Tuesday, December 16, 2008

அழகான முகம்...


பரந்து விரிந்திருக்கும் ஆகாயத்தில் ஆயிரமாயிரம் ரகசியங்களும் மறைந்திருக்கின்றன. அந்த ரகசியங்களை தேடி விஞ்ஞானிகள் அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களது கண்களுக்குப் படாமலும் பல அதிசயங்கள் இருக்கின்றன. இன்னமும் விடைகாண முடியாத பல விடயங்களை உள்வாங்கி இருக்கின்ற (சிலரது உள்ளம் போல்...) ஆகாயத்தில் அண்மையில் நிகழ்ந்த அதிசயத்திற்கே இந்தப் படங்கள் சாட்சி.
ஆகாயத்தில் ஓர் அழகான சிரித்த முகம். இப்படி ஒரு முகத்தினை பார்ப்பதென்பது அரிதான விடயமே. சந்திரன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று கோள்களும் இணைந்தே இந்த சிரித்த முகத் தோற்றத்தினை ஆகாயத்தில் ஏற்படுத்தியிருந்தன. டிசெம்பர் 2ஆம் திகதியே (2008) இந்த அதிசயம் வானத்தில் தென்பட்டது. சந்திரனின் பிறைத்தோற்றம் சிரித்த உதடாக தென்பட, இடது கண்ணாக வெள்ளி(சுக்கிரன்) கிரகமும் வலது கண்ணாக வியாழன் (குரு) கிரகமும் தோன்றின.
1998ஆம் ஆண்டு இதே தோற்றப்பாடு மாறித் தோன்றியதாம். அதாவது அழும் முகமாகத் தோன்றியதாம். மீண்டும் இந்த சிரித்த முகம் 2052ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி தோன்றுமென எதிர்வுகூறப்பட்டிருக்கிறது. 252,000 மைல்களுக்கு அப்பாலிருக்கும் சந்திரனும், 94 மில்லியன் மைல்களுக்கு அப்பாலிருக்கும் வெள்ளிக் கிரகமும், 540 மில்லியன் மைல்களுக்கு அப்பாலிருக்கும் வியாழன் கிரகமும் சேர்ந்தே இந்த அதிசய தோற்றத்தினை ஆகாயத்தில் ஏற்படுத்தியிருந்தன.
விஞ்ஞானிகள் இச்சம்பத்தினை யதார்த்தமாக எடுத்துக்கொள்ள, சோதிடர்களோ பல கதைகளை புனையத் தொடங்கிவிட்டார்கள். சோதிடர்களின் கூற்றுப்படி இச்சம்பவத்தினால் உலகளாவிய ரீதியில் பல அரசியல் மாற்றங்கள் நிகழுமாம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரும் இப்படியான ஒரு சம்பவம் இடம்பெற்றதாகவும் குறிப்பிடுகிறார்கள். இம்முறையும் கிறிஸ்து பிறந்த மாதத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருப்பதால் நல்லது நடக்குமென குறிப்பிடுகிறார்கள். இவர்களது கூற்று உண்மையா? பொய்யா? என ஆராய்வதைவிட, நல்லதே நடக்கவேண்டுமென உளமார பிரார்த்திப்போம்.
சரி... அந்த அதிசய காட்சியினை காணத்தவறியவர்கள் இந்த படங்களில் வாயிலாக கண்டு மகிழுங்கள்...

No comments: