Friday, December 26, 2008

சுனாமி...

பாலகன் பிறந்த பரவசத்தில்
பிரசவித்த விடியலதை
கொடிய அஸ்தமனமாக்கிய
படுபாவி இயற்கையன்னையே...
பால்குடி மறவா பிஞ்சுகளை
பிய்த்தெடுத்த கொடுமைதனை
அரங்கேற்றிய இயற்கையே...
உன் சீற்றத்தை சிறுசுகளில்
காட்டிய கோரமென்ன...?

உன்னை அன்னையாக
அரவணைத்த உள்ளங்களை
ஆக்ரோஷ அலைகொண்டு
அழித்தொழித்த ஆவேசமென்ன?
வேஷம்போட்டு மோசம்பண்ணிய
பாவக்காறி நீயல்லவோ...?

உன்னையே நம்பிவாழ்ந்த
சொந்தங்களில் சொத்துக்களை
தும்புதும்பாய் துடைத்தெறிந்த
கோரம்தான் உனக்கெதற்கு..?

ஆழ்கடலில் முத்தெடுத்து
ஆனந்தமாய் வாழவைத்த
அன்பான அன்னை நீயே..!
அரையுயிர் போகும்முன்னே
குற்றுயிராய் குதறடித்த
குரோதக்காறியும் நீயல்லவோ?

பிரேதங்கள் பார்த்துத்தான்
மனங்குளிரும் என்றெண்ணி
பலபேரைக் கொன்றொழித்தாய்...
சாந்தமாய் இருந்துகொண்டே
தாண்டவமாடிய கோவமென்ன..?

நம்பிய உள்ளங்களை
நார்நாராய் கிழித்தெறிந்து
நாதியற்று அலையவிட்டாய்...
அலையாக வந்தெம்மை
அலைக்களித்து அநாதையாக்கினாய்...
அடங்கவில்லை உன்கோவம்!
அப்பாவி உயிர்கள்தான்
உனக்கான உணவென்று
தப்பாக எமையேன்
ஒப்பாரி போடவைத்தாய்...?

உன் கோர தாண்டவத்தின்
நான்காண்டு நிறைவாயிற்று...
அடிபட்ட உள்ளங்கள்
அலறித்துடிப்பதை
அலட்டிக்கொள்ளாமல்
வேடிக்கை பார்க்கின்றாய்...
அடங்கியே இருந்துவிடு,
ஆர்ப்பரித்து எழுந்துவந்து
கோபத்தை காட்டாதே...!

No comments: