Tuesday, January 13, 2009

தை பிறந்தால்...

தை பிறந்தால்
வழி பிறக்குமாம்...
பழி கேட்கும்
சுமைதாங்கிக்கு
வலியில்லாத
சாவு கிடைக்குமா...?

ஊரெல்லாம் பறந்துவரும்
ஊர்க்குருவி நானாக
பறந்திடத்தான்
ஆசைப்பட்டேன்...
வேரறுந்து வீழ்ந்தமரம்
ஆனதுபோல் வாழ்விதனை
பறைசாற்றி கவிழ்த்துவிட்டேன்...

வரிகளுக்கு சொந்தங்கூறும்
ஒரு சொந்தம்...
நொந்துபோன மனதுக்கு
வலிகொடுத்து பார்ப்பதுதான்
வேடிக்கையடா..!

விறகெரித்து குளிர்காயும்
மானுடம்போல்
எனை எரித்து கருக்கிடவா
காத்திருந்தாய்...?
குத்திவிட்ட கொடுமைக்காரர்
சிரிக்கின்ற சிரிப்பொலிதான்
மரணச்சங்கானது
எம் உறவதனில்...

சோகத்தில் சொல்லிவைக்கும்
வார்த்தைகளில் கோரங்கள்
ஆழமாக என்மனதில்
ஈட்டியாக குத்திநிற்கும்...
குத்துகின்ற வார்த்தைகளால்
சொட்டுச் சொட்டாய்
பிரிகின்ற பாசத்தினை
வேஷம்போட்டு ஒட்டிவைக்க
துளிகூட விரும்பவில்லை...

வாழ்வென்றால் விருப்பு வேணும்
சந்தேக வாழ்வதனில்
சதிகள்தான் சாதிக்கும்...
மோதிவாழ வாழ்வொன்றும்
குத்துச்சண்டை போட்டியல்ல...
தீராத தலைவலியாய்
தொடருகின்ற மோதல்கள்
காதலுக்கு அழகல்ல...
போலியாக வாழ்வதைவிட
பிரிந்துன்னை தவிப்பதுவே
பெரிதென எண்ணுகிறேன்...!

No comments: