Thursday, January 01, 2009

புரியாயோ புத்தாண்டே...?

விடிவொன்று காணாத
நிலைதனை எண்ணி
எத்தனைகாலம்தான்
தவிப்பினில் வாழ்வது..?

ஆழ்மனதில் அன்பிருக்க
அடிமடியில் தீச்சுவாலை
கொடிவிட்டு படருதடா...
வலிகளின் கொடுமைதனை
வாழ்வெல்லாம் அனுபவிப்பதா?
துளியேனும் விடிவின்றி
துயரத்தில் வாழ்வதா...?

தீர்வில்லா வலியிதனை
தீர்ப்பதற்கும் நாதியில்லை...
நதிமீது தனி ஓடமாக
காற்றோடு சேர்ந்து ஓடும்
வாழ்விதனை எண்ணி
வருத்தத்தில் வாழ்வதா...?

சிரிக்கின்ற முகமதனை
ஒருகணமும் காணவில்லை...
பூரிப்பில் பூத்துக்குலுங்க
உள்ளமனதில் இடமுமில்லை...
இதயத்தில் ஈரம் இருந்தும்
பாரமாய் ஏதோ குத்துதடி...

தேய்கின்ற முழுமதியில்
பிறையேனும் சேர்ந்துவர
துறையொன்றும் தோணுதில்லை...
கரைகாணா கப்பல்போல்
காலத்தின் ஓட்டத்தில்
கல்லறையாய் வாழ்வதா...?

கையேந்திப் பார்க்கின்றேன்
நீயோ தேய்கின்றாய்...
ஓய்வின்றி தவிக்கின்றேன்
ஆழ்மனதில் வலியோடு...
தூய்மை எம் காதலெனில்
தேயாது நம் வாழ்வு...

புதுமை படைப்பாய் புத்தாண்டே
புறமுதுகு காட்டாதே...
அகமனதின் துயரத்தை
துடைத்திடுவாய் புத்தாண்டே...
வலியதுதான் வாழ்க்கையென
வாழ்ந்தகாலம் போதுமடா...
உளமிணைந்த உருவங்கள்
உருக்குலைந்து போவதா...?
உன் ஓரத்திலிருக்கும் அருளதனை
எம்மீதுகாட்டாயோ புத்தாண்டே..!

No comments: