Thursday, January 08, 2009

நூறாவது பதிவு..!

இது என்னுடைய நூறாவது பதிவு. நேற்றுத் தொடங்கியதுபோல் இருக்கிறது. கடந்த நவம்பர் 20ஆம் திகதி "ஏன் இப்படி...?' என்ற கவிதையுடன் என்னுடைய வலைப்பதிவைத் தொடங்கிய ஞாபகம். இன்றோடு 49 நாட்கள் என்னுடைய தளத்திற்கு. இதற்குள் 100ஆவது பதிவினை இடுவதையிட்டு மகிழ்வடைகின்றேன். எழுத்துத்துறையோடு நீண்ட காலமாக இருந்துவிட்டாலும், இது எனக்கு புது அனுபவமாக இருக்கின்றது. இத்தனைக்கும் என்னை ஊக்கப்படுத்திய அத்தனை உள்ளங்களுக்கும் நன்றிகளைச் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்தத் தளத்தினை வடிவமைப்பதற்கு மறைமுகமாக உதவிய வெற்றி எப்.எம். முகாமையாளர் லோஷனுக்கு மனமார்ந்த நன்றிகள். இவரது அறிவிப்புப் பாணியைப் போன்றே எழுத்தும் ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். ஒரு ஜனரஞ்சக கலைஞர், என்னுடைய நண்பர் என்பதில் பெருமிதம். அதேசமயம் தளப் பதிவு பற்றி சந்தேகங்கள் வருகின்றபொழுது நான் அடிக்கடி தொந்தரவு செய்யும் ஒரு நபர் இருக்கின்றார். அவர் ஆதி. என்னுடைய நீண்ட நாள் நண்பர். பல துன்பங்களில் என்னோடு தோள்கொடுக்கின்ற தோழன். எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி அன்புக்காக மட்டும் பழகும் நல்ல மனிதன். நான் நேசிக்கும் ஒரு நல்ல மனிதன். இவர்கள் தவிர தமிழ்மன்றம், தமிழ்மணம் பிரியர்களுக்கும் நன்றிகளைக் குறிப்பிட வேண்டும். குறிப்பாக தமிழ்மன்றத்தில் என்னை இணைத்த ஷர்தார் அவர்களுக்கு சிறப்பு நன்றிகள்.

இவர்கள் எல்லாரையும்விட முக்கியமான ஒரு விடயத்தை கட்டாயம் சொல்லியாக வேண்டும். நான் எப்படி இந்த எழுத்துத் துறைக்குள் நுழைந்தேன் என்பது பற்றியதுதான் அது. பாடசாலைக் காலங்களில் என்னுடைய குரு ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்கள்தான். ஓர் அறிவிப்பாளனுக்குரிய தகமைகள், நுணுக்கங்கள் எப்படி இருக்கவேண்டும் என்ற அடிப்படைகளைச் சொல்லித்தந்தவர் அவர்தான். அவருடைய வழிகாட்டுதலில் பல வானொலி நிகழ்ச்சிகளையும் செய்திருக்கிறேன். அப்பொழுதிலிருந்தே நான் ஓர் அறிவிப்பாளனாக வரவேண்டும் என்றே ஆசைப்பட்டேன். அதற்கான முயற்சிகளில்தான் அதிகமாக ஈடுபட்டிருந்தேன். ஆனால் எனக்கு அந்தத்துறை கைகூடவில்லை. இதற்கு என்னுடைய குரல் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். வானொலி அறிவிப்பு என்பதற்கு விஷேடமாக குரல் அமைப்பு இருக்கவேண்டும். அது என்னிடம் ஏதோ குறைவதாக நானாகவே உணர்ந்துகொண்டேன். இருப்பினும் வானொலிமீதுகொண்ட பற்றினால்தான் இன்றும்கூட ஒலி/ஒளிபரப்புத்துறை சார்ந்தவர்கள்தான் அதிகமாக என் நண்பர்களாக இருக்கின்றார்கள். இதில் நான் பெருமையடைகின்றேன்.

இப்படி என்னுடைய வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கும்போதுதான் என்னுடைய வாழ்க்கையில் வானத்து முழுமதியாய் ஒரு சொந்தம் வந்து சேர்ந்தாள். எனக்குள் இருக்கின்ற எழுத்தாற்றலை வெளியில் காட்டியவள் அவள்தான் என்பதில் நான் பெருமிதமடைகிறேன். நான் எழுதுகின்ற சின்னச்சின்ன வரிகளைக்கூட கவிதை நயத்துடன் படித்துக் காண்பித்து என்னை உட்சாகப்படுத்துவாள். இந்த உட்சாகத்திலேயே பல வரி(லி)களை வடித்திருக்கிறேன். அவை மற்றவர்களுக்கு மட்டமாக இருந்தாலும் அவளுக்கு மட்டற்ற மகிழ்வைத் தந்ததை நன்குணர்ந்தேன். அந்த உத்வேகம்தான் என்னை பத்திரிகைத்துறைக்குள் இழுத்து வந்தது. பின்னர் பல மாற்றங்கள் என்னுள். காலவோட்டத்தில் அடிபட்டு, கரையொதுங்கி மீண்டுவந்த தெம்பு. நீண்டகால அன்பிற்கு சாட்சியாக இந்த தளத்தினில் எழுதுகின்றேன். சிலவரிகள் அவளுக்கு மட்டுமே புரியக்கூடியனவாக இருக்கும். மற்றவர்களுக்கு வேறொரு அர்த்தத்தைத் தரும். இன்று என்னுடைய வரிகள் பலராலும் மதிக்கப்படுவதை எண்ணி என்னைவிட அவள்தான் அதிகமாக சந்தோஷப்படுபவள்.

வாழ்க்கை என்பது நிரந்தரமில்லாதது. அந்த நிரந்தரமில்லா வாழ்வில் வருகின்ற சில சொந்தங்களும் நிரந்தரமில்லாமல் பிரிந்துவிடுவதுமுண்டு. அப்படிப் பிரிந்தாலும் உண்மைகள் உவர்ப்பாவதில்லையே. இந்த உண்மைகளை நான் எந்தவிடத்தில் சொல்வதற்கும் தயங்குவதில்லை. நான் ஒன்றும் பெரிய எழுத்தாளன் இல்லை. எழுத்துலகில் சாதித்தவனும் இல்லை. நிறைய சாதிக்க துடிப்பவன். நல்ல ரசிகனாக இருக்க விரும்புபவன். சின்னச்சின்ன விடயங்களையும் ரசிப்பவன். இதுதான் என்னுடைய பலமும் பலவீனமும்.

என்னுடைய கலைத்துறைச் சேவைக்கு சான்றாக அண்மையில் ஒரு விருது கிடைத்தது. நிந்தவூர் ஆர்.கே. மீடியாவினால் வழங்கப்பட்ட "பல்கலை கலைஞர்' என்பதே அந்த விருது. மக்கள் தோட்ட முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திப் பிரதியமைச்சர் அல்ஹாஜ் எஸ்.நிஜாமுதீன் அவர்கள் இந்த விருதினை வழங்கினார்கள். இதில் என்னுடன் சேர்த்து 22 கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். இதிலொருவர் என்னுடைய குருநாதர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி. அவர்முன்னிலையில் கௌரவிக்கப்பட்டமை, நான் அவருக்குச் செய்த நன்றிக்கடனாகக் கருதுகின்றேன்.

இந்தனை பெருமைகளையும் எழுத்துத்துறையால் தேடித்தரச் செய்தவள் என் அன்புக்குரியவள்தான். ஆகையினால் இந்த தளத்தினை நான் நேசிக்கும் அந்த முழுமதிபோல் வந்தவளுக்கு சமர்ப்பிக்கின்றேன். இன்றுபோலவே என்றும் என்னுடைய எழுத்துக்களின் குறை, நிறைகளை சுட்டிக்காட்டி வழிநடத்தவிருக்கும் சொந்தங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என்னுடைய நன்றிகள் உரித்தாகட்டும்.

No comments: