மரத்தின் உச்சியில்தான் குடிகொள்கின்றனவாம். ஆகையினால் இவற்றினை நீங்கள் புகைப்படங்களில்தான் பார்க்க முடியும். காட்டினுள் சென்று பார்ப்பவர்களுக்குக் கூட இதன் அசைவுகளைக் கண்டுபிடிப்பது கடினம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
Labels:
கட்டுரைகள்
காதலர்தின பரிசு...
வருடத்தில் ஒருதினம் காதலர்களுக்கு என்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். பெப்ரவரி 14ஆம் திகதி வருகிறதென்றாலே அனைத்து வியாபார நிறுவனங்களும் தங்களுடைய நிறங்களையே மாற்றிக் கொள்கிறார்கள். காதலர்களினால் இந்த விழா கொண்டாடப்படுகிறது என்பதற்கு அப்பால், வியாபார விருத்திக்காக காதலர்தினம் பிரபல்யப்படுத்தப்படுகிறது என்று சொன்னால் அதில் தப்பில்லை என நினைக்கின்றேன்.இலங்கையைப் பொறுத்தமட்டில் தனியார் வானொலிகளின் வரவின் பின்னர்தான் இந்த காதலர்தின கொண்டாட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கின. அதற்குமுன்னர் இதனைப்பற்றி யாரும் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. காதலும் வியாபாரமாக்கப்பட்டிருக்கின்றமைதான் இங்கு வேடிக்கையான விடயம். தங்கள் காதல் துணையினை தேடி அலைபவர்களுக்கு இந்த காதலர் தினம் பெரிய கொண்டாட்டமாக அமைகின்றது. அன்றைய தினத்தில்தான் அவர்கள் பல பரிசுப் பொருள்களை வாரி வழங்கும் வள்ளலாக மாறுகின்றார்கள்.
உண்மையிலேயே பரிசில்கள் கொடுப்பதால் காதல் சிறப்படைகின்றதா? என்ற கேள்வியினை ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள். நிச்சயமாக பரிசில்கள் பரிமாறும்போது பாசம் அதிகரிக்கின்றமை உண்மைதான். ஆனால், குறிப்பிட்ட ஒருதினத்தில் சிறப்பான பரிசில்கள் என்ற போர்வையில் காதலை கொச்சைப்படுத்துவது நியாயமா? அப்படியே அன்றை தினத்தை சிறப்பானதாக கொண்டாட நினைத்தால் உங்கள் பாசத்தினை அதிகமாக வெளிப்படுத்திக் காட்டுங்கள். அதைவிடுத்து, பரிசில்கள் என்ற போர்வையில் காதலை வியாபாரமாக்காதீர்கள்.
காதலர்களுக்கிடையில் பரிமாற்றங்கள் இருப்பது சிறந்ததுதான். அது பரிசில்களாக இருக்கலாம், பாடல்களாக இருக்கலாம், கவிதைகளாக இருக்கலாம். அவரவர்க்கு என்ன பிடிக்குமோ அதனை அதிகமாக பகிர்ந்து கொள்வது காதலின் ஈடுபாட்டை அதிகப்படுத்தும். இது ஒரு தினத்தில் மட்டும் செய்யாமல், எப்போதெல்லாம் உங்களுக்கு முடிகிறதோ அப்போதெல்லாம் செய்யுங்கள். விலைகொடுத்து வாங்கிக் கொடுக்கும் பரிசில்களைவிட, விலைமதிக்கமுடியாத எத்தனையோ பரிசில்கள் உங்கள் துணைக்குப் பிடித்திருக்கலாம். அதனைத் கண்டுபிடித்து பரிசளிப்பீர்களேயானால் அதுதான் உங்களுடைய திறமை. அங்குதான் உங்கள் காதல் உயர்ச்சியடையும்.
எனவே, காதலர் தினத்தில் பரிசில்கள் வழங்கவேண்டும் என ஓடித் திரியாமல், பிடித்த விடயங்களை தேடிக் கண்டுபிடித்து காதலை வளப்படுத்துங்கள். வாழ்க காதல், வாழ்க காதலர்கள்...
Labels:
கட்டுரைகள்
அலையோசை...
அந்திப் பொழுதினிலேஆர்ப்பரிக்கும் அலைக்கரையில்
அமைதியாக நானிருந்து
நாணியிருக்கும் உன்முகத்தை
பார்த்துரசிக்க ஆசை கொண்டேன்...
சிந்தை நிறைந்த சிந்தனையை
சிதறாமல் மூடிவைத்து
சிலையாக எப்படியுன்னால்
சிலநேரம் நிற்கமுடிகிறது...?
எத்தனைமுறை முயற்சித்தும்
என்னால்மட்டும் முடியவில்லை,
ஓயாத அலையோசைபோல்
மனதோரம் சங்கீதம் எப்போதும்
இனிமையாய் கேட்குதடி...!
அலைமோதும் பாறைதனில்
ஈரக் கசிவுகள் கல்லின் மேலிருக்கும்,
என் பாசக் கனிவுகள் உன் உள்ளத்தில்
உளிகொண்டு செதுக்கப்பட்டிருக்கும்...!
சிறுபிள்ளைத்தனமான உன்பேச்சை
என் மூச்சோடு சேர்த்துவைத்து
சுவாசித்து சுவை அறிவேன்...
அதை அறிந்திருக்கும் நீகூட
உன்பேச்சை சிலநேரம்
சிக்கனமாய் உதிர்ப்பாயே...
என் உள்ளத்தை உசுப்பிப் பார்ப்பதில்
உனக்கு அவ்வளவு பிரியமா...?
கடலின் ஆழத்தை அறிவதற்கு
முடியாது முடமாகிய கோவத்தில்
கரையேறி கல்தனில் தலைமோதிய
ஆர்ப்பரிக்கும் அலையோசை
என்காதில் சொல்வதென்னவோ
உன்மன ஆழத்தையாவது அறிந்துவா
என்றுதான் எண்ணுகின்றேன்...
செறிந்த அன்பதனை பரிவாக உன்மீது
பவளமாய் பதித்திருக்கேன்...
புரிந்தென்னை நேசிக்கிறாய்,
உள்மனது தவிக்குதடி செல்லமே
எப்போதும் என்னோடு சேர்ந்துவா
சொர்க்கங்கள் பலவற்றை
கட்டி நாம் வாழவேண்டுமடி...!
Labels:
காதல் கவிதைகள்
Monday, February 09, 2009
நான் கடவுள்
மூன்று வருடங்களுக்கு மேலாக இயக்குநர் பாலாவினால் செதுக்கிய சிற்பம் கடந்த 6ஆம் திகதி மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு காலம் எடுத்து படத்தினை இயக்கியிருக்கிறாரே என பலர் திட்டித் தீர்த்தார்கள் பாலாவினை. இயக்குநர் பாலாவினால் செதுக்கப்பட்ட சிற்பம் 'நான் கடவுள்' அவதாரம் எடுத்து சிறப்பாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தினைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக பாலா எடுத்துக்கொண்ட கால அவகாசம் நியாயமானது என ஏற்றுக்கொள்வார்கள்.தன்னைத்தானே கடவுள் என நினைத்து வாழ்கின்ற அகோரிகளைப் பற்றிய அடிப்படைக் கதை. காசியிலே வாழ்கின்ற அகோரிகளின் வாழ்வினை மிகவும் சிரமப்பட்டு படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலா. படத்தின் கரு என எடுத்துக்கொண்டால் பிச்சைக்காரர்கள் தான். பிச்சைக்காரர்களின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற கசப்பான அனுபவங்களை தத்ரூபமாக வடித்திருக்கிறார் பாலா. நந்தா, சேது, பிதாமகன் போன்ற படங்களிலும் இப்படியான பல நடைமுறைப் பிரச்சினைகளைப் படமாக்கியிருப்பார் பாலா. அதே பாணியினைத்தான் நான் கடவுள் படத்திலும் பின்பற்றியிருக்கிறார்.

ஆரம்ப காட்சியே அழகான காசியினைக் காட்டுவதாக அமைகின்றது. சன நெருக்கடி மிகுந்த காசியில் படமாக்கியிருக்கின்ற விதம் மெய்சிலிர்க்க வைக்கின்றது. ஜோதிடர் ஒருவர் சொன்ன கதையினை நம்பி தனது மகனை காசியிலே கொண்டுவந்து விட்டுச் செல்கின்ற தகப்பன், 14 வருடங்களின் பின்னர் அவனைத் தேடி காசி வருகிறார். வருகின்ற தகப்பன் அகோரி வடிவில் இருக்கின்ற தனது மகன் ஆர்யாவைக் காண்கின்றார். ஆர்யாவின் அறிமுகமே அசத்தலாக இருக்கின்றது. வேறு எந்த கதாநாயகனுக்கும் கிடைக்காத அறிமுகம் ஆர்யாவுக்கு இந்தப் படத்திலே கிடைத்திருக்கின்றது எனலாம்.
காசியிலே பிணங்கள் எரிகின்ற மயானத்தில் அகோரியாக குருவின் கட்டளைக்குப் பணிந்து இருக்கிறார் ஆர்யா. எரிகின்ற உடலின் ஆத்மா சுவனம் செல்லவேண்டுமா? நரகம் செல்ல வேண்டுமா? என்பதை அகோரிகள் அறிவார்களாம். அதனால்தான் எங்கோ இறந்தவர்களின் உடலினை காசியிலே கொண்டுவந்து அகோரிகள் முன் எரிப்பார்களாம். அப்படியிருக்கின்ற தனது மகனை அழைத்துச் செல்ல முயற்சிக்கும் தந்தையின் வேண்டுதல் பலிக்கிறது. தன்னைக் கடவுளாக நினைத்து வாழ்கின்ற ஆர்யாவினால் சொந்த பந்தங்களுடன் பழக முடிவதில்லை. அதனால் தனிப்பட குகைகளில் வாழ்கின்றார்.
இந்தச் சூழ்நிலையில்தான் பிச்சைக்காரர்களை உருவாக்கி, அவர்கள் எடுக்கின்ற பிச்சையிலே தான் குளிர்காய்கின்ற ராஜேந்திரன் அறிமுகமாகிறார். அவர்தான் வில்லன். ஊனமுற்ற பிச்சைக்காரர்களை உண்மையிலேயே பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பாலா. அவர்களை எப்படித்தான் நடிக்கவைத்தாரோ தெரியவில்லை. அதனால்தான் பாலாவிற்கு நீண்ட காலம் தேவைப்பட்டிருக்கலாம். இப்படிப் பிச்சைக்காரர்களை தேடிப்பிடிக்கின்றவர்கள் கையிலே மாட்டுகின்றார் கண் தெரியாத பூஜா. அழகுதேவதையாக தோன்றுகின்ற பூஜாவா இது என்னும் அளவுக்கு அற்புதமாக நடித்திருக்கிறார். மன்னிக்கவும், வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால்தான் பொருந்தும். அகோரியா ஆர்யா நடிப்பில் பின்னி எடுக்கின்றார் என்றால், கண்தெரியாத பிச்சைக்காரியாக பூஜா அசத்தியிருக்கிறார். இருவரும் விருதுக்கு போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல அந்தப் படத்தின் அத்தனை கதாபாத்திரங்களும் நிஜமாக வாழ்ந்திருக்கிறார்கள்.
இந்த பிச்சைக்காரர்களை மையமாக வைத்து கதை நகர்ந்து செல்கிறது. இதற்கிடையில் மூட நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என பலதும் சுழல்கிறது. இயக்குநர் பாலாவின் பசிக்கு அற்புதமாக தீனி போட்டிருக்கிறார் கமெராமான் ஆதர் வில்சன். ஒவ்வொரு காட்சியும் நம் மனக்கண்ணில் பதியுமளவிற்கு அற்புதமாக கமெரா கண்ணினால் பார்த்திருக்கிறார் ஆதர் வில்சன். இந்தப் படத்தின் மற்றுமொரு பலம் ஜெயமோகனின் வசனம். ஜெயமோகன் சிறந்த பல நாவல்களை எழுதிப் புகழ்பெற்றவர். அதில் ஒன்றுதான் 'விஷ்ணுபுரம்'. பௌத்தம், இந்து சமயம் சார்ந்த இந்த நாவலினால்தான் இயக்குநர் பாலா தன் படத்திற்கு வசனம் எழுதக் கொடுத்தாரோ தெரியவில்லை. ஆனால் தன்னுடைய பணியினை மிக அருமையாகச் செய்திருக்கிறார் ஜெயமோகன். பல இடங்களில் அவரது வசனங்கள் மனதைத் தொடுகின்றன. எதிர்பார்ப்பிற்குப் பஞ்சமில்லாமல் தான் இன்னமும் ராஜாதான் என நிரூபித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. பாடல்கள் அற்புதமாக இருக்கின்றன. அதனைவிட பின்னணி இசையினைப் பொறுத்தமட்டில் நிஜமாகவே எங்களை திரைக்கதையோடு அழைத்துச் சென்றிருக்கிறார் இளையராஜா. மொத்தத்தில் அனைத்துமே அற்புதமாக அமைந்திருக்கிறது பாலாவிற்கு.
இடைவேளையின் பின்னர் படத்தினிலே அவசரம் தெரிகிறது. சென்ஸர் செய்த சதியாகக்கூட இருக்கலாம். படமும் மிக விரைவாகவே முடிந்துவிடுகிறது. இறுதிக் காட்சியிலே ஆர்யாவின் நடிப்பும் பூஜாவின் நடிப்பும் எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது என்னமோ உண்மைதான். நிச்சயமாக இவர்களுக்கு விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வளவுகாலம் பொறுத்திருந்ததற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
நான் கடவுள் படத்தினைப் பொறுத்தமட்டில் குறைகளை குடையாமல் அனுபவித்துப் பார்த்தால் பல அர்த்தங்கள் அந்தப் படத்திலே பொதிந்திருக்கின்றன. பாலாவின் மற்றுமொரு அசத்தலான படைப்பு 'நான் கடவுள்'.
Labels:
சினிமா
Friday, February 06, 2009
கனிகின்ற காலம்...
கடலுக்குள் தீவொன்றுதனியாக அமைத்துன்னை
மார்போடு அணைத்துவைத்து
வாழ்க்கையின் வாசனையை
உயிரோடு கலக்கவைக்க
காலத்தை எண்ணியெண்ணி
எண்ணத்தை உருக்குகிறேன்...
திண்ணையிலே படுத்தாலும்
தொல்லைதரும் சொந்தங்கள்,
எல்லைதாண்டி சென்றாலும்
மல்லுக்கட்ட துள்ளிவரும்...
கடலுக்குள்ள வீடுகட்டி
தனிமையில வசித்திடலாம்
நீ மட்டும் என்னருகில்
கடிகாரமாய் ஒட்டிவந்தால்...
காலங்கள் நமக்கெதற்கு
முக்காலமும் நமதாகும்...
விக்கல்வந்து செத்தாலும்
விம்மியழுது புலம்பினாலும்
உன்னருகில் நானிருந்து
உண்மையன்பை காட்டவேண்டும்...
உன்மடியில் நான் சாய்ந்து
வற்றுமட்டும் கண்ணீரை
தாரையாக வடிக்கவேண்டும்...
வற்றிவிட்ட கண்ணீரும்
ஊற்றெடுக்கா வரமும் வேண்டும்...
உன்முகத்தில் சிரிப்பைத்தவிர
வேறெதுவும் தோணவேண்டாம்...
அழுகின்ற வாழ்க்கையெல்லாம்
அந்தரத்தில் அறுந்துபோகட்டும்...
நிரந்தரமாய் நாமும் வாழ
கனிகின்ற காலமதை
துணிவோடு எதிர்கொள்வோம்...
Labels:
காதல் கவிதைகள்
வெறும் வானம்...
வெட்டவெளி வானத்திலஒற்றைநிலா மட்டும் காணம்...
தொட்டுப்பார்க்க ஆசைவந்து
வானை எட்டிப் பார்க்கையில
வானம் மட்டும் வெட்டையாக
தனிமையில தவிச்சிருக்கு...
ஒட்டியிருந்த நட்சத்திரமும்
ஒளியிழந்து தனிச்சிருக்கு...
என்வீட்டு முற்றத்தில
கூடுகட்டி வாழ்ந்திருந்த
மணிப்புறாவும் பிரிஞ்சிருக்கு...
கோழிகூட கொஞ்சநாளா
கொக்கரிக்க மறந்திருக்கு...
கண்ணைமுட்டும் தூக்கம்கூட
தூக்குப்போட்டு செத்திடுச்சு...
நெஞ்சுக்குள்ள நீண்டநாளா
தீயொன்னு எரிஞ்சிட்டிருக்கு...
வாழ்க்கையோடு ஒட்டிவந்த
பற்றுக்கூட பறந்துதான் போயிடிச்சு...
தொற்றுநோயாய் தொற்றிவந்த
காதல்கூட கசப்பாச்சு...
நிலத்துக்குள்ள ஓடுகின்ற
வேருகூட காய்ஞ்சுபோச்சு...
தண்ணியூற்றி வளர்க்கின்ற
மரமும்கூட சரிஞ்சுபோச்சு...
நெஞ்சுக்குள்ள தீயை அணைக்க
கண்ணீரத்தான் கொட்டுகின்றேன்
வழிந்தோடி போகுதடி
வலிமட்டும் போகுதில்லை...
நொந்துபோன நெஞ்சுக்கெல்லாம்
சொந்தம் எதற்கு...
அந்தரத்தில் தொங்கும் வாழ்வை
எந்திரிச்சு நிக்க வைக்க
நீ வேணும் என் செல்லமே...!
Labels:
காதல் கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)








