Monday, December 15, 2008

கோபம் எதற்கு...?

எமது உணர்வுகளில் மிகவும் மோசமான விளைவுகளைத் தரக்கூடியது எது எனில் கோபம் எனலாம். கோபம் என்பது மனிதனுக்கு மட்டுமல்ல, ஏனைய உயிரினங்களுக்கும் உரித்தான ஒன்று. இந்தக் கோபம்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலாதாரமாக அமைகின்றது. இந்தக் கோபம் எதனால் ஏற்படுகிறது?

கணப்பொழுதில் நமக்குள் ஏற்படுகின்ற மாறுதல்தான் சினம்கொண்டு சீறிப்பாய்கிறது. அதாவது எரிமலை என்பது உள்ளே நெருப்பை வைத்து உறங்கும் ஒரு சாது. ஆனால் அது சீற்றங்கொண்டு பொங்கினால் என்னாகும்? நல்லது, கெட்டது எதுவும் பார்க்காமல் தனது அக்னிக் குளம்மை அள்ளித் தெளித்துவிடும். இதுபோல்தான் மனிதனுக்குள்ளும் இருக்கும் அக்னிக் குளம்பு சீற்றங்கொண்டெழுந்தால் சுயபுத்தியின்றிச் செயற்படுவான். இது ஜதார்த்தம். எளிதில் எவரும் கோபப்படமாட்டார்கள். அவர்களது உள்ளுணர்வைத் தூண்டும்படியான சம்பவங்கள் நிகழ்ந்தால்தான் கோபம் வீறுகொண்டெழும்.

சிலருக்குப் பொய் சொன்னால் கோபம் வரும். அதாவது... இல்லாத ஒன்றை இருப்பதுபோல் பொய் சொல்லி ஏமாற்றுபவர்களைக் கண்டால் கோபம் வரும். இச்சந்தர்ப்பத்தில் ஏன் கோபம் வருகிறது என எவராவது யோசித்துப் பார்ப்பதுண்டா...? (கோபம் வரும்போது யோசிக்கிறது சாத்தியமா என்று நீங்க திட்டுறதும் சரிதான்...). நாங்கள் பிறருக்கு உண்மையாக நடக்கின்றபொழுது, பிறர் நமக்கும் உண்மையாக நடக்கவேண்டுமென எதிர்பார்ப்பது நியாயமானதுதானே? அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாதபொழுது எமது கட்டுப்பாட்டையும் மீறி கோபம் தலை தூக்குகின்றது. அதாவது எதிர்பார்த்ததொன்று கிடைக்காதபொழுது கோபம் ஏற்படுகிறது (சிலருக்கு கிடைத்தும் கோபம் வரும்...). இது நியாயமான கோபம்தானே? ஆனால் அந்தக் கோபத்திற்கும் அளவிருக்க வேண்டும். எதுவென்றாலும் அளவுக்கு மீறினால் நஞ்சாகிவிடும்.

இன்னும் சிலருக்கோ தொட்டதுக்கெல்லாம் கோபம் பொத்துக்கொண்டு வரும். இப்படிக் கோபப்படுபவர்கள் தம் வாழ்வின் அர்த்தம் புரியாதவர்கள். ஏன் கோபப்படுகிறோம் என்று தெரியாமல் கோபப்படுபவர்களை என்னவென்று சொல்வது? மிருகங்கள்கூட அநாவசியமாகக் கோபப்படாது. தனக்குப் பசி ஏற்படும்போது அல்லது எதிரிகள் தாக்கும்போதுதான் கோபப்படும். ஆனால் ஒருசில மனிதனோ எந்த நேரத்திலும் கோபப்படுவான். இப்படியானவர்களை நோய் எளிதில் தொற்றிக் கொள்(ல்)ளு(லு)ம். மனம் எப்பொழுதும் சஞ்சலப்பட்டுக் கொண்டே இருக்கும். எந்தக் காரியத்தை எடுத்தாலும் அவர்களால் ஒழுங்காகச் செய்யமுடியாது. நரம்புத் தளர்ச்சி ஏற்படும். இப்படியாக பல நோய்களைத் தேடிக்கொள்ள நேரிடும்.

ஆகையால் கோபம் என்ற சிறிய விஷத்துளி முழு ஆயுளையும் பாழாக்கிவிடும். நாம் கோபத்தை எப்பொழுது கட்டுப்படுத்தப் பழகிக் கொள்கிறோமோ அன்றைக்கு நாம் புனிதமடைகிறோம் என்றால் அது மிகையாகாது. புராண காலம்தொட்டு நவீன காலம்வரை கோபத்தின் உச்சகட்டமாகத்தான் பல அழிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. கணப்பொழுதில் ஏற்படுகின்ற கோபத்தினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுத்த சம்பவங்களும் இல்லாமல் இல்லை. அப்படியாயின் இந்தக் கோபம் என்ற மிருகத்தை நமக்குள் உறங்கவிடுவது சரிதானா? அந்த மிருகத்தினை விரட்டி அடிக்கவேண்டிய தேவை நமக்கிருக்கிறதல்லவா?

கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிமுறைகளைச் சொல்வார்கள். ஆனால் கோபம் வருகின்ற கணப்பொழுதில் அந்த வழிமுறைகள் எதுவும் நமக்கு ஞாபகத்தில் வருவதில்லை. இதுதான் ஜதார்த்தம். எது எப்படியிருப்பினும் அந்தக் கணப்பொழுதை எம்மால் வெல்லமுடிந்தால் அதுதான் மிகப்பெரிய வெற்றி.

தியானத்தில் ஈடுபடுவதன் மூலம் எம்மை எம்மால் கட்டுப்படுத்தக்கூடிய நிலையை உருவாக்க முடியும். அலைபாயும் சிந்தனைகளை ஒருநிலைப்படுத்தி மனதைக் கட்டுப்படுத்தும் பக்குவத்தை நாமடைந்தால் அகிலமும் உங்களுக்கு மண்டியிடும். அப்படியாயின் கணப்பொழுதில் ஏற்படும் சினம் சிறிதாகிவிடும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மனம்விட்டுப் பேசிவிடுங்கள். இதனாலும் கோபங்கள் ஏற்படுவதை தடுத்துவிடலாம். சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடியாகப் பேசும்போது உண்மைநிலையினை நீங்கள் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். அதைவிடுத்து பிறர் சொன்னார்கள் என்பதற்காக பலருடன் பகைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

முதலில் கோபம் ஏற்படுத்தக்கூடிய சூழலை தவிர்த்துக்கொள்ளுங்கள். கோபத்தினை ஏற்படுத்தக்கூடிய சிந்தனைகளையும் தவிர்த்துக்கொள்ளுங்கள். இந்நிலையில் உங்கள் மனது ஒருநிலைப்படுத்தப்படுமாயின் சினம் என்ற சொல் உங்கள் அகராதியிலிருந்து அகற்றப்படும். பார்க்கும் பொருளெல்லாம் பசுமையெனச் சிந்தித்துப் பாருங்கள். அவை பசுமையாகத் தென்படும். நோக்கும் திசையெல்லாம் இனிமையாக உணருங்கள், உங்கள் நெஞ்சம் குளிர்மையடையும். எனவே பசுமையான நினைவுகளை நெஞ்சில் சுமந்தால் நெஞ்சம் குளிர்மையடையும். ஆகையினால் கோபம் தூரவிலகிவிடும். சினம்கொள்ளா நெஞ்சம் பனிமலை ரோஜாபோல் செளிப்பாக இருக்கும்.

எனவே, பிறரை நேசித்து அன்புகாட்டி மனதை ஒருநிலைப்படுத்தி தூய சிந்தனையுடன் இருந்தால் அன்பு உங்களைத் தேடிவரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆகையினால் கோபம் என்னும் அந்தக் கொடிய விலங்கினை எம்முள்ளத்திலிருந்தும் விலக்கி அனைத்து உயிர்களிலும் அன்பு செலுத்தி வாழப் பழகிக்கொள்ளுங்கள்.

No comments: