Saturday, December 27, 2008

விரக்தி...

பருவத்தின் சீற்றத்தில்
பார்ப்பதெல்லாம் காதலாகும்
பாழ்பட்ட காலந்தனை
கண்ணீரில் கடந்துவந்தேன்...
தீண்டாத காதலாக
ஆண்டுகள் கரைந்ததனால்
தீண்டத்தகாத ஆண்டியாய்
அவனியிலே அலைகின்றேன்..!

நொண்டிச்சாட்டு சொல்லிவாழ
தூண்டில்பட்ட மீனானேன்...
துடிக்கின்ற உள்ளந்தனை
அடக்கிவைக்க பழகிவிட்டேன்...
அன்பென்ற ஒன்றால் மட்டும்
அடக்கியாழ முடியுமென்னை!
அன்புமட்டும் போலியானால்
காலியாகும் எந்தனுள்ளம்...

பிழைகள் பலசெய்து
தளைத்துத்தான் வாழ்ந்திடவே
புதுவாழ்வை தேடிநின்றேன்...
புரியாத ஜென்மமென
புரையேற தட்டிவைப்பர்
புழுதியில் புழுவாக
துடிதுடித்து போயிடுவேன்...

புண்ணியம் பண்ணியதால்
கன்னியுன்னை கண்டுகொண்டேன்
கனகாலம் கழித்துன்னை...
இனிவாழ்ந்தால் உன்னோடு
சிறப்பாகும் என்வாழ்வென
உனை சிறைவைக்க நினைக்கிறேன்...
சிந்தையில் வேறொருவன்
சிலகாலம் பழகியதால்
சிகரத்தில் இருப்பதனை
பலநேரம் சொல்லிவைப்பாய்...

முழுமதியாய் உனைநம்பி
இருள்வாழ்வை அகற்றிடவே
இன்பமாய் நானிருந்தேன்...
சூரியனில் ஒளிவாங்கி
உலகத்து இருட்டதனை
சிலநேரம் நீக்கிவைக்கும்
நிலவாக நீயென்னை
அணைக்கின்றாய் இப்போது...
அந்தச் சூரியன் என்னைச் சுடுமென
சிறிதேனும் நினைக்காமல்
சிரிக்கின்றாய் வாழ்வெண்ணி...
அரிக்கின்றது இதயமிங்கு...!

எதிர்காலம்தனைமட்டும்
எதிர்க்காமல் சிந்தித்திடு...
நினைவென்ற நிழலோடு
அந்தரத்தில் வாழ்வதா...
நிஜமென்ற நினைவோடு
நிரந்தரமாய் இருப்பதா...?

நிர்ப்பந்த வாழ்வதனில்
சுத்தமாய் பிடிப்பில்லை...
உன் மனம்போல வாழவைக்க
மனதார துடிக்கின்றேன்...
அடிபட்ட உள்ளமிதை
இடியொன்றும் தாக்காது...
உன் இன்பத்திற்காய்
என் துன்பங்களை புதைத்திட
துயரமாய் துடிக்கின்றேன்...

உன்நினைவை வெல்லமுடியா
வீணான அன்பெனது என்பதனை
அப்பப்ப சொல்லிவைப்பாய்
ஷெல்வந்து வீழ்ந்ததுபோல்
சொல்லொணா துயரத்தில்
துடித்திடுமே எனதுள்ளம்...

உன் உளம்நோக நடக்கவில்லை
உள்மனதில் நானுமில்லை...
தள்ளியே நிற்கின்றேன்
தனிமையிலே தவிக்கின்றேன்...
சொல்லியழ சொந்தமில்லை,
குறைசொல்ல நானொன்றும்
புத்தனுமில்லை...

இழைக்கின்ற பிழைகளை
துளைக்கின்ற வார்த்தைகளால்
கிழிக்கின்றாய்...
நிம்மதியாய் நீ வாழ
நிரந்தரமாய் உறங்கிடலாம்,
உயிரோடு உறவாடும்
உன் நினைவுகள் என்னோடு
நித்தமும் இருப்பதனால்
சித்தம் கலங்கி தவிக்கின்றேன்...

1 comment:

Anonymous said...

விரக்தியின் வழியே உங்கள் கவியாற்றல் சிறப்பாக மின்னுகிறது..

தொடருங்கள் நண்பரே..

வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்