Monday, January 26, 2009

கட்டிப்புடி கட்டிப்புடிடா...

உணர்வு என்பது மனிதனுக்கு அதிகமாகவே இருக்கின்றது. ஒவ்வொரு உணர்வும் வெவ்வேறு விதமாக அமைந்துவிடுவதுதான் மனிதனின் சிறப்பே. சிலருக்கு சிரிப்பு என்பது பெரிய உணர்வைக் கொடுக்கும். அதேசமயம் சிலருக்கு அழுகைகூட வேறு விதமான உணர்வைக் கொடுக்கும். இப்படி இருக்கையில் கட்டிப்பிடித்தல் பற்றி சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

'கட்டிப்புடி... கட்டிப்புடிடா...' என்று ஒரு பாடல்கூட இருக்கிறதல்லவா... இதுதவிர 'வசூல்ராஜா' படத்தில் 'கட்டிப்புடி வைத்தியம்' என்ற ஒரு புதுவிடயத்தை கமல் புகுத்தியிருந்தார். உண்மையில் இந்தக் கட்டிப்பிடித்தலுக்கு இந்த சக்தியெல்லாம் இருக்கின்றதா என்ற சந்தேகம் பலருக்கு எழுவது நியாயமே.

சாதாரணமாக இந்தவிடயத்தை வீட்டில் நீங்கள் அவதானித்திருப்பீர்கள். பிறந்த குழந்தை அடம்பிடித்து அழும்போது தன் தாய் அரவணைத்துத் தூக்கியதும் அழுகையை நிறுத்திவிடும். இதுகூட ஒருவகை தொடுகைச் சிகிச்சைதான். பாசத்தை வெளிப்படுத்துவதற்கு பல வழிகள் இருக்கின்றன. அதில் கட்டிப்பிடித்தலும் ஒரு சிறந்த வழியாகும். சிறந்தது என்று சாதாரணமாகச் சொல்வதைவிட அதிசிறந்த வழிமுறை என்று கூடச் சொல்லலாம்.

இரண்டு நண்பர்களை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள். இருவரும் இணைபிரியாத நண்பர்கள் என்பதை வெளிப்படுத்துவதற்கு அவர்கள் அரவணைத்துக் கொள்வார்கள். இவ்விடத்தில் அவர்களின் நட்பின் பலம் அதிகரிக்கின்றது. அதேபோல் தெரியாத இரு பிரமுகர்கள் சந்திக்கும்போது கூட கைலாகு கொடுப்பார்கள். அதன்பின்னர் தோளில் தட்டி, கட்டிக்கொள்வதை நாம் அவதானித்திருப்போம். இவ்விடத்தில் அவர்களின் ஆளுமையின் பலம் அதிகரிக்கிறது. காதலர்கள் தங்களை தழுவும்போது இனம்புரியாத உலகத்துக்கு அழைத்துச் செல்கின்றது அவர்களின் உணர்வு. இவ்விடயத்தில் அவர்களது காதலின் பலம் அதிகரிக்கின்றது.

ஆக... கட்டிப்பிடித்தலுக்கு எவ்வளவு 'சக்தி' இருக்கின்றது என்பதை சிந்தித்துப் பாருங்கள். எமது நாட்டை பொறுத்தமட்டில் ஆண், பெண் நண்பர்கள் கண்டவுடன் கட்டிக்கொள்வது மிகக் குறைவு என்றுதான் கூறவேண்டும். ஆனால் மேலைத்தேய நாடுகளில் கண்டவுடன் கட்டிக்கொள்வது அவர்களின் கலாசாரமாக இருக்கின்றது. அந்தக் கலாசாரத்தின் சாராம்சம் 'அன்பின் வெளிப்பாடு' என்பதேயாகும்.

கட்டிப்பிடிக்கும்போது எமக்குள் என்ன நடக்கின்றது எனச் சிந்தித்திருக்கிறீர்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள் (இல்லையேல் அனுபவித்துப் பாருங்கள்). தொடுகைச் சிகிச்சைமுறை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மனித உடலிலுள்ள நரம்புச் சக்கரங்களைக் கண்டறிந்து அவ்விடத்தில் தொடுதல் சிகிச்சை செய்வதன் மூலம் பல நோய்களைக் குணப்படுத்துவதே தொடுகைச் சிகிச்சை. நாம் கட்டிப்பிடிக்கும் போதும் இதுவேதான் நிகழ்கின்றது. அதாவது, எமது அணைப்பு உடலின் தூண்டுதலை ஏற்படுத்துகிறது. இதனால் இரத்தோட்டம் அதிகரிக்கின்றது. எமது மூளையின் வேகமும் அதிகரிக்கின்றது. இதன் பயனாக நாம் புத்துணர்ச்சியடைகின்றோம்.

பார்த்தீர்களா... சாதாரண ஒரு கட்டிப்பிடித்தலினால் எமது உணர்வுகள் புதுப்பொலிவு பெறுகின்றதல்லவா? இப்படியான செலவில்லாத மருத்துவத்தை நாமாகத்தான் பெற்றுக்கொள்ள முடியும். சிலருக்கு இப்படியான விடயங்கள் வெறுப்பைத் தரலாம். ஆனாலும் உண்மை அதுதானே. ஆகையினால் எம்மால் முடிந்தளவு நம் நண்பர்களுக்குள்ளாவது கட்டிப்பிடி வைத்தியம் செய்யலாம்தானே. எமது நட்பும் அதிகரிக்கும், உணர்வுகளும் புத்துயிர் பெறும்.

எது எப்படியிருப்பினும் காதலர்களின் அணைப்பின் சுகத்தை எவராலும் மறக்க முடியாது. அந்தச் சுகத்தினை வார்த்தைகளால் வர்ணிக்கவும் முடியாது. அனுபவித்த காதலர்களிடம் கேட்டுப்பாருங்கள்... கட்டிப்பிடித்தலின் சுகத்தினை வெட்கத்திலேயே சொல்லி முடித்துவிடுவார்கள்.

3 comments:

ARV Loshan said...

//பார்த்தீர்களா... சாதாரண ஒரு கட்டிப்பிடித்தலினால் எமது உணர்வுகள் புதுப்பொலிவு பெறுகின்றதல்லவா? இப்படியான செலவில்லாத மருத்துவத்தை நாமாகத்தான் பெற்றுக்கொள்ள முடியும். //

மத்துரன், நீங்க கவிஞர் சினேகனுக்கு சித்தப்பாவா? ;)

நாங்களும் கட்டிப்பிடிக்க ரெடி.. ஆண்களை அல்ல.. ;) சும்மா.. ;)

RAMASUBRAMANIA SHARMA said...

நல்ல பதிவு...ந‌மது நன்பர்களீடம்,ந‌மது மனைவியிடமும் இதனை பரிசோதனை செயிது பர்கலாம்...பதிவர் குரிப்பீட்டதுபோல...மற்றவை அவர்களது திறமை...thats all

RAMASUBRAMANIA SHARMA said...

o.k.